
அ. அருள்ராஜ்
சமூகத்தில் அடிப்படைக் குற்றங்களுக்கான காரணங்களில் ஒன்றாக போதைப் பழக்கமும் தற்போது உருவெடுத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்தப் பழக்கம் அதிகரித்து வருவது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
கோவையில் தங்கி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இடையே போதை கலாசராம் பரவி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸôர் விடுதிகளில் அண்மையில் நடத்திய சோதனையில் கிலோ கணக்கில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களும், மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
நூற்றாண்டு காலமாக போதைப் பழக்க வழக்கம் இருந்துவந்தாலும், நாகரிகத்தின் உச்சகட்டம் அவற்றை வெளிப்படையாகப் பயன்படுத்தும் வகையில் மாறியதுதான் இன்றைய கலாசார சீரழிவுக்கு ஆணிவேராக மாறியிருக்கிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கள் மற்றும் ஏதேனும் போதை மயக்கத்தில் வீதிகளில் உலாவந்தவர்களை இந்தச் சமூகம் வெறுத்து ஒதுக்கியது. ஆனால், இன்றோ போதைப் பொருள்கள் இருந்தால்தான் எல்லா நிகழ்ச்சிகளும், விழாக்களும் என்ற மன ஓட்டத்துக்கு மனிதகுல மாண்புகள் மாறிவிட்டன.
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
என்கிறார் வள்ளுவர். மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்துக்கு உள்ளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும் என்கிறார். மது மயக்கத்தில் வீதிகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் விழுந்து கிடக்கும் மனிதர்கள் அவ்வப்போது திருவள்ளுவரின் வரிகளை நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
"போதைப் பொருள்களை ஒழிப்போம், போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுப்போம்' என ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலை தடுக்கும் தினமாக நாம் கடைப்பிடிக்கிறோம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி என போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பள்ளி வளாகங்களின் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதித்து அரசு நடவடிக்கை எடுத்தாலும், மறைமுகமாக மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு, அவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுவதை பல்வேறு சம்பவங்கள் வாயிலாக நாம் காண்கிறோம்.
போதைப் பொருள் கடத்தல், விற்பனை தடுப்பு என்பது இன்று உலக அளவில் மிகப் பெரும் சவாலாக உள்ளது.
உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக உள்ளனர் என்றும், அதிலும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்றும் உலக சுகாதார மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதைக்கு அடிமையாவோரில் 85% பேர் படிப்பறிவு கொண்டவர்கள் என்றால், அதில் 75% பேர் இளையோர் என்பதும் தெரியவந்துள்ளது.
இளையோரைக் குறிவைத்து போதைப் பொருள்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பதற்காகவே சர்வதேச அளவில் மாபியா கும்பல் நடமாடிக் கொண்டிருப்பதாக அண்மையில் உளவுத் துறை எச்சரித்திருந்தது. போதை கலாசாரம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேதான் மேலோங்கியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், திரைப்பட நடிகர்களில் பலரும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகியிருப்பதும், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டதும் திரைத் துறை வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திரைப்படங்களில் போதைப் பொருள்கள் பயன்பாடு தொடர்பான காட்சிகள், அதைப் பயன்படுத்தி அடிமையான கதாபாத்திரம் போன்றவற்றை தணிக்கைத் துறையினர் கண்காணித்து, சமூக நலன்களுக்கு எதிரான காட்சிகளைத் துண்டிக்க வேண்டும். இல்லையெனில், அதுபோன்ற திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மது, சிகரெட்டை முதலில் கையிலெடுக்கும் இளையோர், பின்னர் அதையும் தாண்டி புகையிலை, கஞ்சா, பிரவுன் சுகர், ஹெராயின், அபின், ஒயிட்னர் போன்றவற்றை பயன்படுத்தி, சமூக பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர்களாக மாறி வருவதைத் தடுக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். மதுக் கடைகள் மூடப்பட்டால் வெளிமாநிலத்துக்கு சென்று வாங்கிக் குடிப்பார்கள் என்ற விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாடெங்கும் மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்தும் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, போதை எனும் அரக்கனை ஒழிக்க முடியும்.
இல்லையெனில், உலகை அழிக்கக் காத்திருக்கும் அணுகுண்டைப்போல் போதையால் உலகம் ஒரு நாள் அழியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், போதைப் பொருள்களைக் கண்டறிந்து, அதை விநியோகிக்கும் கும்பலின் கட்டமைப்பைத் தகர்ப்பது, குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதும், போதையில்லா சமுதாயத்துக்கு வழிகோலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.