
கச்சத்தீவை மீட்பது குறித்தான விவகாரத்தில் என்ன நடந்தது? தற்போது என்ன நடக்கிறது? இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையொப்பமானபோது மறைந்த முதல்வர் மு.கருணாநிதி என்ன செய்தார்? கச்சத்தீவை மீட்பது தொடர்பாக இந்தியா - இலங்கை இரு நாடுகளிடையேயான ஒப்பந்த ஷரத்துகள் என்ன தெரிவித்திருக்கின்றன? ஆக, இனி கச்சத்தீவை மீட்க இந்திய அரசு முனைந்தால், அது நிறைவேறுமா என்கிற கேள்விகள் எழுகின்றன.
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்கிற கேள்வி இன்று நேற்றல்ல, சற்றேறக்குறைய 1920-களில் இருந்து தொடர்கதையாகி வருகிறது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சுங்க வரிக்கான முதன்மை கலெக்டர் ஹார்ஸ்பர்க், "கச்சத் தீவு இலங்கைக்கு வரும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம்' என்ற கருத்தை முன்வைத்தார்.
இதை ஏற்காத இந்தியக் குழு, வேண்டுமானால் அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகவே, சட்ட ரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை.
ஆனால், தற்போது கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. இன்று வரை இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியுமே தவிர, தனிநபரின் முயற்சியால் ஏதும் பலன் விளையாது. ஆனால், தேர்தல் காலத்தில் மட்டுமே கச்சத்தீவைப் பற்றிப் பேசுவது சந்தர்ப்பவாதமா அல்லது வாக்கு அரசியலா என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கிறார்கள். சீனா, அருணாச்சலபிரதேசத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றுக்கு புதிய பெயரையும் சூட்டி விட்டது. இவ்வளவு நடந்த பிறகும் சீனாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசு, கச்சத்தீவை எப்படி மீட்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும்போதே திமுக தடுத்திருக்க வேண்டும். அப்படி தடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இதனால் மீனவர்கள் தினந்தோறும் அல்லலுறும் நிகழ்ச்சி ஏற்படுகிறது.
தற்போது மீண்டும் தமிழக சட்டப்பேரவையில், கச்சத்தீவை மீட்டே தீர்வோம் என்கிற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் 1991-ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் போதுதான் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியிலும், அதன் பின்னர் 2011, 2013, 2016-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போதும், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் என இதுவரை பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக மத்தியில் நீண்ட ஆண்டுகள் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்து கோலோச்சியபோது, இந்தப் பிரச்னைக்கு அழுத்தம் கொடுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மெத்தனமாக இருந்து விட்டு, இப்போது கச்சத்தீவு மீட்புக்கான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்திருப்பதன் மூலம், வாக்கு அரசியலுக்கான ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு, அந்தத் தீவின் மீது உரிமையைக் கொண்டாடிய இலங்கை, இந்தியக் கடற்படை தனது அனுமதியில்லாமல் கச்சத்தீவில் பயிற்சி செய்யக்கூடாது என்று கூறியதாகவும், அதன் விளைவாக 1955- இல் தனது விமானப்படை பயிற்சியை கச்சத்தீவில் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கிறார்கள். "இந்த சிறிய தீவுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான உரிமையை விட்டுத்தர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் நீண்ட காலத்துக்கு நிலுவையில் இருப்பதையோ, மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதையோ நான் விரும்பவில்லை' என்று முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால்நேரு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தத் தீவின் மீதான உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்திருப்பதால், அதன் மீது நமக்கு உரிமை இருக்கிறது என அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்.சி.ஷெடல்வத் கூறியிருந்தார். அப்போது வெளியுறவுத்துறை இணைச் செயலாளராக இருந்த கே.கிருஷ்ணராவ் உரிமை குறித்து உறுதியாக இல்லை எனவும், ஆனால், அந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமை கோர சட்ட ரீதியில் வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
1968- இல் இலங்கை பிரதமர் டட்லி சேனநாயக இந்தியாவுக்கு வந்த போது இந்தத் தீவை இலங்கைக்கு அளிப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. நாடாளுமன்றத்தில் இதற்குப் பதிலளித்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அப்படி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், ஆனால் கச்சத்தீவு சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இருதரப்பு உறவுகளை மனதில் வைத்து இந்தியா உரிமை கோரவேண்டும் என்று கருத்து அப்போது நிலவியது.
1973- இல் கொழும்பில் நடந்த வெளியுறவுத்துறைச் செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுத் தர இந்தியா முடிவு செய்தது. இந்த விவகாரம் வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல்சிங் மூலம், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் அந்தத் தீவின் மீதான ராமநாதபுரம் ராஜாவின் உரிமை, தனக்குத்தான் அந்தத் தீவு சொந்தமென கூறும் இலங்கை அரசின் உரிமை ஆகியவற்றுக்கான ஆதாரங்களை இருவராலும் காட்ட முடியவில்லை. ஆனால், இலங்கை அரசு பிடிவாதமாக இருப்பதாக கேவல்சிங் குறிப்பிட்டார். 1925 முதல் இலங்கை அரசு அந்தத் தீவின் மீது உரிமையைக் கோரி வருகிறது எனவும் தெரிவித்தார்.
கடல்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை இந்தியா கண்டறிந்ததாலும், இலங்கை அரசின் மீது சீனா ஆதரவு குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து வந்ததாலும், உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. இதன் பின்னர், தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்தக் கருத்தை ஏற்க ஒப்புக் கொண்டார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் இருக்கும் பேருபரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானோடு இணைக்க அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முடிவு செய்தபோது அம்மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வரான பி.சி.ராய் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முடிவு தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இது குறித்து காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த கச்சத்தீவு ஒப்பந்தம் இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பரப்பை கையகப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இல்லை. ஏனெனில், கேள்விக்குறியான பகுதி ஒருபோதும் வரையறைக்குள் வருவதில்லை என்பது அவரது பதிவு.
ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது என்று 2015 -ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்த ஆர்டிஐ கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை அதிபர் ரணில்விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஜீவன்தொண்டமான் கூறும் போது, இலங்கையைப் பொருத்தவரையில், கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவுடன் இதுவரை அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. இருந்தாலும், இந்திய அரசின் விருப்பத்துக்கேற்ப ஒரு நாட்டின் எல்லையை மாற்ற முடியாது என்று தெரியப்படுத்தியிருக்கிறார்.
1974- ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்தான ஒப்பந்தம் என்பது இந்தியா - இலங்கை இடையிலான சர்வதேச ஒப்பந்தமாக இருப்பதால், அதை மறுபரிசீலனை செய்வதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு சவால்கள் உள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டுள்ள தனித் தீர்மானம் மத்திய அரசை வலியுறுத்துவதாக அமைந்திருந்தாலும், இது ஒரு மாநில அரசின் கோரிக்கையாக மட்டுமே உள்ளது. இதை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் மத்திய அரசிடமும், சர்வதேச உறவுகளைப் பொருத்தவரை இலங்கை அரசிடமும் உள்ளது.
ராஜதந்திர ரீதியாக இந்தியா - இலங்கை இடையிலான பேச்சுவார்த்தை மூலம் கச்சத்தீவை மீட்பது அல்லது குத்தகைக்கு எடுப்பது போன்ற தீர்வுகள் முன்மொழியப்பட்டாலும் இலங்கை அரசு அதை ஏற்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் இலங்கை அரசு இதற்குச் சம்மதிக்க வாய்ப்பு குறைவு.
இந்த இடியாப்பச் சிக்கல் நீண்டு கொண்டே வருகிறது. கச்சத்தீவு மீட்பு என்பது கன்னித்தீவு கதையாகி விடுமோ?
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.