
ஒருகாலத்தில் குழந்தைப் பருவம் என்பது மண்சோறு சமைப்பதிலும், நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதிலும், மரம் ஏறி குதிப்பதிலும்தான் உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் இன்று, குழந்தைகளின் உலகம் நான்கு அங்குலத் திரைக்குள் சுருங்கிவிட்டது.
பெற்றோர் அருகிலேயே அமர்ந்திருக்கும்போதுகூட, குழந்தைகளின் கண்கள் கைப்பேசியைவிட்டு அகலுவதில்லை. இந்த மெளனமான எண்மப் பழக்கம், குடும்பங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத திரையை உருவாக்கி, உறவுகளின் நெருக்கத்தைக் குறைத்து வருகிறது.
"என் குழந்தை கடைசியாக எப்போது என்னிடம் மனம்விட்டுப் பேசியது?' என்ற ஏக்கம்கூட பல பெற்றோரின் மனதை வாட்டுகிறது. இதன் விளைவாக, குழந்தைகள் மனதளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
"என் பெற்றோர் அன்பானவர்கள்தான்; ஆனால், என்னைக் கவனிப்பதில்லை' என்ற உணர்வு அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றுகிறது. இந்த உணர்ச்சிப் போராட்டங்கள் ஆரம்பத்தில் வெளிக்காட்டப்படாமல் இருப்பதால், காலப்போக்கில் மன அழுத்தமாக வெளிப்படாமல் பாதுகாக்க வேண்டும்.
இந்தச் சூழலில் இருந்து குழந்தைகளைக் காக்க, ஆஸ்திரேலியா எடுத்துள்ள முடிவு, இன்று உலகிற்கே ஒரு முக்கியமான பாடமாக அமைந்துள்ளது.
அண்மையில், "16 வயதுக்குள்பட்டவர்கள் வருவாய் ஈட்டும் நோக்கில் யூடியூப் போன்ற தளங்களில் சொந்தமாக சேனல் நடத்தத் தடை' என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
இது வெறும் சட்டம் அல்ல; குழந்தைகளின் மனநலப் பாதுகாப்புக்கான முக்கிய நடவடிக்கை என்றே சொல்லலாம்.
இந்த முடிவின் பின்னணியில் வலுவான காரணங்கள் இருக்கின்றன. இணையப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில், 10 முதல் 15 வயது வரையிலான சிறார்களில்37 % பேர், சமூக ஊடகங்களில் ஆபத்தான உள்ளடக்கங்களைப் பார்ப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தடையின் நோக்கம், குழந்தைகள் இணையத்தில் இருந்து அறிவைப் பெறுவதைத் தடுப்பதல்ல.
மாறாக, "பிரபலமாக வேண்டும்' என்ற ஆசையில், பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து, அதன் மூலம் ஏற்படும் இணையவழி மிரட்டல்கள், மோசமான விமர்சனங்கள் மற்றும் மனஉளைச்சல் ஆகியவற்றுக்கு உள்ளாகின்றனர்.
ஒரு சேனலை நடத்தும் குழந்தை, புகழுக்கு ஆசைப்பட்டு வணிக ரீதியான சுரண்டல்களுக்கும், மனரீதியான அழுத்தங்களுக்கும் உள்ளாகும் ஆபத்து அதிகம். இந்தத் தடை, அத்தகைய அபாயங்களிலிருந்து அவர்களைக் காக்கும் ஒரு கவசமாக இருக்கிறது.
இளையோர் அதிகளவில் உள்ள நமது நாட்டில், இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் தேவைப்படுகின்றன. இங்கும் குழந்தைகள் அறிதிறன் பேசிகளுக்கு அடிமையாகி, நிஜ உலகத் தொடர்புகளை இழந்து வருவதுகண்கூடு.
பல வீடுகளில், "நான் என் வேலையை முடிக்க வேண்டும்; அதுவரை குழந்தை கைப்பேசியைப் பார்க்கட்டும்' என்று பெற்றோரே தரும் சுதந்திரம், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நன்மை தருமா எனச் சிந்திக்க வேண்டும்.
சீனா போன்ற நாடுகள் இணையப் பயன்பாட்டை மிகக் கடுமையாக கட்டுப்படுத்துகின்றன. இது மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், படைப்பாற்றலையும் பாதிக்கிறது. ஆனால், உலக மகிழ்ச்சி அறிக்கையில் முதலிடம் பிடிக்கும் பின்லாந்து போன்ற நாடுகளில் சமூக ஊடகங்களுக்குத் தடையில்லை. அங்கே இந்தச் சிக்கல் ஏன் பெரிதாக எழவில்லை? காரணம், அங்குள்ள கல்வி முறை, சமூகப் பாதுகாப்பு மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஆகியவை குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.
குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதும், விளையாடுவதும் அவர்களை மன ஆரோக்கியத்துடன் வளர்க்கிறது.
மகிழ்ச்சி என்பது திரைகளிலோ, சமூக ஊடகங்களின் விருப்பக்குறிகளிலோ இல்லை; உண்மையான மனித உறவுகளில்தான் இருக்கிறது. திரையில் நாம் காண்பது, மற்றவர்களின் வாழ்க்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்கள் மட்டுமே; அது ஒரு மாயை.
உண்மையான மகிழ்ச்சி என்பது நம்முள்ளே இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள அன்பு, உறவுகள், இயற்கையுடன் இணைந்திருத்தல், புதிய ஒன்றைக் கற்றுக் கொள்வது, பிறருக்கு உதவுவது, நமக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவது போன்ற நிஜ உலக அனுபவங்களில்தான் உண்மையான மகிழ்ச்சி ஒளிந்துள்ளது.
உதாரணமாக, ஒரு குழந்தை மரம் ஏறி விளையாடும்போது அடையும் உற்சாகம், நண்பர்களுடன் சிரித்துப் பேசும்போது கிடைக்கும் நிம்மதி, குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும்போது ஏற்படும் அரவணைப்பு, இவையெல்லாம் திரையில் கிடைக்கும் விருப்பக்குறிகளை (லைக்ஸ்) விட பல மடங்கு சக்தி வாய்ந்தவை.
சமூக ஊடகங்களும், இணையமும் நமக்குத் தகவல்களையும், பொழுதுபோக்கையும் அளிக்கலாம். ஆனால், அவை ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சியைப்பதிலீடு செய்ய முடியாது. திரையை ஒதுக்கிவிட்டு, நிஜ உலகை அணைத்துக் கொண்டால், உண்மையான மகிழ்ச்சியின் கதவுகள் திறக்கும்.
எனவே, சமூக வலைதளங்களின் பயன்பாட்டிற்கு வயதுக்கேற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது காலத்தின் கட்டாயம். அத்துடன், நமது கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம். இணையப் பாதுகாப்பு, போலியான செய்திகளைக் கண்டறிவது போன்ற பாடங்களைக் கற்றுத் தர வேண்டும். தொழில்நுட்பத்தைக் கையாளும் திறனுடன், அதை நல்ல முறையில் பயன்படுத்தும் பொறுப்புணர்வையும் குழந்தைகளுக்குக் கற்பிப்பது முக்கியம். ஆஸ்திரேலியா எடுத்துள்ள துணிச்சலான முடிவு, ஒரு சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தைக் காட்டுகிறது. நமது நோக்கம், குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்குவதல்ல; தொழில்நுட்பத்தால் அவர்களுக்கு ஏற்படும் தீங்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே.
சட்டங்கள், கல்வி, பெற்றோர் வழிகாட்டுதல் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, அறிதிறன்பேசித் திரைக்குள் தொலைந்து போகும் நம் இளைய தலைமுறையை மீட்டு, அவர்களை மன ஆரோக்கியமும் பொறுப்புணர்வும் மிக்க குடிமக்களாக உருவாக்க முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.