கடந்த ஆகஸ்ட் 2024 -இல், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலுக்கு, குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உலகையே ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவரது பிரசார வாக்குறுதிகள் கார்ப்பரேட் வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பதன் மூலமும், பிற நாடுகளிலிருந்து உயர்தர நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களைத் திரும்பி வர தூண்டுவதன் மூலமும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பது அவரது குறிக்கோள். மேலும்இறக்குமதி செய்யும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் இறக்குமதி வரி சராசரி 3 சதவீதத்துக்கு மேல் இல்லை என்றாலும், அமெரிக்காவின் இறக்குமதிகள் மீது 150 சதவீதம் வரை வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை துஷ்பிரயோகம் செய்கின்றன என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த பொருளாதாரமான சீனா ஆகியவற்றின் அமெரிக்காவுக்கான வருடாந்திர ஏற்றுமதிகள் அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்வதை விட அதிகமாக வளர்ந்து வருவதால், அவற்றின் வர்த்தக உபரிகள் அதிகரித்து வருகின்றன. 2024 -ஆம் ஆண்டுக்கு, கனடா (102 பில்லியன் டாலர்), மெக்சிகோ ( 172 பில்லியன் டாலர்)
மற்றும் சீனாவின் (295 பில்லியன் டாலர்) வர்த்தக உபரிகள்அதற்கேற்ப உள்ளன. 2024 - ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வர்த்தக உபரியும் 46 பில்லியன் டாலர் ஆகும். இறக்குமதி வரிகள் உயர்த்தப்படும் எனும் தேர்தல் வாக்குறுதி அச்சுறுத்தலாக இருந்தது. துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார்.
அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன. டிரம்ப்பின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே, அவரது அச்சுறுத்தல்கள் முக்கியமான (மூலதன, அந்நிய செலாவணி, மற்றும், தங்கம்) மூன்று உலகச் சந்தைகளை உலுக்கத் தொடங்கின. டிரம்ப்பின் தேர்தல் பிரசாரம், ஜனவரி 20, 2025 -இலிருந்து அவரது முதல் மூன்று மாத ஆட்சி ஆகியவற்றின்
உலகச் சந்தைகள் மீதான தாக்கங்களைப் பகுப்பாய்வு செய்வோம்.
ஜனவரி 20, அன்று டிரம்ப் பதவியேற்ற உடனேயே, இரண்டு அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியையும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியையும் விதித்தார். கூடுதலாக, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு 10 சதவீதம் அடிப்படை வரியும், எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் இறக்குமதிகள் அனைத்துக்கும் தனித்தனியாக 25 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்துப் பொருள்களுக்கும் பிற நாடுகள் வரி விதித்து வருவதைப் போலவே, பரஸ்பர வரி விதிப்பதையும் பரிசீலிப்பதாக டிரம்ப்அறிவித்தார்.
ஜனவரி 20, 2025 பதவியேற்ற உடனேயே அமெரிக்காவால் அழைக்கப்பட்ட இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நான்கு உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமரும் ஒருவர். பிரதமர் மோடி பிப்ரவரி 13 அன்று வாஷிங்டன் சென்று இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட பொருளாதார வரி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு சராசரி இந்திய வரி விகிதம் சுமார் 17 சதவீதம் மட்டுமே என்றும், எனவே, எந்தவொரு பரஸ்பர வரியும் அந்த சதவீதத்தை விட அதிகமாக இருக்க முடியாது என்றும் மோடி வாதிட்டதாக அறியப்படுகிறது.
டிரம்ப், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க, ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு குறிப்பிட்ட கட்டணத் தொகுப்பை அறிவிப்பதாகவும் உலகுக்குத் தெரிவித்தார். ஏப்ரல் 2 -ஆம் தேதியை விடுதலை நாளாக அவர் குறிப்பிட்டு, அவர் அறிவித்த புதிய கட்டண விகிதங்கள் உலகையே உலுக்கின. சீனா (34 சதவீதம்); ஐரோப்பிய ஒன்றியம் (20சதவீதம்); தென் கொரியா (25சதவீதம்); ஜப்பான் (24சதவீதம்); மற்றும் தைவான் (32சதவீதம்); கம்போடியா (49 சதவீதம்) வியட்நாம் (46 சதவீதம்), இலங்கை (44 சதவீதம்) மற்றும் இந்தியா (26 சதவீதம்). இந்தியாவுக்கு 26 சதவீதம் என்பது ஒரு பெரிய அதிர்ச்சிதான். மேலும் கணக்கீட்டு நடைமுறை, இந்தியக் கண்ணோட்டத்தில் இருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தியாவின் எதிர்வினை பழிவாங்கும் தன்மையல்ல. இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 2 -ஆம் தேதிக்கு முன்பே, அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள், போர்பன் விஸ்கி மற்றும் பிறவற்றுக்கான வரி விகிதங்களைக் குறைத்துள்ளது. இந்தியாவின் மென்மையான அணுகுமுறை சீனாவின் ஆக்ரோஷத்துக்கு மாறாக இருப்பதை டிரம்ப் அறிவார்.
சீனா ஒரு கம்யூனிச நாடு என்பதை அனைவரும் அறிவோம். அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்த அது முதலாளித்துவ அணுகுமுறையை 1970- இல் ஏற்றுக் கொண்டது. அப்போதைய சீன துணைப் பிரதமராக இருந்த டெங் ஷியோ பிங், முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தக் கொள்கையை ஆதரிக்கும்போது, "பூனை கருப்பாக இருந்தாலும் சரி, மஞ்சள் நிறமாக இருந்தாலும் சரி, அது எலிகளைப் பிடித்தால் போதும்' என்ற சீனப் பழமொழியை மேற்கோள் காட்டினார். சீனாவால் 34 சதவீதம் வரி உயர்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.10 சதவீதம் அடிப்படை வரி மற்றும் எஃகு இறக்குமதி வரிகளுடன் , புது 34 சதவீதம் வரியும்கூட இருப்பதால் அமெரிக்காவுக்கு எதிரான சீனாவின் ஒரே ஓர் அணுகுமுறை பழிக்குப்பழி என்று முடிவு செய்தது.
ஏப்ரல் 4 -ஆம் தேதி அன்று சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 34 சதவீதம் வரி விதித்தது. மேலும், அமெரிக்காவில் செமி கண்டக்டர்கள், ஐ போன் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கும், மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் மிகவும் தேவைப்படும் 7 அரிய மண் பொருள்களின் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. உடனடியாக, அமெரிக்காவின் மந்தநிலை குறித்த அச்சங்கள் அதிகரித்து ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கும் பரவின. இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஏப்ரல், 7 திங்கள் கிழமை பங்குச் சந்தை சரிவைக் கண்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்கு குறியீடுகள் சரிந்தன. இது மூன்று மாதங்களில் மிக மோசமான நாள். இது கருப்பு திங்கள் என்று அழைக்கப்பட்டது
அன்று சென்செக்ஸ் முதலீட்டாளர்கள் ரூ.14 லட்சம் கோடியை இழந்தனர். நிலையற்ற பயம் குறியீடு உயர்வு 66 சதவீதம் உயர்ந்தது, இது 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும். ஏப்ரல் 7 அன்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ 85.83 ஆக விழுந்தது. ஏப்ரல் 9 அன்று டிரம்ப் வர்த்தக வரியை ஜூலை 8 வரை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்ததால், சந்தைகள் சீரடையத் தொடங்கின.
ஏப்ரல் 9 -இலிருந்து மூன்று மாதங்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், வார தொடக்கத்தில் (ஏப்ரல் 13), தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி சிறிது நிம்மதியைத் தந்தது. இருப்பினும், அது குறுகிய காலமே நீடித்தது. மீண்டும் விலை உயர்வு தொடங்கியிருக்கிறது.
ஏப்ரல் 16 அன்று ஆபரணங்கள் செய்வதற்கு ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.8,815 ஆக இருந்தது. ஏப்ரல் 17 அன்று ரூ.8,920 ஆகவும், ஏப்ரல் 18 அன்று ரூ.8,945 ஆகவும் உயர்ந்து வருகிறது. ஏப்ரல் 25- ஆம் தேதி ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.9,005 ஆக உயர்ந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது அமெரிக்கா-சீனா இரு பொருளாதாரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிகளை விதிக்கின்றன.
உலகின் 6 முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க டாலர் குறியீட்டு எண் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து வருகிறது. அமெரிக்க டாலர் குறியீடு (டிஎக்ஸ்ஒய்) என்பது ஆறு முக்கிய நாணயங்களின் தொகுப்புக்கு அதாவது, யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட், கனடிய டாலர், ஸ்வீடிஷ் குரோனா மற்றும் சுவிஸ் பிராங்க் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்க டாலரின் வலிமையின் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவீடு ஆகும்.
ஏப்ரல் 2 -ஆம் தேதி, விடுதலை தினத்தன்று, டிரம்ப் தனது பரஸ்பர வர்த்தக வரிகளை அறிவித்தபோது, அமெரிக்க டாலர் குறியீட்டு எண் (டிஎக்ஸ்ஒய்) 103.81 ஆக இருந்தது; அது விரைவில் குறையத் தொடங்கியது, ஒரு வாரம் கழித்து 100.87 ஆகவும், ஏப்ரல் 14 - ஆம் தேதி 99.23 ஆகவும் இருந்தது. ஏப்ரல் 18 -இல் அது 99.23 ஆகும்.
அதாவது, அமெரிக்கா இனி முதலீட்டுக்கு பாதுகாப்பான புகலிடமாக இல்லை. அமெரிக்க டாலரைக் காட்டிலும் தங்கம் மிகவும் விரும்பப்படும் சொத்தாக மாறிவிட்டது.
கட்டுரையாசிரியர்:
மூத்த பொருளாதார நிபுணர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.