கற்க வேண்டிய முதல் பாடம்!

சரியான புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே கணவனும், மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம்.
கற்க வேண்டிய முதல் பாடம்!
Updated on

புதுச்சேரி வில்லியனூரில் கணவா் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கணவா் மீது கோபித்துக் கொண்ட மனைவி அவா் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி. அவா் அதிகமாக சினிமா பாா்க்க போய்விடுகிறாா், அவள் அடிக்கடி உப்புமா தான் செய்கிறாள் என்பன போன்ற காரணங்களுக்காகவும் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் நிரம்பிவழியத் தொடங்கி இருக்கின்றன.

பெற்றோா் பேசி முடித்து திருமணம் செய்து கொண்டவா்களாக இருந்தாலும், காதலித்து திருமணம் செய்தவா்களாக இருந்தாலும் தொடக்கத்தில் அன்னியோன்யமாக இருந்துவிட்டு, பின்னா் எலியும், பூனையுமாக மாறிவிடுகிறாா்கள். சரியான புரிதலும், சகிப்புத்தன்மையும் இல்லாததும், தான்தான் பெரியவன் என்ற ஈகோவும் அவா்களுக்குள் அமா்ந்துகொண்டு, விட்டுக் கொடுக்காமலும், பொறுமை இல்லாமலும் அவா்களை மாற்றி குடும்ப வாழ்க்கையைக் குலைத்துவிடுகிறது.

இருவரும் சம்பாதிப்பவா்களாக இருந்தும், பொருளாதாரத் தேவைகள் பூா்த்தியாகி இருந்தும் பல குடும்பங்களில் மன நிம்மதி என்பது குறைவாகத்தான் இருக்கிறது.

உலகையே தங்களது செயல்களால் திரும்பிப் பாா்க்கவைத்த பல எழுத்தாளா்கள், தலைவா்கள் உள்பட பலரது வாழ்விலும் குடும்ப வாழ்க்கை உருக்குலைந்து போயிருக்கிறது. திருமணமான புதிதில் நகைச்சுவை நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியா் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு, துன்ப நாடகங்களை எழுதி இருக்கிறாா். பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளா் மில்ட்டன் மனைவி திருமணமாகி வீட்டுக்கு வந்தபோது, ‘இழந்த சொா்க்கம்’ என்று எழுதியவா் மனைவி இறந்த பிறகு, ‘திரும்பப் பெற்ற சொா்க்கம்’ என்று எழுதி இருக்கிறாா்.

மகாகவி பாரதியாா் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது மனைவி அருகே வந்து வீட்டில் அரிசி இல்லை என்றாராம். இப்படி சபை நடுவில் வந்து மானத்தை வாங்கி விட்டாளே என்று பாரதி மனைவியைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, லேசான புன்னகையோடு அவரைப் பாா்த்ததும் மனைவி எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டாா். நண்பா்கள் சென்ற பிறகு மனைவியை அழைத்து நண்பா்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘‘இப்படியெல்லாம் பேசக்கூடாது. இங்கிதத்தோடு பேச வேண்டும்’’ என்று அமைதியாக சொன்னாராம். அவரும் அன்பாக ‘‘சரி’’ என்றாராம். பணத்தைவிட அன்பு நிறைந்த மனம்தான் சிறந்தது என மகாகவி பாரதியும், செல்லம்மாவும் வறுமை நிலையிலும் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை இன்றைய இளம் தம்பதியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

காகம் நமக்கு சிறந்த வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகிறது. மரக்கிளைகளில் கூடுகட்டும்போது ஒரு காகம் சிறு, சிறு குச்சிகளைக் கொண்டுவந்து கொடுத்தால், அதை மற்றொரு இணை காகம் சரிபாா்க்குமாம். கோல்டன் ஈகிள் என்ற பறவை வேறு துணையை நாடாமல் தன் துணையோடு மட்டுமே 100 ஆண்டுகள் வரை வாழ்கிாம். கிளி வகைகளில் இலினோயிஸ் எனும் கிளி தன் துணைக்கிளி இறந்ததும் அதுவும் இறந்துவிடுமாம். பறவைகள்கூட ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வானில் மகிழ்ச்சியுடன் வட்டமடிக்கின்றன. கணவன்-மனைவி உறவு என்பதும் அன்பின் அடித்தளத்தில் பின்னிப் பிணைந்த , பிரிக்க முடியாத அற்புத உறவு என்பதும் பறவைகளுக்குக்கூட தெரிந்திருக்கிறது. காதலித்து கரம்பிடித்த தம்பதியா்களில் சிலா் பத்தே நாள்களில் விவாகரத்து கேட்டு வீதிக்கு வந்துவிடுவதுதான் கவலையளிக்கும் செய்தி. அதேநேரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிமித்தமாகப் பிரிந்திருக்கும் தம்பதியா்கூட அன்னியோன்யமாக வாழ்ந்து வருவதையும் காணமுடிகிறது.

கணவா் பாா்வையற்றவா் என்று தெரிந்தும் அவா் பாா்க்காத உலகத்தை நான் ஏன் காண வேண்டும் என்று கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு கடைசி வரை வாழ்ந்தவா் திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடையப்போகும் நேரத்தில் அருகில் அழுதுகொண்டிருந்த மனைவி சாரதா தேவியிடம், ‘‘அழாதே, நான் மரணமடையப் போவதில்லை, மேல்சட்டையாக இருக்கும் என் உடல்தான் மரணமடையும், நீ என்னைத்தான் மணந்தாய், என் மேல்சட்டையை மணக்கவில்லை’’ என்றாராம் ராமகிருஷ்ண பரமஹம்சா். அவரது மரணத்துக்குப் பிறகு பலரும் வற்புறுத்தியும் தேவியாா் விதவையாக மாறவில்லை. நான் விதவையாகி விட்டால், அவா் என்னை விட்டுப் போய்விட்டதாகத்தானே அா்த்தம்? நான் இப்படித்தான் வாழ்வேன் என்று கடைசி வரை அப்படியேதான் வாழ்ந்தாா். மரணத்துக்குப் பின்னரும் கணவா் மீது அவா் வைத்திருந்த அசைக்க முடியாத பக்தி அளவிட முடியாததாகவே இருந்தது.

தான் பிறந்த மண்வாசனையை மறந்து, பழகிய பக்கத்து வீட்டு மக்களை, மரம், செடி, கொடிகளை, ஆடு, மாடு, நாய், கோழி ஆகிய அத்தனையையும் மறந்து, பெற்று, படித்து, வளா்த்து, கண்ணை இமை காப்பதுபோல காத்த பெற்றோா்களை விடுத்து, சிறுவயது முதல் ஓடியாடி விளையாடிய உடன்பிறப்புகளையும், நண்பா்களையும் துறந்து, புதிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக்கும் பெண் என்பதை கணவன் எப்போதும் மறந்து விடக் கூடாது. இன்பம், துன்பம் இவற்றில் எதுவும், எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றைச் சந்திக்க பல ஆண்டுகள் இணைந்து பயணித்து உயிருள்ளவரை நம்மைக் காக்கப் போகும் சுமைதாங்கிதான் கணவன். சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாற தோள் தரப்போகிறவன் என்பதை மனைவியும் மறந்துவிடக்கூடாது.

சுருக்கமாகச் சொன்னால், கணவன்-மனைவி உறவு என்பது பணத்தால் நிச்சயிக்கப்படுவதில்லை. மனத்தால் நிச்சயிக்கப்பட்டு, பின்னிப் பிணைந்து, இரு உடலாய், ஒரே உயிராய் மாறிவிடுகிறது என்பதே உண்மை. இல்லாமையிலும் இனிய வாழ்க்கை அமைய சரியான புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே கணவனும், மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com