ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

எஸ்.ஸ்ரீதுரை

சொந்த வாகனம் இல்லாதவர்கள், அலுவலகம், கல்விக்கூடம், மருத்துவமனை என ஊருக்குள் பயணிப்பதென்றால் அவசரகாலத்தில் ஆபத்பாந்தவர்களாக கைகொடுப்பவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்தாம். சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதியில் உள்ளூர்ப் பயணங்களுக்கு உதவிய மாட்டு வண்டிகள், ஜட்கா (குதிரை வண்டிகள்), சைக்கிள் ரிக்ஷôக்கள், வாடகைக் கார்கள் ஆகியவற்றின் இடத்தைத் தற்பொழுது ஆட்டோக்களே ஆக்கிரமித்திருக்கின்றன.

ரயில் அல்லது பேருந்துகளில் வந்து இறங்கித் தத்தமது சொந்த வண்டிகள் மூலமும், நகரப் பேருந்துகள் மூலமும், நடையாகவும் பயணிக்கின்றவர்களும் உண்டு. அவர்களுக்குச் சற்றும் குறையாத அளவில் ஆட்டோக்களை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கையும் உள்ளது. இந்நிலையில், வெளியூரிலிருந்து வருபவர்களை முதன்முதலில் வரவேற்கின்ற "வரவேற்பு மேஜை' பணியாளர்களாக ஆட்டோ ஓட்டுநர்களையே கருத வேண்டியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக நமது அன்றாட வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஆட்டோ பயணத்தைப் பற்றியும், அவற்றை இயக்குகின்ற ஓட்டுநர்களைப் பற்றியும் கூறுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டிய அல்லது தாண்ட இயலாத அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரின் உடனடித் தேர்வு ஆடோ ஓட்டுநர் பணியாகவே இருப்பதையும் பார்க்கின்றோம். இதன் காரணமாகவே, வாடகை ஆட்டோக்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருவதையும் காண்கின்றோம். சமூக சேவை, சுயவேலைவாய்ப்பு இரண்டின் வடிவமாகவும் அமைந்துள்ள ஆட்டோ ஓட்டுநர் தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் எவ்விதம் மக்கள்பணி ஆற்றுகின்றனர் என்பதைக் குறித்த விவாதங்கள் காலம் காலமாகத் தொடரவே செய்கின்றன.

அதே சமயம், அதிகக் கட்டணம் வசூலிப்பது, அப்பாவிகளான பயணிகளிடம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல் போன்ற புகார்களுக்கும் குறைவு இல்லை. சமீபத்தில் கோவை ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தத்தின் அருகில் சிறுநீர் கழித்த வெளியூர் பயணி ஒருவரை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நிச்சயம் தவிர்த்திருக்கப்பட வேண்டியது.

பொதுவாக, ஆட்டோ ஓட்டுநர்கள், "மீட்டருக்கு மேல் இவ்வளவு ரூபாய் கொடுங்கள்' என்று கேட்பது, அல்லது, குத்துமதிப்பாக ஒரு தொகையைத் தரச் சொல்லி பயணிகளை வற்புறுத்துவது வழக்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணமெல்லாம் என்றோ காற்றோடு கலந்துவிட்டது.

சென்னை போன்ற மாநகரங்களில் ஒருவழிப் பாதைகள், மெட்ரோ ரயில் பணியால் மாற்றுப் பாதை இவையெல்லாம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். "ஒன் வே ரூட்டுல சுத்திக்கிட்டு போகணும் ஸார்!', 'நைட்டு வேளை ஸார்', "திரும்பி வருவதற்கு சவாரி கிடைக்காது ஸார்!', "யார் முகத்துல முழிச்சேனோ, இன்னிக்கு ஒரு சவாரி கூட வரலை ஸார்!' என்ற மறைமுகத் தாக்கு.. இவை போன்ற விதவிதமான காரணங்களைச் சொல்லி அதிகக் கட்டணம் கேட்கின்ற ஆட்டோ ஓட்டுநர்களை நாம் சந்திக்காத நாளே இல்லை என்று கூறலாம்.

நமது கைப்பேசியில் உள்ள செயலிகளின் மூலம் அழைக்கும் ஆட்டோக்களின் ஓட்டுநர்களும் இப்போதெல்லாம் அதிக கட்டணம் கொடுக்கும்படி வலியுறுத்த தொடங்கிவிட்டனர். அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் வாடிக்கையாளரைக் கைப்பேசி வழியே தொடர்பு கொண்டு, "கட்டுப்படி ஆகாது ஸார்!' என்ற வழக்கமான பாட்டைப் பாடுவதுண்டு. இது தவிர, குறைவான கட்டணம் வசூலிக்கக் கூடிய குறுகிய தூரப் பயணங்களை ரத்து செய்துவிடும்படி அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடமே கேட்டுக்கொள்வதும் உண்டு. இவை தவிர, பெருநகரங்களில் இயக்கப்படுகின்ற ஷேர் ஆட்டோக்களின் செயல்பாடுகள் தனி ரகம். அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டும், ரசனைக் குறைவான பாடல்களை அலறவிட்டபடியும் விரைகின்ற அந்த ஷேர் ஆட்டோக்களில் பயணிப்பதற்கு நமது மனதில் துணிச்சல் வேண்டும்.

மேற்கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரிடமும் காணப்படும் பொதுவான குண விசேஷம் ஒன்றுண்டு. "பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படி ஆகவில்லை' என்ற வாதம்தான் அது. ஆனால் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவிடவில்லை என்பதையும், கரோனா பொதுமுடக்க காலத்தில் இருந்ததைக் காட்டிலும் தற்பொழுது அதிகமான கட்டணங்களை வசூலிப்பதையும் வெகு சுலபமாக மறைத்தே இந்தப் பல்லவியை அவர்கள் பாடுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருமே மோசம் என்று சொல்லிவிட முடியாதுதான். மறதியின் காரணமாகப் பயணிகள் விட்டுச் செல்கின்ற நகைகள், பணம், சான்றிதழ்கள், கைப்பேசிகள் போன்ற மதிப்பு மிக்க உடைமைகளைப் பொறுப்பாக உரியவர்களிடம் ஒப்படைக்கின்ற ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அவ்வப்பொழுது கேள்விப்படுகின்றோம். கர்ப்பிணிகளையும் நோயாளிகளையும் இலவசமாக ஏற்றிக் கொண்டு சென்று மருத்துவமனைகளில் விடுவது, வழிதவறியவர்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்று விடுவது, சமூக விரோதிகளைத் துணிச்சலுடன் பிடித்துக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்களின் தன்னலமற்ற நற்பணிகளை பாராட்டத்தான் வேண்டும்.

லாப-நஷ்டங்களோ, ஏற்ற இறக்கங்களோ இல்லாத தொழில் எதுவும் இல்லை என்பதை ஆட்டோ ஓட்டுகின்ற நம் சகோதரர்கள் உணர வேண்டும். மக்கள் சேவைக்கும், கண்ணியமான வாழ்க்கைக்கு வேண்டிய வருமானத்திற்கும் ஒருசேர வழிவகுக்கின்ற தங்களுடைய தொழிலை நியாயமான கட்டணத்துடனும் இன்முகத்துடன் அவர்கள் செய்துவர வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் விருப்பமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com