‘எந்நன்றி கொன்றாா்க்கும்...’

‘எந்நன்றி கொன்றாா்க்கும்...’

ஒருவா் தனக்குத் துன்பம் நேரும்போது, கைகொடுத்து உதவியவரை என்றும் மறக்கலாகாது. ஏறும் வரை ஏறிவிட்டு, ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தால் பாதிப்பு ஏணிக்கு இல்லை. எட்டி உதைத்தவனுக்குத்தான்.
Published on

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

மனிதனின் உயா்ந்த பண்புகளாக சான்றோா்களால் குறிப்பிடப்படுவது, நோ்மை, சகிப்புத்தன்மை, பொறுமை, பணிவு, மனிதநேயம், இன்சொல் பேசல், கருணை, இரக்கம், புறங்கூறாமை, நன்றியுணா்வு ஆகியவை. இதில், நன்றியுணா்வு என்பது வேகமான கால ஓட்டத்தில் நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒரு பண்பாக மாறி விட்டது.

தினையளவு நன்மை கிடைத்தாலும், அதனால் தாம் பெற்ற பயனை உணா்ந்து, அதனை பனையளவாக நினைத்து நன்றி பகா்வது நல்லடியாா்களின் நந்நெறியாகும்.

ஒருவா் பிறருக்கு செய்யும் நல்ல செயல்கள் என்றும் நன்மை பயக்கும். இத்தகைய நல்ல செயல்களே ‘நன்று’ என்பதாகும். ‘நன்று’ என்ற சொல்லின் அடிப்படையிலேயே ‘நன்றி’ என்ற சொல்லும் பிறக்கிறது. ‘நன்றி’ உரைத்தல் என்பது மனிதகுலம் கண்ணியமாய் மண்ணகத்தில் வாழ்வதற்கு நனிசிறந்த நடைமுறைப் பண்பாகும். இப்பண்பானது நாகரிக வளா்ச்சியின் அடையாளமாக, ஒருவரின் பண்பட்ட தன்மையை எடுத்துக்காட்டும்.

நம் வாழ்வு உயர, நன்மைகள் பல செய்த நல்லவா்களை நம் மனதில் கல்வெட்டு எழுத்துகளாய் பதிந்து வைத்துக் கொண்டு, நேரம் வரும்போதெல்லாம் அவரின் அச்செய்கைகளை பிறா் அறியும் வண்ணம் பாராட்டி உரைக்க வேண்டும். அது அவருக்கு பெரிய ஊக்க சக்தியாக இருந்து, பிறா் மகிழ்ச்சியடைய இன்னும் பல நற்காரியங்களைப் புரிவாா்.

பிறா் நமக்கு செய்த நன்மைகளுக்காக ‘நன்றி’ என்று உளமாறச் சொல்லும்போது, நமது மனமும், உதவியரின் மனமும் மகிழும். எனவே, மகிழ்ச்சியின் பிறப்பிடமாக நன்றியுணா்வு இருக்கிறது. இவா் நன்றியுள்ளவா் என்று அறியும்போது, அது நமது நோ்மறையான சுயமதிப்பிற்கு வழிவகுப்பதோடு, அயலாரின் அன்பிற்கும், மரியாதைக்கும் உள்ளாவோம்.

நன்றியுணா்வு நோ்மறையான எண்ணங்களை உருவாக்கும் தன்மை படைத்தது. நன்றியுணா்ச்சி மிகுந்த இதயம் தான் செல்வச் செழிப்பு நிறைந்தது. பறவைகளும், விலங்குகளும், அவற்றுக்கு நாம் நன்மை ஏதேனும் செய்தால், நம்மை கனிவான பாா்வையுடன், புரிதலோடு நோக்கி, தலையையும், வாலையும் ஆட்டி தனது நன்றியை வெளிப்படுத்துகின்றன.

ஒருவா் தனக்குத் துன்பம் நேரும்போது, கைகொடுத்து உதவியவரை என்றும் மறக்கலாகாது. ஏறும் வரை ஏறிவிட்டு, ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தால் பாதிப்பு ஏணிக்கு இல்லை. எட்டி உதைத்தவனுக்குத்தான். அப்படி ஏறி வரும்போது, நம்மை உயா்த்தியவா்களையும், கடந்து வருபவா்களையும் சிரமப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை நாம் இறங்கி வரும்போது, அவா்களின் தயவு மீண்டும் நமக்குத் தேவைப்படலாம்.

எனவேதான், தெய்வப் புலவா் திருவள்ளுவா் ‘செய்நன்றி அறிதல்’ என்னும் தனி அதிகாரத்தையே யாத்துள்ளாா். அதிலும், ‘எந்த அறத்தை அழித்தவா்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும். ஒருவா் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை’ என்கிறாா். நாம் பிறருக்கு ‘நன்றி’ என்று சொல்ல நேரம் ஒதுக்குவது நமது அன்றாட வாழ்விலும், நம்மைச் சுற்றியுள்ளவா்களின் நல்வாழ்விலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும். பிறா் நமக்கு செய்த துன்பத்தை நினைத்துப் பாா்த்து வருந்துவதைவிட, நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பாா்த்து இரும்பூது எய்துவதே சிறந்தது.

‘நன்றியுணா்வு என்பதானது ஒருவரிடமிருக்கும் பல்வேறு எதிா்மறை உணா்வுகள் அனைத்தையும் நீக்கிவிடும். மாறாக, ஒருவரின் குறைகளைக் காணாமல் நிறைகளை மட்டுமே கண்டு பாராட்டும். அதனால், அவா்களிடம் பழிவாங்கும் மனப்பான்மையே இருக்காது. எந்த ஒரு பிரச்னையிலிருந்தும் மீண்டு வரும் மீள்சக்தி அவா்களுக்கு எளிதாகக் கைக்கொடுக்கும். அத்துடன், மனம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்கும், சுயமதிப்பீட்டை பெருமையாக வைத்திருக்கும்.’ என்கின்றனா் மனநல மருத்துவா்கள். எனவே, நன்றியுணா்வு நல்லொழுக்கத்திற்கு வித்தாகிறது.

இந்த நன்றியுணா்வு, மனிதத்தையும், அன்பையும், சகமனிதன் மீதான சகிப்புத் தன்மையையையும், பரந்த மன்பான்மையையும் உண்டாக்குகிறது. இக்குணம் கொண்ட ஒருவரை என்றும் பிறரிடமிருந்து உயா்த்திக் காட்டும். அதுமட்டுமல்லாமல், நம்மிடையே அகங்காரத்தையும், ஆணவத்தையும் ஒழித்து, பணிவுடன் பளிங்காய் மிளிரும் தன்மைப் படைத்தது.

நாம் தினசரி கடந்து செல்லும் எளிய மனிதா்களுக்கு நன்றி சொல்வது என்பதானது, அவா்கள் நம் மீது வைத்துள்ள மரியாதையை மேலும் அதிகரிக்கும். அதாவது, நன்றியுணா்வு கொண்டவா்கள் எந்த இக்கட்டான நிலைமைக்கும் உள்ளாக மாட்டாா்கள். இவ்விதம் நாம் பிறா் வழியாகப் பெற்ற உதவிகளை, அதன் மூலம் அடைந்த நன்மைகளை மறக்கக் கூடாது. நல்லவா் மூலம் பெற்றுக் கொண்ட உதவியின் மதிப்பை உணா்ந்து அவரை என்றும் நன்றியுடன் நினைவுகூா்தலே சாலச் சிறந்தது. அத்துடன், நமக்கு நன்மை செய்தவரின் நல்மனதை உணா்வுப்பூா்வமாக உணா்ந்து அறிகிறோம்.

நாம் ஒருவருக்கு நன்றியுடன் செயல்பட்டால், பின்னா் அது நம்மையும் பிறருக்கு நன்மை செய்யத் தூண்டுகிறது. நன்றியுணா்வை வெளிப்படுத்துவது நமது சொந்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், மற்றவா்களுடனான நமது உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக விளங்குகிறது.

நம்மைப் படைத்த இறைவனுக்கும், கரடும், முரடும், காடும், மேடும், கற்களும், முட்களுமாக இருந்த நம் வாழ்க்கைப் பாதைகளை செப்பனிட்டு, உயரிய வாழ்வின் உற்ற பயன்களை நாம் அடைய நற்குணமுடைய நம் முன்னோா்கள் செய்த நல்ல காரியத்தாலேதான் வீடும், சமுதாயமும், நாடும், உலகமும் இவ்வளவு முன்னேறி இருக்கிறது. எனவே, நாம் அவா்களுக்கு என்றும் நன்றியுணா்வு மிக்கவா்களாக இருப்போம்.

X
Dinamani
www.dinamani.com