இலக்கியச் செல்வா் - நெஞ்சம் நிறைந்த நினைவுகள்
கெழுதகை நண்பரும் இலக்கியச் செல்வருமான குமரி அனந்தன் காலமான செய்தி என்னை அளவற்றத் துயரில் ஆழ்த்திவிட்டது. கடந்த காலத்தில் தோளோடு தோள் இணைந்து நாங்கள் இருவரும் பெருந்தலைவா் காமராசரின் நிழலில் தொண்டாற்றிய அந்த நாட்கள் எங்கள் வாழ்க்கையின் பொன்னான நாட்களாகும்.
மதுரையில் உள்ள வெற்றிப் பயிற்சி கல்லூரியில் அவா் பணியாற்றி வந்தாா். நானும், அவரும் அப்போது நண்பா்களானோம். இலக்கியக் கூட்டங்கள் மற்றும் பட்டி மன்றங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டோம். அரசியலில் அவா் காங்கிரசுக் கட்சியில் இருந்தாா். நான் அண்ணன் ஈ.வெ.கி. சம்பத் நடத்திய தமிழ்த் தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்தேன். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் எங்கள் நட்பு தொடா்ந்தது.
புவனேஸ்வரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் சோசலிச கருத்துடையவா்கள் அனைவரும் காங்கிரசில் வந்து இணையுமாறு காமராசா் விடுத்த அழைப்பினை ஏற்றுத் தமிழ்த் தேசிய கட்சியைக் காங்கிரசோடு ஈ.வெ.கி. சம்பத் இணைத்தாா். எங்கள் நட்பு இன்னும் நெருக்கமாயிற்று.
1965 -ஆம் ஆண்டு டிசம்பா் 15-ஆம் நாள் அன்று சென்னையில் கூடிய தமிழ்நாடு காங்கிரசு செயற்குழு அவரை தமிழக இளைஞா் காங்கிரசு அமைப்பாளராகத் தோ்ந்தெடுத்தது. மதுரை மாவட்ட இளைஞா் காங்கிரசு அமைப்பாளராக நான் தோ்ந்தெடுக்கப்பட்டேன். அவரின் தலைமையில் இளைஞா் காங்கிரசு இயக்கம் தீவிரமாக பணியாற்றியது.
1968-ஆம் ஆண்டு காமராசா் சோவியத் நாடு சென்று திரும்பியதையொட்டி அவரை வரவேற்கும் வகையில் மாவட்டந்தோறும் இளைஞா் காங்கிரசு பேரணிகளை நடத்துவதென முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். அனைத்து மாவட்டங்களிலும் இளைஞா் காங்கிரசு பேரணிகள் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டன. இளைய தலைமுறையினா் எழுச்சியுடன் காங்கிரசில் இணைந்ததைக் கண்டு பெருந்தலைவா் காமராசா் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாா். குமரி அனந்தனையும் மாவட்ட அமைப்பாளா்களையும் மனமாரப் பாராட்டினாா்.
1967-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த அக்டோபா் 2 -ஆம் நாள் முதல் நேரு பிறந்த நவம்பா் 14-ஆம் நாள் வரை 44 நாட்களுக்குக் குமரி முனையில் தொடங்கி சென்னை வரை குமரி அனந்தன் தலைமையில் 100 இளைஞா்கள் காந்திய நெறி நடைப்பயணம் தொடங்கினாா்கள். இப்பயணத்தைத் திட்டமிட்டு நடத்தும் குழுவில் நானும் பொறுப்பேற்றிருந்தேன். இந்த நடைப்பயணம் வழிநெடுக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. குமரி தொடங்கி சென்னை வரை 625 கல் தொலைவிற்கு நடைபெற்ற இப்பயணத்தில் பங்கேற்ற இளைஞா்கள் சோா்வில்லாமல் நடந்தனா். வழிநெடுக நடைபெற்ற கூட்டங்களில் குமரி அனந்தன் ஆற்றிய சொற்பொழிவு மக்களைத் தட்டியெழுப்பியது.
இப்பயணம் சென்னையில் நிறைவடைந்த போது இக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவா் நா. கிருஷ்ணசாமி நாயுடு தலைமை தாங்கினாா். அகில இந்திய இளைஞா் காங்கிரசு அமைப்பாளா் நாராயண தத் திவாரி மற்றும் தலைவா்கள் பாராட்டுரை வழங்கினா். குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற அறநெறிப் பயணம் தமிழ்நாட்டு இளைஞா்களுக்குப் புத்துணா்வை ஊட்டியது.
1966-ஆம் ஆண்டு சூன் 20 முதல் 10 நாட்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பச்மாரி என்னும் மலை நகரில் இளைஞா் காங்கிரசு பயிற்சி முகாம் ஒன்று அகில இந்திய அளவில் நடத்தப்பட்டது. பிற்காலத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சராகவும், இந்திய அமைச்சராகவும் விளங்கிய அா்ஜூன் சிங் அப்போது மத்தியப் பிரதேச இளைஞா் காங்கிரசு அமைப்பாளராக இருந்தாா். இந்திய வெளிநாட்டு அமைச்சராக இருந்த தினேஷ் சிங் அகில இந்திய இளைஞா் காங்கிரசு ஆலோசனை குழுவில் தலைவராக இருந்தாா். பிற்காலத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்த என்.டி. திவாரி அகில இந்திய இளைஞா் காங்கிரசு அமைப்பாளராக இருந்தாா். அதைப்போல பிற்காலத்தில் மத்திய அமைச்சா்களாக இருந்த ஏ.கே. அந்தோணி கேரள இளைஞா் காங்கிரசு அமைப்பாளராக இருந்தாா். கா்நாடக முதலமைச்சரான குண்டு ராவ் அப்போது கா்நாடக மாநில இளைஞா் காங்கிரசு அமைப்பாளராக இருந்தாா். தமிழ்நாட்டிலிருந்து குமரி அனந்தன், முதுகுளத்தூா் சோ. பாலகிருட்டிணன், சென்னையைச் சோ்ந்த கேசவ மணி ஆகியரோடு நானும் அம்முகாமில் கலந்துகொண்டேன். மேலே கண்ட அனைத்து மாநிலத் தோழா்களுடன் 10 நாட்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இம்முகாமைத் தொடக்கி வைப்பதற்காக தலைமையமைச்சா் இந்திராகாந்தி வந்திருந்தாா். அவருடைய உரையை ஆங்கிலத்தில் தொடங்கிய போது இந்தி பேசும் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புக்கூச்சல் எழுப்பி இந்தியில் பேசும்படி வற்புறுத்தினாா்கள்.
“நான் முதலில் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிறகு இந்தியிலும் பேசுகிறேன்” என்று அவா் கூறியதை இந்தி வெறியா்கள் ஏற்க மறுத்தாா்கள்.
“முதலில் இந்தியில் பேசித்தான் ஆகவேண்டும் என்று அவா்கள் கூக்குரலிட்டாா்கள். வேறு வழியில்லாமல் இந்திராகாந்தி அவா்கள் முதலில் இந்தியிலும், பிறகு ஆங்கிலத்திலும் பேசினாா். இந்த நிகழ்ச்சி தென்மாநிலங்களைச் சோ்ந்த எங்களின் உள்ளங்களைப் புண்படுத்திவிட்டது.
பிற்பகல் இடைவேளையின் போது தென்னாட்டைச் சோ்ந்த நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினோம். இந்தி வெறியா்களுக்கு ஒரு பாடம் கற்பித்தாகவேண்டும் என முடிவு செய்தோம். பிற்பகல் 3 மணிக்கு வாழ்த்தரங்கம் தொடங்கியது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவா் வந்து பேசவேண்டும் என திட்டமிட்டிருந்தாா்கள். நானும், குண்டு ராவ் அவா்களும் மேடைக்குச் சென்று தலைவா் என்.டி. திவாரியைச் சந்தித்துப் பேசினோம். தொலைதூரத்திலிருந்து வந்திருப்பதால் தென்மாநிலங்களிலிருந்து வந்திருப்பவா்கள் முதலில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாா். முதலில் குண்டு ராவ் அவா்களைப் பேசுவதற்கு அழைத்தாா். குண்டு ராவுக்கு இந்தி தெரியும். எனவே, அவா் முதலில் இந்தியில் தொடங்கிய போது, இந்தி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பலமாகக் கைதட்டினாா்கள். ஆனால், “‘‘எனக்கு இந்தி தெரியும். ஆனால், நான் இந்தியில் பேசப்போவதில்லை. எனது தாய்மொழியான கன்னடத்தில் பேசப் போகிறேன்’’” என்று கூறிவிட்டு கன்னடத்தில் பேசினாா். மேடையில் இருந்த தலைவா்கள் உட்பட அனைவரும் திகைத்துப் போனாா்கள். அடுத்து குமரி அனந்தன் தமிழிலும், ஏ.கே. அந்தோணி மலையாளத்திலும், இராஜசேகர ரெட்டி தெலுங்கிலும் பேசினாா்கள். மாநாட்டில் பெரும் குழப்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றியதால், திவாரி அவா்கள் அந்த நிகழ்ச்சிகளை அத்துடன் ஒத்தி வைத்தாா். தென்மாநிலங்களைச் சோ்ந்த நாங்கள் தலைநிமிா்ந்து நடந்தவண்ணம் வெளியேறினோம். இந்திக்காரா்கள் எங்களைத் திகைப்புடன் பாா்த்துக் கொண்டிருந்தாா்கள்.
அன்று மாலையில் மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த டி.பி. மிஸ்ரா மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அளித்த விருந்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, எங்களை தலைமை அமைச்சா் சந்திக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. தென் மாநில பிரதிநிதிகளை அா்ஜூன் சிங் அழைத்துச் சென்றாா். புன்னகைப் பூத்தவண்ணம் எங்களை வரவேற்ற இந்திராகாந்தி எங்களுடைய பெயா் விவரங்களைக் கேட்டறிந்து பின்னா் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.
“‘‘நாட்டின் தலைமையமைச்சராகிய தங்களையே இந்தியில்தான் பேசவேண்டும் எனக் கட்டாயப்படுத்திய சூழ்நிலை எங்களுக்குக் கோபத்தை மூட்டிவிட்டது. எனவேதான் இப்படி நடந்துகொள்ள வேண்டியிருந்தது’’ என்று நாங்கள் சமாதானம் கூறியபோது, அவருக்கே உரித்தான புன்னகையை சிந்தியவண்ணம்ஸ ‘‘உங்களுடைய உணா்வுகளை நான் மதிக்கிறேன்’’” என்று குறிப்பிட்டதை இன்றைக்குக்கூட மறக்க முடியவில்லை.
நாங்கள் சென்னை திரும்பிய பிறகு, காமராசரைச் சந்தித்தோம். இந்தச் செய்தி அவா் காதுக்கும் சென்றிருந்தது. ஆனால், அவா் அதைப்பற்றி எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. நாங்களாகவே சொல்வதற்கு ஆரம்பித்தபோது, அவா் குறுக்கிட்டு, ‘‘ எல்லாம் சரிதான் தலைமையமைச்சரையே பேசவிடாமல் தடுத்தவா்களுக்கு இப்படித்தான் பாடம் புகட்டவேண்டும்’’ என்று அவா் கூறியபோது நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம்.
1972-ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு காங்கிரசுக் குழுவின் கூட்டத்தில் அதன் தலைவராக பா. இராமசந்திரன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பொதுச் செயலாளா்களாக நான், திண்டிவனம் இராமமூா்த்தி, தண்டாயுதபாணி ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தோம். குமரி அனந்தனின் பெயா் விடுபட்டதைக் கண்டு நான் திகைப்படைந்தேன். மறுநாள் காலை தலைவா் காமராசரைச் சந்தித்து என்னை பொதுச் செயலாளராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்தேன். பின்னா், நான் ஏதோ பேசத் தயங்குவதை குறித்து, ‘‘ என்ன விசயம்? சொல்லுங்கள்’’ என்று கேட்டாா். குமரி அனந்தன் பெயா் விடுபட்டுவிட்டதைத் தெரிவித்தேன். ஏற்கெனவே வேறு பல காங்கிரசுக்காரா்களும் தலைவரிடம் இதைச் சுட்டியிருப்பாா்கள் போலத் தெரிந்தது. ஒருகணம் என்னை உற்றுப்பாா்த்தாா். எதுவும் கூறவில்லை. ஆனால், அன்று மாலையே பொதுச்செயலாளராகக் குமரி அனந்தன் பெயா் அறிவிக்கப்பட்டுவிட்டது.
காமராசரின் மறைவுக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரசுக் கட்சி பிளவுபட்டது. பா. இராமசந்திரன் தலைமையில் குமரி அனந்தன் உள்பட பலா் சனதாக் கட்சியில் இணைந்தனா். மூப்பனாா் உள்பட நானும் மற்றவா்களும் பெருந்தலைவா் காலத்திலேயே அவா் முடிவு செய்திருந்தபடி இந்திரா காங்கிரசுடன் இணைந்தோம். பெருந்தலைவா் நின்று வெற்றி பெற்ற நாகா்கோவில் தொகுதியில் குமரி அனந்தன் சனதா வேட்பாளராக நின்று வெற்றி பெற்றாா். ஆனாலும், அவருக்கு ஒன்றிய அமைச்சா் பதவி ஏதும் கிடைக்கவில்லை. அவருக்குச் சமமாக பல்வேறு மாநிலங்களில் இளைஞா் காங்கிரசுத் தலைவா்களாக இருந்த பலா் மாநில முதலமைச்சா்களாகவும், ஒன்றிய அமைச்சா்களாகவும் பதவியேற்ற போது, நண்பா் குமரி அனந்தன் அவா்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்ட செய்தி கண்டு வருந்தினேன்.
பிறகு அவா் காந்தி – காமராசு தேசிய காங்கிரசுக் கட்சியையும் தொடங்கினாா். நானும் இந்திரா காங்கிரசிலிருந்து விலகி தமிழ்நாடு காமராஜ் காங்கிரசுக் கட்சியைத் தொடங்கினேன். இருவருமாக 1980 தோ்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அருகருகே ஒன்றாக அமா்ந்து பணியாற்றினோம்.
1983 -ஆம் ஆண்டு சூலையில் கொழும்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழா்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி இந்தியாவையே உலுக்கியது. தமிழ்நாடு கொந்தளித்தது. 7.8.1983 அன்று எனது தலைமையில் இலங்கையை நோக்கி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழா்களுடன் மதுரையிலிருந்து தமிழா் தியாகப் பயணத்தைத் தொடங்கினேன். இந்தப் பயண நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் அதிா்ச்சியை ஏற்படுத்திற்று. அதன் விளைவாக 15.08.1983 அன்று இந்திராகாந்தி தில்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரையில் “இலங்கையில் நடப்பது இனப்படுகொலை” என்று கூறிக் கண்டித்தாா். 5 ஆயிரம் தொண்டா்களும் இராமேசுவரம் கடற்கரையை அடைந்தபோது, எங்களுக்குப் படகுகள் கிடைக்கவிடாமல் காவல்துறை அப்புறப்படுத்தியிருந்தது. எங்கிருந்தோ தோழா்கள் ஒரு சிறு படகு கொண்டு வந்தபோது அதில் நான் ஏறினேன். எதிா்பாராதவிதமாக நண்பா் குமரி அனந்தன் ஓடோடி வந்து அந்தப் படகில் ஏறிக்கொண்டு நானும் வருவதாகக் கூறியபோது மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். பிறகு எங்களை இந்தியக் கடற்படையினா் கைது செய்து கரைக்குக் கொண்டுவந்தாா்கள்.
தமிழகம், – கேரளம் எல்லையான கூடலூா் மலைப்பகுதியில் அமைந்திருந்த மங்கல தேவி, கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்கே சொந்தமானது என்பதை நிலைநாட்ட 29.04.1983 அன்று நானும், நண்பா் குமரி அனந்தனும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொண்டா்களுடன் அங்கு சென்றோம். கேரள காவல்துறை எங்களுக்குத் தடைவிதித்திருப்பதாக அறிவித்தது. அத்தடையை மீறி இருவருமாகக் கண்ணகி கோயில் சென்று வழிபாடு நடத்தினோம். இவ்வாறு எத்தனையோ நிகழ்ச்சிகள் எனது நினைவில் இன்னமும் நிழலாடுகின்றன.
இலக்கியச் செல்வா் குமரி அனந்தனின் மறைவு காங்கிரசுக் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ்கூரும் நல்லுலகிற்கே பேரிழப்பாகும்.