கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கடிது ஓச்சி மெல்ல எறிக

Published on

பின்னிரவில் கைப்பேசி அழைப்பு. "வாசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தாமதமாய் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, "ஒரு உதவி' என்று வேண்டி நின்றது அழைப்பின் குரல்.

சொல்லுங்க என்றேன்.

நாளைக்கு என் பிள்ளைக்குத் தமிழ்த் தேர்வு. பின்வரும் தொடர்களை வாக்கியங்களில் அமைத்து எழுதுக'ன்னு இருக்கு. தெரியவில்லை. அதுபற்றிச் சொல்ல முடியுமா?

தாராளமாக.

ஆனைக்கும் அடி சறுக்கும்னு இருக்கு. அது இன்னான்னு புரியலே. அதான் நாம் வேகமாகப் போகும்போது நம்மையும் அறியாமல் எடுத்துவைக்கும் அடி சறுக்கிவிடும் அல்லவா? அதுபோல், யானைக்கும்.

அதுதான் புரியலே. யானைக்கு அடி சறுக்குவதற்கும் நமக்கும் என்ன தொடர்பு?

இதுதான் மொழியின் அழகே. எப்பேர்ப்பட்ட வலிமை வாய்ந்த யானையாக இருந்தாலும், எவ்வளவு கவனமாக நடந்தாலும் அதுவும் சில சமயங்களில் எடுத்துவைக்கும் அடி சறுக்கித் தடுமாறக் கூடும். அதுபோல் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும், அவர்களையும் அறியாமல் தடுமாற நேர்ந்துவிடும். அந்தத் தடுமாற்றம் தடமாற்றமாகிச் சறுக்கிவிடலாகாது என்று எச்சரிக்கச் சொல்லும் மரபுத் தொடர் அது. "சாண் ஏற முழம் சறுக்கிவிடலாகாது அல்லவா?

அது என்ன சார்? என்றது ஆர்வக் குரல்.

"சாண் என்பதும் முழம் என்பதும் அளவுகள், கட்டை விரலையும் சுண்டு விரலையும் அகல விரித்து அளந்து வைத்தால் சாண். முன் கையில் இருந்து முழங்கை வரைக்கும் உள்ள அளவு முழம். இது மரம் ஏறும் தொழில் அடிப்படையில் உருவான பழமொழி. பெருமுயற்சி எடுத்து மரம் ஏறுகிற ஒருவனின் முன்னேற்றம் சாண் அளவுக்கு இருக்கிறது. அதேசமயம் பின்னிறக்கமாக சறுக்கலாக, ஒரு முழம் இருக்கிறது. இது பின்னேற்றமா? முன்னேற்றமா?

நிச்சயமாப் பின்னேற்றம்தான் சார்.

அது மரம் ஏறுகிற தொழிலை அடிப்படையாகக் கொண்டு உருவான மொழி. அதுவே மந்திரமாகி மற்ற அனுபவங்களைப் பொருத்திப் பார்க்க வைக்கிறது. புதிதாகத் தொடங்கிய தொழில் அல்லது முயற்சியின் போக்கு இவ்வளவு சரிவாக இருக்கிறது என்று வாழ்வியல் பொருளாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோல் ஏராளமான பழமொழிகளை, சொலவடைகளை, எழுதப் படிக்கத் தெரியாத எளிய நிலை மக்கள் தங்கள் அனுபவங்களை நிறைத்து வழங்கியிருக்கிறார்கள். நெல் களஞ்சியம்போல, இத்தகு சொல்களஞ்சியங்கள் நிறைய இருக்கின்றன தமிழில்.

சார் களஞ்சியம்னா?

நெல் முதலான தானியங்களைச் சேகரித்துப் பக்குவப்படுத்தி வைக்கிற இடம் களஞ்சியம். பணத்தை டெபாசிட் செய்து வைக்கிற மாதிரி, நம் மனத்துக்குள் இத்தகு மொழிகளை டெபாசிட் செய்துவைத்துக் கொண்டால், வாழ்க்கைப் போக்குக்கு உதவி செய்யும்.

"அடியாத மாடு படியாது', "அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.' "அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்றெல்லாம் வருகிற முதுமொழிகள் அத்தகு அர்த்தம் நிரம்பிய களஞ்சியங்களாக அமைகின்றன. இவையெல்லாம் மாடு மேய்க்கிறபோது, மிக்ஸி வருவதற்கு முன்னால் சட்டினி அரைக்கப் பயன்படுத்திய அம்மியைத் தொவைகிறபோது கண்ட உண்மைகள் எடுத்துக்காட்டுகளாகி, புரியாத வாழ்க்கைப் புதிர்களை விளக்கும் அனுபவமொழிகளாகி ஆற்றுப்படுத்துகின்றன. அதாவது வழிகாட்டுகின்றன.

ஆறு என்ற சொல்லுக்கு வழி என்று பொருள். துளித்துளியாய்ச் சேரும் நீர்த்துளிகள் திரண்டு, உருண்டு, ஓடத் தொடங்கி, தனக்கான பாதையை அமைத்துக் கொண்டு ஓடுகிறபோது அது ஆறாகிவிடுகிறது. அதன் பெருக்கத்திற்கு ஏற்ப, இரு புறத்துக் கரைகளும், நீட்சிக்கு ஏற்ப ஓட்டமும் அமைகின்றன. ஒரு முறை ஓடி தனக்கான வழி உண்டாக்கிவிட்ட நீர்ப் பெருக்கு முற்றிலுமாக நின்றுவிட்டாலும், ஓடிய பாதை ஆறாக நிலைத்து நிற்கிறது. அதுபோல், பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிந்த பிறகும் நம் முன்னோர்கள் சொல்லியவை அனுபவப் பொன்மொழிகளாகி அப்படியே நிலைத்து நின்று நமக்கு வழிகாட்டுகின்றன.

அதை ஏன் பொன்மொழிகள்னு சொல்றோம்? ரொம்பக் காஸ்ட்லி ஆனது என்பதாலா?

இரும்பு, பித்தளைபோல் தங்கம் ஆகிய பொன்னும் ஓர் உலோகம்தான். அது காஸ்ட்லி ஆனதே, அதன் சிறப்புக் கருதித்தான். நெருப்பில் இட்டு எவ்வளவு உருக்கினாலும் தங்கம் அழியாது. மாறாக மேலும் மேலும் மெருகேறும். அதனைக் கொண்டு மோதிரமோ, வளையலோ, சங்கிலியோ, நாம் நினைக்கிறமாதிரி செய்துகொள்ளலாம். அப்போது தங்கம் என்கிற உலோகத் தன்மை மாறி, பயன்படுத்தும் அமைப்பைப் பொருத்தே அது பெயர் பெற்றுவிடுகிறது. அதுபோல், பயன்படுத்தப் பயன்படுத்த மெருகேறி, நம் வாழ்க்கைப் போக்கை வடிவமைத்து உருவேற்றும் உயர்வேற்றும் பெருமை மிக்கவை நம் முன்னோர் மொழிந்த முதுமொழிகள்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

என்கிறார் திருவள்ளுவர். தங்கமானது நெருப்பில் இட்டுச் சுடச் சுட ஒளிவிடும். அதுபோல் துன்பமானது தவம் செய்வாரை மேலும் மெருகேற்றும் என்கிறது இத்திருக்குறள். இது தவம் செய்யும் முனிவர்களுக்குத்தான் என்றில்லை. நாம் செய்துகொண்டிருக்கிற எந்தச் செயலாக இருந்தாலும், அதனால் வருகிற துன்பங்களைத் தாங்கிக் கொண்டு மேலே மேலே முயற்சி செய்து கொண்டுபோனால், தங்கம் மெருகேறுவதுபோல, நாம் மேற்கொண்ட செயலும் செறிவாகிச் சிறக்கும். அனுபவ முதுமொழிகளின் அற்புதச் சேகரம்தான் திருக்குறள்.

ஆமாம் சார். ஒன்னே முக்கால் அடியிலே இவ்வளவு அழகாச் சொல்ற திருக்குறள், மீதிக் கால் அடியை விட்டு வச்சதே, நாம் அந்தப் பாதையில் கால் அடியை எடுத்துவைக்கத்தான்'னு பட்டிமன்றத்தில ஒருத்தர் பேசக் கேட்டிருக்கேன் சார்.

தர்க்கப்படி (லாஜிக் ஆக) அது சரிபோல் தெரிந்தாலும், குறள் என்பதற்கான அடி அளவு, இரண்டு. திருக்குறள் இரண்டு அடிகளைக் கொண்டதுதான்.

மீண்டும் ஒரு சந்தேகம். முன்னே சொன்ன "அடி'யும், இப்போச் சொல்ற "அடி'யும் ஒன்னு மாதிரி, சொன்னாலும் பொருள் வேறேதானே?

"அடி' என்பது அளவு. கைவிரல்களை மடக்கி, கட்டை விரலைமட்டும் நீட்டி இரு கை, கட்டை விரல்களையும் அவ்வாறே நீட்டி இணைத்து வைத்து அளந்தால் ஓர் அடி. அடியளவை அளக்கும் கருவியான கோல், அடிகோல்} அது "ஸ்கேல்' ஆகி, "அடி ஸ்கேல்' என்று தமிழும் ஆங்கிலமும் கலந்த புதுச்சொல்லாகப் பள்ளிப் பிள்ளைகளின் புழக்கத்தில் வந்துவிட்டது.

பல வீடுகளில் பிள்ளைகளைப் பயமுறுத்தி "அடி'க்கிற ஸ்கேல் ஆகவும் மாறிவிட்டது. அருகில் நின்று, அதாவது கிட்டத்தட்ட ஓர் அடி தூரத்தில் நின்று தாக்குகிற அளவினதாக அது இருப்பதால்கூட, அடியாகிவிட்டதோ என்னவோ? இயல்பாக ஒரு கால் ஊன்றி, மறுகாலை நாம் எடுத்துவைக்கும் அளவு கூட ஓர் அடியாக இருக்கலாம். இப்படி அடிப்படையான செய்திகளை அறிய அறிய வளரும் அறிவும் அனுபவமும் முடிவில்லாமல் விரிய விரியத்தான் மொழியின் பெருமையும் புரிபடத் தொடங்கும். ஆதியாகிய அடியும் முடிவாகிய அந்தமும் அறிய முடியாத அழகு, இதற்கு உண்டு. ஆதியும் அந்தமும் இல்லாத அருமைக்கு உரியது மொழி.

இன்னும் ஒரு கேள்வி. அடிக்கிற அடியைப் பத்திப் பேசினோம். பிள்ளைகளைத் திட்டவே கூடாதுன்னு சொல்ற காலகட்டத்துல இருக்கோம். அவங்களை அடிச்சு வளர்க்கலேன்னு எங்க அம்மா அப்பப்போ வருத்தப்படுவாங்க. "அடிச்சு வளர்க்காத பிள்ளையும் பிடிச்சுப் பழக்காத நடையும் எப்படி உருப்படும்?னு கேட்பாங்க. இப்போ ஓரளவு புரியுது சார். பிள்ளைகளை அடிக்கலாமா சார்? அது வன்முறையா?

எத்தனை படங்கள்ல அடிதடி சண்டைகளைப் பார்க்கிறீங்க. அதெல்லாம் நிஜமா? நடிப்பு. அதுமாதிரி, படிப்புல கவனம் இல்லாத, பழக்கவழக்கங்கள்ல தவறுகிற பிள்ளைகளைக் கண்டிச்சு வளர்க்கிற முறைதான், "அடி'த்து வளர்ப்பது. அது கண்டிப்பு. அடித்தால் வலிக்கும் என்று சொன்னால் புரியாது. அடிபட்டால்தான் உணர முடியும். உன்னை அடித்தால் வலிக்கிற மாதிரிதான், நீ மற்றவரை அடிக்கிறபோது அடி வாங்குகிறவருக்கும் வலிக்கும் என்கிற உண்மையை அனுபவமாக உணர்த்துகிற ஒரு கல்வி முறைதான் அது. அதை, அடிப்படையிலேயே செய்யத் தவறினால், பின்னால் சட்டத்தின் முன்னால் "அடி' வாங்க வேண்டி இருக்கும். அது தண்டிப்பாக மாறிவிடும். எனவே, தவறுகள் குற்றங்களாகிவிடாமல் தற்காத்துக் கொள்கிற ஒரு பயிற்சி முறைதான் இந்த "அடி' விவகாரம். அது கராத்தே, குங்ஃபூ மாதிரி ஒரு கலை. அது அடிப்பது அல்ல, அடிப்பதுபோல நடிப்பது; பயம் காட்டுவது. அது பயன்தரு பயமாக இருக்க வேண்டும்.

அஞ்சாமை வீரத்தின் அடையாளம்தான். ஆனால், "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்கிறார் திருவள்ளுவர். அடிக்கும் ஓர் அளவு வேண்டும். அடித்து அடித்தே அடிமையாக்கி விடக் கூடாது இல்லையா? அதையும் நம் அனுபவமொழி சொல்கிறது. "தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளையைத் தொட்டுப் பேசுறதே தப்பு; இதுல அடிக்கலாமா?' என்று கேட்பார்கள் கிராமத்தில். அதையும் மறந்துவிடலாகாது.

இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன். தன் பிள்ளையைத் திருத்தத் தன்னைத்தானே அடித்துத் தண்டித்துக் கொள்கிற, சூடு வைத்துக் கொண்டு திருத்திய தாய்மார்களை என் ஊரில் பார்த்திருக்கிறேன். இதைத்தான் திருக்குறள் சொல்கிறது.

கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்

நீங்காமை வேண்டு பவர்

ஆட்சிபுரிகிறவர்களுக்குச் சொல்லப்பட்ட அறவுரை இது. வருங்கால மன்னர்களான நம் பிள்ளைகளுக்கும் இது பொருந்தும். கண்டிப்பதற்கும், தேவையானால் தண்டிப்பதற்கும் அன்பு நெறி நிற்கும் பெற்றோர்களுக்கும், அறவழி கூறும் ஆசிரியர்களுக்கும் உரிமை தேவை.

கடுமையாகத் தண்டிப்பதுபோல் ஓங்கி, பயமுறுத்தி "மெல்ல' அடித்துப் பக்குவப்படுத்தினால், அதுதான் நீண்ட காலப் பயனை (நெடிய ஆக்கத்தை)த் தரும் என்பது உறுதி.

இணைப்பில் இருந்து விலகும் முன் வெளிப்பட்ட "நன்றி' எனும் சொல், அவருக்கும் பிள்ளைக்கும் நன்றாக அமையும் என்கிற நம்பிக்கையைத் தந்தது, உங்களும் அப்படி அமைந்தால், நல்லது.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்