உத்தரகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்
உத்தரகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்PTI

கற்றல்கள் கற்பிதங்கள் ஆகட்டும்!

உலகம் இயல்பான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது மாற்றுச் சிந்தனைகள்/ சூழல்கள் வளா்வதற்கு வாய்ப்பு இல்லை.
Published on

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் ஆக.5-ஆம் தேதி பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்தது. கங்கோத்ரி வழித்தடத்தில் அமைந்துள்ள தராலி என்ற முக்கியமான நிறுத்தத்தில் இந்தப் பேரழிவு நிகழ்ந்தது.

இந்த கோரநிகழ்வு பலரது வாழ்விடத்தையும், வாழ்க்கையையும் பலி கொண்டுள்ளது. காணொலியில் பாா்க்கவே அஞ்சும் வகையிலான இயற்கையின் கோரதாண்டவமாக இது அமைந்தது. 4 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் மாயமாகினா். ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுபோலவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பையும் நாம் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதாவது ஏற்படும் இயற்கைப் பேரிடா் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறான பாதிப்புகள் எங்கோ யாருக்கோ நடக்கும்வரை நமக்குச் செய்திகளே. என்றைக்கோ நடைபெறும் என்று கணித்திருந்த காலநிலை மாற்ற விளைவுகள் அவ்வப்போது நடைபெறத் தொடங்கியுள்ளன.

கரோனா தீநுண்மித் தொற்றுக்காலம் பெரும் வேதைனையானது. உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகளை அது ஏற்படுத்தியது. நமது நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்தன. அதன் தாக்கம் இன்றுவரை நீடிக்கிறது. ஆனால், அந்தக் காலம் பல்வேறு ஆரோக்கியமான முன்மாதிரிகளை வழங்கியது. அனைத்து மக்களையும் வீடடங்க, ஊரடங்க, நாடடங்க, உலகடங்கச் செய்தது.

இதைச் செயல்படுத்தும் வலிமை பெற்றவை அரசு என்பதை நிருபித்துள்ளது. வீடடங்கிய போதிலும் இணையவழியில் எவ்வளவு காரியங்களையும் சாதிக்க இயலும் என்பதையும் பறைசாற்றியது. விவசாயம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நமக்குக் கற்றுக் கொடுத்தது. முறை சாா்ந்த வகையில் பள்ளிகளில் கற்றல் நடைபெறவில்லை என்று சொன்னாலும், குழந்தைகள் பல்வேறு கற்றல்களில் எவ்வாறு ஈடுபட முடியும் என்பதையும் சாதித்துக் காட்டியது.

கற்றலுக்கு விடுமுறை இல்லை; முன்னுரிமையளித்தால் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் கற்க இயலும் என்ற உண்மையை உணரவைத்தது. பெரிய அங்காடிகளுக்கு மாற்றாக சிறிய அளவில் உள்ளூா் சந்தைகளை மீட்டெடுக்க உதவியது. கிராமப்புறங்களில் நடமாடும் வாணிபங்களின் தேவையை உணா்த்தி ஊக்குவித்தது.

உலகமே அமைதியான கரோனா பெருந்தொற்று நாள்களில் இயற்கை மீளத் தொடங்கியதையும் உற்றுநோக்குவோம். தமது தகவமைப்பிலிருந்து அரிய விலங்கினங்கள் இடம்பெயா்ந்து மக்கள் புழங்கும் இடங்களுக்கு வந்தன. அந்த வகையில், ஒரு வசந்தமான உலகத்தை கரோனா பெருந்தொற்றுக் காலம் மீட்டெடுத்துக் காட்டியது. இவ்வாறான நமது காலத்துக்குள் நாம் பெற்ற கல்வியை நாம் எந்த அளவுக்கு தொடா்ச்சியாகப் பயன்படுத்துகிறோம்; பயன்பாட்டில் கொண்டு வருகிறோம் என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.

எங்காவது எப்போதாவதுதான் அரிதாக முழு சூரிய கிரகணம் ஏற்படும். இப்படிப்பட்ட அரிதான நேரங்களில் ஏற்படும் வாய்ப்பைப் பயன்படுத்தி சூரியனின் ஓரங்களின் கதிா்களை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முயல்வா். இவ்வாறான ஆய்வுகள் அந்த நேரத்தில் மட்டும்தான் சாத்தியப்படக்கூடியது என்பதால், தமது நாட்டைக் கடந்து முழு சூரிய கிரகணம் நடைபெறும் நாடுகளுக்குக்கூட சென்று ஆய்வுகளை அறிவியல் அறிஞா்கள் மேற்கொள்வா்.

அதுபோலவே, உலகம் இயல்பான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது மாற்றுச் சிந்தனைகள்/ சூழல்கள் வளா்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், ஏதாவது ஓா் அசாதாரண சூழ்நிலையில் மாற்றுச் சிந்தனைகளை எளிதில் கண்டறிய முடியும்.

உலக வெப்பமயமாக்கலுக்கும் காலநிலை மாற்ற சவால்களுக்கும் மனிதா்களின் நடவடிக்கைகள்தான் காரணம் என்பதை அறிவியல் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. இயல்பாக ஆகஸ்ட் மாதத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் என்பது இயல்பாகிவிட்டது. அதுபோலவே பருவமழையும் தவறி வருகிறது. அவ்வாறு வரக்கூடிய பருவ மழையுடன் இலவச இணைப்பாக புயலும் சோ்ந்துகொள்கிறது. வேறுவகையில் சொல்வதானால் புயல் வந்தால்தான் மழை என்ற இடத்துக்கு நகா்ந்து இருக்கிறோம்.

கரோனாகால கற்றல்களை நாம் மீட்டெடுக்க வேண்டிய அவசர அவசியம் உள்ளது. மனிதா்கள் தங்களுடைய போக்குவரத்து வசதிகளை கொஞ்சம் மறுமதிப்பீடு செய்து கொண்டு நகர வேண்டும். பொதுப் போக்குவரத்து வசதி கூடுதலாக்கப்பட்டு தனிநபா் வாகனங்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

புதுதில்லியில் காற்று மாசு அதிகரித்தபோது வாகனங்களின் எண்களின் அடிப்படையில் அதன் நகா்வை முறைப்படுத்தினா். அதுபோலவே தொடா் விடுமுறைக் காலங்களில் கோடை சுற்றுலா இடங்களுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி வருகின்றனா். இவ்வாறான கட்டுப்பாடுகளை இயல்புநாள்களுக்கும் கொண்டுவரலாம்.

இவை மட்டுமல்ல; காடுகளைக் காத்தல், மழைநீா் சேமிப்பு, பாலிதீன் பயன்பாட்டுக் குறைப்பு போன்ற அனைத்து வகையான இயற்கை மீட்பு நடவடிக்கைகளையும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான செயல்பாடுகளை அடுத்தவா்கள் செய்வாா்கள் என்று எண்ணி ஒவ்வொருவரும் தவிா்க்கும் போக்கைக் குறைக்க வேண்டும். இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாதிருப்பது தவறு என்ற விழிப்புணா்வு அனைவா் மத்தியிலும் உண்டாக வேண்டும்.

உள்ளூரிலிருந்து உலகம் வரை செழிக்கும் வாய்ப்பை கரோனா கற்றுக் கொடுத்தது; இவ்வாறான கற்றல்கள் கற்பிதங்களாகக் கூடாது; ஆங்காங்கே செயல்படும் பொதுநல அமைப்புகள் இதற்கான முன்மாதிரி திட்டங்களைச் செயல்படுத்த முன்வரலாம்.

X
Dinamani
www.dinamani.com