

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யான் ஒருவன் அலனோ என்று அத்வைத நிலை அடைந்த வள்ளலார் சுவாமிகள் பாடி வைத்திருக்கிறார். இந்தப் பாரத புண்ணிய பூமியில் மகான்களும் புண்ணிய புருஷர்களும் தொடர்ந்து அவதரித்து வந்திருக்கிறார்கள். மானுட சமூகம் நல்வழிப்பட அயராத உழைப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஆதிசங்கரர் அப்படியான மகான்களில் ஒருவர். தர்மம் நிலைத்திருக்க அவர் தன்னையே அர்ப்பணித்தவர். தமது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதரிடம் அத்வைதம் முதலிய வேத விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
தேசம் முழுவதும் நடந்து வேதங்களைப் போற்றும் வைதிக மரபை மீட்டெடுத்தார். அத்வைதமே வேதம் கற்பிக்கும் சித்தாந்தம் என்று நிறுவினார். உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதினார். சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றினார்.
பல்வேறு மதங்களாகப் பிரிந்தும் குழப்பத்தில் ஆழ்ந்தும் கிடந்த பாரத தேசத்தைத் தெளிவு பெறச் செய்ய ஷண்மதங்கள் என்ற ஆறு சமயப் பிரிவுகளை வகுத்து முறைப்படுத்திக் கொடுத்தார். தெய்வங்களை வழிபட துதிகளையும் பாடி வைத்து மக்கள் மனங்களில் தெளிவை ஏற்படுத்தினார். பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய மூன்று வழிகளிலும் ஞானத்தை அடைய முடியும் என்பதை விளக்கி அதற்கான முறைமைகளையும் தந்தார். இதுவே அவரது கருணையும் அன்பும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் இருந்ததற்கான சான்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு ஆதிசங்கரர் மேற்கொண்ட வழிமுறை போல உலகில் வேறொன்றைச் சொல்ல முடியாது. பஞ்சமராக நின்ற ஒருவரைத் தனது குருவாக ஏற்றார். மனீஷா பஞ்சகம் பாடி அதனை உறுதிப்படுத்தியும் வைத்தார்.
தன்னோடு நின்று விடாமல் தனது சீட பரம்பரையும் இந்தப் புண்ணிய பூமிக்கும் தர்மத்துக்கும் தொண்டாற்ற வேண்டும்; மக்களுக்கு வழிகாட்டி நெறிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். தீர்க்க தரிசனத்தோடு மடங்களை தேசத்தின் நான்கு திசைகளிலும் நிறுவி தனது சீடர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவரது சீட பரம்பரை இன்றளவும் ஆதிசங்கரரின் போதனைப்படி தொண்டாற்றி வருகின்றனர்.
ஆதிசங்கரர் முக்தி அடைந்த காஞ்சியில், காஞ்சி காமகோடி பீடம் சங்கரரால் ஏற்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 2,500 ஆண்டுகளாக இன்று வரை 70 பீடாதிபதிகள் சங்கரர் தந்த கடமைகளை ஏற்று வேத தர்மத்துக்கும் மானுடத்துக்கும் சேவையாற்றி வருகின்றனர்.
காஞ்சி சங்கர மடத்தின் 68-ஆம் பீடாதிபதியான ஸ்ரீ சங்கர சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி முனிவர் என்றே அழைக்கப்பட்டார். பல வேத பாடசாலைகளை ஏற்படுத்தி வேதங்களைக் காக்கும் முயற்சியில் சமரசம் செய்துகொள்ளாத இவரின் சேவை அளப்பரியது.
பல்வேறு பணிகளுக்கும் அதற்காக வெளி நாடுகளுக்கும்கூட சென்றுவிட்ட வேதம் கற்றோரின் சந்ததிகளை மீண்டும் தர்மத்தின் சேவைக்கு அழைத்தார்கள். வேதம் கற்பது நமது கடமை; அதைக் கைவிடல் கூடாது என்ற சிந்தனையை விதைத்தார்கள். வேதம் கற்போரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இந்த மண்ணில் ஓதச் செய்வதே மடத்தின் தலையாயப் பணி என்று மகா சுவாமிகள் கருதினார்கள். ரிக், யஜுர், சாம வேதங்கள் முறையாகப் பாட சாலைகளில் கற்றுத்தருவதற்கு ஏற்பாடுகள் செய்த மகா சுவாமிகள், அதர்வண வேதம் கற்போரும் கற்றுத்தருவோரும் இல்லாமல் நசிந்து வருவதைக் கண்டார்.
நாடு முழுவதும் அதர்வண வேதம் அறிந்தவரைத் தேடும் பணியை மேற்கொண்டு குஜராத்தில் ஒருவர் இருப்பதைக் கண்டறிந்தார்கள். மற்ற வேத பாட சாலைகளில் பயிலும் மாணவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்து குஜராத்துக்கு அனுப்பி அவரிடம் அதர்வண வேதத்தைக் கற்கச் செய்து அவர்கள்மூலம் மற்றவர்களுக்கும் கற்பிக்கும்படி செய்தார்கள்.
இன்றைக்கு நூற்றுக்கணக்கானோர் அதர்வண வேதம் அறிந்தவர்கள் இருக்கின்றனர். தனது காலம் முழுவதும் இப்படி வேதங்கள், வேத பாடசாலைகள் அதன்மூலம் தேசத்தின் மேன்மை என்ற உயரிய சிந்தனையோடு இடையறாது சேவையாற்றி அவதார புருஷராக சாமானிய மக்களும் தொழும் ஜகத்குருவாக நிலைபெற்றுள்ளார்கள்.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சீடராக 69-ஆம் பீடாதிபதியாக ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன்னுடைய காலத்தில் இந்த தேசத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் ஆற்றிய தொண்டு தனி புத்தகமாக விரியும் அளவிலானது.
மூன்று குருமார்கள் ஒரே காலகட்டத்தில் மகா பெரியவர் என்றும் புதுப் பெரியவர் என்றும் பாலப் பெரியவர் என்றும் மடத்தின் சிறப்பை உயர்த்தினர். ஆதிசங்கரர் தேசத்தின் நாலாதிசைகளிலும் மடங்களை நிறுவி தர்மத்தை மீட்டதைப் போல இவர்களும் தேசத்தின் அமைதிக்கான பணிகளை எந்த விளம்பரமும் இன்றி நான்கு திசைகளிலும் அமைதியாகச் செய்து வந்தார்கள்.
காஷ்மீரத்தில் அமைதி திரும்ப வேண்டுமென கலவரங்களும் தீவிரவாதத் தாக்குதலும் தொடர்ந்த காலகட்டத்தில் காஷ்மீர் செல்ல விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முடிவு செய்தார்கள். துறவிக்கு எதற்கு உயிர் பயம்? தர்மத்துக்காகவும் உலக அமைதிக்காகவும் உழைக்க வேண்டியது தமது கடமை என்று அமைதிக்கான பயணத்தை மேற்கொண்டார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை காஷ்மீரில் ஆதிசங்கரரின் இடத்தில் தொடர்ந்து ஆண்டுதோறும் 100 பேர் கொண்ட வைதிக குழு வேள்விகளை நடத்தி வருகிறது.
69-ஆம் பீடாதிபதியான ஸ்ரீ சங்கர ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், தனது 13ஆம் வயதில் துறவு மேற்கொண்டு 70-ஆம் பட்டம் கொண்ட ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இணைந்து ஆற்றிய தேசப் பணிகளும் தெய்வப் பணிகளும் ஒரு நூற்றாண்டுக்கான தொலைநோக்குப் பணிகள்.
கல்விச் சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பணிகளை முன்னெடுத்து மக்கள் சேவையில் மடத்தின் கவனத்தைத் திரும்பியவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தமிழகம் மட்டுமல்லாது, அதை இந்தியா முழுமைக்குமான சேவையாக அவரது சீடர் விரிவுபடுத்தி வருகிறார்.
மாரத வீரர் மலிந்த நன்னாடு,
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு
பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்குப் பொருள் கூட்டின இவர்களின் செயல்கள். அயோத்தி ஸ்ரீராமர் ஆலயம் இன்றைக்கு ஒற்றுமையின் அடையாளமாக உயர்ந்து நிற்பதற்குப் பின்னால் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முயற்சியும் உழைப்பும் பெரிது.
நக்ஸல் பாதிப்பு மிகுந்த பகுதியாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில் 1990-களின் ஆரம்பத்தில் மக்கள் மனதில் அமைதியும் தர்ம சிந்தனையும் ஓங்க வேண்டுமென பிரார்த்தனைகளைப் பெருமாள் வழிபாட்டின் மூலம் ஏற்படுத்தி ஆலயம் அமைத்து அமைதிக்கான முயற்சியை மேற்கொண்டனர் இரு பீடாதிபதிகளும்.
வன்முறைகளின் களமாக இருந்த அஸ்ஸôம் மாநிலம் குவாஹாட்டிக்கு சென்று மக்களைச் சந்தித்தும் வழிபாடு நடத்தியும் நேர்மறை சிந்தனைகளை விதைத்தனர். அவர்களின் ஆன்ம பலத்தாலும் ஆசியாலும் ஆலயத்தில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வருவதாலும் இன்றைக்கு வடகிழக்கு மாநிலங்களில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
மகா பெரியவரின் விருப்பங்கள் பால பெரியவரான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் காலத்தில் செயல் வடிவம் பெற்று வருகின்றன. காஞ்சி மாநகர் வேதம், சம்ஸ்க்ருதம் மட்டுமல்லாது கல்விக்கே சிறப்பு ஸ்தானமாக இருந்தது. அந்த நிலை மீண்டும் வரவேண்டுமென மகா சுவாமிகள் விரும்பினார்கள். அதைத் தற்போது 70-ஆம் பீடாதிபதி நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். பல்கலைக்கழகமும் சரஸ்வதி பண்டாரா என்று மிகப் பெரும் நூலகமும் உருவாக்கியுள்ளார்கள்.
தர்ம சாஸ்திரங்கள் கற்பதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தி புராதன வாழ்வியலை மீட்டெடுக்க இன்றைய நவீனக் கல்வியோடு சாஸ்திரங்களும் சேர்த்தே கற்கலாம் என்று வழிவகை செய்துள்ளார்கள். வேதக்கல்வி பயிலும் மாணவர்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்பட அதற்கான வாழ்வியலைப் பயில பெண்களுக்கென்றும் சாஸ்திரக் கல்வி கற்பிக்கும் முயற்சியும் மேற்கொண்டுள்ளார்கள்.
வெளிநாடுகளில் நமக்கான வாய்ப்புகளைத் தேடுவதைவிட நம்முடைய தர்மத்தை, கலைகளைக் காப்பாற்றினால் அதுவே நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள்.
கல்வி, மருத்துவம், பொதுசேவை என தொலைநோக்குப் பார்வை, ஆகம சாஸ்திர நடைமுறைகளைப் பாதுகாப்பது, கோயில்களில் பூஜைகள் தொடங்கி சமையல் சிற்பம் முதலான கலைகளைக் காப்பது தர்மத்தின் தற்போதைய தேவை என்பதை உணர்ந்து ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.
ஆதிசங்கரரில் தொடங்கி எழுபது தலைமுறைகளாக ஏறத்தாழ 2,500 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழையடி வாழையென வரும் இந்தத் திருக்கூட்டத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் புதிய இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த-ரிக் வேதம் பயின்ற ஸ்ரீ கணேச சர்மா திராவிட் துறவறம் ஏற்கிறார். அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடரை அட்சய திருதியை நன்னாளில் ஏற்கிறார்.
காமகோடி பீடம் இறை அருளால் தெய்வப் பணி, தேசப் பணி, சமூகநலப் பணிகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மடத்தில் புதிய துறவியின் வருகை தர்மத்தின் பாதையில் மக்களை வழிநடத்தும் தொய்வில்லாப் பணியில் சிறக்க அம்பிகை அருள வேண்டும்.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.