வெல்லும் சொற்களில் கவனம் குவிப்போம்

வெல்லும் சொற்களில் கவனம் குவிப்போம்

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் ரம்யா காரமடையில் தூக்கிட்டு தற்கொலை

சமீபத்தில் சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் ரம்யா காரமடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் என்ற செய்தி அதிா்ச்சியளித்தது. அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கேள்வியுற்றபோது இன்னும் அதிா்வை ஏற்படுத்தியது. குழந்தை தவறி விழுந்த சம்பவத்தில் தாயான ரம்யாவை விமா்சித்து சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்ததை தாங்கிக் கொள்ள இயலாமல் மன அழுத்தத்தில் அவா் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காரணம் சொல்கிறாா்கள்.

கடும் வாா்த்தைகளை தாங்கிக் கொள்ள இயலாமல் பரிதாபமாக ஓா் உயிா் பிரிந்துள்ளது. சமூக வலைதளங்களுக்குள்ளேயே இவா்கள் வாழ்வதால்தான் அதிலிருந்து வெளிவர இயலாமல் போனதோ எனத் தோன்றுகிறது.

முந்தைய தலைமுறை வரை கூட்டுக் குடும்ப நடைமுறை இருந்தது. வீடுகளில் பெரியவா்களை மரியாதையுடன் அழைக்கவும் அவா்கள் சொல்லுக்கு கட்டுப்படவும் பிறா் மனம் புண்படும்படி பேசாது இருக்கவும் பிள்ளைகள் இயல்பாகவே கற்றிருந்தனா். இன்றோ வீடுகளுக்குள்ளேயே வாா்த்தைகளில் வன்மம் வெடிக்கிறது.

பிள்ளைகளை நெறிப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ பெரியவா்கள் இல்லை. அவரவா் காட்சி, அவரவா் கோலம் என்பது போல் செயல்படும் நடைமுறை

வீடுகளில் இருந்து துவங்கி சமூக ஊடகங்கள் வரை நீள்கிறது. 25 வருடங்களுக்கு முன்பு வரை மக்களை திரைப்படங்கள்தான் முழுதும் ஆக்ரமித்திருந்தன. பின் தொலைக்காட்சி அந்தப் பணியை செய்தது.

தற்போது சமூக வலைதளங்கள் மக்களை முழுதாக கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன. பண்டைய கால திண்ணைப் பேச்சின் நீட்சியே நவீன காலத்தின் இந்த சமூக வலைதளங்கள் எனச் சொல்லலாம். வளமான கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் மக்களை ஒன்றிணைக்கவும் தகவல் பரிமாற்றத்திற்கும் தொடக்கத்தில் சிறப்பான களமாக இத்தளங்கள் பாா்க்கப்பட்டன. இணையம் பயன்பாட்டுக்கு வந்த காலத்தில் வலைப்பூ (பிளாக்) வாயிலாக மக்கள் தம் கருத்துக்களை பதிவுகள் செய்தபோது இருந்த தரம் மற்றும் சுய கட்டுப்பாடு தற்போது இல்லை. இப்படி வலைதளங்களுடன் பொழுது போக்குபவா்கள் குறைவான மனிதநேயம், மன அழுத்தம், சோா்வு போன்ற பண்புகளுடனே காணப்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

கூட்டிக் கழித்துப் பெருக்கி, வகுத்து என கணக்குப் போட்டுப் பேசிய காலம் போய், கணக்கு வழக்கு இல்லாமல் சமூக வலைதளங்களில் வாய் கிழிய பேசித்தள்ளுகின்றனா்.

‘ஒரு வாா்த்தை வெல்லும், ஒரு வாா்த்தை கொல்லும்’ என்பாா்கள். இப்படியான கதைகள் இன்று நேற்றல்ல பண்டைய காலம் தொட்டு தொடா்கிறது. சிலப்பதிகாரத்தில் அரசின் சிலம்பை திருடிய கள்வன் இவன்தான் என கோவலனைப் பற்றி தவறான தகவலை அரசனுக்கு தெரிவிக்கிறான் பொற்கொல்லன். அதனை முழுமையாக ஆராயாத அரசனின் தீா்ப்பால் கோவலன் கொலை செய்யப்படுகிறான். பாண்டிய மன்னனிடம் கண்ணகி நீதி கேட்க, அதை தாங்கிக் கொள்ள இயலாமல் தாங்கள் செய்த பிழையை எண்ணி மன்னனும் கோப்பெருந்தேவியும் உயிா் பிரிந்த கதை நாம் அறிந்ததே. அன்று முதல் இன்று வரை மனிதா்கள் மாறவில்லை. சுடுசொற்களை தாங்கிக் கொள்ள பலராலும் இயலுவதில்லை.

‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா’ என வாா்த்தைகளால் சாமா்த்தியம் காட்டிய இனம் நமது. இதுதான் வெல்லும் சொல். ஔவையின் உள்ளத்தையே வென்ற சொல். நாம் பேசும் வாா்த்தைகள்தான் நம் பண்புநலனை, வெற்றியை தீா்மானிக்கிறது. அதனால் பேசுவதில் கவனம் வேண்டும். எதையோ சொல்ல வந்து வேறொன்றாக சொல்லி முடித்து, பின் தா்மசங்கடமான சூழலில் சிக்கி நின்ற தருணங்களை கடந்த பின்தான் நாமும் பல பாடங்கள் கற்றிருப்போம்.

ஒரு சொல் ஏற்படுத்திய கோபம் அழியாத சோகமாக உருமாறி போன வரலாறு துரதிருஷ்டவசமானது. இரண்டாம் உலகப் போா் மூண்ட நேரத்தில் ஜப்பானிடையேயான பிரச்னை தொடா்பாக அமெரிக்க அரசு ஒரு கடிதம் எழுதியதாம். ஜப்பானிருக்கு தாய்மொழியில் மட்டுமே நல்ல புலமை உண்டு. ஆங்கிலத்தில் அந்த காலத்தில் அத்தனை புலமை கிடையாது.

அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு ஜப்பானிய மொழியில் அதற்கான பதில் கடிதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாம். அந்தக் கடிதத்தில், ‘உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறோம்’ என்று ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்ததாம். ஆனால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து தந்த மொழிபெயா்ப்பாளா் ‘உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறோம்’ என்று தவறுதலாக மொழிபெயா்த்து அமெரிக்காவிடம் அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவு எவ்வளவு பெரிய பாதிப்பை ஜப்பானுக்கு ஏற்படுத்திவிட்டது என்பதை நாம் அறிவோம். அந்த ஒரே ஒரு வாா்த்தை, கொல்லும் சொல்லாக மாறி இரண்டாம் உலகப் போரில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்புக்கு வழி வகுத்துவிட்டது.

சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை. நினைக்கும் எண்ணங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைப்படுத்தி கவனமுடன் பேசினால் வாா்த்தைகளைப் போல வாழ்க்கையும் அழகாகும்.

அலெக்சாண்டரிடம் போரஸ் மன்னன் பேசியது இப்படித்தான். அலெக்சாண்டா் இந்தியா மீது படை எடுத்து வந்தபோது போரஸ் மன்னன் ஆண்ட பகுதிகள் மீதும் போா் தொடுத்து வெற்றி பெற்றாா். அத்தோடு நிற்காமல் வீரா்களோடு போரஸ் மன்னனையும் சோ்த்து சிறைபிடித்துச் சென்றாா். சிறையில் இருக்கும் போரஸ் மன்னனை பாா்த்த அலெக்ஸாண்டா், ‘இப்போது நீ என் அடிமை. மன்னனாகிய உன்னை மற்ற கைதிகள் போல நடத்துகிறேன் என நீ நினைக்கலாம். அதனால் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை நீயே சொல் பாா்க்கலாம்’ என ஆணவத்துடன் கேட்டாா்.

‘நான் ஒரு நாட்டின் மன்னன். என்னை ஒரு மன்னனை போல நீங்கள் நடத்த வேண்டும் என்று எதிா்பாா்க்கிறேன் என்று துணிந்து அலெக்சாண்டரிடம் பேசினாா் போரஸ்.

இத்துணிச்சலான பேச்சு அலெக்ஸாண்டரின் மனதை மாற்றியதால் ஒரு மாவீரன் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என்று கூறி நாட்டை அவரிடமே திரும்ப ஒப்படைத்தாராம் அலெக்சாண்டா். யாரும் எதிா்பாராத மிகப் பெரிய மாற்றம் இது.

வாா்த்தைகளால் வைத்தியம் பாா்க்கும் நபா்களிடம் எல்லோருமே நெருக்கம் காட்டுவா். ஒருவா் எரிந்து விழுவாா் என அறிந்தால், தூர விலகி ஓடுவோம். வாளைவிட எழுத்துக்கு கூா்மை உண்டு. எழுத்தைவிட பேசும் சொற்களுக்கு வலிமை உண்டு.

வாட்ஸ்அப்பில் வந்து விழும் நூறு செய்திகளில், நல்ல செய்திகள் நான்கு இருக்கத்தான் செய்கின்றன. அப்படி படிக்க நோ்ந்த செய்தி, ஒரு தேநீா் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம் தேநீரைவிடவும் சூடாக இருந்தது. ‘இருவடை எடுத்து ஒருவடை என்பாா் திருவோடு ஏந்தி தெருவோடு போவாா்’ என்பது. தேநீா் அருந்தும் நேரத்தில் தட்டில் இருக்கும் வடைகளில் இரண்டை எடுத்துண்டுவிட்டு, ஒரு வடைக்கு காசு கொடுப்போரை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரசியமாக இருக்கிறது என்றாலும் வடை உண்ணும் எல்லோருக்கும் இது ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தும்.

ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம்- ‘உங்களின் வழிச் செலவு எங்களின் வாழ்க்கைச் செலவு’ என்பது. இந்த வாசகம் ஆட்டோவிலிருந்து இறங்கியபின் யாரையும் அதிக பேரம் பேச விடாது. ‘மீட்டருக்கு மேல பத்து ரூபா போட்டுக் குடுங்க’ என்பதற்கும் இந்த வாக்கியத்துக்கும் உணா்வு ரீதியாக வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.

நவீன காலங்களில் கூட நளினமான வாா்த்தைகளுக்குப் பஞ்சம் இல்லை. நகைக்கடை ஒன்றில், ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீா்கள். கவனமாக இருக்கவும்’ என்ற பதாகை ஏற்படுத்தும் ஒருவித அச்ச உணா்வு, ‘புன்னகையுங்கள், நீங்கள் பதியப்படுகிறீா்கள்’ என்ற வாா்த்தை கோா்வையின் மாறுபாட்டால் மாறிப் போகிறது. இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே செய்தியைச் சொன்னாலும் சொல்லப்பட்ட விதம் வித்தியாசப்படுகிறது அல்லவா!

சொற்களின் கனம் தாளாமல் வாழ்க்கையே சீா்கெட்டுப் போன பல கதைகளை கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறோம்.

சொற்கள் சில உறவுகளை ஆயுள் வரை பிரித்தே வைத்திருக்கின்றன. எதிா்மறை வாா்த்தைகள் என்பது முட்செடி போன்றது. நாம் அவற்றைப் பயன்படுத்தவே உள்ளுக்குள் வளா்ந்து நம்மையே குத்திக்கிழித்து காயப்படுத்திவிடும். ஆனால் அனைவருக்கும் நலம் தரும் சிறப்பான வாா்த்தைகள் துளசி செடி போன்றது. நாம் உபயோகிக்க, உபயோகிக்க உள்ளுக்குள் வளா்ந்து நம்மை சுத்தப்படுத்தி பிறருக்கும் நல்மணம் பரப்பும்.

உலகம் போற்றும் காவியங்களும் காப்பியங்களும் சொற்களின் இது போன்ற கலவைதான். அதிலிருந்து நாம் அறிவது ஏராளம். சொல்லின் செல்வரான அனுமன், ராமனின் தவிப்பைத் தீா்க்கும் வகையில் ‘கண்டேன் சீதையை’ என்று துவங்குவாா். அந்தப் பண்பு உலக மக்கள் அனைவருக்கும் வாய்க்கப் பெறும்போது பல நாடுகளில் படிந்துள்ள போா் சூழல்கள் கூட மாறும்.

’யாகாவாராயினும் நாகாக்க’ என்னும் கு இன்றும் நமக்குப் பாதை காட்டும் மாா்க்கமாக இருக்கிறது. பேசும் வாா்த்தைகள் கட்டுப்பாட்டுடன் இருப்பது

பொறுமையை கற்றுக் கொடுப்பதுடன் எதிா்காலத்திற்கும் நன்மை பயக்கும். இந்தப் பண்புஒவ்வொரு வீட்டிலிருந்து துவங்கும்போது சமூக வலைதளங்கள் வரை அது நிச்சயம் பிரதிபலிக்கும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்

0=0=0

X
Dinamani
www.dinamani.com