மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
4 min read

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 10 சட்ட முன் வடிவுகளை நீண்டகாலமாக நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.

"ஓர் அரசமைப்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துபவர்கள் நேர்மையாளர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாக இருக்கும்'' என்று அரசியல் சட்ட சிற்பி அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் கூறியதை நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர். அரசமைப்புச் சட்ட விழுமியங்களை நிலைநாட்டுவதற்கான நீதித் துறையின் உறுதியை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது.

ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளில் மாபெரும் மாற்றங்களையும், விளைவுகளையும் ஏற்படுத்தப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகக் காலங்காலமாக நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கும் இடையே பல்வேறு வகையான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

சட்டப்பேரவைகளால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பது குறித்த காலக்கெடுவை இந்தத் தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பையும், இன்னும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் சிறிதளவும் மதிக்காமல் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேறு யாராக இருந்தாலும் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் தனக்கெதிராக அளித்த தீர்ப்பு வெளியானவுடனேயே தனது பதவியிலிருந்து விலகியிருப்பார்கள்; ஆனால், தமிழக ஆளுநரோ எதுவும் நடக்காததுபோலத் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.

மாநில ஆளுநர் பதவி என்பது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நமக்கு விட்டுச்சென்ற கடைசிச் சின்னம். இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகும் நம்மால் அறுத்தெறிய முடியாத ஒரு அடிமைப் பந்தமாக இன்னமும் திகழுகிறது. மாநில நிர்வாகத் தலைவராகவும், சட்டப்பேரவையின் மிக முக்கியக் கூறாக இருப்பவரும் ஆளுநரே. ஆனால், அவரை குடியரசுத் தலைவரின் மூலமாக ஒன்றிய அரசு நியமனம் செய்கிறது. அவருடைய நியமனத்தில் மாநில மக்களுக்கும் மாநில அரசுக்கும் எந்த வகைத் தொடர்பும் பங்களிப்பும் கிடையாது. தனது ஆதிக்கத்தை மாநிலங்களில் முறையாக நிலைபெறச் செய்வதற்காக ஒன்றிய அரசுக்கு முகவர் ஒருவர் தேவை. அதற்கான பதவியே ஆளுநரின் பதவி ஆகும்.

மாநிலங்களின் ஆளுநர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தில் அவ்வாறு ஒருவர் நியமிக்கப்பட்டபோது, அந்த மாநிலத்தின் முதல் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான பி.சி. ராய் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களைக் காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள். ஒன்றிய அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓய்வுபெற்ற அதிகாரிகள் பலருக்குப் பரிசாக ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக ஆளுநர் பதவிகளையே ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் "ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா' என்ற கேள்வியை அறிஞர் அண்ணா எழுப்பியபோது, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பூபேஷ் குப்தா போன்ற பல தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தேசிய சட்ட ஆணையம் இந்திய அரசியல் சட்டத்தின் செயல்பாடு குறித்து ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எம். என். வெங்கடாசலய்யா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு ஆளுநர் நியமனம் குறித்துப் பின்வரும் பரிந்துரையை வழங்கியது.

பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற பேரவைத் தலைவர், தொடர்புடைய மாநிலத்தின் முதல்வர் ஆகியோரைக் கொண்ட குழு அந்த மாநிலத்தின் ஆளுநர் குறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால், அந்தப் பரிந்துரை இன்றளவும் செயல்படுத்தப்படவேயில்லை.

பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, ஒன்றிய அரசு-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் பின்வரும் பரிந்துரைகளைச் செய்தது.

(1) ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி எவரும் ஆளுநராக நியமிக்கப்படலாகாது.

(2) மாநில முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அவரின் ஒப்புதலுடன் ஆளுநரை நியமிக்கவேண்டும். இதற்காக அரசியல் சட்டப் பிரிவு 155-இல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் தேர்தல் அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை ஒன்றிய அரசிலும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தன. இதன் விளைவாக, ஒன்றிய அரசுடன் மாநில அரசுகள் மோதத் தொடங்கின. மேலும் மேலும் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என மாநில அரசுகள் போராடத் தொடங்கின.

ஒன்றிய அரசு தனது அதிகாரங்களை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து கொள்ள பிடிவாதமாக மறுத்தது. காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும் சரி, பிற கட்சிகள் ஆட்சி செய்தபோதும் சரி மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு தொடர்ந்தது. இதன் விளைவாக, மாநிலங்களுக்குத் தன்னாட்சி வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக பல மாநிலங்களிலும் ஒலித்தன.

காங்கிரஸ் கட்சி உள்பட அகில இந்தியக் கட்சிகளின் செல்வாக்கு சரிந்துவிட்டது. மாநிலக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் எந்த அகில இந்தியக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. இப்போதுகூட பிரதமர் மோடியின் அரசு ஆந்திரத்தைச் சேர்ந்த தெலுங்கு தேச கட்சி, பிகாரின் ஐக்கிய ஜனதாதளம் போன்ற மாநிலக் கட்சிகளின் தயவில்தான் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ ஆட்சிகளைப் பிடித்துள்ளன. இந்தப் போக்கு நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் ஒன்றிய அரசு பல்வேறு கட்சிகளின் கூட்டணி அரசாக மட்டுமே திகழ முடியுமே தவிர, ஒரே கட்சி ஆட்சி என்பது பகல் கனவாகிவிட்டது.

மாநிலக் கட்சிகள் மேலும் பல மாநிலங்களில் வலுவடையும்போது, மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உருவாகும் நாள், வெகு தொலைவில் இல்லை. அப்போது இன்றைய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்களும், குறைந்த அளவு அதிகாரம் கொண்ட ஒன்றியமும் உருவாகி உண்மையான கூட்டாட்சி நாடாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அரசியல் சட்டத்தில் மேலும் சில பிரிவுகள் மாநிலங்களின் தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இன்னமும் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 248 முதல் 252 வரை உள்ள பிரிவுகள் ஒன்றிய அரசு- – மாநில அரசுகளின் உறவுகள் குறித்தும், மாநிலங்களின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள மேலதிகாரம் குறித்தும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இதன்படி பார்த்தால் மாநிலங்களின் இருப்பும் வடிவமுமே கேள்விக்குறியாகிவிட்டன.

அரசியல் சட்டத்தின் 3-ஆவது பிரிவு பின்வருமாறு கூறுகிறது. கீழ்க்கண்டவை குறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

அ. ஒரு மாநிலத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து மற்றொரு மாநிலம் அமைக்கலாம். இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்களையும் பல்வேறு மாநிலங்களின் பகுதிகளையும் இணைத்து புதிய மாநிலம் உருவாக்கலாம்.

ஆ. ஒரு மாநிலத்தின் பரப்பளவை மேலும் பெருக்கலாம்.

இ. ஒரு மாநிலத்தின் பரப்பளவைக் குறுக்கலாம்.

ஈ. மாநிலங்களின் எல்லைகளைத் திருத்தியமைக்கலாம்.

உ. எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்.

இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்கள் இருப்பதும், இல்லாததும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு உட்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் பெயரளவில் கூட்டாட்சியாகவும், செயலளவில் ஒன்றிய ஆட்சியாகவும் திகழுகிறது. மொழி வழியாக மாநிலங்களைப் பிரித்த பிறகு, இந்திய அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் பொருத்தமற்றவைகளாகிவிட்டன. மொழி வழியாகத்தான் ஒரு தேசிய இனம் உருவாக முடியும். அந்த அடிப்படையில் இந்தியாவில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் குறிப்பிட்ட நில எல்லைக்குள் வாழ்கின்றன.

ஆனால், இந்திய அரசு மொழிவழித் தேசிய இனங்கள் தங்களின் மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், இலக்கியம் போன்றவற்றை வளர்ப்பதற்குத் தடையாக உள்ளது. இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும். இல்லையேல் மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு காஷ்மீர் மாநிலத்துக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட அதிக நாள்கள் ஆகாது.

உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதுடன், தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் முன்னோடித் தீர்ப்பாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோலாகவும் இந்தத் தீர்ப்பைக் கருத வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்களை அழைத்துப் பேசி இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் வகையில் மாபெரும் மக்கள் இயக்கத்தை நாடெங்கும் கொண்டு செல்லுமாறு அவரை வேண்டிக்கொள்கிறோம்.

கட்டுரையாளர்:

தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com