காலிஸ்தான் பிரிவினைவாதிகளைத் தூண்டும் ராகுல்!

1980-களில் பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதம் என்னும் பூதத்தை அடைபட்ட பாட்டிலில் இருந்து திறந்துவிட்டவர் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
3 min read

-பல்பீர் புஞ்ஜ்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது பேசிய சில பேச்சுகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. குறிப்பாக, அவரது பாட்டியின் படுகொலைக்குக் காரணமான காலிஸ்தான் பிரிவினைவாதிகளைத் தூண்டிவிடும் வகையில் அவரது பேச்சு அமைந்தது துரதிருஷ்டமே. நாற்பது ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் நிகழ்ந்த துயரம் மிகுந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழ்வதற்கு அச்சாரமிடுவதாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது.

1980-களில் பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதம் என்னும் பூதத்தை அடைபட்ட பாட்டிலில் இருந்து திறந்துவிட்டவர் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி. அரசியல் காரணங்களுக்காக இந்திரா காந்தியால் ஊக்குவித்து வளர்க்கப்பட்ட ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்ற சீக்கிய மதகுரு பிரிவினைவாதியாகவும் பயங்கரவாதியாகவும் உருவெடுத்து அரசுக்கே சவாலாக மாறியபோது, பொற்கோயிலுக்குள் ராணுவ நடவடிக்கை மூலமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதற்கு பழிவாங்கும் விதமாக பிரதமர் இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளர்களாக இருந்த இரு சீக்கியர்களே அவரை சுட்டுக் கொன்றனர். அதற்குப் பதிலடியாக நாடு முழுவதும் காங்கிரஸார் நடத்திய வன்முறையில் ஆயிரக் கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் எரித்துக் கொல்லப்பட்டனர். சீக்கிய பெண்கள் குடும்பத்தினர் முன்பாகவே பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இவை ரத்தக்கறை படிந்த சரித்திர பக்கங்கள்.

அண்மையில் தனது மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தை ஒட்டி, அந்நாட்டுத் தலைநகர் வாஷிங்டனில் ஒரு பொது நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, ஜனநாயகத்தைக் காக்க இந்திய அரசுடன் காங்கிரஸ் யுத்தம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். ""இந்த யுத்தம் இந்தியாவில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்பட வேண்டுமா, சீக்கியர் என்ற முறையில் அவர்கள் கரத்தில் கங்கணம் அணிய அனுமதிக்கப்படுவார்களா, அவர்கள் சுதந்திரமாக குருத்வாராக்களுக்குச் சென்று வழிபட அனுமதிக்கப்படுகிறார்களா என்ற கேள்விகள் தொடர்பானது. இந்த யுத்தம் எனக்கானது அல்ல, மற்ற எல்லா மதத்தினருக்கானதும்தான்'' என்றார்.

ராகுலின் பேச்சில் உண்மை சிறிதும் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். இந்தியாவில் தற்போது சீக்கியர்கள் பரிபூரண சுதந்திரத்துடன் வாழ்ந்துவரும் நிலையில், ராகுலின் பேச்சு முரண்பாடாக இருக்கிறது. அவர் திட்டமிட்ட நோக்கத்துடன்தான் இந்தியாவுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறு அமெரிக்காவில் பேசி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய செல்வாக்கை சரியச் செய்வதும், அதற்கு அந்நிய மண்ணில் சிதறுண்டு கிடக்கும் இந்திய வெறுப்பாளர்களின் ஆதரவைப் பெறுவதும் ராகுலின் இலக்கு.

ராகுலின் பொறுப்பற்ற பேச்சு கண்டிப்பாக பின்விளைவுகளை உருவாக்கியே தீரும். ராகுலின் இந்தப் பேச்சு, இந்தியாவை வெறுக்கும் கும்பல்களாலும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பாலும், இந்தியாவின் கெüரவத்தைச் சிதைக்கும் வகையில் உலக அளவில் பரப்புரை செய்யப்படும். இந்தியாவில் மக்கள் ஆதரவைப் பெறாமல் முடங்கிக் கிடக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை உசுப்பிவிடுவதாகவும் அவர் பேச்சு அமைந்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் அவர் பேச்சை ஆதரித்து, அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனின் அறிக்கையைக் காண வேண்டும். ""சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை நியாயமானதே என்பதை ராகுல் காந்தியின் பேச்சு நிரூபித்திருக்கிறது. இந்தியாவில் சீக்கியர்களின் வாழ்க்கை அச்சத்தில் இருப்பதை ராகுலின் துணிச்சலான பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது. 1947 சுதந்திரத்துக்குப் பிந்தைய பல்வேறு அரசுகளும் சீக்கியர்களை ஒடுக்கி வந்துள்ளன'' என்று பன்னூன் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீக்கிய பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களுள் பன்னூனும் ஒருவர். பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர் மீது பிரிவினைவாத வழக்குகளும் தேசத்துரோக வழக்கும் நிலுவையில் உள்ளன. இந்த ஆபத்தான மனிதர்தான் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பேச்சு பிரமாதம் என்று பாராட்டி இருக்கிறார்.

சீக்கிய தீவிரவாதம் தொடர்பாக, நமது வெளிநாட்டு உளவு நிறுவனமான "ரா' அமைப்பின் சிறப்புச் செயலாளராக இருந்த ஜி.பி.எஸ்.சித்து எழுதிய "காலிஸ்தான் சதியை அம்பலப்படுத்தும் 1984 நிகழ்வுகள்' என்ற நூல், பல ரகசியங்களைத் தோலுரித்திருக்கிறது. முன்னாள் காவல் துறை அதிகாரியான இவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சர்தார் ஸ்வரண் சிங்கின் மருமகனும் கூட.

1978-லேயே பஞ்சாப் அமைதியிழக்கக் காரணமான காலிஸ்தான் பிரச்னை முளைவிடத் தொடங்கிவிட்டது என்கிறார் ஜி.பி.எஸ்.சித்து. ""அப்போது பிரதமராக இந்திரா காந்தியும், காங்கிரஸில் செல்வாக்கான தலைவராக அவரது மகன் சஞ்சய் காந்தியும் இருந்தனர். அச்சமயத்தில் பஞ்சாபில் அகாலி தளம்- ஜனதா கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான ஜெயில் சிங், இந்திரா காந்திக்கு அளித்த யோசனைதான், பஞ்சாபில் தீவிரமான சீக்கிய மதகுருவை வளர்த்துவிடும் திட்டம். தீவிரவாதக் கருத்துகளை முன்வைக்கும் அகாலி தலைவருக்கு ஈடு கொடுக்க முடியாமல், சீக்கியர்களின் நலனைக் காக்க சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு மிதவாதிகளான அகாலி தளம் கட்சி தள்ளப்படும். அதன்மூலமாக பஞ்சாபில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் மீளப் பெற முடியும் என்ற ஆலோசனையை இந்திரா காந்திக்கு வழங்கினார் ஜெயில் சிங்'' என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் ஜி.பி.எஸ்.சித்து.

அதுமட்டுமல்ல, ""இந்திரா காந்தியின் ஒப்புதலுடன் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேத்தா செüக்கில் உள்ள பிரபலான தர்ஷன் பிரகாஷ் குருத்வாராவில் மதகுருவாக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே அதற்குத் தகுந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரைக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் தனது விபரீத விளையாட்டை காங்கிரஸ் அரங்கேற்றியது'' என்று சித்து எழுதுகிறார்.

ஜனதா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு 1980 ஜனவரியில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானவுடன், பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதப் போராட்டங்கள் திடீரெனப் பெருகின. இதற்குக் காரணமே காங்கிரஸ் தலைவர்களின் ரகசியத் திட்டம்தான் என்கிறார் சித்து. ""1980-இல் இந்திரா காந்தி பிரதமரானவுடன், அடுத்த (1985) தேர்தலிலும் அவர் வெல்ல ஒரு திட்டமாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளை காங்கிரஸ் தலைவர்கள் வளர்த்தனர். அவர்கள் ஓரளவு வளர்ந்த பிறகு அவர்களை அடக்கி ஒடுக்கி, காலிஸ்தான் பிரிவினைவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அந்தப் புகழ் வெளிச்சத்தில் தங்கள் பிரதமரை மீண்டும் வெல்லச் செய்வதே அவர்களது குறிக்கோளாக இருந்தது'' என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் சித்து.

ஒரு சிறு குருத்வாராவின் மதகுருவான பிந்தரன்வாலே எவ்வாறு மிகப் பெரிய சீக்கிய தலைவராக உருமாற்றம் அடைந்தார், அவரை உருவாக்கியது யார் என்பதை தனது நூலில் விளக்கமாக அளித்திருக்கிறார். இதனிடையே 1980 பிப்ரவரியில் பஞ்சாபில் அகாலி தளம் கூட்டணி அரசு நீக்கப்பட்டு சில மாத கால குடியரசுத் தலைவர் ஆட்சியை அடுத்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தது. தர்பாரா சிங் முதல்வராக இருந்தார். அவரது ஆட்சியில் சாதாரண மக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது குற்றமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயம், பிந்தரன்வாலே மட்டும் பயங்கர ஆயுதங்களை ஏந்தியபடி, ஒரு பெரும் படையுடன் பஞ்சாபிலும் தில்லியிலும் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார். அச்சமற்ற அகாலித் தலைவர் என்ற தோற்றத்தை சீக்கியர்களிடம் அவர் உருவாக்கிக் கொண்டார். அரசு ஆதரவின்றி இவ்வாறு நிகழ்வது சாத்தியமல்ல. அதன் கொடிய விளைவை நாடு பின்னாளில் அனுபவித்தது.

உண்மையிலேயே, நாட்டு மக்கள்தொகையில் 2% இருக்கும் சீக்கியர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படவில்லை என்பது, சீக்கியர்கள் உள்பட அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவதால் ஆட்சியை இழந்து பரிதவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் சீக்கியர்களை மீண்டும் பலிகடாவாக்கி அரசியல் நடத்தத் துடிக்கிறது.

இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸார் தலைமையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கண்டிக்காமல் நியாயப்படுத்தினார். ""பிரதமர் இந்திரகாந்தி படுகொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்பட்டன. ஒரு பெரிய மரம் வீழும்போது நிலத்தில் அதிர்வலைகள் ஏற்படுவது சகஜம்தான்'' என்று, வன்முறைக் கொலைகள், கொள்ளைகளை நியாயப்படுத்தினார், இந்திரா காந்தியின் மகனும் அன்றைய பிரதமருமான ராஜீவ் காந்தி. 1984-இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முழுவதுமே, சீக்கிய சமுதாயத்துக்கு எதிரான பிரசாரக் களமாகத்தான் இருந்தது.

தனது சுயநலனுக்காக மிகக் கொடிய காலிஸ்தான் இயக்கம் உருவாகக் காரணமானவர் இந்திரா காந்தி. அவரது மகன் ராஜீவ் காந்தி, பஞ்சாபிலும் நாடு முழுமையும் காங்கிரஸ் வெல்வதற்காக சீக்கியர்களை பலிகடாவாக்கினார். அந்தக் குடும்ப வாரிசான ராகுல் காந்தியும் அதே பாதையில் நடக்கப் போகிறாரா? காலிஸ்தான் புலி மீது சவாரி செய்த பாட்டி 1984 அக்டோபர் 31-இல் பலியானதை பேரன் அதற்குள் மறந்துவிட்டாரா?

கட்டுரையாளர்:

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.