
பரபரப்பு ஒரு தொற்றுநோய்போல் பற்றிக் கொண்டு, பதற்றம் என்கிற துணை நோயையும் கொண்டுவந்து சேர்த்து மக்களைப் படுத்தும்பாடு பெரும்பாடாய் இருக்கிறது. இதற்கு மறுதலையாய், மருந்தாய் இருப்பது பொறுமை.
"பொறுமை கடலினும் பெரிது' என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பொறுக்கமாட்டாத கடல்தான் அலைமேல் அலையாய் வந்து நிலம் மீது மோதிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், ஆழ்கடல் அமைதி மேல் கடலின் அலையை அவ்வப்போது கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறது.
தம்மை அகழ்வாரையும் நிலம் தாங்கிக் கொண்டு இருப்பதைப்போல், நாமும் நம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொண்டு இருப்பது தலையாய பண்பு என்கிறது திருக்குறள். இதனை அடியொற்றியே, "பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழியும் வந்திருக்க வேண்டும். நிலத்தின் இயல்பு நிலத்தை ஆள்பவர்க்கும் வேண்டுமே.
இது நாடாள்வோருக்கு மட்டுமன்றி, வீடாள்பவர்க்கும் பொருந்தும். ஆக, ஆளுமைப் பண்புக்கு அடிப்படைப் பண்பாக இருப்பது பொறுமை. அதற்கு எதிர்நிலையாக, "பொறாதார் காடாள்வார்' என்றும் அந்தப் பழமொழி விளக்கம் தருகிறது. பொறுத்துக் கொள்கிற வரைக்கும் வலியானது வலிமையாகிறது. பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், உடலைக் காட்டுக்கு அனுப்பி, உயிர் விடைபெற்றுக் கொள்கிறது.
எடுத்த பிறவி நிலைக்கவும், தொடரவும் பொறுமை மிகவும் அவசியம். விதைத்தவுடனே முளைத்து மரமாகிக் கனி வரவேண்டும் என்று நினைப்பது இயற்கைக்கு முரண் அல்லவா? "மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா' என்ற கேள்வி, இதன்வழி பிறந்தது. இயந்திரங்களைக் கொண்டு இயற்கையின் பொறுமைக்கு மாறாக, விரைந்து ஆற்றிவரும் பணிகள் அவ்வப்போது வெற்றியைத் தந்தாலும் அவை தொடர் வெற்றியாக அமையுமா என்பது ஐயமே.
"நாளும் ஒரு பொன்முட்டை இடும் வாத்தை வளர்த்தவனுக்குப் பேராசை; ஒட்டுமொத்தமாய் அத்தனை முட்டைகளையும் பெற்றுவிட வேண்டும் என்று அதன் வயிற்றைக் கீறிப் பார்த்தபோது, ஒற்றை முட்டை மட்டுமே உள் இருந்தது' என்று சொல்லப்படுகிற கதை வெறும் கதையா? உயிர் இழந்த வாத்து ஒருபோதும் முட்டை இடாது; உயர்குணங்கள் பல இருந்தும் உரிய காலம், சூழல் வரும் வரை காத்து இருக்கப் பழகாதவனுக்கு எதுவும் வாய்க்காது.
பொங்கி வடித்து, உண்கலத்தில் இட்ட சோற்றினைத் தாங்க முடியாத பசியுடையவன் அள்ளிப் புசிக்க நினைத்துச் சூடுபட்ட வேகத்தில் பிறந்த சொலவடை, "ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை'. ஆக்கப் பொறுத்தல் என்றால், நெல்லாக்க, அரிசியாக்க, அதைப் பின் சோறாக்கப் படுகிற பாடு அனைத்தையும் பொறுத்தல் என்பது உள்ளொடுங்கும். அதைவிடவும், கொதிக்கும் உலையில் அரிசியிடும்போதும், வெந்த சோற்றை வடித்திடும்போதும் "சட்டி சுட்டதடா, கை விட்டதடா' என்று விட்டுவிடாமல், அந்தச் சூட்டையும் தாங்கி ஆக்கிய சோற்றை, அள்ளிப் புசிக்க அவசரப்படும்போது, பட்ட சூட்டின் பதிவாகச் சொல்லிய அனுபவ வாக்கு அச் சொலவடை. இது சுடச் சுட அள்ளிய சோற்றுக்கு மட்டுமல்ல, சுறுசுறுப்புக்கும் அப்பால் விரைவுபடுத்தும் வேகத்துக்கும் வைக்கப்படும் முட்டுக்கட்டை.
முட்டுக்கட்டை என்பது முன்னேற்றத்தைத் தடுப்பதாகப் பலரும் நினைப்பதுண்டு. உண்மையில் அது முறையற்ற வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி. ஊர் கூடி இழுக்கும் தேருக்கு முன்னோர் கண்ட தடைக்கட்டை ("பிரேக்')தான் இந்த முட்டுக்கட்டை., ஊருக்கும் தேருக்கும் ஊறு நேராமல், தனக்கு நேரும் வலியைப் பொறுத்துக் கொண்டு, தலைக்கொடுப்பது இது. இதைக் கையாளுபவர்களின் கவனம் நிகர்த்தது, கடமையாற்றும் பெரியவர்களின் நிலைப்பாடு. பயமறியாது பாயும் இளங்கன்றுகளாம் இளைஞர்களைப் பெரியவர்கள் தடுத்து ஆட்கொள்வது இவ்வகைப்பட்டது.
ஊருக்கோ, உலகுக்கோ தலைவனாய் இருக்கும் யாருக்கும் தலைவியாய் இருப்பவள் வாழ்க்கைத் துணைநலம். அதற்கு இலக்கணம் வகுத்த திருவள்ளுவர், தற்காப்பைத்தான் முதலில் சொல்லிக் கொடுக்கிறார்.
"தற்காத்து' தன்னைக் காத்துக் கொள்வதுதான் தலைவியின் முதற்பணி. இது தன்னலம் இல்லை. தற்கொண்டானாகிய கணவனையும் தம்மை நம்பிப் பிறந்த பிள்ளைகளையும் தாங்கிப் பேணக் கற்கும் குடும்பக் கல்வி. பேணுதல் என்பது பெண்மையின் இயல்பு. தற்காத்தல் முதல்நிலை என்றால், "தகை சான்ற சொற்காத்தல்' வளர்நிலை. அது அவ்வளவு எளிதானது இல்லை.
மனதில் உதித்ததை வாயால் வெளிப்படுத்தக்கூடாது என்ற நிலையில், சொல்ல நினைத்ததைக்கூடச் சொல்லாமல் இருந்துவிடலாம். ஆனால், தன்முன் பிறர் சொல்லிய சொல்லினை, - அது புகழ்ச் சொல்லானாலும் சரி, பழிச் சொல்லாயினும் சரி. அதன் நிலைபொறுத்துத் தன்வயமாக்கிப் பிறரிடம் - குறிப்பாக அச்சொல்லுக்கு உரியவரிடம் சொல்லியோ, சொல்லாமலோ, அதனால் இன்னல் வாராமல் காக்கும் பண்பு இருக்கிறதே, அது தலைமைப் பண்புக்கெல்லாம் தாய்.
ஒருமுறை பொறுத்துக் கொள்ளலாம். சில முறை பொறுத்துக் கொள்ளலாம். அதற்கும் மேல்? தேவை எனில் வாழ்நாள் முழுவதும் "சோர்விலாது' பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது திருக்குறள். இது மனைவிக்கு மட்டுமல்ல; மன்னனுக்கும் வேண்டிய மகத்தான பண்பு.
செவிக்கு இனிமையான புகழ் மொழிகளையே கேட்டுப் பழகிய மன்னனும், கசக்கும் வசைச் சொற்களையும் அவ்வாறே ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அத்தகைய வேந்தனின் ஆட்சிக் குடைக் கீழ் இவ்வுலகமே தங்கும் என்கிறார்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு (389)
என்று, அகழ்வாரைத் தாங்கும் நிலத்தையும் தாங்கிப் பிடித்துக் காக்கும் வேந்தனுக்குப் பொறுமையை மிகவும் பொறுமையாய் வலியுறுத்துகிறார்.
பழிக்குப் பழி வாங்கும் செயலைவிடச் சொல்லுக்குச் சொல் கொடுக்கும் இன்னாச் செயல் மிகவும் துயர் தரும். "நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம். சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது' என அனுபவம் நிறைத்துக் கூறிய பழமொழி, எப்போதும் "நா காக்க'ச் சொல்லிக் கொடுக்கிறது.
செயலானது செய்கிறபோது மட்டுமே துன்புறுத்தும். சொல்லானது எப்போதும் நின்று உள்ளறுக்கும். துப்பாக்கியால் சுடுபட்ட புண்கூட ஆறிவிடும். ஆற்றிவிட மருந்து உண்டு. தப்பாமல் சொல்லிய சொல்லின் சூடும் புண்ணும் ஆறவே ஆறாது. மாற்று மருந்தும் கிடையாது.
எனவே, சொல்லாலோ, செயலாலோ, அறிந்தோ, அறியாமலோ துன்புறும் வண்ணம் தமக்கு இன்னல் செய்வார்க்கும் இனியவே செய்வது சான்றோர்களின் இயல்பு. இதற்குப் பொறுமை மிகவும் இன்றியமையாதது. அச் செயலை, சொல்லை, அப்போதே மறத்தல் அதனினும் சிறப்புடையது. நன்றல்லதை அன்றே அக்கணமே மறப்பதுதானே நற்பண்பு. இது அடக்கம் என்கிற உயர் பண்பையும் உடன் கொடுக்கக் கூடியது. நாவடக்கம் தொடங்கி, புலனடக்கத்தில் வளரும் இவ்வொழுக்கம் உயிர் காக்கும் மருந்தாக உயர்கிறது. உயிர்போன பிறகும் புகழாக மலர்கிறது.இதற்கு, பக்தியை ஒரு பயிற்சி முறையாக வகுத்துத் தந்திருக்கின்றனர் நம் பெரியோர். அதனைப் பகை வளர்ப்பதாக இல்லாமல் பண்பு காப்பதாக வகைப்படுத்தித் தந்த மகாகவி பாரதி,
பக்தி உடையார் காரியத்தில் பதறார்
மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மைபோல்
மெல்லச் செய்து பயன் அடைவார்'
என்கிறார்.
வித்திட்டவர்கள் விளைச்சல் வரும் வரை காத்திருத்தல் அவசியம். காத்திருத்தல் என்பதற்கு, கடமையைச் செய்யாது வாளாவிருத்தல் (சும்மா இருத்தல்) என்று பொருள் கொண்டுவிடுதல் கூடாது. அது பயன்தரும்படி காத்து இருத்தல் வேண்டும். நீர் பாய்ச்சி, உரம் இட்டு, களை பறித்து, வேலி இட்டுக் காத்து இருந்தால்தான் கட்டாயப் பலன் கிடைக்கும். அதற்குக் காலம் காத்து, பருவம் காத்து, பொறுமை காத்து, எப்போதும் பாதுகாத்து இருக்கப் பழக வேண்டும். நேற்று பெய்த மழையில் காளான்கள் முளைக்கலாம். ஆலவித்து அதுபோல் முளைத்து வருமா?
பயன் நுகரப் பழம் தரும் தாவரத்தின் செயல், அதனோடு முடிவதில்லை. கூடவே மீள முளைக்கும் வித்தினையும் தருகிறது. அதுபோல் பயன்தரும் வினையை வித்தினைப்போல் தரப் பயிலுதல் வேண்டும். விதை விதைத்துப் பயிர் அறுவடை செய்வதுபோல, வினை விதைத்துப் பயன்களை அறுவடை செய்யப் பழகுதல் வேண்டும். அதற்குப் பரபரப்போ, பதற்றமோ ஒரு போதும் உதவாது. "பதறாத காரியம் சிதறாது' என்பதைப் பணிவோடு சொல்லும் பெரியவர்கள் நடைமுறையில் கடைப்பிடித்து நன்மை உணர்ந்தவர்கள்.
எனவே, எல்லா நிலைகளிலும் காத்தலும், காத்து இருத்தலுமாகிய "காத்திருத்தல்' என்ற கலையினைக் கற்று, காலம் முழுவதும் கடைப்பிடித்து ஒழுகினால், காலம் கடந்தும் நிலைபெறலாம் என்பது உறுதி.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.