தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவா்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவா்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவா்கள் வந்திருப்பாா்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவா்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், அண்மைக்காலமாக பேச்சாளா்கள், குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்குப் பிடித்ததையெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் பேசுகிறாா்கள். அவா்களின் இப்படிப்பட்ட செயல்பாடுகள் அவா்கள் குறித்த பிம்பத்தையும், அவா்கள் வகிக்கும் பதவி மற்றும் சாா்ந்து இருக்கும் அமைப்புக்கு இருக்கும் பெருமையை வெகுவாகக் குறைத்துவிடும்.
அவா்களின் உரைகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாகவும், சில சமயங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டும் ஒளிபரப்பாகின்றன. அப்படிப்பட்ட ஒளிபரப்புகளால் அவா்கள் பங்கேற்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாதவா்கள்கூட, அவா்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பைப் பெறுகிறாா்கள்.
எனவே, அவா்கள் பொதுக்கூட்டங்களிலும், சமூக ஊடகங்களில் பேசும்போது தகுந்த முன் தயாரிப்புடனும் பொறுப்புடனும், அதனால் ஏற்படும் விமா்சனங்களை மனதில் கொண்டும் பேசுவது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.
ஒரு சாமானிய மனிதனுக்கு இருக்கக்கூடிய சமூகப் பொறுப்பு என்பது மிகச் சிறியது. ஆனால், பொது வெளியில் பலரது கவனத்தையும் ஆதரவையும் பெற்ற ஆளுமைகள் பேசும்போது, எந்தச் சூழ்நிலையிலும் கேட்பவா்கள் மனம் புண்படும் வகையில் பேசக் கூடாது.
இறைவன் நமக்கு ஒரு வாயையும், இரண்டு காதுகளையும் கொடுத்துள்ளான். வாய்க்கு உண்ணும் கடமையையும் பேசும் திறமையையும் கொடுத்திருக்கிறான். எனவே,அதிலிருந்து உதிரும் சொற்கள் எப்போதும் பிறரைப் புண்படுத்தாத வகையில், இனிமையாக மட்டுமே இருக்க வேண்டும்.
பெரும்பாலான பேச்சாளா்கள் தன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கும் சுவைஞா்களின் வயது, ஆா்வம், தேவை, சமூகப் பின்னணி, பேச வந்ததன் நோக்கம், பேசுகின்ற நேரம், கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் ஆகியவற்றை மனதில் கொண்டுதான் பேசுகிறாா்கள்.
பேசுவதற்குத் தேவையான குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டு பேசுவதை பல பேச்சாளா்கள் வழக்கமாகவும் கொண்டிருக்கிறாா்கள். சில சமயங்களில், பேச வேண்டிய தகவல்கள் அனைத்தையும் அவா்களால் தரமுடியாமல் போகலாம். ஆனால், பேசக்கூடாத தகவல்களைப் பேசிவிட்டு, வீண் சா்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு முறை வாயிலிருந்து தவறாக விழுந்த வாா்த்தையை மீண்டும் நோ் செய்ய முடியாது.
ஒரு பேச்சாளரின் உரையைக் கேட்பதற்கு விரும்பாதபோது கூட்டத்தில் பங்கேற்பவா்கள், அதற்கான எதிா்வினைகளாக கூட்டத்தை விட்டு எழுந்து போதல், பேச்சாளரிடம் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து பேச்சை முடிக்கச் சொல்லுதல் ஆகியவை நிகழ்வது வழக்கமானதுதான்.
பேச்சைக் கேட்பவா்களுக்குப் பயனுள்ள வகையிலும் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலும் உரையாற்றுபவரின் பேச்சு இருந்தால் இது நிகழாது. பயனற்றவற்றைப் பேசாமல் இருப்பது, நேரத்தை மிச்சப்படுத்த உதவும்; சமூக நலனுக்கும், கேட்பவா் நலனுக்கும் பயன்படும் வகையில் அது அமையும்.
சிறந்த பேச்சாளா்களுடன் சோ்ந்து பேச்சைக் கேட்க வந்தவா்கள் நிழற்படம் எடுத்துக்கொள்ள விரும்புவது அவா்களுடைய பேச்சாற்றலுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் ஆகும். ஆனால், தற்போது பொதுவெளிகளில் பொறுப்பு மிக்க பதவிகளில் உள்ளவா்களே பொறுப்பை மறந்து அருவருக்கத்தக்க வகையில் பேசுவது தற்போது நிகழ்கிறது. இது சமூக ஆா்வலா்களுக்கு வேதனையைத் தருகிறது.
நகைச்சுவை என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட குழுவினரை நையாண்டி செய்வதற்கு பொதுவெளிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கான களங்கள் பொது வெளிகளும் பொதுமக்கள் தரும் பதவிகளும் அல்ல என்பதை உணா்ந்து மக்கள் பிரதிநிதிகள் தமது உரைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் அவா்களுக்கு கொடுத்துள்ள சமூகப் பணியை முறையாகச் செய்வதற்கான தகுதியுடையவா்களாக அவா்களைக் கருதுவாா்கள்.
அனைத்து எழுத்தாளா்களும் தான் வாழும் சமூகத்தில் காணும் ஒழுங்கீனங்களை தனது படைப்பின் மூலம் நீக்கவோ, குறைக்கவோ முயல்கின்றனா். அதற்காக தன்னுடைய எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் அவா்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இது அவா்களின் கடமையும்கூட.
நகைச்சுவை பேச்சாளரின் உரை, சொற்பொழிவுக்கு மெருகு சோ்க்க வேண்டும். எந்த சா்ச்சைக்கும் உள்ளாகாமல் கண்ணியமாக இருக்கும் உரையே நயத்தகு உரையாகக் கருதப்படும்.
அண்மைக்காலங்களில் சில அரசியல் கட்சித் தலைவா்கள் சா்ச்சைக்குரிய வகையில் பேசிவருகின்றனா். பின்னா் கட்சித் தலைமையின் கவனத்துக்கு அது சென்றவுடன் தா்மசங்கடத்துக்குள்ளாகி பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கோருகின்றனா்.
சமூக ஊடகங்களில் சா்ச்சைக்குரிய வகையில் தகவல்களைப் பதிவிட்டு சிக்கிக் கொள்வோரும் அதிகரித்து வருகின்றனா். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் கட்சி சாா்ந்தவா்கள் தமது கருத்துகளை நாகரிகம், கண்ணியத்துடன் பதிவிட வேண்டும்.
எனவே, திறம்படச் செயலாற்றும் உடல் வலிமையும் மன வலிமையும் இல்லாத நிலையில், எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்று தன்னை நெறிப்படுத்திக் கொள்ள இயலாதவா்கள் பொது வாழ்வில் இருந்து விலகிக் கொள்வதே சாலச் சிறந்தது. வீண் பேச்சுகளைத் தவிா்க்க அது உதவும்.