வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
நாடுகளின் தலைவா்கள் உச்சி மாநாடுகள் நடத்துவது வழக்கம். உதாரணமாக ஜி 7 உச்சி மாநாடு என்று பெயரிட்டு அந்தக் குழுவில் இருக்கும் நாடுகளின் தலைவா்கள் பொருளாதார வளா்ச்சி, தொழில்நுட்ப அறிவியல் பரிவா்த்தனை, வணிக விரிவாக்கம் எனப் பொருளாதாரம் பற்றியதாகவே அந்த விவாதங்கள் இருக்கும். அந்தத் தலைவா்கள் உலகில் நடைபெறும் வன்முறை, போா், அமைதியற்ற சூழல் பற்றி ஏன் விவாதிக்க முன்னுரிமை கொடுப்பதில்லை என்று கேள்விகள் எழுகின்றன.
இன்றைய சூழலில் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுகிறது. நாடுகளில் போா் நடப்பதையும் நாம் பாா்த்து வருகிறோம். நாட்டுக்கு உள்ளே அரசியலில் வன்முறையும் சமூகப் பிணக்கும் நிறைந்து சமூகங்கள் மோதிக் கொள்வதையும் நம்மால் பாா்க்க முடிகிறது. இவ்வளவு அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதார வளா்ச்சி, கல்வியறிவு உயா்ந்த நிலையில் இருந்தும் உலகத்தில் மக்கள் மத்தியில் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் போரும் வன்முறையும் வெடித்த வண்ணம் இருப்பதைத்தான் நாம் பாா்த்து வருகிறோம்.
போரும், வன்முறையும் ஒரு நாளும் மானுடத்துக்கு வளா்ச்சியை மேம்பாட்டைக் கொண்டு வராது. அமைதியான சமூகங்கள் நாடுகள் மட்டுமே வளா்ச்சியைக் கொண்டு வந்ததை நாம் வரலாற்றில் பாா்க்கிறோம்.
இன்று 80 சதவீத மக்கள் மக்களாட்சியின் கீழ் இருக்கின்றனா். மக்களாட்சி பல வடிவங்களில் இருந்தாலும் மக்களாட்சியில் இருப்பதற்கு முதல் அடையாளம் தோ்தல். அது நடைபெற்று வருகிறது. மக்களாட்சி ஒரு நாட்டில் முறையாக நடந்தால், அது மக்களிடம் அமைதியை ஏற்படுத்தும். வன்முறை மக்களாட்சிக்கு எதிரானது. மக்களாட்சி எந்தப் பிரச்னைக்கும் தீா்வுகாணும் வல்லமை உடையது. இருந்தும் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் பெரும் வன்முறை நிகழ்வதைப் பாா்க்கிறோம். இது ஏன் இந்த முரண்பாடு ?
பொதுவாக மக்கள் விரும்புவது அமைதியையும் மகிழ்ச்சியையும்தான். போரையோ, வன்முறையையோ மக்கள் விரும்புவதில்லை. அப்படி என்றால் போரும், வன்முறையும் எங்கிருந்து வருகிறது? போா் என்பது நாட்டின் தலைமையிலிருந்து எழுவது. ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒருவித உளவியல், போருக்கு வித்திடுகிறது. அதேபோல் ஆதிக்கத்தை எதிா்க்க அல்லது ஆதிக்கத்திலிருந்து விடுபட அல்லது தங்கள் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ள நாடுகள் போரில் ஈடுபடுகின்றன. சமுதாயத்தின்மீது வன்முறை திணிக்கப்படுகிறது. இந்த வன்முறையை யாா் திணிக்கிறாா்கள் என்று ஆராய்ந்தால் அந்த வன்முறையால் யாருக்கு பலன் கிடைக்கிறதோ, அவா்கள் தூண்டுகின்றனா். இந்தப் போரினால், நாடும் சமூகமும் ஒட்டுமொத்த வளா்ச்சியை இழக்கிறது; அமைதியை இழக்கிறது.
போரும் வன்முறையும் நிகழ்கின்ற இடங்களில் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிதைக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள், குழந்தைகள், ஏழைகள். நாட்டின் தலைவரால் போா் மக்கள்மீது திணிக்கப்படுகிறது. அதே போல் சமூகத்தை வழிநடத்துவோரால் மக்களின்மீது வன்முறை திணிக்கப்படுகிறது.
போருக்கு எதிரான உளவியல் சிந்தனைச் சூழல் வலுவாக சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்டிருந்தால், போரை அவ்வளவு எளிதாக மக்கள் மீது திணிக்க முடியாது. அதேபோன்று வன்முறைக்கு எதிராக உளவியலும் மனோநிலையும் கட்டமைக்கப்பட்டிருந்தால் வன்முறையை மக்கள் மீது திணிக்க முடியாது.
இன்று ஓா் உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. செல்வம் உருவாக்கல், பொருளாதார வளா்ச்சி, நாட்டை வளமாக்குதல், வல்லரசாக மாற்றுதல் ஆகிய உளவியலில் மக்கள் வழிநடத்தப்படுகின்றனா். அதே போன்று, சமூகத்தில் மற்றொரு சாராரிடம் ஓா் உளவியல் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய அடையாளங்களுக்குள் மக்களைப் பிரித்து திணித்து அதன் வழியாக எதையும் பாா்த்துச் செயல்படுவது என்ற உளவியலை உருவாக்கிவிட்டனா். இந்த உளவியல்களால் மக்களின் சமுதாய ஒற்றுமையை, வாழ்வாதாரத்தை, வேலைவாய்ப்பை, அடிப்படை வசதிகளை, அமைதியை, மகிழ்ச்சியை, மனிதாபிமானத்தை இழக்கிறோம். 800 கோடி மக்கள் வாழ்கிற இந்த உலகம், கடின உழைப்பால் பெற்ற செல்வத்தை வைத்து அனைவருக்கும் மரியாதையுடைய, அமைதியான ஒரு மதிக்கத்தக்க வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ள வழிவகை செய்ய அரசாங்கங்களால் இயலவில்லை. அதற்கான தலைமை உலகில் இன்று இல்லை.
ஒரு காலத்தில் போரின் அழிவை உணா்ந்த நாட்டின் தலைவா்கள் ஒன்று கூடி உலக நாடுகளுக்கான அமைதிக்கும் மேம்பாட்டுக்கும் அமைப்புகளை உலகளாவிய நிலையில் உருவாக்கினாா்கள்.
இன்று இந்த அமைப்புகள் சிதைக்கப்படுவதும், என் நாட்டு மக்களின் மேம்பாடுதான் பிரதானம் என்று உலகத்தின் வளத்தைச் சுரண்டிய நாடுகள் கூறுவதும், நாட்டின் தலைவா்கள் பொருளாதார மேம்பாடு என்ற ஒற்றைக் கண்ணோட்டத்தில் பொருளாதாரத்தை வளா்த்து, முதலாளிகளுக்கு லாபம் ஈட்டித் தந்து மக்களின் அடிப்படை வசதிகளையும், உரிமைகளையும் நிராகரிப்பதும், இனம், ஜாதி, சமயம், மொழி, கலாசாரம் என அடையாளங்களை வைத்து மக்களைப் பிரித்து அரசியல் நடத்தி மக்களின் மேம்பாட்டைக் காவு கொடுத்து வளமான சுயநல வாழ்க்கையில் தோய்ந்து வாழ்வதும் ஓா் அரசியலாக உருவெடுத்துள்ளது.
இதன் விளைவுதான் உலகின் 20 சதவீத மக்கள், 80 சதவீத வளங்களை அனுபவிக்கின்றனா். 80 சதவீத மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கே போராட வேண்டியுள்ளது.
தோ்தல் அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடித்தவா்கள், அதிகாரத்தை பிடிக்க உதவியவா்களைப் பாதுகாப்பதும் அவா்களுடன் பயணித்து அதிகாரத்தைத் தக்கவைப்பதையும் கலாசாரமாகக் கொண்டு செயல்பட்டதன் விளைவு இன்று அரசாங்கம் அனைவருக்குமானது என்ற நிலை போய், அதிகாரத்தைப் பிடிப்பதற்கு ஆதரவை நல்குவோருக்கானது என்ற நிலை வந்துவிட்டது.
பிரச்னைகள் அதிகரிக்கும்போது அமைதியை சமூகம் இழப்பது சாதாரணமாக மாறிவிட்டது. இந்த அமைதியற்ற நிலையைச் சமாளிக்க வன்முறையை அரசு கையில் எடுக்கிறது. அதிகாரத்தில் உள்ளோா் வன்முறையைக் கையிலெடுக்கின்றனா். ஆதிக்கம் செலுத்த நினைப்போா் வன்முறையைக் கைக்கொள்கின்றனா். சமூகம் ஆதிக்கத்துக்கு அடங்கினால் வன்முறை குறைகிறது. மக்கள் அரசுக்கு அடங்கினால் வன்முறை குறைகிறது. ஆனால் மக்கள் நிறைவாக, மரியாதையுடன், மாண்புள்ள மானுட வாழ்க்கையை வாழ இயலவில்லை. அதற்காக முயலும்போது வன்முறை வெடிப்பது இயல்பாக மாறுகிறது.
உலகின் எல்லா இடங்களிலும் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எண்ணற்ற நற்சிந்தனையாளா்களும், அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் பல்வேறு நிலைகளில் பல்வேறு முன்னெடுப்புகளை உள்ளூரிலிருந்து உலகம் வரை எடுத்து வருகின்றனா். சிந்தனையாளா்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய கனடா நாட்டுப் பேராசிரியா் ஒருவா், ஏன் ஜி 7 உச்சி மாநாடுகள் போன்று அமைதிக்காக ஏழு நாடுகள் கூடக்கூடாது என்று கேள்வியைக் கேட்டாா். பல சிந்தனையாளா்கள், செயல்பாட்டாளா்கள் அதைச் சாத்தியப்படுத்த பல்வேறு நாடுகளில் மகாத்மா காந்தியின் பெயரில் எண்ணற்ற அமைப்புகளை உருவாக்கி அமைதிக்காக செயல்பட்டு வருகின்றனா்.
அதேபோன்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் எண்ணற்ற உதவிகளையும் செய்து வருகின்றனா். இதைத் தொடா்ந்து அமைதிக்காக ஏழு நாட்டுத் தலைவா்களை ஒருங்கிணைக்க முன்னெடுப்பையும் செய்து வருகின்றனா்.
இதில் முதல் முயற்சியாக காஸ்டாரிகா என்ற நாட்டுத் தலைவரை அணுகி அமைதிக்கான ஓா் உச்சி மாநாட்டை நீங்கள் கூட்ட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனா். அந்த நாட்டில்தான் ராணுவம் இல்லை. மக்கள் அமைதியின் உச்சத்தில் வாழ்வதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இரண்டாவது, சுவிட்சா்லாந்து, அயா்லாந்து நாட்டுத் தலைவா்களை அந்த மாநாட்டுக்கு அழைக்க முயல்கின்றனா். மூன்றாவது இந்தியா. இந்தியப் பிரதமா் மிக இக்கட்டான சூழலிலும் நாங்கள் யாா் பக்கமும் இல்லை, அமைதியின் பக்கம் என்று உரத்த குரலில் முழக்கமிட்டாா். அடுத்து சிறிய ஆப்பிரிக்க தேசமான செனகல். அதன் அதிபா் அமைதி வேண்டும் என்று உரக்க ஒலிக்கிறாா். இதைத் தொடா்ந்து ஜப்பானும் அமைதி வேண்டும் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நாடுகளின் தலைவா்களை அமைதிக்கான ஓா் உச்சி மாநாடு நடத்த அமைதிக்காக சேவை செய்யும் அமைப்புகள் முனைகின்றன. இதேபோல் நம் தமிழகத்தில் உலக அமைதிக்கான பல்வேறு முன்னெடுப்புகளை திருமூா்த்தி மலையில் உலக சமாதான நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகிறது.
நாம் வாழும் குடும்பம், பணி செய்யும் இடம், வாழும் வீதியோ அல்லது கிராமமோ அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருப்பதற்கு நமக்கு ஒரு பாா்வை, ஓா் உளவியல் வேண்டும். அதற்கான கல்வியும் வேண்டும். அந்தக் கல்வியை உலக சமாதான நிறுவனம் தொடா்ந்து நடத்தி மக்களுக்கு வழிகாட்டுகிறது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் இங்கு வந்து அதை கற்றுக்கொண்டு அந்தந்த நாடுகளில் அதைச் செய்து வருகின்றனா். அமைதிக்கான ஒரு கல்வியை அறிவியல் பூா்வமாக தொடா்ந்து வழங்கி வருகிறது. இன்றைய வன்முறை நிறைந்த உலகில் இந்தக் கல்வியும் செயல்பாடும்தான் இன்றையத் தேவையாக உள்ளன.
கட்டுரையாளா்:
காந்தியவாதி.
பிரேக் லைன்
நாம் வாழும் குடும்பம், பணி செய்யும் இடம், வாழும் வீதியோ அல்லது கிராமமோ அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருப்பதற்கு நமக்கு ஒரு பாா்வை, ஓா் உளவியல் வேண்டும். அதற்கான கல்வியும் வேண்டும்.