ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!

ஊராட்சிகள் உண்மையில் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா?
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ENS
Published on
Updated on
2 min read

ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்று தான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?

இந்திய ஜனநாயகத்தின் இதயமாகத் திகழ்பவை தான் கிராம ஊராட்சிகள். இந்த இதயத்துக்கு குருதியாய் இருந்து வழிநடத்துபவை பஞ்சாயத்து ராஜ் சட்டம். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளில் நாடு முழுவதும் கிராமங்கள் வளர்ச்சி பாதையில் பயணிக்க காரணமாக அமைந்துள்ளது என்ற போதிலும், இந்நாளில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது:

ஊராட்சிகள் உண்மையில் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? அல்லது மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் அவற்றின் சுதந்திர செயல்பாட்டுக்காக உண்மையிலேயே கடமையாற்றுகின்றனவா அல்லது கடிவாளமாக முட்டுக்கட்டை இடுகின்றனவா என்று கேட்டால், உண்டு ஆனால் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.

1993-ஏப்ரல் 24-இல் 73- ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, 1994-இல் தமிழ்நாட்டில் “ஊராட்சிகள் சட்டம்” இயற்றப்பட்டது. மக்கள் நேரடியாகத் தேர்தலின்மூலமாக ஊராட்சி தலைவர்களையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், நிறைய ஊராட்சிகளில் தீர்மானங்களை நிறைவேற்றுதல், நிதி செலவுகளைத் திட்டமிடுதல், திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியனவற்றை எல்லாம் தாமாகவே செய்ய முடியாத சூழல்தான் இருக்கிறது.

ஊராட்சிகளுக்கென்று சுயமான நிதி எதுவுமில்லை. மாநில-மத்திய திட்டங்களின் நிதியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பல முக்கிய திட்டங்களை ஊராட்சிகள் தாமாக முன்வந்து செய்ய முடியவில்லை. ஊராட்சிகளுக்காக சில நிதிகள் ஒதுக்கப்படும்போதே எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்ற நிபந்தனைகளுடன்தான் ஒதுக்கப்படுகின்றன. எனவே, உண்மையான நிதி சுதந்திரம் ஊராட்சிகளுக்கு மறுக்கப்படுவதுடன் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களைச் செயல்படுத்தும் அவர்களின் முகவராகவே கருதப்படும் நிலை உள்ளது. நிதி சுதந்திரம் ஊராட்சிகளுக்கு இல்லை என்கிறபோது ஊராட்சிகளின் சுய வருவாயைப் பெருக்க என்ன வளங்கள் உள்ளன? எந்த வளத்தைக் கொண்டு எந்த வருவாயை உருவாக்க இயலும் என்ற தெளிவு அலுவலர்களுக்கும் இல்லை; ஊராட்சிகளுக்கும் இல்லை. அப்படியே நிதிவளம் ஊராட்சிகளுக்கு இருந்தாலும், எந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற சுயமாக முடிவெடுக்கும் அதிகாரமும் ஊராட்சிகளுக்கு இல்லை.

அதுமட்டுமல்ல, அலுவலர்கள், ஊராட்சியின் முடிவுகளை மாற்றும் அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறார்கள். எனவே , அதிகாரப் பகிர்விலும் இடையூறுதான். கிராம சபைக் கூட்டங்கள், மன்றக் கூட்டங்கள் முறையாக நடைபெறாமல் போவதோடு, சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுவதாக அமைந்துவிடுகின்றன. உண்மையான மக்கள் பங்கேற்பு இல்லாததால், ஊராட்சிக் கூட்டங்களில் பங்கேற்க மக்களுக்கு ஆர்வமில்லாமல் அல்லது ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது.

இதைத் தவிர்க்க கிராம சபை கூட்டங்களையும், மன்றக் கூட்டங்களையும் அனைவரது பங்கேற்பும் இருந்தால் மட்டுமே நடத்த வேண்டும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் தங்கள் பணிகளை திறம்படவும், நேர்மையுடனும், சிறப்புடனும் செய்ய வேண்டியது அவசியம். முக்கியமாக காலிப்பணியிடங்களை அரசு உடனுக்குடன் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட அனைவருக்குமான பயிற்சிகளில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஐஐடிக்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி மாணவர்களும் கண்டிப்பாக உள்ளாட்சி நிர்வாகங்களோடு இணைந்து களப்பணி ஆற்ற வேண்டும். புதிய புதிய உத்திகளைக் கையாண்டு ஊராட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உண்மையான பஞ்சாயத்து சுதந்திரம் என்பது மக்களின் பிரச்னைகளை மன்றத்திலே பேசும் வாய்ப்பு, மக்களே முடிவெடுத்து திட்டங்களை செயல்படுத்தும் உரிமை, அரசியல் விடுதலை, நேர்மை நிர்வாகம், மக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் சங்கமம் எனலாம்.

ஊராட்சிகள் சட்டப்பூர்வ அமைப்பு மட்டுமல்ல, அது நேரடி மக்கள் பங்கேற்பின் திறவுகோல். 2025-இல் நம் கிராமங்கள் ஸ்மார்ட் கிராமங்களாக மாற, போற்றத்தக்க திட்டங்கள் மட்டுமல்ல, பொறுப்புடனும், மக்கள் பங்கேற்புடனும் செயல்படும் சுதந்திர ஊராட்சிகளே இன்றையத் தேவையாக உள்ளது.

ஆனால், ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் தீர்மானிப்பது மத்திய, மாநில அரசின் கொள்கைகளும், திட்டங்களும், செயல்பாடுகளும்தான். அவை பெரும்பாலும் கிராமப்புறத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. உலக அளவிலான, தேசிய அளவிலான, மாநில அளவிலான இலக்குகளை நோக்கிய செயற்பாடுகளில், கிராமம் சார்ந்தவற்றை நடைமுறைப்படுத்த ஊராட்சிகள் பயன்படுத்தப்படும் நிலையில் மாறுதல் ஏற்படாதவரை ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு என்பது கற்பனையாகத்தான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com