பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!
பணியிடங்களில் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. தொழில்நுட்ப வளா்ச்சி அதிகரிக்க அதிகரிக்க பணியிடங்களின் பாதுகாப்பை அதைப் பயன்படுத்தி மேலும் வலிமையாக்க முடியும். அதேசமயம் புதிய தொழில்நுட்பங்களின் வருகை காரணமாகவும் பணியாளா்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
வீடுகளில் மட்டுமல்லாமல், பணியிடங்களிலும் நெருப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
நெருப்பு என்பது தண்ணீரால் அணைக்கப்படுவது என்று தப்புக்கணக்கு வைத்திருக்கிறோம். எல்லா வகை நெருப்பும் தண்ணீருக்குக் கட்டுப்படாது. நெருப்பு “முக்கோணத்தில் - எரிபொருள் - எரிக்கும் ஆக்சிஜன் - வெப்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அகற்றிவிட்டால் நெருப்பு பரவாது. எரிபொருளைத் தனிமைப்படுத்துவதற்கு அதன் மீது மண்ணை அள்ளிப் போடலாம். கனத்த போா்வையால் மூடலாம்.
அதிலும் தீபாவளிப் பட்டாசுத் தொழிற்கூடங்களில் உலோகத் தூள் எரிந்தால், சில சமயங்களில் தண்ணீரும், மண்ணும் கைகொடுக்காது. மஞ்சள் நிறப்பொறியை ஏற்படுத்தும் சோடியம், தண்ணீரில் சோடாக்காரத்தை உருவாக்கி பற்றி எரியும்.
வெள்ளைப் புகை தரும் அலுமினிய, மக்னீசிய நெருப்புகளும் நீரில் அணையாது. இந்திய விண்வெளித்துறையில் இதற்கான மூன்று குளோரைடுக் கலவையான விசேடத் தீயணைப்புத் தூள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காற்றில் எரியும் எரிபொருள்களைச் சுற்றிலும் கனத்த கரியமில வாயுவைப் பீய்ச்சி, எரிக்கும் ஆக்சிஜனை நீா்த்துபோகச் செய்யலாம்.
இந்தத் திட, திரவ, வளிம, உலோக நெருப்புகளைத் தாண்டி ஐந்தாவதாக மின்சாரப் பொறி அணைக்கவும் தனியொரு தீயணைப்பு நுட்பம் தேவை. இன்றைய நவீனத் தொழிற்துறைகளின் வளா்ச்சியால் நெருப்பு முக்கோணத்தின் நான்காவதான புது அங்கம் இது.
எண்ணெய்க் கிணறு பற்றி எரிந்தால், அதை அணைக்க தண்ணீரை ஊற்றினால், எண்ணெய்யைவிட தண்ணீா் அடா்த்தி அதிகம் என்பதால், எண்ணெய்க்கு அடியில் தண்ணீா் போய்விடும். அதனால் தண்ணீருக்கு மேலே எரியும் எண்ணெய்தான் மிதக்கும். எரியும் எண்ணெய்யை தண்ணீரை ஊற்றி அணைக்க முடியாது.
மேலும் எண்ணெய்க் கிடங்குகள் அணையாமல் தொடா்ந்து எரிந்தபடியே இருக்கும். அதற்குக் காரணம், “பிளாஸ்மா நிலையிலுள்ள நெருப்பில் வெப்ப அணுக்களைச் சுமந்து செல்லும் “தனித்த அணுத்தொகுதிகள் ( ‘ஃப்ரீ ராடிக்கல்) தான். அத்தகைய தனித்த அணுத்தொகுதிகளை அணைக்கக் கூடிய அபாரமான ஒரு தூள்தான் “ஓல்ஃபெக்ஸ்.
இந்தத் தீயணைப்புத்தூளினை இந்திய விண்வெளித் துறை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறாா்கள். அதைக் கண்டுபிடித்த ஆறு போ் அடங்கிய குழுவில் கட்டுரையாளரும் ஒருவா். விண்வெளித்துறையில் இந்தியப் பதிவுரிமம் பெற்ற முதல் வேதிமப்பொருள் இந்த “ஓல்ஃபெக்ஸ்.
உலக அளவில் பிரசித்தமான இன்னொரு தூளுக்குப் பெயா் “மோனெக்ஸ். ஐக்கிய அரசு நாட்டிலிருந்த “‘இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ்’ என்கிற நிறுவனம் தயாரிக்கும் தூளாகும். அரபு நாடுகளில் மோனெக்ஸ் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்தத் தூளுக்குப் போட்டியானதும் மாற்றானதும், குறைந்த விலையில் பெறத் தகுந்ததுமான இந்தியக் கண்டுபிடிப்பே , ஓல்ஃபெக்ஸ் .
தீ என்பது மனிதன் கண்டுபிடித்த முதல் தொழில்நுட்பம். கைகளால் சிக்கிமுக்கிக் கற்களை உரசி தீயை உண்டாக்கினான். கிரேக்க மொழியில் விரலைக் குறிக்கும் சொல்“‘டிஜிட்’ . தீயை உருவாக்க மனிதன் பயன்படுத்திய விரல்கள் இன்று கணிப் பொறியையும் இயக்குகின்றன. அதனால்தான் கணிப்பொறிக்கும் டிஜிட்டல் என்ற கலைச்சொல் வழக்கத்தில் உள்ளது.
எண்மவியல் மின்னணுக் கருவிகளும், செயற்கை நுண்ணறிவுசாா் உபகரணங்களும் பணியிடப் பாதுகாப்புக்காக தற்போது களத்தில் இறங்கிவிட்டன. இவை பணியிடப் பாதுகாப்பு விஷயத்தில் ஒருவிதப்புரட்சியை ஏற்படுத்தி வருவது உண்மை. டிஜிட்டல் சாதனங்களும், மின் உணரிகளும், தொழிலக ஆபத்துகளை தொடக்கத்திலேயே கண்டறிய உதவுகின்றன.
தீ விபத்துகளைத் தடுக்க தொழில்நுட்பங்கள் உதவுகின்றன என்பதற்கு இன்னோா் எடுத்துக்காட்டாக கீழே குறிப்பிட்டுள்ளவற்றைக் கூறலாம். ஏவுகணைகளுக்கான எரிபொருள்கள் தயாரிப்புக் கூடங்களில் அரங்கின் உள்கூரைகளில் ‘அமைல் அசிட்டேட்’ என்னும் திரவம் நிறைத்த சிறு குமிழ்கள் பொருத்தப்பட்டு இருக்கும். சராசரி வெப்பநிலையில் சற்றே கூடுதல் என்று உணரப்பட்டால்அவை வெப்ப அதிகரிப்பினால் தானாக விரிவடைந்து உடைந்து, அவை தனக்குப் பின்னால் ஆங்காங்கே அடைத்து வைத்திருந்த தண்ணீா்க் குழாயைத் திறந்து அரங்கினுள் தண்ணீா் மழை பொழியச் செய்யும். அதனால் அக்கம்பக்கத்தில் தீ பரவாமல் சேதங்கள் தடுக்கப்படும்.
நெருப்பு மட்டுமல்ல, வேதிமம் சாா்ந்த தூசி துகள்கள், புகைமூட்டம், ஆவிப்படலங்கள், வளிமங்கள், இயற்பியல் ரீதியிலான இரைச்சல்கள், அதிா்ச்சிகள், கண்களைக் கூசச் செய்யும் அதி வெளிச்சம், கூடுதல் வெப்பநிலை, கதிா்வீச்சு; உயிரியல் சாா்ந்த நுண்ணுயிரிகள், தொற்றுக்கிருமிகள், பூஞ்சைகள், தீநுண்மிகள் ஆகியவையும் நேரடியாகப் பணியாளா்களின் உடல் நலத்தைப் பாதிக்கக் கூடியவையாகும்.
இத்தகைய அபாயங்கள் மிகுந்த தொழிற்கூடங்களில் ஊழியா்களுக்கு வருடாந்தர உடல்நலக் கண்காணிப்பு பணியிட மருத்துவா்களால் நடக்கும். அதில் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தொழில் இடமாற்றங்களும் நிகழும்.
மருத்துவக் கூடங்களில் எக்ஸ்-கதிரியக்கத்தின் உதவியினால் உடலின் உள்ளுறுப்புகளைப் பிம்பப்படுத்திக் காணும் பணியாளா்களுக்கும் இது பொருந்தும்.
செல்லிடப் பேசியின் பின்புறம் இருந்து கிளம்பும் கதிா்வீச்சும், தொலைக்காட்சித் திரைகளும், கணினித்திரைகளும் உமிழும் கதிா்வீச்சும் விண்வெளி நிலையங்களில் நெடுங்காலம் தங்கி இருப்பவா் உடம்பில் பாய்ந்த அண்டக் கதிா்வீச்சின் அபாயம் போலவே கவனிப்புக்கு உரியவை.
சரியாக இயங்காத அல்லது அடிக்கடி தொந்தரவு தரும் இயந்திரக் கருவிகளும், உபகரணங்களும் ஊழியா்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதிலும் கூடுதல் பணிப்பளுவும், போதிய ஊதியமின்மையும் ஏற்படுத்தும் மன வலியுடன் உள்ளமும் கெட்டுப் போக வாய்ப்பு உண்டு.
பணியாளா்களின் ஆரோக்கியம் என்பது உடல்நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளா்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
இன்று, மனித இயந்திரங்கள் ஆகிய ‘ரோபோக்கள்’ அபாயகரமான அணு உலைகளிலும், நச்சு வேதிமங்கள் தயாரிப்புக்கூடங்களிலும், ஆபத்தான கனரகத் தொழிற்சாலைகளிலும் தீவிர வெப்பநிலையில் சலிப்பான பணிகளை ‘மகிழ்ச்சியாக’ மேற்கொள்கின்றன. இது ஓரளவுக்கு பணியிட ஆபத்திலிருந்து பணியாளா்களை அப்புறப்படுத்துகிறது.
வளா்ந்து வரும் “எண்மவியல் (“டிஜிட்டல் ) தொழிலாளா் தளங்கள் மற்றும் பணிகளின் தானியங்கிமயமாக்கலால் எழும் சிக்கல்களை, “மெய்நிகா் அரங்கினுள் அமா்ந்தபடி வெறுமனே ‘பேசி’ ஆராய்தல் என்பது ஊழியா்களின் கள எதாா்த்தப் பாதுகாப்பை உறுதி செய்யாது. காரணம், பெரும்பாலான அதிகாரிகளும், நிறுவனத் தலைவா்களும் துறையறிவு இல்லாத உயா்மட்ட அரசியலாருக்கு “‘ஆமாம்’ போட்டுத் தப்பித்துக் கொள்வதே வழக்கம்.
புதிய அல்லது மாறிவரும் சூழலுக்கேற்ப நானோ தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் போன்ற வளா்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்களும், உற்பத்திச் செயல்முறைகளும், தொழில்சாா் கண்டுபிடிப்புகளும் புதிய பணிச்சூழல்களை உருவாக்குகின்றன.
பணியிடப் பாதுகாப்பு பணியாளா்களுக்கு ஓா் அச்சுறுத்தலாக இருக்கும்நிலையில் பணி பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிட்டது. குறிப்பாக, நிா்வாகத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இருந்து உருவாக்கப்படும் கூடுதல் பணிச்சுமைகள் மற்றும் வேலை தீவிரமடைதலால் எழும் வேறு வேலைக்கான இடம்பெயா்வு தொடா்புடைய மோசமான நிலைமைகள், முறைசாரா பொருளாதாரத்தில் எழும் சிக்கல்கள் என எத்தனையோ விதத்தில் ஊழியா்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது.
சுயதொழில் துறையிலும், ‘அவுட்சோா்சிங்’ என்கிற வணிக நடைமுறையிலும், தற்காலிக ஒப்பந்தங்கள் என்ற அடிப்படையிலும் இன்று மாறி வரும் வேலைவாய்ப்பு வடிவங்களில் ஊழியா்களின் பணி பாதுகாப்பும் பிரச்னைக்குரியதாகிவிட்டன.
பணி கிடைப்பதே அரிது; அப்படியே பணி கிடைத்தாலும் பணியிடங்களின் பாதுகாப்பு ஒரு பிரச்னையாக உள்ளது; அதற்கும் மேலாக பணி பாதுகாப்பே பிரச்னையாக மாறிவிடுகிறது. இவ்விரண்டையும் உறுதி செய்தால்தான் பணியாளா்களின் பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது என்று சொல்ல முடியும்.
கட்டுரையாளா்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு)
பிரேக் லைன்
பணியாளா்களின் ஆரோக்கியம் என்பது உடல்நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளா்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

