காக்க உதவுமா காப்பீடுகள்?

விபத்துக் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடு திட்டங்களின் பலன்களைப் பற்றி...
காப்பீடுத் திட்டம்!
காப்பீடுத் திட்டம்!(நன்றி - Express Illustrations)
Published on
Updated on
2 min read

பொதுவாக ஆயுள் காப்பீடு என்பது ஓர் உச்சபட்ச தொகையை இலக்காக கொண்டு அதற்கான கால ஆண்டைக் கணக்கிட்டு, தவணை முறையில் சிறுதொகையாக செலுத்துவது ஆகும். குறிப்பிட்ட கால ஆண்டில் இந்தத் தொகை முதிர்ச்சியடைந்ததும் பெருந்தொகையாக வழங்கப்படுகிறது.

ஒருவேளை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த நபர் உயிரிழக்க நேரிட்டால் அந்த உச்சபட்ச தொகையை அவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என்பது நடைமுறை. இந்த வகை காப்பீடுகள் சேமிப்பு வகையைச் சேர்ந்தவை.

மற்றொரு வகையிலான காப்பீடு என்பது பாதிப்புகள் ஏற்பட்டால் மட்டுமே அதற்கான காப்பீட்டுத் தொகையைப் பெற இயலும். விபத்துகளால் ஏற்படும் ஊனம் அல்லது உயிரிழப்புக்கு விபத்துக் காப்பீடு, எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு, நீண்ட பயணங்கள் மேற்கொள்ள பயணக் காப்பீடு, விலையுயர்ந்த மின்னணுப் பொருள்களுக்கு காப்பீடு, வாகனக் காப்பீடு, குழந்தைகளுக்கான எதிர்காலத் தேவைக்கான காப்பீடு போன்றவை.

இதுபோலவே கால ஆயுள் காப்பீடு (டெர்ம் இன்சூரன்ஸ்) திட்டமும் செயல்படுகிறது. இது சேமிப்பு அம்சங்கள் இன்றி வாரிசுகளுக்கு மட்டுமே பணப்பலன் கிடைக்கும் வகையிலானது. இந்த வகை காப்பீடுகளில் செலுத்தும் பிரீமியம் தொகை குறைவாக இருந்தாலும் காப்பீடுதாரர் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் பணப்பலன் மிக உயர்வாக இருக்கும்.

வாழ்வின் ஓர் அங்கமாக காப்பீட்டுத் திட்டங்கள் அவசியமாகியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு 1956-இல் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்ஐசி) தேசியமயமாக்கியது. 1991-இல் இந்தியாவில் தாராளமய கொள்கை அமல்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர், தனியார் காப்பீடு நிறுவனங்கள் பெருகியுள்ளன. அதற்கேற்ப காப்பீட்டுத் திட்டங்களில் இணைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.

தனியார் நிறுவனங்களில், தங்களுக்குத் தேவையான மேற்படி காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்தவர்கள் காப்பீட்டுத் தொகையை கோர முழுத் தகுதி இருந்தும், அவற்றைப் பெறுவதில் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தனியார் ஆயுள் காப்பீடுகளில், கால ஆண்டு நிறைவடைந்த பின்னரும் காப்பீட்டுத் தொகையை கோராதவர்களின் குடும்பத்தினரை காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்பு கொள்வது அரிதாகவே உள்ளது. சில நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்புவதோடு சரி.

காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்தவர்கள், அதுகுறித்த தகவல்களை தங்கள் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்; அப்படியே தெரியப்படுத்தியிருந்தாலும் குடும்பத் தலைவரையோ, குடும்பத்தில் முக்கிய உறுப்பினர்களை இழந்தவர்களால் சோகத்திலிருந்து விடுபட காலதாமதம் ஏற்படலாம். அல்லது காப்பீடு கோருவது குறித்த வழிமுறைகள், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். மேலும், காப்பீடு கோரும்போது அந்த நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் அலைக்கழிப்புகளை சகிக்க முடியாமல் காப்பீட்டுத் தொகையை கோர பலர் முன்வருவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, காப்பீட்டு நிறுவன செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் 1999-ஆம் ஆண்டு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) உருவாக்கப்பட்டது. நிறுவனங்களிலிருந்து காப்பீட்டுத் தொகையைப் பெற இயலாத நுகர்வோர் தங்கள் புகார்களை இந்த ஆணையத்தில் பதிவு செய்யலாம். மார்ச் 2024 நிலவரப்படி ஆயுள் காப்பீட்டுத் துறை மொத்தம் ரூ.20,062 கோடி கோரப்படாத தொகைகளைப் பதிவு செய்துள்ளதாக ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

இதுதவிர நிறுவனங்களின் குறைதீர் அதிகாரிகளிடமும் முறையிடலாம். இதிலும் தீர்வு கிடைக்காவிட்டால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும், மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலும் புகார் செய்து, வழக்குரைஞரின்றி தங்கள் புகாரை தலைவர், அங்கத்தினர், எதிர்த்தரப்பினர் முன்னிலையில் வாதாடலாம்.

இவ்வாறு காப்பீடு மறுக்கப்பட்டவர்கள், நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள், வாகன விபத்துகள் கோருரிமை தீர்ப்பாயம், நீதிமன்றங்கள் மூலமே காப்பீட்டுத் தொகையை பெறுவது தொடர்கதையாக உள்ளது.

நாள்தோறும் இதுகுறித்த தகவல்கள் நாளிதழ்களில் இடம்பெறத் தவறுவதே இல்லை என்ற நிலையாகிவிட்டது. இது காப்பீட்டு நிறுவனங்களின் சேவைக் குறைபாடுகளையே காட்டுகிறது.

இருப்பினும், காப்பீட்டுத் தொகையை கோருவதற்கான வழிமுறைகளை தொடங்கவும், தொடரவும் மற்றொருவரின் உதவி உறுதியாக தேவைப்படுகிறது. அந்த உதவிகள் எந்த வகையிலும் கிடைக்காத பட்சத்தில் காப்பீட்டுத் தொகையைப் போராடிப் பெறுவதற்கு சாமானியருக்கு சாமர்த்தியம் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

எனவே, காப்பீட்டுத் திட்டங்களில் சேரும்முன் அந்த நிறுவனங்கள் அதற்கான ஆவணங்கள், வாரிசுதாரர்கள் உள்ளிட்ட நிபந்தனைகளை கடுமையாக பின்பற்றுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதேநேரத்தில், திட்டங்களில் சேர்ந்த பின்னர் ஆயுள் காப்பீடு, கால ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் அவர்களின் வாரிசுகளுக்கு எளிதாகக் கிடைத்திட வேண்டும்.

அதுபோல ஒருமுறை தொகை செலுத்தும் வகையிலான விபத்துக் காப்பீடு, வாகன காப்பீடு, மின்னணுப் பொருள்களுக்கான காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடு திட்டங்களின் பலன்கள், அதற்கான தகுதியுள்ளவர்களுக்கு எவ்வித ஆட்சேபணையுமின்றி உடனடியாக கிடைக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்காத நிலையில் காப்பீட்டுத் திட்டங்கள் காக்க உதவுமா என்ற கேள்விக்கான விடையை தேடத்தான் வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com