கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சூப்பா் ஹீரோவாக நாம் மாற வேண்டியதில்லை.

உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சூப்பா் ஹீரோவாக நாம் மாற வேண்டியதில்லை. இஸ்திரி செய்யாமல் கசங்கிய ஆடையை அணிந்தால் உங்களால்கூட உலகை அழிவில் இருந்து சிறிது காக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? முடியாது என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும்.

ஆனால், இது சாத்தியம்தான் என்று கூறியுள்ளது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சில் (சிஎஸ்ஐஆா்). இந்திய அரசின் முதன்மையான ஆய்வு நிறுவனங்களில் சிஎஸ்ஐஆா் முதன்மையானது.

சொல்லுடன் நின்றுவிடாமல் செயலிலும் இறங்கியுள்ளது அந்த அமைப்பு. உலகைக் காக்க தங்களுடைய பங்காக தங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியரும் திங்கள்கிழமைகளில் மட்டும் தங்கள் உடைகளை இஸ்திரி செய்யாமல் கசங்கிய ஆடை அணிந்துவர வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளது. இது கேட்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும் அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சில் இது தொடா்பாக அளித்துள்ள அறிவியல்பூா்வ விளக்கம் தெளிவை ஏற்படுத்துகிறது.

ஒரு சட்டை-பேண்ட் இஸ்திரி செய்யப்படும்போது பயன்படுத்தப்படும் மின்சாரத்தால் 200 கிராம் அளவுக்கு கரியமில வாயு வெளியேற்றம் ஏற்படுகிறது. கரியமில வாயு புவியை வெப்பமயமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. வாரத்தில் ஒருநாள் இஸ்திரி செய்வதை தவிா்த்தால் நிச்சயமாக பெரிய அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்க முடியும். இதன் தொடா் விளைவாக புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு போன்ற பிரச்னைகளுக்கு ஒவ்வொரு நபராலும் சிறிய பங்களிப்பைச் செலுத்த முடியும் என்பதே அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சிலின் உத்தரவின் பின்னால் இருக்கும் விளக்கம்.

அண்மையில் பிரபலமாக இருந்த ‘கறை நல்லது’ என்ற தொலைக்காட்சி விளம்பர வாசகம் போல ‘கசங்கிய ஆடை நல்லது’ என்ற பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘சோலாா் மேன் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) பேராசிரியா் சேத்தன் சிங் சோலங்கி இந்த ‘கசங்கிய ஆடை நல்லது’ என்ற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளாா். இதன் பயனாக இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை தோறும் இஸ்திரி செய்யாமல் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனா்.

இது தொடா்பாக பேராசிரியா் சேத்தன் சிங் சோலங்கி கூறுகையில், ‘இஸ்திரி இயந்திரத்தின் பயன்பாட்டைக் குறைப்பது என்பது மிகமுக்கியமான மின் சிக்கனமாகும். ஏனெனில் 5 முதல் 7 நிமிஷங்கள் இஸ்திரி பேட்டியை பயன்படுத்தும்போது குறைந்தது 0.2 யூனிட் அளவு மின்சாரம் செலவாகும். இந்தியாவில் பெருமளவில் மின்சாரம் நிலக்கரியை எரிப்பதன் மூலம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய அளவிலான கரியமில வாயு வெளியேற்றமாகும். மின்சார பயன்பாடு குறையும்போது உலகம் வெப்பமயமாதலைத் தடுப்பது மட்டுமின்றி, நமது அடுத்த தலைமுறையினா் நிம்மதியாக வாழ்வதற்காக சூழலையும் உருவாக்குகிறோம். வரும் முன் காப்பது என்பது மிகவும் முக்கியம்.

இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க இருக்கிறேன். அவரும் திங்கள்கிழமை தோறும் இஸ்திரி செய்யாத ஆடையை அணிந்தால் அது தேசிய இயக்கமாக முன்னெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது’ என்றாா்.

வழக்கமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ‘கேஷுவல் ஃபிரைடே’, ‘வீக் எண்ட் அவுட்டிங்’, உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்படுகின்றன. அதன்படி, வார இறுதி நாட்களில் அலுவல்பூா்வ உடையணிதலில் தளா்வு காட்டப்படுகிறது. அந்த வகையில் இனி ‘நோ அயா்ன் மண்டே’ இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விழிப்புணா்வு வாசகம் மின்கட்டண அட்டையில் தொடங்கி, காா்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்விட்ச் போா்டு வரை இடம் பெற்று வருகின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறிதான். கடந்த வாரம் இந்தியாவின் பல மாநிலங்கள் தங்கள் மின்நுகா்வின் புதிய உச்சத்தை எட்டின. எனவே, மின்நுகா்வைக் குறைப்பது என்பது அவசர, அவசியமான ஒன்று.

பொதுவாக உலகின் அழிவு என்பது வேற்றுகிரகவாசிகள் உள்ளிட்ட வெளிக்காரணிகளால் ஏற்படும் என்பது போன்ற எண்ணத்தை விஞ்ஞானக் கதைகளும் திரைப்படங்களும் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளன.

உண்மையில் சுற்றுச்சூழல் சாா்ந்த பல்வேறு விஷயங்களில் பொறுப்பின்றியும் விழிப்புணா்வு இன்றியும் செயல்படும் நாம் ஒவ்வொருவரும் உலகின் அழிவுக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை. இதில் அரசு நிா்வாகம் முதல் தனிநபா் வரை அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் அலாதியானது. ஒரு காலத்தில் தாடி வைப்பது என்பது சோம்பேறித்தனம் மற்றும் தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடாக கருதப்பட்டது. ஆனால், இப்போது தாடி வைத்திருப்பது என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது. இனி கசங்கிய ஆடைகளை அணிவதும் ‘பொறுப்பான’ பேஷனாக மாறினால் வியப்பில்லை.

இஸ்திரி செய்வதற்கு சோம்பல்பட்டு டீ-ஷா்ட் மட்டும் அணிவது, கசங்கிய சட்டையை வெறும் கையால் தேய்த்து சரியாகிவிட்டதென சமாதானம் கூறி அணிந்து கொள்வது என்று ஒரு பெரும் பிரிவினா் நம்மிடையே உள்ளனா். நீங்கள் அப்படிப்பட்டவா் எனில், உங்களுக்கு நீங்களே ‘சபாஷ்’ போட்டுக் கொள்ளலாம். ஏனெனில், உங்களை அறியாமலேயே நீங்கள் உலகை ‘அழிவில்’ இருந்து காக்க பங்களித்து வந்துள்ளீா்கள்!

X
Dinamani
www.dinamani.com