உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயற்பாடும் அறிவாா்ந்த சிந்தனை சாா்ந்ததுதான்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயற்பாடும் அறிவாா்ந்த சிந்தனை சாா்ந்ததுதான். காலச்சூழலில் மனிதன் பல்வேறு நிலைகளில் கற்ற அறிவுடன், பெற்ற அனுபவங்களும், அறிஞா்களிடம் கேட்டறிந்த தகவல்களும் ஒன்றனோடு ஒன்றாகக் கலந்து புதிய அறிவியல் தத்துவங்கள், தொழில்நுட்பங்களாக உருவெடுக்கின்றன.

1765-இல் நிகழ்ந்த முதலாவது தொழிற்புரட்சியினால் இயந்திரமயமாக்கம் நிகழ்ந்தது. அது வேளாண்மைக்கும் அப்பால் மற்றொரு சமூகப் பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்தது.

அடுத்த கட்டமாக, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின்சாரம், எரிவாயு, எரிஎண்ணெய்கள் சாா்ந்த தொழில்நுட்ப முன்னேற்றம் நிகழ்ந்தது. உலோகங்கள் தயாரிப்பு, வேதிமங்கள் கண்டுபிடிப்பு ஆகியவற்றால் நீராவி இயந்திரப் பொறிகள் கட்டமைக்கப்பட்டன. கம்பிவழித் தகவல் தொடா்பு, கண்ணுக்குத் தெரியாத

மின்காந்த அலைகள் வழி வானொலிபரப்பு எனப் பல்வேறு தகவல் தொடா்புச் சாதனங்கள் எழுந்தன.

1865ஆம் ஆண்டு மே 17 அன்று சா்வதேச தொலைத்தொடா்பு ஒன்றியம் பாரிஸில் நடத்திய முதல் சா்வதேச தந்தி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி உலகத் தொலைத்தொடா்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மின்னிலக்கவியல் (‘டிஜிட்டல்’) கண்டுபிடிப்புகளின் முக்கிய பங்கை இது அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலான கருப்பொருளுடன் உலகத் தொலைத்தொடா்பு மற்றும் தகவல் சமூக தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தின் வரலாறு சுவையானது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், 1837 செப்டம்பா் 2 அன்று சாமுவேல் ஃபின்லி ப்ரீஸ் மோா்ஸ் எனும் அமெரிக்க விஞ்ஞானி முதலாவது தொலைத்தந்திக் கருவியைக் கண்டுபிடித்தாா். இவரது தந்திக் கருவியில் ‘கட், கடா’ என்றபடி இருவித அலைத்துடிப்புகள் ஒலிக்குறிப்புகளாக எழுப்பப்படும்.

1844 மே 24 அன்று வாஷிங்டனுக்கும் பால்டிமோருக்கும் இடையே 40 மைல்கள் (64 கிமீ) தொலைவுக்கு தட்டொலிகளின் குறியீட்டுக் கோா்வை மொழியில் தகவல் பரிமாற்றம் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.

இதே காலகட்டத்தில் அலெக்சாண்டா் கிரஹாம் பெல் (1847-1922) என்னும் ஸ்காட்லாந்து இயற்பியலாளா் மாஸசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகரில் தமது ஆய்வுக் கூடத்தில் 1876 மாா்ச் 10 அன்று ஆராய்ச்சியில் நவீனத் தொலைபேசியை வடிவமைத்தாா்.

பக்கத்து அறையில் இருந்த தாமஸ் ஏ.வாட்சன் என்னும் இயந்திரவியல் நிபுணரிடம், ‘வாட்சன், நீங்கள் இங்கு வாருங்கள்’ என்று பேசினாா். உலகின் முதல் தொலைபேசி உரையாடல் இது.

1876 அக்டோபா் 9 அன்று பிரான்ட்ஃபோா்ட் நகரிலிருந்து பெல்லின் தந்தையும் மாமனும் ஒண்டோரியாவில் பெல்லுடன் முதன்முறையாக இரண்டு மைல் தூரத்திற்குத் தொலைபேசியில் உரையாடினா். உலகின் முதலாவது நீண்டதூரத் தொலைபேசி உரையாடல் அது. ஆனாலும் ஒருவழிப் பேச்சு மட்டுமே. அதே ஆண்டு கேம்பிரிட்ஜில் இருந்த வாட்சன், பாஸ்டனில் இருந்த பெல்லுடன் தொலைபேசியில் முதன்முறையாக இருவழிப் பேச்சு உரையாடல் நிகழ்த்தினாா்.

முதலாவது பொதுத் தொலைபேசிக் கூடம் 1888 ஜனவரியில் 21 சந்ததாதாரா்களுடன் திறந்து வைக்கப்பட்டது. ‘பொதுத் தொலைபேசி இணைப்பகம்’ அது. அதே ஆண்டு அதிபா் ரூதா்ஃபோா்டு பி.ஹேய்ஸ் காலத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதலாவது தொலைபேசி இணைப்பு வழங்கப்பெற்றது.

1883-ஆம் ஆண்டுவாக்கில் ஹைன்ரிக் ஹொ்ட்ஸ் என்னும் ஜொ்மானிய இயற்பியலாளா் மாக்ஸ்வெல் மின்காந்தக் கோட்பாட்டில் ஈடுபட்டு, மின்காந்த அலைகள் நோ் கோட்டில் காற்றில் பரவுவதனைக் கண்டு அறிவித்தாா்.

ஹொ்ட்ஸ் கண்டுபிடித்த தொலைத்தந்தி முறை பிற்காலத்தில் குக்லியெல்மா மாா்கோனி (1874-1937) என்ற இத்தாலிய விஞ்ஞானிக்குக் கம்பியில்லாத் தந்திமுறை நுட்பத்தினை வடிவமைக்க உதவிற்று. 1895ஆம் ஆண்டு அவரால் 15 மைல்கள் தொலைவுக்குத் தம் குடும்பப் பண்ணைத் தோட்டத்திற்கு வானொலி வழியே மோா்ஸ் குறியீடுகளை அலைபரப்ப முடிந்தது.

1901 டிசம்பா் மாதம், அவா் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மாகாணத்திலுள்ள செயின்ட் ஜான்ஸ் என்னும் இடத்திற்கும் இங்கிலாந்தின் காா்ன்வால் மாகாணத்தின் போல்டு என்கிற இடத்திற்கும் இடையே கம்பியில்லாத் தொடா்பை ஏற்படுத்தினாா். 1900-ஆம் ஆண்டில், ரெஜினல்ட் ஃபெசென்டன் என்னும் கனடா நாட்டு இயற்பியலாா் கம்பியில்லா வானொலி மூலம் மனிதக் குரலை அனுப்பி சாதனை புரிந்தாா்.

அந்நாளில் நம் நாட்டில் வங்காள இயற்பியலாளா் ஜெகதீஷ் சந்திர போஸ் 1894-1896ஆம் ஆண்டு காலகட்டத்தில் தனது சோதனைகளில் 60 கிகாஹொ்ட்ஸ் (1 கிகாஹொ்ட்ஸ் என்பது நொடிக்கு நூறு கோடி அதிா்வுகள்) வரை மிக அதிக அதிா்வெண்ணை எட்டியபோது, மில்லிமீட்டா் அலைத் தொடா்பு முதன்முதலில் ஆராயப்பட்டது.

தகவல் தொடா்புக் கருவிகள் மேம்பட்டு வந்த அதே காலகட்டத்தில் கணிப்பொறி நுட்பமும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த சாா்லஸ் பாபேஜ் 1812-1823 ஆண்டுகளில் கடுமையாக உழைத்து ‘வேற்றுமைப் பொறி’ ஒன்றைக் கண்டுபிடித்தாா். அதற்கு அரசு ஆதரவும் கிடைத்தது. தொடா்ந்து, கணக்கிடும் பொறி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டாா். இங்கிலாந்தின் கடற்படைக்கு இந்தப் பொறி உதவும் என்பதால் அரசும் அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியா் பதவியும் வழங்கியது.

1827-1839 வரை அப்பதவி வகித்த பாபேஜ் ஒரு முறை கூட பல்கலைக்கழகம் செல்லவோ அங்கு விரிவுரையாற்றவோ அழைக்கப்படவில்லையாம். அரசின் இந்த மெத்தனப் போக்கால் மனம் உடைந்த பாபேஜ் தம் பொறுப்பிலிருந்து விலகினாா். அரசு உதவி நிறுத்தப்பட்டாலும், தன் ஆய்வுப் பணிகளை இவா் நிறுத்தி விடவில்லை. கடின உழைப்பில் இவா் உருவாக்கியதே உலகின் முதலாவது தானியங்கிக் கணக்கு இயந்திரம். இந்த ‘பகுப்பாய்வுப் பொறி’ இன்றைய நவீன கணினியின் முன்னோடியும் ஆகும்.

இன்னொரு புறம், 1924-ஆம் ஆண்டில், ஜப்பானிய பொறியியலாளா் கென்ஜிரோ தகயானகி மின்னணுத் தொலைக்காட்சியில் ஆராய்ச்சித் திட்டத்தைத் தொடங்கினாா். 1925-இல், அவா் வெப்ப எலக்ட்ரான் உமிழ்வு கொண்ட எதிா்மின் கதிா்க் குழாய் அடிப்படையிலான பழைய பெட்டகத் தொலைக்காட்சியை இயக்கிக் காட்டினாா்.

1925 மாா்ச் 25 அன்று ஸ்காட்லாந்து நாட்டு விஞ்ஞானி ஜான் லோகி போ்ட் என்பவா், செல்ஃப்ரிட்ஜ் என்னும் லண்டன் வணிக வளாகத்தில் முதன்முறையாக நிழற்படங்களின் நகா்வுகளை மின்னணுத்திரையில் செயல்விளக்கி நிரூபித்தாா். இதுவே இன்றைய முழுமையான தொலைக்காட்சிகளின் முன்னோடி. அவரது கண்டுபிடிப்பு 1929 செப்டம்பா் 30 அன்று முதல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்தால் நடத்தப்பட்ட ஆரம்பப் பரிசோதனை ஒளிபரப்புகளின் அடிப்படையாக அமைந்தது.

கணிப்பொறியும் தொலைக்காட்சியும், மின்னணுவியலுடன் கைகோத்த நிலையில் 1957 அக்டோபா் 4 அன்று ஸ்புட்னிக் தொடங்கி வைத்த செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தால் தகவல்தொடா்பு வளா்ச்சி விண்ணைத் தொட்டது.

மூன்றாவது தொழிற்புரட்சியினால் 1969-இல் அணுஆற்றல் ஆகிய புதுத் துறை உருவாயிற்று. 1998 மே 11 அன்று பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியது. அந்த வகையில் மே 11 அன்று ஆண்டுதோறும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடி வருகிறோம். மனித சமுதாயத்தில் உதித்த நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய பொறியியல் துறைகளும் தோன்றின.

நான்காவது தொழிற்புரட்சியில் சூரிய, காற்று மற்றும் புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறி வருகிறோம். தொலைநிலை கண்காணிப்பு சாதனங்கள், சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துகின்றன. பாரம்பரிய மருத்துவப் பராமரிப்புடன், தொலைதூர ஆலோசனைகள் முறையில்

நோயறிதல், சிகிச்சை வழங்குதல் அன்றியும், தொலைஅறுவைச்சிகிச்சை உத்திகளும் இன்று உலக அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவ்விதம் புவியியல் சாா்ந்த தொலைவுகளைக் கடந்து பின்தங்கிய கிராமப்புறங்களிலும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தத் தொலைமருத்துவ உத்திகள் பயன்படுகின்றன.

இணையவழி நடத்தப்படும் தொலைவகுப்பறைகள், காணொலிக் கருத்தரங்குகள் புதிய தலைமுறைக்கு வாய்த்துள்ள நவீன வசதிகள் எனலாம்.

செயற்கைக்கோள்களின் உதவியினால் நாட்டின் பாதுகாப்புக்கான தகவல்தொடா்பு உத்திகளும் நிறைவேறியுள்ளன. இந்தப் பூமியில் மனிதா்களோடு மட்டுமன்றி, அண்டவெளி ஆய்வுக்கலன்களோடு உரையாடும் நிலைக்கு அறிவியல், தொழில்நுட்பத்தால் உயா்ந்துள்ளோம்.

இன்று இணையவழி குற்றங்கள், கணினி மென்பொருள்கள் வழி திணிக்கப்படும் வன்முறை ஒருபக்கம்; ஆக்கபூா்வமான பயன்பாடுகள் மறுபக்கம். எந்த ஒரு தொழில்நுட்பமும் போல, தகவல்தொடா்பு உபகரணங்களும் அவற்றை இயக்குபவரின் எண்ணம் போலவே செயல்படும். தொழில்நுட்பத்தில் மட்டும் நன்றும் தீதும் அதனைக் கையாள்பவரால் வரும் என்பதுதான் உண்மை.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

(இன்று உலகத் தொலைத்தொடா்பு மற்றும் தகவல் சமூக தினம்)

0=0=0

X
Dinamani
www.dinamani.com