ஸ்ரீஅரவிந்தர் என்னும் ஒளிவிளக்கு!

அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி அவருக்கும் சுதந்திர போராட்டத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து...
அரவிந்தர்
அரவிந்தர்
Published on
Updated on
3 min read

-திருப்பூர் கிருஷ்ணன்

அரவிந்தரின் மேடைப் பேச்சு, அதைக் கேட்கும் அனைவரின் மனத்தையும் கொள்ளை கொள்ளக் கூடியது. திருந்திய உச்சரிப்பு, உணர்ச்சி பொங்கப் பேசும் ஆற்றல், தன் தரப்பை ஆணித்தரமாக நிறுவுவதில் தென்படும் விவாதக் கோணம், முக்கியமாக அந்த மதுரக் குரல்...என்றிப்படி அவரது மேடைப் பேச்சின் சிறப்பம்சங்கள் பல.

அவரது சொற்பொழிவுக்கு ஏராளமான பொதுமக்கள் ரசிகர்களாக இருந்தார்கள். சுதந்திர மேடைகளில் அவர் பேசுகிறார் என்ற அறிவிப்பு வந்தால் ஆயிரக்கணக்கானோர், அவர் பேச்சைக் கேட்க குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். அரசியல் பிரமுகர்களும் அவர் சொற்பொழிவை விரும்பிக் கேட்டு வியந்தார்கள்.

அவரது சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தோற்றுவிப்பதில் கொல்கத்தா பிரமுகரான அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் நன்கு அறிந்துவைத்திருந்தார்.

மகாத்மா காந்தி மட்டுமா, பிரிட்டிஷ் அரசும்கூட அரவிந்தரின் பேச்சாற்றலைப் பற்றி அறிந்து வைத்திருந்தது. மக்களை மயக்கும் சொற்பொழிவாளரான அரவிந்தரை வெளியே விட்டுவைத்தால், நாளுக்கு நாள் மக்களிடையே சுதந்திர வேட்கை அதிகரிக்குமே?

எனவே, அரவிந்தரைக் கைதுசெய்யும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது அது. அதற்கு ஏதுவாக ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. 1908}ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி, முசாபர்பூர் வெடிகுண்டு விபத்தில் இரு வெள்ளைக்காரப் பெண்மணிகள் இறந்துபோனார்கள். அந்த சம்பவத்துக்கும் அரவிந்தருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் காவல் துறையினர் அறிவார்கள்.

அதனால் என்ன? அந்தப் பழியைத் தூக்கி அரவிந்தர் மீது போடுவோம்; அந்த விபத்துக்கு அவர் செய்த சதிதான் காரணம் என்று கூறுவோம். அதனால்தான் அவரைக் கைது செய்கிறோம் என அரவிந்தருக்கு தண்டனை தரப்படுவதை நியாயப்படுத்தி விடுவோம். இப்படி நினைத்த காவல் துறை அரவிந்தரைக் கைது செய்தது. அவர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தான் வழிபடும் கண்ணன் அவனைப் பற்றித் தவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னைச் சிறையில் அடைத்திருக்கிறான் என்பதாக அரவிந்தர் புரிந்துகொண்டார். கண்ணனைக் குறித்து சிறைக்குள்ளேயே தவம் நிகழ்த்தலானார்.

சிறையில் கண்ணன் அவருக்கு தரிசனம் தந்தான். சிறையிலேயே பிறந்தவனுக்கு சிறையில் தரிசனம் தருவதென்ன சிரமமா! முன்னர் அர்ச்சுனனுக்கு போதித்த கீதையை இப்போது அரவிந்தருக்குப் போதித்தான். அர்ச்சுனனுக்கு கீதை போதித்த போது நடந்தது மகாபாரதப் போர்; அரவிந்தருக்கு போதித்தபோது நடந்தது சுதந்திர பாரதப் போர். அர்ச்சுனனுக்குத் தேர்க் குதிரையை அடக்கி கீதை சொன்னான்; அரவிந்தருக்கோ அவரது மனக் குதிரையை அடக்கச் சொல்லி கீதை சொன்னான்.

அர்ச்சுனனுக்குக் கிடைத்தது விஸ்வரூபக் காட்சி; அரவிந்தருக்குக் கிடைத்ததோ விஸ்வமெல்லாம் கண்ணனே என்ற காட்சி. எல்லா இடங்களிலும் கண்ணனைக் கண்டு பக்திப் பரவசத்தில் அரவிந்தர் தன்னை மறந்து வாழ்ந்த காலகட்டம் அது.

அந்தக் காலகட்டமே விசித்திரமாய்த்தான் இருந்தது. புரோகிதர்களும் தேசபக்தி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். மணமக்கள் விதேசித் துணி அணிந்திருந்தால் அவர்கள் அந்தத் திருமணத்தை நடத்திவைக்க மறுத்தார்கள்.

அரவிந்தர் தொடர்பான வழக்கு 274 நாள்கள் நடந்தன. முப்பத்தேழு பேர் அரவிந்தருக்குத் துணைபோன வகையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களை வெளியிட்டதால் நாளிதழ்கள் பரபரப்போடு விற்பனை ஆயின.

அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் அன்றும் இருந்தது. வழக்கு நடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்த்து அரசுத் தரப்பு வழக்குரைஞர்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

ஒரு கைதி அப்ரூவர் ஆனான். ஆனால், அவன் சக கைதிகள் இருவரால் கொலை செய்யப்பட்டான். கொலை செய்த கைதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். வழக்கு நடக்கும்போதே அரசு வழக்குரைஞர்களுள் ஒருவரை ஒருவன் நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். பின்னர் வாஞ்சிநாதனைப்போல், தன்னையும் சுட்டுக்கொண்டு இறந்தான்.

வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக காவல் துறை அதிகாரி பானர்ஜி அழைக்கப்படுவதாக இருந்தது. அவர் கொலையுண்டார்; யார் அந்தக் கொலையைச் செய்தது எனக் கண்டறிய இயலவில்லை. ஷாம்சுல் ஆலம் என்ற இன்னொரு கைதியை ஒருவன் சுட்டுவிட்டு ஓடினான். பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான்.

அரவிந்தர் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்குரைஞருமான சித்தரஞ்சன் தாஸ் வாதிட்டார். முன்னர், அரவிந்தர் தன் மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதங்களையே அரவிந்தர் விடுதலைக்கான சாட்சியங்களாக அவர் மேற்கோள் காட்டினார்.

அந்தக் கடிதங்களில் தனது விருப்பங்கள் என மூன்று விஷயங்களை அரவிந்தர் குறிப்பிட்டிருந்தார். 1. இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். 2. தான் சம்பாதிக்கும் பொருள் அனைத்தையும் இந்திய மக்கள் அனைவருக்கும் கொடுத்துவிட வேண்டும். 3. கடவுளை நேரில் காணவேண்டும்.

தன் மனைவிக்கு எழுதிய அந்தரங்கக் கடிதங்களில்கூட இப்படியெல்லாம் எழுதியிருக்கும் ஒருவர் சதிச் செயலில் ஈடுபட்டிருப்பாரா என சித்தரஞ்சன் தாஸ் எழுப்பிய கேள்வி இந்திய மக்களையும் நீதிபதியின் மனசாட்சியையும் ஒருசேரஉலுக்கியது.

அரசுத் தரப்பு வழக்குரைஞர், அரவிந்தரின் சகோதரர் பரீன், கொலைசெய்யும் சதித் திட்டம் குறித்து அரவிந்தருக்கு எழுதியதாகச் சொல்லப்பட்ட சில கடிதங்களை நீதிமன்றத்தில் வைத்து வாதிட்டார். அந்தக் கடிதங்கள் அனைத்தும் காவல் துறையினரின் தயாரிப்பே என்பதை சித்தரஞ்சன்தாஸ் தன் அபாரமான வாதத் திறத்தால் நிரூபித்தார்.

"டியர் பிரதர்' என்று அந்தக் கடிதங்கள் தொடங்கின. அப்படி பரீன் தன் சகோதரரை அழைக்க மாட்டார். முழுப் பெயரையும் எழுதி பரீன் கையொப்பமிட்டிருந்தார். அப்படி அவர் கையொப்பம் இடமாட்டார் என்பதையெல்லாம் சித்தரஞ்சன் தாஸ் ஆதாரங்களோடு முன்வைத்தார்.

"எதிர்காலத்தில் கடவுள் என்றே மக்கள் கொண்டாடப் போகிற ஒருவரை பிரிட்டிஷ் அரசு நீதிமன்றத்தில் நிற்கவைத்து விசாரிப்பது நியாயம்தானா?' என சித்தரஞ்சன் தாஸ் கம்பீரமாக அறைகூவியதும் நீதிமன்ற வளாகத்தில் மக்களிடையே பெரும் வியப்போடு கூடிய மௌனம் ஏற்பட்டது. நீதிபதி பீச் கிராப்ட் "அரவிந்தர் மீது எந்தக் குற்றமும் இல்லை' என அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

பின்னர், அரவிந்தர் உத்தர்பாரா என்ற இடத்தில் சொற்பொழிவாற்றும்போது, தான் சிறையில் கண்ணனை நேரில் கண்டதாக மேடையில் அறிவித்ததும், பின்னர் புதுச்சேரி வந்து தவம் செய்ததும் எல்லாம் கட்டுக் கதைகள் அல்ல; அண்மைக்கால வரலாறு.

அரவிந்தரின் விடுதலைக்குக் காரணமாக இருந்த சித்தரஞ்சன் தாஸ் சுதந்திரப் போரில் ஈடுபட்டு பல சிறைவாசங்களை அனுபவித்தார். தன் கடைசிக் காலங்களில் புதுச்சேரிக்கு வந்து அரவிந்தரை தரிசித்து, அரவிந்தரின் தத்துவங்களில் சரணடைந்து பின்னர் காலமானார்.

அரவிந்தரின் சகோதரர் பரீன் கோஷ் மரண தண்டனை பெற்றார். பின்னர், அது ஆயுள் தண்டனை ஆயிற்று. அந்தமான் சென்று இறுதிக் காலங்களில் அவரும்அரவிந்தர் தத்துவங்களில் புகலடைந்தார்.

அரவிந்தர் நிரந்தரமாக புதுச்சேரி சென்று ஆன்மிக வாழ்க்கை வாழ முடிவெடுத்தது குறித்து மகாத்மா காந்தி கவலை கொண்டார். "முழுமையான ஆன்மிகத்தை சுதந்திரத்திற்குப் பிறகு வைத்துக் கொள்ளலாமே, இப்போது நாடு சுதந்திரம் பெறுவதல்லவா முக்கியம்?, அரவிந்தரின் அற்புதமான பேச்சாற்றல் சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்படாமல் போகிறதே?' என்றெல்லாம் மகாத்மா சிந்தித்தார்.

தேவதாஸ் காந்தி, லாலா லஜபதி ராய் இருவரையும் இருவேறு சந்தர்ப்பங்களில் புதுச்சேரிக்கு அனுப்பி, தன் கருத்தை அரவிந்தரிடம் வலியுறுத்தச் சொன்னார்.

"இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை நான் மறந்துவிடவில்லை. இப்போதும்கூட தியான ரீதியில் இந்திய சுதந்திரத்திற்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இதை மகாத்மா காந்தியிடம் சொல்லுங்கள். நான் அப்படிப் பாடுபடுவது உண்மை என்பதை கண்ணன் சுதந்திர வரலாற்றில் எவ்விதமேனும் முத்திரைப் பதித்துத் தெரிவிப்பான்!' என பதில் சொல்லி அனுப்பினார் அரவிந்தர்.

இதுநடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தற்செயலாக அரவிந்தரின் பிறந்த நாளாக அமைந்தது! அது தற்செயல்தானா? பாரதம் சுதந்திரம் பெற்றதில் அரவிந்தருக்கு இருந்த பங்கை கண்ணன் அவ்விதம் தெளிவாக்கினான்.

தியாகியாக மலர்ந்து, மகானாக வளர்ந்து, தெய்வமாகவே உயர்ந்த அரவிந்தர், பாரதம் உலக அரங்கில் மிகப் பெரும் மேன்மைகளை அடைந்து தலைநிமிர்ந்து நிற்கும் என அருளாசி வழங்கியிருக்கிறார். அது பலிக்கும்நாள் வெகு தொலைவில் இல்லை.

(இன்று ஸ்ரீஅரவிந்தரின் பிறந்த நாள்)

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com