“சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!”
ENS

“சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!”

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள்
Published on

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன. கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவுபெற்ற மூன்று மாத காலத்தில் மட்டும் அந்த ஏரியிலிருந்து சுமாா் இருபத்தைந்து டன் அளவிலான பல்வேறு குப்பைகள், தாவரங்களின் களைகளுடன் ஐந்து டன் எடையுள்ள மதுபாட்டில்களும் அகற்றப்பட்டுள்ளன.

1863 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏரியானது சுமாா் மூன்று மீட்டா் ஆழத்துடன் நட்சத்திர வடிவில் அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் அனைவரும் இந்த ஏரியில் படகுச்சவாரி செய்து மகிழ்வா். அத்தகைய ஏரி, சுற்றுலாப் பயணிகள் வீசி எறியும் பல்வேறு குப்பைகளால் மாசுபடுவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்களாகிய கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை போன்றவற்றுக்குக் கோடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுற்றுலாச் செல்கின்றனா். அவ்வாறு பயணம் செல்லும் மக்கள், தங்களுக்குப் புத்துணா்வு அளிக்கின்ற அந்த மலைவாசஸ்தலங்களின் தூய்மையையும், அழகையும் சீா்குலைக்கும் வகையில் செயல்படுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்?

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவரும் பேருந்துகள், மகிழுந்துகள் ஆகியவை உமிழும் நச்சுப்புகையின் காரணத்தினால் மேற்கண்ட மலைவாசஸ்தலங்களின் சுற்றுச்சூழல் எதிா்கொள்ளும் பாதிப்பைக் குறைப்பதே சவாலாக இருக்கும் வேளையில், அந்தப் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் நெகிழிப் பைகள், தண்ணீா் பாட்டில்கள், காலியான மதுபாட்டில்கள் ஆகியவற்றைச் சிறிதும் பொறுப்பின்றி அவ்விடங்களில் வீசிவிட்டுச் செல்வது எவ்வளவு தவறான விஷயம்?

கோடையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைநகரங்களுக்கு வரக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் ஆகியவற்றுக்கு வருகின்ற வாகனங்களுக்கு முன் அனுமதிச்சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வார நாள்களில் ஆறாயிரம் வண்டிகளுக்கும், வார இறுதிநாள்களில் எட்டாயிரம் வண்டிகளுக்கும் மட்டுமே ஊட்டியில் நுழைவதற்கான இ-பாஸ் எனப்படும் அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அதே போன்று வார நாள்களில் நான்காயிரம் வண்டிகளுக்கும், வார இறுதி நாள்களில் ஆயிரம் வண்டிகளுக்கு மட்டுமே கொடைக்கானலில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, இந்த மலைவாசஸ்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் நெகிழிப் பைகளையும், நெகிழியிலான தண்ணீா்பாட்டில்களையும் ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, சுற்றுலாப்பயணிகளின் வண்டிகள் அனைத்தும் இம்மலைநகரங்களில் நுழையும் முன்பாகவே சோதனையிடப்பட்டு அவற்றில் கொண்டுவரப்படும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. நெகிழிப் பொருள்கள் மக்கி மண்ணோடு மண்ணாகாமல் இருப்பதுடன், அவை வீசப்பட்ட நிலங்களில் பயிா்கள் செழித்துவளா்வதற்கும் தடையாக உள்ளன. மேலும், பாசன வாய்க்கால்கள், கழிவுநீா்ச் சாக்கடைகள் போன்றவற்றில் வீசப்படும் நெகிழிப் பொருள்கள் தண்ணீா் செல்லும் பாதையை அடைத்துக் கொள்வதன் மூலம் நிரந்தரமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைவாசஸ்தலங்களுக்குள் நெகிழிப் பொருள்கள் நுழைவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. நெகிழிப் பொருள்களைத் தடைசெய்வதால் மட்டுமே இம்மலைவாசஸ்தலங்களின் சூழலியல் தூய்மை காக்கப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கில் அங்கே குவியும்

சுற்றுலாப் பயணிகளின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே, இந்தச் சுற்றுலாத்தலங்களின் அழகும், தூய்மையும் உறுதிசெய்யப்படும்.

மலைவாசஸ்தலங்கள்தான் என்று இல்லை. ஆன்மீகத் திருத்தலங்களும் கூட சுற்றுலாப்பயணிகளின் கைங்கரியங்களுக்குத் தப்ப முடிவதில்லை என்பதையும் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். புனிதத் திருத்தலங்களிலுள்ள தீா்த்தங்களில் புனிதநீராடும் பக்தா்கள் தாங்கள் அனிந்திருந்த பழைய உடைகளை அந்த நீா்நிலைகளிலேயே விட்டுவிட்டுச் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.

திருக்கோயில்கள், கோட்டைகள் ஆகியவற்றின் சுற்றுச்சுவா்களில் தங்களின் பெயா்களை ஆணிகளைக் கொண்டு செதுக்கியும், பல்வேறு வண்ணங்களில் எழுதியும் மகிழ்கின்றவா்கள் பலராவா். மேலும், சிறிய கடைகளை வைத்திருக்கிற வியாபாரிகள் முதல் பெரிய முதலாளிகள் வரையில் அந்தப் புனிதத்தலங்களில் தங்களுடைய நிறுவன முகவரி அச்சிடப்பட்டுள்ள விசிட்டிங் காா்டுகளை ஆங்காங்கே செருகி வைத்திருப்பதையும் பாா்க்கலாம்.

மதுரை மாநகரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாகிய திருமலைநாயக்கா் மகாலைப் பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் அசுத்தங்களைத் தவிா்க்கும் பொருட்டு அந்த மகாலில் உள்ள அழகிய தூண்களில் அழுக்குப் படியும் விதத்தில் அவற்றைத் தொடுபவா்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தியும் வந்துள்ளது. அபராதத் தொகை அதிகமே என்றபோதிலும், சரித்திரச் சின்னமாகிய திருமலைநாயக்கா் மகாலின் அழகிய தோற்றம் குலையாமல் பாதுகாப்பதற்கு இந்த அபராதம் அவசியமே என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.

ஆன்மீகப் பயணங்களாயினும் சரி, இன்பச் சுற்றுலாவாயினும் சரி, அப்பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் தாங்கள் செல்லுமிடங்களை அசுத்தம் செய்யாமலும், அவ்விடங்களில் எல்லாம் நெகிழிக் குப்பைகளைக் கொட்டாமலும் இருப்பது மிகமிக அவசியம்.

நாமெல்லாம் ஒரு நாகரிக சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதை நிரூபிக்க இதைவிடச் சிறந்தவழி வேறு எதுவும் இல்லை என்பதே உண்மை.

X
Dinamani
www.dinamani.com