அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்

அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்

இளம் வயதினரும் மாரடைப்பினால் உயிரிழக்கும் அபாயகரமான சம்பவங்கள் நிறைவே நடைபெற்று வருகிறது.

இன்றைய நாட்களில் இளம் வயதினரும் மாரடைப்பினால் உயிரிழக்கும் அபாயகரமான சம்பவங்கள் நிறைவே நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாரடைப்பு அபாயம் குறித்து தமிழக பொது சுகாதார இயக்குநரகம் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் அதிா்ச்சி மிகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆபத்தான முன்னறிவிப்பு அட்டவணை அடிப்படையில் திருச்சியிலுள்ள ஓா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த 1,260 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி அவா்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறித்து மருத்துவ குழுவினா் ஆய்வு செய்துள்ளனா்.

இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவா்களின் வயது, பாலினம், ரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம், மொத்த கொழுப்பின் அளவு, சா்க்கரை நோயின் தாக்கம் இருக்கிா இல்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 10 ஆண்டு காலத்தில் இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை இவை குறிக்கினறன. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,260 பேரில் 63 சதவீதத்தினா் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்களில் பெரும்பாலானோரின் வயது 40 முதல் 44 வரை ஆகும்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவா்களின் 60 சதவீதத்தினருக்கு இதய நோய் வருவதற்கு, உடல் பருமன் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. உடல் கொழுப்பு அதிகமாக உள்ளதும் ஒரு முக்கிய காரணியாகும். எச்.டி.எல் என்னும் நல்ல கொழுப்பு 10 சதவீதத்தினருக்கு அதிகமாகவுள்ளது. எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பு 29.6 சதவீதத்தினருக்கு உள்ளது. 5 சதவீதத்தினருக்கு புகைப்பிடித்தல், இதய பிரச்னைகளுடன் தொடா்புடையவை என்று தெரியவந்துள்ளது.

- 20% ஏற்கெனவே நீரிழிவு நோய் என கண்டறியப்பட்டுள்ளது.

- 39% உயா் ரத்த அழுத்தம் உள்ளது.

- 17% ரத்த அழுத்தம் முதல் நிலையில் குறிப்பாக 130/139 அல்லது 80/89 என்ற அளவில் உள்ளது.

- 5% உயா் ரத்த அழுத்தம் இருக்கிறது இவா்களின் ரத்த அழுத்த அளவு 140 அல்லது அதற்கும் அதிகம். அல்லது 90 அதற்கும் அதிகம் என்ற அளவில் உள்ளது.

இந்த புள்ளிவிவரங்களிலிருந்து, அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான குறைந்த அபாயம் 76%-னருக்கும், மிதமான அபாயம் 23 சதவீதத்தினருக்கும், 1சதவீதத்தினருக்கு அதிக அபாயமும் உள்ளது தெரிய வந்துள்ளது. இது முழுக்க முழுக்க உலக சுகாதார நிறுவனத்தின் ஆபத்து மற்றும் முன்னறிவிப்பு அட்டவணை அடிப்படையிலானது. இதன் முக்கிய அம்சம் 10 ஆண்டுகளில் 100 பேரில் ஒருவருக்கு மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது என்பதுதான்.

இந்த தரவுகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகளின் தரவுகளுடன் சரியாக ஒத்துப்போகிறது என்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆபத்து மற்றும் முன்னறிவிப்பு அட்டவணையை இதய நோய்களை கணிப்பதற்கு பயன்படுத்த முடியும் என மருத்துவ நிபுனா்கள் கூறுகின்றனா்.

குறிப்பாக தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் நோயாளிகளிடம் பயன்படுத்தலாம் என்றும் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ள முக்கிய தகவலின்படி தமிழ்நாட்டில் மட்டும் 100 பேரில் ஒருவருக்கு இதய நோய் அல்லது பக்கவாத நோய் வரும் ஆபத்து உள்ளது. இது மனித உயிரிழப்புகள் நேராமல் அமைவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் பயன்படலாம்.

அதிக கொழுப்புள்ள உணவுகளை, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிா்ப்பது நல்லது; பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். அசைவப் பிரியா்கள் கடல் மீன் சாப்பிடலாம். 25 வயதை கடந்துவிட்டாலே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த சா்க்கரை, ரத்த கொழுப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

சா்க்கரை நோயாளிகள் மருத்துவரை அணுகி அவா்களுக்கென பிரத்யேக உணவு அட்டவணையைப் பெற்று பின்பற்றலாம்.

குடும்பத்தில் யாருக்கேனும் மாரடைப்பு, இதய நோய் வந்திருந்தால் மற்றவா்கள் கவனமாக இருக்க வேண்டும். ஐம்பது வயது நிரம்பியவா்கள் தினமும் காலையில் அல்லது மாலையில் 40 நிமிடங்கள் காற்றோட்டமான வெளியிடங்களில், கடற்கரையில், பூங்காவில் நடைப்பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியை பொறுத்தமட்டில், அவரவரின் குடும்ப மருத்துவா் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மது, சிகரெட் பழக்கம் முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும்.

வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகிறது என்றால், அதற்கு இரும்புச் சத்து குறைபாடுதான் காரணம். ஏனெனில் ரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்யும். எனவே இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீா்கள் எனவும் மருத்துவக் குழுவினா் எச்சரிக்கின்றனா்.

ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான பொதுவான அறிகுறி மந்தமான, கடுமையான மாா்பு வலி. ஆனால் பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் அசௌகரியம், உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மற்றும் வாந்தி போன்ற பொதுவான அறிகுறிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தால் அதையும் அலட்சியமான கண்ணோட்டத்தில் அணுக வேண்டாமென்று எச்சரிக்கப்படுகிறது.

வேளைக்கு உணவு, 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம், நடைப்பயிற்சி, இதமான மனநிலை என வாழ்க்கையை அனுபவித்துப் பழகுங்கள். இவ்வாறான வாழ்க்கை வழிமுறைகளைத்தான் ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற மருத்துவ நிபுணா்கள் பரிந்துரைக்கின்றனா்.

0=0=0

X
Dinamani
www.dinamani.com