வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஜனநாயக அமைப்பு என்றவுடன் தமிழர்கள் அனைவருக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்த செய்தி நினைவுக்கு வரும். உத்தரமேரூர் கல்வெட்டில் குடவோலை முறையில் தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தலில் நிற்பவருக்குத் தேவையான தகுதிகள், எவையெல்லாம் தகுதியின்மை என்பன போன்ற தகவல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், வெற்றி பெற்றவரின் அதிகார வரம்பு, பொறுப்பு, முறைகேடு நடந்துவிட்டால் அதன் விளைவும் தண்டனையும் என விரியும் குறிப்புக்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

தகுதி உடையவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி நமது முன்னோரின் தெளிந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தகுதி இழப்பு பற்றிய செய்திகள் இன்னும்கூட நாம் ஜனநாயகப் பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. உத்தரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், உத்தரமேரூர் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோயிலில், முதலாம் பராந்தக சோழனின் (907-955ஆம் ஆண்டு) 12-ஆம் ஆட்சி ஆண்டிலும், 14- ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஆகும். சோழர்களின் நிர்வாகம் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது என்பதை இந்தக் கல்வெட்டுகள் நிறுவுகின்றன.

இந்தக் கல்வெட்டுகளின் காலத்தை மனதில் கொண்டு பார்த்தால் பதினோரு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இத்தகைய கிராமிய உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சி முறை ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால், ஏறத்தாழ இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏதென்ஸ் நகரில் பிரபுத்துவத்தை எதிர்கொள்ள "டெமோகிராடிக்கா' என்ற ஜனநாயக அமைப்பு செயல்பட்டதைப் பார்க்கிறோம்.

உத்தரமேரூரில் சொல்லியிருக்கும் குடவோலை முறையைப் போலவே ஏதென்ஸிலும் இரண்டு குடங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஆதரவு நிலை, எதிர்நிலை என ரகசியமாகக் கற்களை இடுவதன் மூலம் கணிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடும் "அசெம்பிளி' என்ற ஆட்சி மன்றம் அமைத்து செயல்பட்டார்கள் என்பதில் இருந்தே உலகின் ஜனநாயக சித்தாந்தம் தொடங்குகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள்.

ஜனநாயகம் என்பது மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சமரச சிந்தனையின் வெளிப்பாடு. அனைவருக்கும் அனைத்து வளங்கள் மற்றும் அதிகாரத்தில் சமமான பங்கு உண்டு என்பதை நிலைநாட்டவே ஏற்பட்டது ஜனநாயகம். பாரத தேசத்தைப் பொருத்தவரை, அனைத்து ஜீவராசிகளும் இறைவனின் அம்சம் என்ற கோட்பாடும் சித்தாந்தமும் கொண்டது.

இந்த சிந்தனையே இந்த மண்ணில் ஜனநாயக நடைமுறையை சுலபமாக்கியிருந்தது என்பதுடன் இயல்பாக்கியிருந்தது. நமது தேசத்தின் ஜனநாயக சிந்தனை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை உத்தரமேரூர் கல்வெட்டிலிருந்தும் முன் நகர்ந்து பார்த்தோமானால் அது ரிக் வேதத்தில் கொண்டுபோய் நம்மை நிறுத்துகிறது.

ரிக் வேதம் உலகின் முதல் நூல். பாரதத்தின் அறிவு நுட்பம். அங்கிருந்தே ஜனநாயக சிந்தனை பரவுகிறது. இன்னும் இதர வேதங்களிலும் அதன் தாக்கம் தொடர்கிறது. மன்னர் என்ற பரம்பரை பதவி, அதுவே வானளாவிய அதிகாரம் கொண்டிருந்தது என்ற யோசனைகளை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது வேதம். தேசம் என்பதன் தலைமைப் பீடத்தில் அதன் அடையாளமாக ஒரு மன்னர் இருந்தார். ஆனால், அந்தப் பீடத்தில் அவர் அமர்வதற்கு தேசத்தின் எல்லா விதமான மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தாக வேண்டும்.

வேதங்கள் சொல்வதென்ன? விளக்கமாகப் பார்க்கலாம். ராஜா முக்கியமாகவும் அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளும் முடிவுகள் எடுத்து அதிகாரிகள் மூலம் அவற்றை அமல்படுத்தியதுதான் பழங்கால ஆட்சிமுறை என்று பொதுவாக நினைக்கிறோம். உண்மையில் ஆட்சி முறை அப்படியிருக்கவில்லை.

வேத காலத்திலிருந்தே எல்லாத் தரப்பு மக்களின் சிந்தனைக்கும் இடம் தந்துதான் ராஜ்ய நிர்வாகம் நடந்து வந்திருக்கிறது. வேதத்தில் "ஸபா, ஸமிதி, விததா' என்று மூன்று அமைப்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இவற்றில் அறிஞர்களாக இருந்த ஜனங்கள் கூடி ஆட்சி விஷயங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுத்ததாகவும் அதன்படியே அரசன் பரிபாலனம் செய்ததாகவும் இருக்கிறது. இது குறித்து வெளிநாட்டு ஆய்வாளர்கள்கூட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில்தான் அமைப்பு இருந்ததாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

ரிக் வேதத்தில் ஈஸ்வரனுக்கான ஐந்து ஸூக்தங்களைச் சேர்த்துப் "பஞ்சருத்ரம்' என்று சொல்வார்கள். அதில் ஓர் இடத்தில், புத்தி, குணம், வாக்கு மூன்றிலும் உயர்ந்தவனாக இருப்பவனே சபையின் அங்கத்தினராக முடியும். அவன் ஸபேயன். பிறப்பால் ஒருவன் ராஜாவாகிவிட்டால் போதாது, அவன் ஸபேயனாக இருக்க வேண்டும் என்று காட்டும் மந்திரங்கள் இருக்கின்றன. (ரிக் வேதம், 2.33.15).

யஜுர் வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், "ஸ்ரீ ருத்ரம்' என்ற புகழ்மிக்க ஸ்துதி, சபையையும் சபாநாயகரையும் பற்றிச் சொல்கிறது. இன்றைக்கு நாம் சட்டப்பேரவை, அவை என்றெல்லாம் சொல்கிறோமே, அந்த அவைக்கும் வந்தனம் சொல்வதாக இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காகப் பல அறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு அவை ஏற்படுத்தினால் அது ஈஸ்வர ஸ்வரூபமே என்று மதித்து "ஸ்ரீ ருத்ர'த்தில் அதற்கு நமஸ்காரம் தெரிவித்திருக்கிறது.

மக்களுடைய நலனை ஆராய்ந்து, விவாதித்து முடிவுகள் எடுக்க வேண்டிய சபையைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்பதை உபதேசிக்கும் ஒரு வேத ஸூக்தம் ரிக் வேதத்தின் முடிவில், பத்தாம் மண்டலம், 191-வது ஸூக்தத்தில் இருக்கிறது. அதில், "ஒன்றுகூடுங்கள். ஒருவருக்கொருவர் திறந்து பேசி விவாதித்துக் கொள்ளுங்கள். உலக நன்மை, மக்கள் நலன் ஒன்றே லட்சியம் என்பதில் உங்கள் எல்லாருடைய மனமும் ஒத்துப் போகட்டும். ஒரே லட்சியத்துக்காக ஏக மனதாகப் பாடுபட்டுப் பரஸ்பரம் இதயம் கலந்து ஒன்றாகுங்கள். மனம் ஒன்றுபட்டு எல்லோரும் இன்புற்றிருக்க வழி காணுங்கள்' என்று அந்த ஸூக்தத்தில் உபதேசித்திருக்கிறது.

ராஜாங்க விஷயங்களை ஆலோசித்து விவாதிக்கும் அவையின் அங்கத்தினர்களுக்கு நல்ல அறிவு, உயர்ந்த சீலம், கருத்துக்களைத் தெளிவாக எடுத்துச் சொல்வதற்கு அவசியமான வாக்கு வன்மை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும் என்பதை வேதத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். இந்த மூன்றையும் வேண்டும் பிரார்த்தனை வடிவிலான மந்திரங்கள் வேதத்தில் இருக்கின்றன. அத்தகைய அவைகளில் அங்கம் வகித்து அரசாட்சிக்கும் மக்கள் நலனுக்கும் உதவ வேண்டும் என்று விரும்பியவர்கள் "விததா என்கிற அவையில் வன்மையாகப் பேசும் சக்தி எங்களுக்கு வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து கொண்டதை யஜுர் வேதம் சொல்கிறது.

தொழில் அடிப்படையில் குழுக்களாக வாழ்ந்த பல சமூகத்தினரும் இம்மாதிரி அவைகளில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். அதன் மூலமே நாட்டு நிர்வாகம் நடைபெற்றிருக்கிறது. ராஜ பட்டாபிஷேகத்தைப் பற்றிய வேத மந்திரங்களைப் பார்த்தால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவனைத் தங்கள் அரசனாக ஏற்று பிரகடனம் செய்திருக்கிறார்களென்று தெரிகிறது.

இதில் முடியரசோடு குடியரசும் கைகோத்துக் கொண்டு போகிறதென்று சொல்லலாம். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்பதெல்லாம் நம்மிடம் புதுசாக வந்து சேர்ந்திருக்கும் கொள்கைகள் இல்லை; ஆதிக்கு ஆதியான வேத காலத்திலிருந்து இந்த சிந்தனையும் செயல்பாடும் இருந்து வந்திருக்கிறது.

மேல்நாட்டுக்காரர்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே, நம்முடைய தேசத்தில் மக்கள் பலவிதங்களில் குடியரசு, ஜனநாயகம், சுய ஆட்சி முதலானவற்றின் அம்சங்களைப் பெற்றிருந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் பல பதங்கள் வேதங்களில் காணக் கிடைக்கின்றன.

ராஷ்ட்ரம், ஜனபதம், ச்ரேணி என்ற சொற்கள் ஒரு ராஜ்யம், நகரம், கிராமம், ஊர்கள் என்று நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டிருந்ததைச் சொல்கிறது. "ச்ரேணி' என்பது ஒவ்வொரு தொழில்காரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த அமைப்பு. இந்த அமைப்பினர் தங்கள் தேவைகளை இந்த அவைகளில் பேசும் உரிமை பெற்றிருந்தனர்.

இந்த ஊர் சபைகளின் தொடர்ச்சியைத்தான் உத்தரமேரூர் கல்வெட்டுகளிலும் நாம் காண்கிறோம். அனைவருக்கும் ஆட்சியில் பங்கு இருக்க வேண்டியும் பொறுப்புணர்வு வேண்டும் என்ற கருத்தை மனதில் கொண்டும், தங்கள் தலைவராகத் தங்களில் தகுதியுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான முறை பின்பற்றப்பட்டுள்ளது.

தற்போது ஓர் ஊர் பல வார்டுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போல அந்நாளில் ஒவ்வொரு கிராமமும் பல குடும்புகள் என்று பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பும் ஒரு மக்கள் பிரதிநிதியின் நிர்வாகத்தின் கீழ் இருந்துள்ளது. பேரரசாக வெளித்தோற்றத்தில் இருந்த போதிலும் கிராமங்கள் ஊர் சபைகளாகவும், அதன் பிரதிநிதிகள் அந்தந்த ஊரின் மண்ணின் மைந்தர்களாகவும் அந்த ஊரினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளனர்.

ஜனநாயகம் என்பது இந்த மண்ணின் பண்பு. காலப் பெருவெள்ளத்தில் இவை பல மாற்றங்களைக் கண்டாலும் தேசத்தின் நிர்வாகம் என்பது மக்களுக்கானது, மக்களால் ஆனது என்ற அடித்தளத்தில் வேத காலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேர்தல் திருவிழாக்கள் நமக்குப் புதிதானவை அல்ல. என்றாலும் ஜனநாயகம் என்ற நடைமுறையை உலகுக்கு வழங்கிய தேசத்தில் பணநாயகர்களே தேர்தலில் களம் காண முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. வேதம் சொல்லும் ஜனநாயக நடைமுறைகளை இளம் தலைமுறையினர் தெரிந்துகொண்டு ஜனநாயகப் பாதை சிறக்க வழி காண வேண்டும்.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com