

அண்மையில் மதுரையில் ஓர் அபூர்வ சங்கமம் நிகழ்ந்தது. சமுதாயச் சிந்தனை கொண்ட தொழிலதிபர்கள், சமுதாயச் செயல்பாட்டாளர்கள், பெரு வணிகர்கள், பொதுக் கருத்தாளர்கள், கல்வியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சந்தித்தனர். அவர்கள் சந்தித்தது, அடுத்த தேர்தலைச் சந்திக்க வியூகம் வகுக்க அல்ல. இவ்வளவு பொருளாதாரம் வளர்ந்தும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தும், நம் சமுதாயமும் அரசியலும் சுயநலம் நோக்கிச் செயல்படுவதற்கு மாறாக, சமுதாயத்தில் நிலவும் அவலங்களை எப்படிப் போக்குவது என்பதற்கான ஒரு கூட்டுச் சிந்தனையை உருவாக்குவதற்காகத்தான்.
சமுதாயச் சிந்தனை கொண்டு நவீன காந்தியர்களாகவும், விவேகானந்தர்களாகவும் தங்களைக் கரைத்துக் கொண்டு களத்தில் நின்று செயல்படும் களச் செயல்பாட்டளர்களை எப்படி ஊக்குவிப்பது, எப்படி ஒருங்கிணைப்பது; ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை மேம்பட்ட சிந்தனைச் சூழலுக்குக் கொண்டுவர மாபெரும் மக்கள் இயக்கமாக எப்படி அதை மாற்றுவது என்பதற்காகத் திட்டமிட ஒருங்கிணைந்திருந்தனர்.
தொடக்கத்தில் இந்த நிகழ்வு ஏன் என்று விளக்கும்போது ஒரு பிரமுகர் ஒரு கருத்தை முன் வைத்தார்: " நம் நாட்டில் அறிவியல் இல்லையா, தொழில்நுட்பம் இல்லையா, நல்ல கட்டமைப்பு வசதிகள் இல்லையா, பொருளாதார வளர்ச்சி இல்லையா, உழைக்கும் மக்கள்தான் இல்லையா? அனைத்தும் இருக்கின்றன. ஆனால், நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க முடியவில்லை; நஞ்சில்லா உணவைப் பெற முடியவில்லை; அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.
நாம் சுவீடனுக்கு, நெதர்லாந்துக்கு, சுவிட்சர்லாந்துக்கு, நார்வேக்கு என இதுபோன்ற நாடுகளுக்குச் செல்லும்போது தரமான வாழ்க்கையை, வசதிகளை, ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் அனுபவிக்கின்றனர். மக்கள் அமைதியாக வாழ்க்கையை அனுபவித்து, வாழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், இங்கு அனைத்தும் இருந்தும் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளும், அமைதியும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் ஏன் கிடைக்கவில்லை என்று கேட்டார்.
அவரைத் தொடர்ந்து ஒருவர், நான்கு பிரதமர்களிடம் பணிபுரிந்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. அவர் பேசும்போது தன் நாற்பது ஆண்டுகால ஊரக வளர்ச்சித்துறை அனுபவத்தை ஒற்றை வாக்கியத்தில் வடித்துக் காட்டினார். "நாம் அனைவரும் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்றவுடன் அரசுத் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு இவற்றைப் பற்றித்தான் சிந்திப்போம். ஒன்றை நாம் அனைவரும் மறந்து விட்டோம்.
கிராமங்கள் உயர, மேம்பட அனைத்துச் செயல்பாடுகளிலும் அரசுடன் மக்கள் பொறுப்புடன்இணையாமல், பங்கேற்காமல் கிராமங்கள் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை' என்று தெளிவுபடுத்தினார். கிராமத்துக்கு மக்கள் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.
அடுத்து ஒரு மருத்துவர், "நாம் இன்று சுகாதாரம், உடல் நலம், அனைத்தும் நம் கையில் இருப்பதாக எண்ணுவதே இல்லை. நம் உடலின் ஆரோக்கியம் மருத்துவமனையில் இருப்பதாகவே தயாரிக்கப்பட்டு விட்டோம். சுகாதாரம், தூய்மை, தன் உடல், தனக்கான உணவு பற்றிய எந்த விழிப்புணர்வும் இன்றி மக்கள் வாழ்கின்றனர். ஆகையால்தான் மருத்துவமனைகள் செழிக்கின்றன என்று கூறி மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வும், அறிவும், தெளிவும் நம் மக்களிடம் இல்லை எனப் பதிவிட்டார்.
அடுத்து ஒரு முன்னாள் துணை வேந்தர் கல்வியைப் பற்றிக் கூறும்போது, "தரமான கல்வியும் தரமற்ற கல்வியும் நமக்குக் கிடைக்கிறது. யார் எதை விரும்புகின்றார்களோ அது அவர்களுக்குக் கிடைக்கிறது. பெரும்பாலானவர்க்கு தரமான கல்வி கிடைக்கவில்லை. அவர்களுக்கு எது கல்வி, எங்கு தரமான கல்வி உள்ளது, அதை எப்படிப் பெற வேண்டும் என்ற புரிதல் அற்று இருக்கின்றனர்' என்றார்.
அடுத்து ஓர் அறிவியல் அறிஞர், "விஞ்ஞானிகளால் மட்டும்தான் ராக்கெட் விடமுடியும் எனப் பலர் நினைக்கின்றனர்; நமது அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார் செய்தால் அவர்களாலும் அதைச் செய்ய முடியும்' என்பதை விளக்கினார்.
இப்படி பேசியவர்கள் பலரும், நம் சமுதாயம் அதற்காகத் தயாராகும்போதுதான் வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு அனைத்தும் சாத்தியம் என்றனர். நம் சமுதாயத்தை எந்த அளவுக்கு தரமான பொறுப்புள்ள ஒருங்கிணைந்த சமுதாயமாகத் தயார் செய்கிறோமோ, அந்த அளவுக்கு அந்தச் சமுதாயம் தரமான சிந்தனையையும் தரமான செயல்பாடுகளையும் கொண்டதாக இருக்கும் என விளக்கம் தந்தனர்.
நான் முன் வைத்த முதல் கருத்து: ஒன்று அரசு, இரண்டு சந்தை, மூன்று சமுதாயம். அரசு அதிகாரத்தால் கட்டப்பட்டது. சமுதாயம் அன்பால் கட்டப்பட்டுள்ளது. சந்தை லாபத்தால் கட்டப்பட்டுள்ளது. அதிகாரமும், லாபமும் அந்த இரண்டு அமைப்புகளையும் அசுர பலம் கொண்டு இயக்குகின்றன. அந்த இரண்டு அமைப்புகளையும் இயக்குபவர்கள் அதனால் பெரும் பயன்களைப் பெறுகிறார்கள். மூன்றாவது அமைப்பான சமுதாயம் தன்னை தகவமைத்துக் கொள்ளத் தெரியாமல் அது அரசுக்குப் பயனாளியாகவும், சந்தைக்கு நுகர்வோராகவும் செயல்படுகிறது. எனவேதான், அரசாங்கத்தால் பயன் அடைய வேண்டிய சமுதாயம் அரசைப் பயன்படுத்தத் தெரியாமல் திகைத்து நிற்கிறது.
சமுதாயம் தன்னை தகவமைத்துக் கொள்ளத் தேவையான கல்வி எந்த இடத்திலும் இல்லாது, அரசுப் பணிக்குச் செல்லவும் சந்தைப் பணிக்குச் சென்று கூலி வாங்கவும் தேவையான ஒரு கல்வியை தன்னகத்தே கொண்டு செயல்படுவதால் அரசை தனக்குப் பணி செய்ய வைக்கத் தேவையான சமுதாயமாக தன்னை கட்டமைத்துக் கொள்ள இயலவில்லை.
அரசுக்கும் சமுதாயத்துக்கும் ஓர் ஒப்பந்தம் இருக்கிறது. அரசு தனக்கான அதிகாரத்தை மக்களிடமிருந்துதான் பெறுகிறது. பெற்ற அதிகாரத்தை வைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அனைத்து தரப்பு மக்களையும் காத்து, மக்களை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும். அதே நேரத்தில் மக்கள் சமுதாயமாக பொது நன்மைக்காக ஒருங்கிணைந்து அரசுடன் கைகோத்து அனைத்து மேம்பாட்டுப் பணிகளையும் செய்ய வேண்டும். எவ்வளவு பொறுப்புகள் கடமைகள் அரசுக்கு இருக்கிறதோ அதேபோல் சமுதாயத்துக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. அந்தப் பொறுப்புகளை குடிமக்களாக, பொறுப்புள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், வணிகர்கள், தொழிலாளிகள், பொறுப்புமிக்க இளைஞர்கள், மாணவர்கள் என தங்கள் பொறுப்புகளை, கடமைகளை நிறைவேற்ற தங்களை தகவமைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
அப்படி பொறுப்புமிக்கவர்களாக குடிமக்கள் சமுதாயமாக வாழ தயாரிக்கப்பட்டு விட்டால் அரசுக்கு மக்கள் எஜமானனாக மாறிவிடுவார்கள். அரசு மக்களை மதிக்கும்; மக்களை அது அச்சுறுத்தாது; மேய்க்காது; மக்களை அரசு சுரண்டாது; மக்களுடன் இணைந்து மக்களுக்காக பணி செய்யும். அப்படி மக்கள் சமுதாயமாக ஒருங்கிணையத் தயாராக வேண்டும்.
அது தானாக நடைபெறும் செயல் அல்ல. அது ஒரு மக்கள் தயாரிப்பு. அது ஒரு வாழ்வியல் கல்வி. மிக எளிதாக, சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் அது ஒரு குடிமைப்பண்புக்கான கல்வி. அப்படி குடிமைப் பண்பு கொண்ட பொறுப்புமிக்க சமுதாயமாக இயங்க மக்கள் தயார் செய்யப்பட்டுவிட்டால், அரசு மக்களைத் தேடி ஓடிவரும் ; மக்களை மதிக்கும்; மக்களுக்குப் பணியாற்றும். இல்லையேல் மக்கள் அரசை நோக்கி மனுதாரராகச் செல்ல வேண்டும் . அப்போது அரசு மக்களை மேய்க்கும்; அச்சுறுத்தும்; சுரண்டும்; மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். இந்தக் கருத்துகளெல்லாம் ஹாப்ஸ்சும், ரூசோவும், ஜான் லாக்கும் கூறியவைதான்.
பல நூறு ஆண்டுகள் நாம் அடிமைகளாக வாழ்ந்தோம். நம் தலைவர்கள் நம்மை ஒற்றுமைப்படுத்தி போராட வைத்து நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தனர். நாம் போராடியது நமது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்து சுதந்திரமாக வாழ்வதற்காகவே. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் நமக்குக் கிடைத்தது மக்களாட்சியும், அது தந்த உரிமைகளும்.
மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள். எனவே, மக்களாட்சிக்குத் தேவையான மக்கள் தயாரிப்புச் செய்ய வேண்டும் என்று ஜான் ஸ்டுவர்ட் மில்லும், எட்மண்ட் பர்க்கும் கூறியிருக்கிறார்கள்.
நமது அரசமைப்புச் சாசனம் இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை அரசுக்கு மட்டும் தரவில்லை; அந்தப் பெரும் பொறுப்பை மக்களாகிய நமக்குத்தான் தந்துள்ளது. எப்படி மக்களாகிய நாம் செயல்பட வேண்டும் என்பதையும் அது கோடிட்டுக் காட்டிவிட்டது.
நம் அரசியலும் அரசாங்கமும் நம்மை நல்ல குடிமக்களாகத் தயாரிப்பதற்குப் பதில் பயனாளிகளாகவும், மனுதாரர்களாகவும் தயாரித்துவிட்டன. அந்த உளவியல்தான் நம்மை இன்று சுயநலம் பேணும் மனிதராக பொறுப்பற்று, சமுதாயப் பார்வையற்று அரசாங்கத்திற்கு கட்சிகளுக்கு சிறு சிறு அடையாளங்களுக்கு, புலன்களுக்கு அடிமைகளாக வாழ தயாரிக்கப்பட்டு விட்டோம். இன்று நாம் சந்திக்கும் சிறுமைகளுக்குக் காரணம் நம் பொறுப்பற்ற தன்மையும், சுயநலமும்தான். அதே நேரத்தில் நாம் நம் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், நம் சமுதாயம் பொறுப்புள்ளதாக மாறும். ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தில் ஒரு பொறுப்பற்ற அரசியல், பொறுப்பற்ற ஆட்சி, பொறுப்பற்ற நிர்வாகம் நடைபெறாது. நடைபெறுவதும் அப்படியே மாறிவிடும்.
இன்று பொறுப்பேற்று அப்படிச் செயல்படும் மாமனிதர்களை நம் சமுதாயத்தில் பார்த்து வருகிறோம். ஒருவர் குடிநீருக்கு அலையும் ஆதிவாசி மக்களுக்கு நீர்தரும் கிணறு தோண்டி தருகிறார். அதேபோல் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி தருவதை தன் பொறுப்பாக எடுத்துப் பணியாற்றும் மனிதர்களையும் பார்க்கிறோம். இன்றையச் சூழலை மாசுபடுத்தியதை மாற்றுவதற்கு மரம் நடுவதை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படுவதையும் களத்தில் பார்க்கிறோம்.
அவர்கள் தங்கள்மீது நம்பிக்கை வைத்து சமுதாயத்தின்மீது மாறா அன்பு கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து மக்களை
ஒற்றுமைப்படுத்தி மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்க வைக்கும்போது மிகப்பெரிய மக்கள் சக்தி உருவாகும். அந்த மக்கள் சக்தியே நம் தலைவர்கள் காண விரும்பிய இந்தியாவை உருவாக்கும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.