மனக்கவலை மாற்றல் எளிது

மனக்கவலை மாற்றல் எளிது

உடம்பும் உயிரும் ஒன்றி இயங்கும் உலகியல் நடைமுறையில், மனதால் வாழ நேர்ந்தவர்கள் மனிதர்கள் மட்டும்தான். அதுவரமா? சாபமா? என்று வரைமுறைப்படுத்தி உணர முடியாத அளவிற்குப்பிணைக் கப்பட்டிருக்கிறோம் நாம். உடம்புக்கு ஏதே னும் ஒன்று என்றால், ஓய்வு மருந்தாகும். மேலும் சிரமம் எனில், நேர்ந்தது இன்ன தென்று கண்டறிய, ஏராளமான கருவிகள் உண்டு. உண்டு தீர்த்துக்கொள்ள மருந்துகளும் உண்டு.

ஆனால், மனதுக்கு ஏதேனும் வந்துவிட் டால், அவ்வளவு சீக்கிரம் அதனை அறிந்து கொள்ள முடிவதில்லை. அலுப்பு, சலிப்பு, சோர்வு, எரிச்சல், ஆத்திரம், கோபம் என அடுத்தடுத்த செயல்பாடுகளாக வெளிப் பட்டு விரக்தியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. சோம்பல், தாமதம், மறதி அனைத் தையும் உடன்கொண்டுவந்து சேர்த்து, உடம்பையும் சோர்ந்து படுத்துவிடச் செய்கிறது. இல்லாத நோய்களையெல்லாம் இருப்பதாக நினைக்கத் தூண்டி அதுவே ஒரு நோயாகித் தாக்கிவிடுகிறது.

கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியாக உள்ளுக்குள் நுழைந்து எப்பேர்ப்பட்டஉறு திப்பாடான நம்பிக்கையையும் சிதைத்துவி டுகிற கவலை, நாம் கண் விழிக்கு முன்பே விழித்துக்கொண்டுவிடுகிறது.

வேண்டுமே என்று தேட வேண்டிய பொருள்கள், வேண்டாம் என்று விட்டு வைத்த பிரச்னைகள், வேண்டிய வேண்டாத வேலைகள் எல்லாம் வந்து சூழ்ந்து கொள்கிறபோது, தயக்கம் மடிவிரிக்கிறது; சுணக்கம் தோள் ஏறிக் கொள்கிறது; இயக்கம் தடைபடுகிறது; தூக்கம்போல் வந்து தொற்றிக் கொள்கிறது அசதி, வெயி லையோ, மழையையோ, வேறு காரணங்க ளையோ துணையாகக் கொண்டு தள்ளிப் போட்டகாரியங்கள் மீண்டெழுந்து வந்து, பின்னர் தூங்க முடியாதபடி செய்துவிடுகின்றன.

முன்பு விட்டுவைத்த வேலைகளின் மிச்சம் மீதியுடன் இன்று தொடங்கவேண்டிய பணிகளும் சேர்ந்து அழுத்தும்போது, இல் லாத தலைவலி இருப்பதாகத் தோன்றுகி றது. எல்லாமும் கவிந்து, கரையான் அரித்த புத்தகமாய், கவலை அரித்தமனது ஆகிவிடுகிறது.

தொடக்க நிலையில் தோன்றும் கவலையால் கவிகிற சோகம், மெல்லிய சுகம் போல் தெரியும். சிரங்குவயப்பட்ட இடத்தைச் சொறிந்துவிடச் சுகம் போல் தெரிந்தாலும், அதுவே ரணமாவதுபோல், நம் மனதும் ரணகளம் ஆகிவிடுகிறது.

புற்றுக்குள் இருந்து புறப்படும் ஒற்றை ஈசல்போல, ஆழ்மனதுக்குள்படிந்திருக்கும் ஒரு சின்னக்கவலை மெல்லத் தலை தூக்கப் படிப்படியாய், எல்லாக் கவலைகளுக்கும் சிறகு கட்டிவிடுகின்றது. சிறகொடிந்த பற வையாய்மனம் இற்று வீழ்ந்துவிடுகிறது. இவற்றிலிருந்து தப்பித்துக் கொள் புகையையோ, போதையையோ, நாடிப் போனவர்களுக்கு அவற்றை நிறுத்த முடியாத தனிப் பெருங் கவலையும் கூட வந்து சேர் கிறது. தற்கொலைக்கும் தயார்படுத்திவிடுகிறது.

பெரிய கவலைகளைவிடவும், சின்னக் கவலைகள்தான் வந்து நம் மனதைத் தின்னத் தொடங்குகின் றன. நின்றுபோகும் மின் சாரம், மறந்துபோன கைக் குட்டை, எடுக்க மறந்த இரசீதுகள், விடு பட்ட கணக்குகள், செலுத்த வேண்டிய தவணைக் கட்டணங்கள் எல்லாமும் கூடி வந்து கொடுக்கும் நெருக்கடியில், பதற்றம் அதிகரிக்கிறது. படபடப்புத் தொடர்ந் துவர, நிதானம் தப்புகிறது. நமக்கே நமக் கென்றிருக்கும் தனிப்பட்ட கவலைகளும் இணைந்துகொள்ள, பாம்பு வாய் புகுந்த தவளையாய், கவலை வாய் புகுந்த மனது தவிக்கிறது.

வசதிவாய்ப்பற்ற காலங்களில் இருந்த நிம்மதிகூட, எல்லா வசதிகளும் வந்து நிரம் பிய இந்தக் காலத்தில் இல்லாதுபோன வருத்தம், எவரிடமும் சொல்லியழ முடி யாதசோகம் மலிந்துவிடுகிறது.இப்படி, கவலைப் படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. கவலைப்ப டாத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மத்தியில் கவலைப்படுகிற அவர்களுக்காக - நமக்காகக் கவலைப்ப டுகிற அருளாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவராகநின்று கவலை குறித் துக் கவலைப்படுகிற மகாகவி பாரதி, கவ லையைக் களைவதற்கான வழியினைத் தேடுகிறார்.

கவலைக்கு மூலம் சென்றது கருதுதல். பின் அதையே சிந்தித்தல் என்று கண்டறிந்த பாரதி, சென்றது இனி மீளாது மூடரே' என்று சாடுகிறார். 'எப்போதும் சென்ற தையே சிந்தை செய்து கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து குமையா தீர்' என்று எச்சரிக்கிறார். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ண முற இசைத்துக் கொண்டு, தின்று விளை யாடி இன்புற்று வாழுங்கள். தீமையெலாம் அழிந்துபோகும். திரும்பி வாரா' என்று உறுதி அளிக்கிறார்.

எல்லாம் இருந்தும் எளிய இன்பத்தைக் கூட அனுபவிக்கவிடாமல் செய்யும் சுவ லையால் இனிய வாழ்வே நரகம் ஆகிவிடு கிறது. 'கவலைப்படுதலே கருநரகம்மா' என் கிற பாரதி, 'கவலையற்று இருத்தலே முக்தி' என்று கருத்தளிக்கிறார். முக்திப்பேறளிப் பதுவீடு, ஆதலால், 'கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு என்கிறார். தன்னலம் துறப்பதுபோல, தற்க வலையையும் துறக்கக் கற்க வேண் டும். தன்னலத்திற்குமாற்று, பொது நலம் ஆவதுபோல, தற்கவலைக்கு மாற்று, பொதுக்கவலை.

தனக்கான கவலைகளில் மூழ்கிய மனத்தைப் பிறர்க் கான கவலைகளில் செலுத்துகிறபோது, மன விரிவு கிடைக்கிறது. அதுபோக்க உழைக்க வேண்டும் என்கிற ஊக்கம் பிறக்கி றது. அதுவே கவலைக்கு மாற்று மருந்தும் ஆகிறது.

கேவலம் உப்புக்கும் புளிக்கும் கவலைப் படுகிற மனத்தை விரித்து, உலகத்தாரின் கவலைகளில் கருத்தைச் செலுத்திய பாரதி, கரும்புத் தோட்டத்திலே கலங்கியழும் மனி தர்களுக்காக, உலகெலாம் துயருறும் மனி தகுலத்தின் விடுதலைக்காகப் பாட்டிசைக் கிறபோது, புதிய ஆற்றலைப் பெற்றுவிடுகி றார். வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று பராசக்தியிடம் வரம் வேண்டுகிறார்.

கவலைக்கு மூலம் சென்றது கருதுதல்; பின் அதையே சிந்தித்தல் என்று கண்டறிந்த பாரதி, ‘சென்றது இனி மீளாது மூடரே' என்று சாடுகிறார். 'எப்போதும் சென்றதையே சிந்தை செய்து, கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து குமையாதீர்' என்று எச்சரிக்கிறார்.

‘என்னைக் கவலைகள் தின்னத் தகா தென்றுநின்னைச் சரணடைந்தேன்' என்று மகாகவி பாரதி அன்னையை வேண்டுகி றார். அன்னை என்று அவர் முன்னிறுத்து வது பிரபஞ்சப்பேராற்றல். துன்பங்களிலேயே கிடந்துழன்ற மனத்தை இயற்கையின்பால் செலுத்தி, உற் சாகம் கொண்டுவிடுகிறார். நீலப் பெருங் கடல், பௌர்ணமி நிலவொளியில் பாற் கடலாய்த் தெரிய, 'நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்து ஒரு கோல வெறிபடைத்தேன் என்று பாடுகிறார்.

வெயில் அதிகம் என்று வெம்பியும் மழை மிகுதி என்று தேம்பியும் அழுகிற அவல மனிதர்களின் அற்பக் கவலைக் ளுக்கு முன்னர், நேற்றிருந்த வீடு இடிமின் னலுடன் கூடிய மழையால், நிமிடத்தில் நொறுங்கிவிழப் பார்த்த பாரதி, இன்று அங்கிருந்து இடம்மாறிவிடத் துணை நின்ற சூழலுக்குள் இறைமை கண்டு, காத் தருள்புரிந்த இயற்கையாம் காளியின் கரு ணையைப் போற்றுகின்றார். இடியோ சைக்கு இயைந்த சந்தங்களைக் கொண்டு, மின்னலைத் தன் வலக்கரம் ஆக்கி கவிதை எழுதுகிறார். எழுத்துக்கு முந்திப் பிறக்கி றது பாட்டு, திக்குகள் எட்டும் சிதறிடத் தக்கத்தீம்தரிகிட தீம்தரிகிட' என்று தாளங்கள் கொட்டிக் கனைக்கும் வானத்தைக் கைவச மாக்கி மண்ணில் நிறுத்துகிறார். மறுநாள் பொழுதில் அழிந்தவை குறித்து, அனைவ ரும் கவலைவயப்பட்டுக் கவல்கின்ற நேரத் தில், 'பிழைத்த தென்னந்தோப்பின் பெருமி தம்பாடுகிறார்.

நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை என்று தெளிவுபடுத்திவிட்டு, எது அறிவு என்ப தையும் அடையாளப்படுத்துகிறார். அது, ‘தஞ்சமென்றே வையமெலாம் காக்கும் மகா சக்தி நல்லருளை ஐயமறப் பற்றல்' என்னும் அறிவாகி அவர்தம் கவிதையில் சுடர்கிறது. அந்த அறிவினால் ஆகும் பயன் யாது எனத் தெளிவாகச் சொல்கிறது திருக்கு றள். பிறிதின் நோயைத் தன் நோயாகக் கரு துதல். அத்தோடு நிற்காது, அதற்கு மாற் றுத் தேடிக் கண்டு பிடித்து, ஆற்றவும் செய் கிறார்கள் அருளாளர்கள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அனைத்துச் சமய அரு ளாளர்களும் அடிப்படையில் பட்ட கவ லைகளும் கஷ்டங்களும், அவர்களுக்காக மட்டும்தானா, என்ன?

கடவுளின்மீது பாரத்தைப் போட்டு விட்டுக் கடமையாற்றத் துணிவதே கவலை போக்கும் மருந்து எனக் கண்டு காட்டிய அவர்களின் வழியில், சென்ற நூற்றாண் டின் தலைவாசலில் நின்று தன் விதி சமைத் துக்கொள்கிறார் பாரதியார்.

தந்தையாகவும் குடும்பத் தலைவனா கவும் இருந்து ஆற்ற வேண்டிய கடமைக ளைச் செய்யவும் வழியற்றுப் புதுவையில் சிறைப்பட்டிருந்த காலத்தில் அது குறித் துக் கவலைகொள்ளும் மனதிற்குக் கட்ட ளையாக ஒரு கவிதை பாடுகிறார். 'நமக் குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்று மூன்று கடமைகளை முன்னுரைத்து, 'உமைக்கினிய மைந்தன் நம் குடியை வாழ் விப்பான் சிந்தையே இம்மூன்றும் செய் என்று முடிகிறது.

இதற்கெல்லாம் முன்னோடியாகத் திரு வள்ளுவர்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது

என்கிறார். எதிர்நிலையான இரு கருத் தாடல்களை முன்வைத்து, உடன்பாடான ஒரு கருத்தியலை நிலைநிறுத்துகிறது இக் குறள்.

உண்மையில் மனக்கவலை மாற்றல் எளிது என்பது திருவள்ளுவர் கண்டறிந்த தெளிந்த உண்மை. ஆனால், மாற்றுதற்கு அரிதாக ஆனதுயாரால்? நம்மால்தான். தன்னையும் சேர்த்துத் தாங்கும் பிரபஞ் சப்பேராற்றல் வயப்பட்டு, தற்கவலைபோக் கிக் கொள்ளவும், பிறர்கவலை நீக்கிக் காக் கவும், முன்னோர்கள் காட்டிய வழியில், தன் மனதைச் செலுத்துவதே கவலையை மாற்றும் மருந்து எனச் சொல்லவும் வேண்டுமோ?

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.