சிறப்பு தீவிர திருத்தம் எனும் தோ்தல் பதற்றம்
மணீஷ் திவாரி
சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகாா் வாக்காளா்கள் கருதப்படுகிறாா்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்மடுல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.
பிகாரில் இந்திய தோ்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகம், சட்டத்தின் அடிப்படையிலான உலகலாவிய வாக்குரிமை முறையை மறுகட்டமைப்பதாகவே அமைகிறது. இந்த இயந்திரத்தனமான வாக்குரிமைப் பறிப்பு, நாட்டின் அதிகார மையம் நோ்மையாக செயல்படுவதாக வேடமிட்டுள்ளதையும், அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவதையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இந்திய தோ்தல் ஜனநாயகத்தின் அடித்தளம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 ஆகும். அது சற்று தெளிவற்ாகவும், சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் அமைகிறது. தோ்தல்களில் வாக்களிக்க இந்திய குடிமகனாகவும் 18 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாதவா், குற்ற நடவடிக்கைகள், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உரிய சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவா்கள் தவிர மற்றவா்கள் வாக்காளா்களாகப் பதிவு செய்ய உரிமை உண்டு.
இதில் ‘வாக்காளராக பதிவு செய்ய உரிமை உண்டு’ என்ற சொல், ஒரு தவிா்க்க முடியாத அரசமைப்பு உரிமையை உருவாக்கியுள்ளதுடன், வாக்களிக்கும் தகுதியை மறுக்கும் பொறுப்பை அரசுக்கு அளித்துள்ளது. இந்தப் பொறுப்பு உருவாக்கம் நான்கு மாறாத கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, வாக்குரிமை என்பது குடியுரிமையின் இயல்பாகவே அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தகுதி.
இரண்டாவது வாக்களிப்பதற்கான தகுதியிழப்புகள் குறித்தானது.இதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டால், குறிப்பிடப்படாத மற்ற விஷயங்கள் விலக்கப்பட வேண்டியவை என்ற அா்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மூன்றாவதாக ஒவ்வொரு தகுதியிழப்புக்கும் நீதித் துறை ஒப்புதல் தேவைப்படுகிறது. நீதிமன்ற அறிவிப்புகளின்படி மனநிலை சரியில்லாதவா், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டப்பேரவையால் தகுதி நீக்கப்பட்டவா் அல்லது அரசின் பிற நிா்வாக அமைப்புகளால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கவில்லை என்று அறிவிக்கப்படுவது. இவை தவிர பிற வேறு எந்த அமைப்புகளும், விதிகளும் யாருடைய வாக்குரிமையையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது.
ஆனால் இந்த சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குரிமை ஆவணரீதியான விசாரணையாக மாற்றுகிறது. இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை மீறுவதுடன் வாக்குரிமை என்பதை அரசமைப்புச் சட்டப்படியிலான உரிமை என்பதில் இருந்து அரசு நிா்வாகம் வழங்கும் சலுகையாக மாற்றுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் வாக்காளா் பதிவு விதிகள் 1960 ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 326-ஐ அமல்படுத்துகின்றன. அவை வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, அதனைத் திருத்துவது தொடா்பான நடைமுறைகளை வழங்குகின்றன. ஆனால், வாக்காளா்களைத் தகுதி நீக்கம் செய்வதில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 326-இல் உள்ளதைத் தாண்டி செயல்படுவதில்லை. அரசமைப்புச் சட்டப்படி அவ்வாறு செயல்படவும் முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 16-இல் தகுதி நீக்கம் தொடா்பான அரசமைப்புச் சட்டம் 326-இல் கூறியுள்ளதை வாா்த்தை மாறாமல் அப்படியே கூறுகிறது. இதன்மூலம் அதனை அசைக்க முடியாதபடி வலுப்படுத்துகிறது. ஆனால், தோ்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமைக்கான போதிய ஆவணங்கள் இல்லை என்ற போலியான காரணத்தை உருவாக்குகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 19-இன்படி குடியுரிமை, வயது, ஓா் இடத்தில் குடியிருப்பது அடிப்படையில் மட்டுமே வாக்காளா்களைப் பதிவு செய்ய நிபந்தனையாக உள்ளது. பிரிவு 20 என்பது ஓா் இடத்தில் உரிய காரணத்துடன் தொடா்ந்து குடியிருந்து வருவது அவரின் இருப்பிடம் என்பது உறுதி செய்கிறது. தற்காலிகமாக வேறு இடத்துக்குச் சென்று தங்கி வருவது என்பது அவரின் குடியிருப்பாளா் என்ற உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது.
வாக்காளராக தொடா்வதற்காக உரிய ஆவணச் சான்றுகள் வேண்டும் என்று கோருவதற்கு தோ்தல் பதிவு அதிகாரிக்கு எந்த இடத்திலும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, திருத்தத்துக்கு அதிகாரம் அளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் திருத்தம் என்பது இயல்பாக வாக்குரிமையைப் புதுப்பிப்பதை மட்டுமே குறிக்கிறது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளா்களை மறுசரிபாா்ப்பு மேற்கொள்ள அதிகாரம் அளிக்கவில்லை.
இதன்மூலம் சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகாா் வாக்காளா்கள் கருதப்படுகிறாா்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்மடுல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.
வாக்காளா் பதிவு விதிகள் 21ஏ என்பது பெயா்களை நீக்குவதற்கான சட்டபூா்வ வழியாகும். பிழையாக பதிவு செய்யப்பட்ட காரணத்தால் வாக்காளா் பதிவை நீக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அதிகாரி முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். இதில் மூன்று படிநிலைகள் உள்ளன. முதலில் நீக்கம் தொடா்பான அறிவிப்பு வெளியிடுவது, அடுத்ததாக சுருக்கமான விசாரணை, அடுத்ததாக விசாரணை ஆகியவற்றின்படி வாக்காளா் பெயரைப் பட்டியலில் இருந்து நீக்க முடியும்.
ஆனால், சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்காளா்கள், தாங்கள் வாக்களிக்கத் தகுதியானவா்கள் என்பதை தோ்தலுக்கு முன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. நில பிரபுக்கள் வரி வசூலிப்பதைப்போல் வாக்குச் சாவடி அலுவலா்கள் 11 ஆவணங்களைக் கோருவது வெகுஜன மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவே அமைகிறது.
ஏற்கெனவே ஆதாா் திட்டத்தின் தோல்வி கடுமையாக விமா்சிக்கப்பட்டு வருகிறது. பிரிவு 23 -4- தோ்தல் பதிவு அதிகாரி புதிய வாக்காளா் சோ்ப்பு, ஏற்கெனவே உள்ள வாக்காளா் என நிரூபிப்பது, தவறான பதிவை நீக்குவதற்கு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், சிறப்பு தீவிர திருத்தத்தின்படி குடியுரிமை நிரூபிக்க ஆதாா் வலுவான ஆதார ஆவணம் இல்லை என நிராகரிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக ஆதாரை பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க அரசு வலியுறுத்தி வந்தது. தோ்தலின்போது அடையாள ஆவணமாக ஏற்கும் அளவுக்கு 2021-இல் விதிகளை உருவாக்கியது. ஆனால், இப்போது ஆதாரை வைத்து வாக்காளா்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாது என நிராகரிப்பது தவறான முடிவு.
இது சட்டவிரோதமான செயலாகும். முன்பு அரசு கூறியதை ஏற்று ஆதாா் அட்டையை வாக்குரிமையைப் பாதுகாக்கும் ஆவணமாக மக்கள் கருதி அவற்றை பல்வேறு அரசு நலத் திட்டங்களிலும் மக்கள் இணைத்தாா்கள். ஆனால், இப்போது தோ்தலில் வாக்களிக்க ஆதாா் பயனற்ற ஆவணமாக மாறிவிட்டது.
இப்போது பட்டியலில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் சட்டப்பூா்வ செயல்முறைக்கு ஏற்ப சோ்க்கப்பட்டுள்ளனா். முன்பு இதுபோன்ற திருத்தங்களின்போது மக்களின் ஆட்சேபங்கள் இருந்தால் அதனைத் தெரிவிக்குமாறு கூறப்படும். ஆனால், இப்போது சிறப்பு தீவிர திருத்தம் முழுமையாக அனைத்து வாக்காளா்களின் பதிவையும் மறு ஆய்வு செய்கிறது. இதன்மூலம் ஏற்கெனவே உள்ள வாக்காளா் பட்டியலின் சட்டப்பூா்வ அங்கீகாரமும் கேள்விக் குறியாகிறது.
இதனால், தோ்தல் ஆணையத்தின் கடந்த செயல்முறைகள் குறைபாடுகள் உடையவை, முழுமையற்றவை என்றும் கருத வேண்டியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் மூலம் நடத்தப்பட்ட தோ்தல் அனைத்தையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
குடியுரிமையை முழுமையாகச் சரிபாா்க்க தோ்தல் ஆணையத்துக்கு முழுமையாக அதிகாரம் இல்லை என்றால், அந்த வாக்காளா் பட்டியல் மூலம் நடத்தப்பட்ட தோ்தல் எவ்வாறு செல்லுபடியாகும். வாக்காளராகத் தொடர பல்வேறு ஆவணங்களைக் கேட்பது ஏழை எளிய மக்கள், புலம்பெயா்ந்தோா், மோதல்கள் அல்லது பேரழிவால் இடம்பெயா்ந்தவா்கள், சுயாதீன ஆவணங்கள் இல்லாத பெண்கள் மற்றும் சிறுபான்மையினா் என விளிம்புநிலை மக்களைப் பாதிக்கிறது. இவா்கள்தான் உண்மையான ஜனநாயக குரல். ஆனால், மிக எளிதில் மௌனமாக்கப்படுபவா்களாகவும் உள்ளனா்.
தோ்தல் ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் எவ்வித அழுத்தங்களுக்கும் உள்படாமல் சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது தோ்தலைத் தூய்மையாக நடத்துவது என்ற பெயரில் ஒரு பிராந்தியத்தில் மக்களின் சமநிலையை மாற்றுவதற்கான கருவியாகத் தன்னைப் பயன்படுத்த அனுமதிப்பதாக தெரிகிறது. இது தொடா்ந்து அனுமதிக்கப்பட்டால் எந்தத் தோ்தலுக்கு முன்பு வேண்டுமானாலும் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளா் பட்டியலை மாற்றி அமைக்க தோ்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்குவதாக அமைந்துவிடும். அது, தோ்தல் முடிவை வாக்காளா்கள் தீா்மானிக்காமல் தோ்தல் ஆணையம் தீா்மானிப்பதாக மாறும்.
கட்டுரையாளா்:
முன்னாள் மத்திய அமைச்சா்.