
உலகம் எங்கும் ஆங்காங்கு பல நாடுகளில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. போரின் இறுதியில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடக்கிறது. அது முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடிவில்லாத இந்தப் போரும், பேச்சுவார்த்தையும் எங்கே போய் முடியுமோ என்ற கவலையும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது.
உலக வல்லரசான அமெரிக்காவும், ரஷியாவும் இந்தப் போர்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போர்களைத் தூண்டி விடுகின்றன. இப்போது போர்கள் எல்லாமே ஏவுகணைகளின் போர்களாகவே மாறி விட்டன.
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கினைத் தாக்கி அழிக்கின்றன. பல காலமாகப் பாடுபட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் தகர்க்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அழிப்பது எப்போதும் எளிய செயலாகும். அந்த நகரங்களைக் கட்டி எழுப்புவதற்கு எத்தனை காலமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதற்குப் பின்னால் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எடுத்துக் காட்டியே அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. "குரங்கு கையில் கொள்ளியைக் கொடுத்த கதையே' நினைவுக்கு வருகிறது.
"எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்; பாகிஸ்தானைத் தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்...'' என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் பேசியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசீம் முனீருக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்து அளித்தார். இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு அவர் அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அமெரிக்காவின் உயர் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களை அவர் சந்தித்தார். அதன் பிறகு, அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார். இது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாகும்.
இனி ஒருமுறை பாகிஸ்தானுடன் மோதினால் கடுமையான பதிலடி தரப்படும் என அண்மையில் நிகழ்ந்த மோதல் மூலம் இந்தியாவுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அல்ல; அது முழுவதுமாக முடிவடையாத சர்வதேச விவகாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அணு ஆயுதத்தை வைத்து மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றுதான். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது; தேசப் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தானுக்கு பதிலடியாகக் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரண் அடைய மறுப்பதாகக் கூறி, நேச நாடுகள் சார்பில் இரண்டு அணுகுண்டுகள் அடுத்தடுத்துப் போடப்பட்டன. 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட கொடுமையை மறக்க முடியுமா?
ஜப்பானில் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆம் நினைவு தினம் அந்நகரில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அணுகுண்டு வீசப்பட்ட நேரமான காலை 8.15 மணிக்கு அதற்கான நினைவிடத்தில் மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஜப்பான் பிரதமர், மேயர் உள்ளிட்ட தலைவர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர். அந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. அவர்களின் சராசரி வயது 86-ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த நினைவு நாள் பலருக்கு இறுதி மைல்கல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கடந்த 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமா நகரில் நடந்த முதல் தாக்குதலில் 1.4 லட்சம் பேர் உயிர் இழந்தனர். மூன்று நாள்களுக்குப் பிறகு, நாகசாகியில் நடத்தப்பட்ட இரண்டாவது வீச்சில் சுமார் 70,000 பேர் உயிர் இழந்தனர். பின்னர், ஆகஸ்ட் 14-இல் ஜப்பான் சரணடைந்து, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் முதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அன்றுதான் சர்வாதிகாரி ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜெர்மனி, போலந்து மீது படையெடுத்தன. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 3-ஆம் தேதி ஜெர்மனி மீது ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸ் போர்ப் பிரகடனம் செய்தன.
1939 ஜூன் பிற்பகுதி முதல் 1941-ஆம் ஆண்டு ஆரம்பம் வரை ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் ஜெர்மனி பெரும்பாலான ஐரோப்பியக் கண்டப் பகுதிகளை வென்று, தங்கள் கட்டுப்பாட்டின் கீழே கொண்டு வந்தது. இத்தாலி மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து அச்சு நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது.
இதன் தொடர்ந்த வெற்றிக்குப் பிறகு ஜெர்மனியும், இத்தாலியும் வட ஆப்பிரிக்காவிலும், சோவியத் யூனியன் ஸ்டாலின் கிரேட் போரிலும் தோற்கடிக்கப்பட்டன. 1943-இல் அச்சு நாடுகள் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்தன. அனைத்துப் போர் முனைகளிலும் நேச நாடுகள் வெற்றியலைகளைப் பதிவு செய்தன.
ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்புகள் விடுவிக்கப்பட்டன. மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் யூனியன் ஜெர்மனி மீது படையெடுத்தது ஆகியவற்றுடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. சோவியத் துருப்புகளிடம் ஜெர்மனி வீழ்ந்தது. 1945-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி ஜெர்மனி நிபந்தனையற்ற சரணடைவை ஏற்றது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரண்டாம் உலகப் போரில் அனைத்து உலக வல்லரசுகளும் பங்கெடுத்துக் கொண்டன. அவை நேச நாடுகள் மற்றும் அச்சு நாடுகள் என்று இரண்டு எதிரெதிர் கூட்டணிகளைக் கொண்டிருந்தன. இதை ஓர் ஒட்டுமொத்தப் போர் என்று கூறலாம்.
இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேரடியாக பங்கேற்றனர். இப்போரில் பங்கேற்ற நாடுகள் தங்கள் ஒட்டுமொத்த பொருளாதார, தொழில் துறை, மற்றும் அறிவியல் செயலாற்றலைப் போர் வெற்றிக்குப் பயன்படுத்தின. இதுவரை அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது.
இவ்வாறு போர்களால் ஏற்படும் துயரங்களையும், அணுகுண்டுகளால் ஜப்பானில் ஏற்பட்ட விளைவுகளையும் இரண்டாம் உலகப் போர் இன்னும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால், உலக நாடுகள் அணுகுண்டு தயாரிப்பதை ஐ.நா.வும், வல்லரசு நாடுகளும் எதிர்த்து வருகின்றன. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை எதிர்ப்பதற்கு இதுதான் காரணம்.
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இப்போது எச்சரிக்கை செய்துள்ளன. கெடு தேதியான ஆகஸ்ட் இறுதிக்குள் மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் புதிய அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கி ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
இ3 நாடுகளின் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) பிரதிநிதிகள் இஸ்தான்புல் நகரில் உள்ள ஈரான் துணைத் தூதரகக் கட்டடத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் கடந்த மாதம் ஈடுபட்டனர். இஸ்ரேல்-ஈரானுக்கு இடையே 12 நாள்கள் நடைபெற்ற போருக்குப் பிறகும், ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்க விமானங்கள் தாக்கியதற்குப் பிறகும் நடைபெற்ற முதல் அணுசக்தி பேச்சுவார்த்தை இது.
அப்போது, ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஆகஸ்ட் இறுதிக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கெடு தேதிக்குள் நிபந்தனைகளை நிறைவேற்றா விட்டால் 2015 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதிக்கப் போவதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி எச்சரிக்கை செய்துள்ளன.
1974-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி இந்தியா, பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த அணுகுண்டு சோதனைக்கு "சிரிக்கும் புத்தர்' என்று பெயர் சூட்டியிருந்தனர். அணுகுண்டு வெடித்த மே 18 புத்தர் பிறந்த நாளாகும். அதனால், அந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அன்பின் வடிவமான புத்தர் பெயரை ஓர் அணுகுண்டு பரிசோதனைக்கு வைத்திருக்க வேண்டுமா? ஆக்கப்பூர்வ பணிகளுக்கே இந்த "சிரிக்கும் புத்தர்' அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. எனவே, அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்கே பயன்படுத்துவோம்; அழிவுக்கும், அச்சுறுத்தலுக்கும் வேண்டாம் என்பதே உலக மக்களின் ஒருமித்த வேண்டுகோள்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.