மருத்துவர்களின் அணுகுமுறையிலும் மாற்றம் தேவை!

மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது தமிழக அரசு.

மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணியை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் என்பது எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றுதான். அதேநேரத்தில் புனிதமான மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் மனிதநேயத்தோடு நடந்து கொள்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளால் கடவுளாகப் பார்க்கப்படும் எத்தனையோ மருத்துவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேநேரத்தில் மருத்துவர் மீது தாக்குதல் தொடுத்த நபரின் தாயார் கூறியதைப் போன்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு காலம்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகள்தான் கதியென்றாகிவிட்ட ஏழை எளியோரே இதற்கு சாட்சி. இதனை மனசாட்சியுள்ள மருத்துவர்களால் மறுக்க முடியுமா?

நோயாளிகளைக் கடிந்துகொள்வதும், அவர்களுடைய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய நோட்டுகளை வீசி எறிவதும், மனரீதியாக நோகடிப்பதும் பல அரசு மருத்துவமனைகளில் இப்போதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ந்து ஏழை நோயாளிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேறு வழி கிடையாது என்பதால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வெளியில் சொல்லாமல் சென்றுவிடுகின்றனர். ஒருவேளை மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கே புகார் சென்றாலும், அவர்களால் கூட சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைதான் இருக்கிறது.

ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டு மனமும், உடலும் தளர்ந்த நிலையில் வரும் ஏழை நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டிய கடமையுள்ள மருத்துவர்களே அவர்களை மனரீதியாக காயப்படுத்துகிறபோது, அந்த நோயாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை மருத்துவர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

மக்களுக்காக சேவை செய்யும் பணியில் இருக்கக் கூடிய அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நோகடிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மக்களுக்காகத்தான் அரசு மருத்துவமனைகள். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பார்ப்பது வெறும் பணியல்ல, அது கடமையும் கூட என்று மருத்துவர்கள் உணர வேண்டும்.

அரசு மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைக்கு சொந்தமாக மருத்துவமனைகள் வைத்து நடத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கக் கூடியவராக இருக்கிறார்கள். இவை அனைவரும் அறிந்ததுதான். அதனால், பல நேரங்களில் அவசரகதியில் சிகிச்சை அளிக்கும் நிலையும், நோயாளிகள் மீது எரிந்து விழும் நிலையும் தொடர்கிறது.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியக் கூடிய மருத்துவர்கள் தங்களின் பணி நேரத்திலேயே பயிற்சி மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை அளிப்பதாகவும், உறைவிட மருத்துவர்களும்கூட பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கச் சென்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், இதுபோன்று தவறிழைக்கும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் பாய்வதில்லை என்ற ஆதங்கம், நேர்மையாக பணிபுரியக் கூடிய மருத்துவர்களிடமே இருக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் வெளியில் மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதை கட்டாயமாக்கினால்தான் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்கும். மருத்துவர்கள் அவசரகதியில் சிகிச்சை அளிப்பதும், நோயாளிகள் மீது எரிந்து விழுவதும் குறையும்.

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலுக்குப் பிறகு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் அவரைத் தாக்கியவரின் தாயார் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். மருத்துவர் சங்கங்களின் நெருக்குதல்களுக்கு உள்ளாகாமல் தவறிழைக்கும் மருத்துவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற விபரீத சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா? நோயாளிகளிடம் கனிவோடு நடந்து கொள்கிறார்களா என்பதை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

மருத்துவர்களைக் கடவுளாகவே மக்கள் பார்க்கிறார்கள். தங்களுடைய மருத்துவப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அரசு மருத்துவமனைக்கு ஏழைகள் வருகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கை தகர்ந்து விரக்தியடைகிறபோதுதான் விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவம் பாதி நோயை குணமாக்கும் என்றால், மருத்துவர்களின் கனிவான அணுகுமுறைதான் மீதி நோயை குணமாக்கும் என்பதை மருத்துவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது. எனவே, மகத்தான சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டிய நேரமிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com