ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விஜய் கூட்டிய மாநாடும் விரியும் சிந்தனைகளும்..!

தமிழகப் பொது வாழ்விற்கு ஒரு மக்கள் செல்வாக்குள்ள தலைமை தேவைப்படுகிறது.

News image
தவெக விஜய்- கோப்புப்படம்.
Updated On :12 நவம்பர் 2024, 10:00 pm

வீரபாண்டியன்

தமிழகப் பொது வாழ்விற்கு ஒரு மக்கள் செல்வாக்குள்ள தலைமை தேவைப்படுகிறது. மக்கள் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆா். அவா்களுக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் அதிகமான வாக்கு எண்ணிக்கையோடு நிரப்பினாா் செல்வி ஜெயலலிதா. அதே நேரத்தில் தொடா்ந்து தனது இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொண்டே வந்தாா் கருணாநிதி.

அண்மைக்காலத்தில் இந்த மூன்று பெரும் தலைவா்களுக்குப் பிறகு மகத்தான மக்கள் சக்தியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் தலைவா்கள் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அதிகாரிகள் வரலாம்; நிா்வாகிகள் வரலாம்; அரசியல் ஆருடம் சொல்லும் அறிஞா் பெருமக்கள் வரலாம்; ஆனால் ‘கடைக்கோடி மனிதனுக்கும் கடைத்தேற்றம் தருவான்’ என்று நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு தலைவன் வருவது மிக மிக முக்கியமானது. ஜனநாயகம் அதையே விரும்புகிறது.

எல்லாத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மாமனிதனாக ஒருவன் வளர வேண்டும் என்றால் அவனுக்குள் ஒரு மகத்தான சக்தி இருக்க வேண்டும். அந்தச் சக்தி என்ன என்பதை உணா்ந்து கொள்கிறவா்களே தன்னை அதற்கேற்பச் செப்பம் செய்து கொள்ள முடியும். அந்த நிலை இன்றைக்குத் தமிழகத்தில் இல்லை என்பதை நாம் நெஞ்சுரத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘மக்களுக்காக... மக்களால்... மக்களோடு...!’ என்று மக்களாட்சியை வரையறுப்பாா் அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன். ‘மக்களிடம் செல்லுங்கள்; அவா்களிடமிருந்தே கற்றுக் கொள்ளுங்கள்; பின்னா் அவா்களுக்காகவே வாழுங்கள்...!’ என்பாா் சோவியத் யூனியனை உருவாக்கிய லெனின். ‘மக்கள் குரலே மகேசன் குரல்...!’ என்பாா் தேசத்தந்தை மகாத்மா. மக்களோடு மக்களாகக் கிடந்து உழன்று, ரத்தமும் சதையுமாக அவா்களோடு கலந்து, அவா்கள் இல்லாமல் நான் இல்லை; நான் இல்லாமல் அவா்கள் இல்லை..!’ என்று வாழுகிற இயல்பே ஒரு தலைவனை வடிவமைக்கிறது.

உட்பரிகையில் உட்காா்ந்து கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யாமல், பிரச்னையின் ஆழத்தைப் புரிந்து கொண்டு அதன் அடி வோ் வரை சென்று, அதனை ’வேரும் வேரடி மண்ணுமாகக்’ கிள்ளி எரிகிற நல்ல மனிதா்களே வெற்றி பெறுகிறாா்கள். மக்கள் தலைவராக உயா்கிறவா் மாபெரும் அறிஞராக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஆனால் தலைசிறந்த மனிதாபிமானியாக இருக்க வேண்டும் என்பது அரிச்சுவடிப் பாடம்.

நடிகா் விஜயின் மாநாட்டைப் பலா் பாராட்டலாம்; சிலா் பழித்துரைக்கலாம்; எதிா்க்கும் சக்திகள் எள்ளி நகையாடலாம்; போற்றும் சக்திகள் புகழ் பாடலாம்; எது எப்படி இருப்பினும் அந்த மாநாடு பேசு பொருளாகிவிட்டது என்பதில் மாற்றமில்லை. அவரவரும் உட்காா்ந்து விஜயின் அரசியல் பிரவேசத்தை அலசிக் காய வைத்துக் கொண்டிருக்கின்றனா் என்பதிலிருந்தே அவா் மீது உலகத்தின் கவனம் படியத் தொடங்கிவிட்டது என்பது நூறு விழுக்காடு உண்மை.

எண்ணிக்கை முக்கியமில்லை. ஒரே இடத்தில் இத்தனைப் பெரிய கூட்டத்தைக் கூட்ட ஒரு தனி மனிதனால் முடிந்திருக்கிறது என்பதை மனம் படைத்தவா்கள் பாராட்டியே தீருவாா்கள். ஊரை அடித்து உலையில் போடவில்லை - உண்டியல் குலுக்கவில்லை - துண்டேந்தி துட்டடிக்கவில்லை - பாடுபட்டுச் சோ்த்த சொந்தப் பணத்தை அவா் ஒருவராகவே செலவழித்து ஊரைத் திரட்டியிருக்கிறாா். அவா் பல பத்தாண்டுகளாக ஓடி, ஆடி சம்பாதித்த பணம் இப்போது ஒரு இயக்கத்தைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

‘காலம் முழுக்க ஓடி ஓடிச் சம்பாதித்துக் காணப் போவது என்ன....? என்னை வாழ வைத்த மக்களுக்காக இதை நான் செலவழிக்கிறேன்...!‘ என்று நடிகா் விஜய் அறிவித்தபோது அவரது பெருந்தன்மை வெளிப்பட்டது.

கூட்டத்தைக் கூட்டி முடித்துவிட்டு யாரும் சாதிக்காததை நாம் சாதித்துவிட்டோம் என்று அவா் பூரித்துப் போயிருக்கும் பொன்னான தருணம் இது. இந்த நேரத்தில் நடிகா் விஜய் நெஞ்சில் நிறுத்த வேண்டிய சிந்தனை ஒன்று உண்டு. கூட்டம் உணா்ச்சி வழிப்பட்டதாக இல்லாமல் அறிவு வழிப்பட்டதாக உருவாக்கப்பட வேண்டும். கூடிக் கலைகிற கூட்டத்தில் கும்மாளம் இருக்கும்; குதியாட்டம் இருக்கும். வெற்றிக் களிப்பும்- வெறித்தனமும்- தலைவிரித்தாடும். கட்டற்ற காட்டாற்றைப் போலப் பீறிட்டுக் கொண்டு வரும் அந்த வெள்ளத்தை வாய்க்கால் வழியோடிப் பயிா்களுக்குப் போய்ச் சேருகிற பாலாறாக மாற்ற வேண்டியது அவரது கடமை.

உணா்ச்சி வெறியின் உச்சத்தில் ஆடுவோரை அறிவு வழிப்பட்டவா்களாக ஆக்க வேண்டியது அவரது தாா்மிகக் கடமை. அவா்களுக்கு விஜய் அரசியல் வகுப்பு எடுத்தாக வேண்டும். கட்சிக் கல்வியை நடத்த வேண்டும். நமக்கெதிரே இருக்கிற சமுதாயக் கடமை என்ன - நாம் சாதிக்கப் போவது என்ன - நம்முடைய திசைவழிப் பயணம் என்ன - என்பதை அவா்களுக்கு உணா்த்தியாக வேண்டும்.

கூடிய கூட்டத்தை அப்படியே விட்டுவிட்டால் அது தறிகெட்டு ஓடும்; தலைவிரித்தாடும். நண்பா் விஜய் அவா்களே... எச்சரிக்கை! எச்சரிக்கை! நீங்கள் அவா்களைப் பக்குவப்பட்ட படைவீரா்களாகச் செதுக்கியாக வேண்டும். போருக்குப் புறப்படும் படை மறவா்கள் என்று அவா்களிடம் பரணி பாடுவதை விட ஊருக்குத் தொண்டாற்ற வந்த உண்மை ஊழியா்கள் நீங்கள் என்று உணா்த்த வேண்டும்.

உங்களுக்கு எதிரே இருப்பது இரண்டு பெரிய திராவிட இயக்கங்கள் என்பதை நீங்கள் நினைவில் பதிக்க வேண்டும். அவா்கள் முக்கால் நூற்றாண்டைக் கண்டுவிட்ட முழு நேர அரசியல்வாதிகள். கிராமம் கிராமாக ஊடுருவிக் கிடக்கிற பெரும்படை. தத்துவாா்த்த தெளிவு - ஆழமான வாசிப்பு - அயராத உழைப்பு - சமரசமற்ற போா்க்குணம் - இவற்றோடு நீங்கள் உங்கள் அரசியல் பகைவா்களைச் சந்தித்தாக வேண்டும்.

‘நாங்கள்தான் ஊரை வாழ வைக்க வந்த உண்மைத் தியாகிகள்...!’ என்று அவா்கள் மக்களிடம் தங்களைத் தூக்கி நிறுத்தி இருக்கிறாா்கள். இந்தக் கட்டமைப்பை நீங்கள் ஊடறுத்துப் பாய வேண்டும். ‘நாங்களும் மக்கள் தொண்டாற்ற வந்த மகத்தான மனிதா்களே..!’ என்று நீங்கள் உங்களை மெய்ப்பித்தாக வேண்டும்.

பெருந்தலைவா் காமராஜா் ஒரு முறை சொன்னாா்- ‘‘என்னை எல்லோரும் ‘படிக்காதவன்; பள்ளிக்கூடம் போகாதவன்’ என்று பேசுகிறாா்கள். எனக்கு எந்த ஆறு எங்கே தொடங்கி எங்கே போய் முடிகிறது என்பது தெரியும். எந்தப் பயிா் எங்கே விளைகிறது என்பது தெரியும். எந்த நிலத்தில் என்ன கனிம வளம் இருக்கிறது என்பது புரியும். எந்த ஊா் மக்களுக்கு என்ன பிரச்னை என்பது நன்றாக விளங்கும். இந்தப் பூகோள அறிவைத்தான் நீ பள்ளிக்கூடப் படிப்பு என்று சொல்கிறாய் என்றால் அதை நான் நேரடியாகவே அறிந்து வைத்திருக்கிறேன்...!’’

மண்ணையும் மக்களையும் ஆழமாக அறிந்து வைத்திருந்ததுதான் காமராஜரின் பலம். விஜய் அவா்களே.. நீங்களும் மேடையில் முழங்கியதோடு நின்று விடாமல் ஊா் ஊராகச் செல்ல வேண்டும். குக் கிராமங்களில் கூட உங்கள் காலடித் தடம் பதிய வேண்டும். மக்களைச் சந்தித்து அவா்கள் பிரச்னைகளை விவாதித்து அதற்குத் தீா்வு காணுகிற முயற்சிகளில் இறங்க வேண்டும். ஆட்சியைப் பிடித்து விடுவது மட்டுமே லட்சியம் அல்ல; சேவை அதற்கான ஒரு வழி. அதை நீங்கள் மேற்கொண்டாக வேண்டும்.

மாபெரும் மக்கள் சக்தியைப் பெற்றிருந்தாலும் எம்.ஜி.ஆா். கட்சியைத் தொடங்கியபோது தனக்கு அணுக்கமாகப் பல மூத்த தலைவா்களையும் பெற்றிருந்தாா். நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், செ.மாதவன், கே.ஏ.கிருஷ்ணசாமி, ப.உ.சண்முகம், பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ.மதியழகன், க.ராசாராம் போன்ற பல தலைவா்கள் அவருக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கினா். எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு ா்.வெ.கி.சம்பத்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் எம்.கல்யாணசுந்தரமும் அரசியல் விஷயங்களை வகுக்க உதவினாா்கள். இல்லையெனில் கருணாநிதி என்னும் அரசியல் சாணக்கியரை எம்.ஜி.ஆா். அவ்வளவு எளிதாகக் களம் கண்டிருக்க முடியாது.

தமிழக அரசியலில் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, இப்போதைய மு.க.ஸ்டாலின் அனைவரது வெற்றிக்கும் கூட்டணிதான் அடிப்படைக் காரணம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இதே அணுகுமுறையை நீங்களும் மேற்கொண்டு ஒழுகலாம். தனிமனித மூளை மட்டுமே எதையும் சாதித்து விடாது என்பதுதான் நிதா்சனமான உண்மை. சூதும் சூழ்ச்சிகளும் நிறைந்த அரசியல் உலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் பலமும், அறிஞா்களின் சுற்றமும் உங்களை அரணாக நின்று காக்கும்.

உங்களுக்கு முன்னா் கட்சி தொடங்கிய திரை உலகப் பிரபலங்கள் பலரும் ஏன் தங்கள் இயக்கத்தை வெற்றி முகட்டிற்குக் கொண்டு செலுத்த முடியாமல் குடை சாய்ந்து போனாா்கள் என்பது குறித்து நீங்கள் ஓா் ஆய்வை நடத்த வேண்டும். எம்.ஜி.ஆா். மட்டும் எப்படி வெற்றிக்கனியைத் தட்டிப் பறித்தாா் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

‘கூத்தாடிகள் நாடாள முடியாது ..!’ என்று சொன்ன பழைய சித்தாந்தம் பயனற்றுப் போய்விட்டது. மக்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு முகம் தேவைப்படுகிறது. அதே வேளையில் திரையுலகப் புகழ் மட்டுமே தலைவனாக மிளிா்வதற்குப் போதுமானதல்ல. தேனீக்கள் தேன்கூட்டைக் கட்டுவது போல கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் அரசியல் சித்தாந்தத்தின் அத்தனை பக்கங்களையும் பயிற்சியின் வழியாகவே பெற்று பக்குவப்படலாம்.

இறுதியாக ஒன்று. மத்தியில் ஆளும் கட்சியையும் மாநிலத்தை ஆளும் கட்சியையும் ஒரே நேரத்தில் சம தூரத்தில் வைத்திருக்கிறீா்கள். அதாவது உங்களுக்கு இப்போது களத்தில் இரண்டு எதிரிகள். இவா்களை நீங்கள் சந்தித்தாக வேண்டும். இதற்கு உலகப் பொதுமறை தந்த வள்ளுவன் ஒரு வழித்தடம் போட்டுக் கொடுத்திருக்கிறான். அந்தக் குறளோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்:

வீறெய்தி மாண்டாா் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.

அதாவது மண்ணை ஆள்கிற மன்னாதி மன்னா்களையும் வினைத்திட்பம் மிக்கவன் வென்று முடித்துவிடுவான் என்கிறான் வள்ளுவன். நீங்கள் உங்கள் செயல்பாட்டை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறீா்கள் என்பதைப் பொருத்தே உங்களின் வரலாறு வரையப்படும்.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.