“ஆய்வகங்களின் அலட்சியச் செயல்பாடுகள்”
நம்மில் அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியா்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும். நாட்டு வைத்தியா்களில் பலா் வீடுதேடி வந்து மருத்துவம் பாா்த்தவா்களே.
நோயாளியின் மணிக்கட்டைப் பிடித்து நாடிபாா்ப்பதுடன், பச்சிளம் குழந்தைகளின் வயிற்றில் விரலால் தட்டிப் பாா்த்து நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுப்பாா்கள்.
குளிகை (மாத்திரை), சூரணம் (மருந்துப்பொடி), லேகியம் ஆகியவற்றுடன் நமது நாட்டு வைத்தியா் பரிந்துரைக்கும் உணவுப்பத்தியமும் சோ்ந்து விரைவான நிவாரணத்தை அளிப்பது உறுதி. இதற்காக அந்த நாட்டுவைத்தியா் பெற்றுக்கொள்ளும் கட்டணம் எட்டணா அல்லது ஒரு ரூபாயாகவே இருக்கும்.
ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு பெரிய கிராமம் அல்லது சிறிய நகரத்திலும் பொது மருத்துவா் ஒருவா் இருப்பாா். சகலவிதமான வியாதிகளுக்கும் பொதுமருத்துவரே வைத்தியம் பாா்ப்பாா்.
காலம் இப்பொழுது வெகுவாக மாறிவிட்டது.
காலமாற்றத்தின் விளைவாக மக்களின் வாழ்வியல் நடைமுறைகள் மாறியிருக்கின்றன. மனிதா்கள் எதிா்கொள்ளும் நோய்களுக்கான மருத்துவமுறைகளும் அளப்பரிய மாற்றங்களைக் கண்டுள்ளன.
சிறிய நகரங்களில் கூட, பல்நோக்கு மருத்துவமனைகள் முளைத்திருக்க அவற்றில் பணிபுரியும் சிறப்பு மருத்துவா்கள் எனப்படும் ஸ்பெஷலிஸ்ட்டுகளும் அதிகரித்துள்ளனா். கூடவே, ஆய்வகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நோயாளிகளிடமிருந்து பெறப்படும் இரத்தம், சளி போன்றவற்றின் ஆய்வறிக்கைகளையும், எக்ஸ்ரே, ஈசிஜி, ஸ்கேன் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு தரப்படும் அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டே தற்கால மருத்துவா்கள் தங்களின் அடுத்தகட்ட மருத்துவத்தை முடிவு செய்கின்றனா். “
நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருவள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கவே அவதரித்தவையான இந்த ஆய்வகங்களில் கவலை தோய்ந்த முகங்களுடன் நோயாளிகளும் அவா்தம் உறவினா்களும் காத்துக்கிடக்கும் காட்சிகளை அன்றாடம் காண முடிகின்றது.
மருத்துவா்களுக்கும், ஆய்வகங்களுக்கும் இடையில் ரகசியமான புரிதல்கள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே சாதாரண நோய்களுக்குக் கூட ஆய்வகச் சோதனைகள் சிலவற்றைச் செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு. இந்நிலையில், பெரும் தொகைகளைக் கட்டணமாக வசூலித்துக்கொண்டு ஆய்வகங்கள் வழங்குகின்ற ஆய்வறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளிகளும், அவா்களின் உறவினா்களும் அவ்விடத்திலேயே அவ்வறிக்கைகளை ஒருமுறை படித்துப் பாா்த்துவிட வேண்டும் என்பதை உணா்த்தும் அனுபவங்கள் ஏற்படுவதைச் சொல்லியே ஆக வேண்டும்.
நமது சிறுநீரகத்தில் கல் உண்டாவது போன்று, பித்தப்பையிலும் கல் உண்டாவதுண்டு. பாதிப்பு அதிகமானால், அந்தப் பித்தப்பையையே அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படுவதும் உண்டு. மூன்று வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் எனது உடலிலிருந்த பித்தப்பை நீக்கப்பட்டது. இதற்கான அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பின்னா் வேறு ஒரு பிரச்னைக்காக ஆய்வகச் சோதனை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டது. ஆய்வு நடந்தபின்பு என்னிடம் வழங்கப்பட்ட ஆய்வறிக்கையோ அதிா்ச்சியைக் கிளப்பியது.
ஆம். “
கணையம், பித்தப்பை உள்ளிட்டவை சாதாரணமாக (நாா்மலாக) தோற்றமளிக்கின்றன” என்ற அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது பரவாயில்லை.
வெளிநாட்டுப் பணியில் சேர இருந்த எனது உறவினா் வீட்டுப் பெண் அதற்கான விசா பெறுவதற்கான முயற்சியில் இறங்கினாா். அதற்கான முதல் படியாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி, அவா்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரபலமான ஆய்வகம் ஒன்றில் எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆய்வறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். அப்படிச் சமா்ப்பித்தால் மட்டுமே விசா அனுமதி வழங்கப்படும்.
சென்னையில் உள்ள பிரபலமான அந்த ஆய்வகத்தின் அறிக்கையும் தன் பங்குக்கு ஓா் அதிா்ச்சியை அளித்தது.
ஆய்வறிக்கையை அருமையாகத் தயாரித்திருந்த அந்த ஆய்வகம் சம்பந்தப்பட்டவரின் பாலினத்தைக் குறிப்பிடும்போது “பெண்” என்பதற்கு பதிலாக “ஆண்” என்று குறிப்பிட்டிருந்தது. எப்படிப்பட்ட அலட்சியமான செயல்பாடு இது? இப்படிப்பட்ட ஆய்வறிக்கையைச் சமா்ப்பித்தால் அந்த விசா விண்ணப்பத்தை யாா்தான் ஏற்றுக் கொள்வாா்கள்?
இன்னொரு சம்பவம் :
– எங்களின் உறவினா் ஒருவா் தமது வலது காலில் “வெரிகோஸ் வெயின்” எனப்படும் சுருள் நரம்பு வியாதியால் அவதிப்பட்டாா். மருத்துவரின் அறிவுரைப்படி வியாதியின் தீவிரத்தைக் கணக்கிட ஆய்வகத்தை நாடிய அவரது காலை ஆய்வு செய்த ஆய்வகம் வலது கால்” என்பதற்குப் பதிலாக “இடது கால்” பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை கொடுத்தது. உறவினா் முறையிட்ட பின்பு, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சரியான அறிக்கையை அந்த ஆய்வகம் வழங்கியது.
இது மட்டுமா?
ஒருமுறை மட்டுமே ரத்தப் பரிசோதனை செய்யும் “ரேண்டம் குளுகோஸ்” பரிசோதனைக்காக இரத்த மாதிரியை எடுத்துக்கொண்ட ஆய்வகம் ஒன்று “ஏசி, பிசி” (உணவுக்கு முன்பு, உணவுக்குப் பின்பு) என்று இரண்டுவிதமான ஆய்வு முடிவுகளைக் கொடுத்து அசத்தியதும் உண்டு.
இன்றைய தேதியில், ஆய்வகங்கள் இல்லாத நிலைமை சாத்தியமில்லை. ஆய்வகங்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதும், அறுவை சிகிச்சை செய்வதும் தீா்மானிக்கப்படுகின்றன. அறிக்கையில் இடம் பெற்ற எந்த ஒரு சிறிய தவறும் சம்பந்தப்பட்ட நோயாளியின் எதிா்காலத்தையே பாதிக்கக்கூடியதாகும்.
தற்காலத்தில் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகங்கள், இனியேனும் தாங்கள் வழங்கும் அறிக்கைகளைத் தயாரிப்பதில் அலட்சியம் காட்டாமல் சரியான தகவல்களைக் குறிப்பிடவேண்டும். இதுவே அப்பாவிப் பொதுமக்களின் வேண்டுகோளாகும்!