Tamil Nadu Engineering Admission (TNEA) counselling
கோப்புப்படம்

விருப்பத் தேர்வான பொறியியல் படிப்பு

பள்ளிக் கல்வியில் மேல்நிலைப் படிப்புக்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் ஒரு தொழில் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.
Published on

பள்ளிக் கல்வியில் மேல்நிலைப் படிப்புக்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் ஒரு தொழில் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். அதில் பொறியியல் படிப்புதான் பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள ஏறத்தாழ 2 லட்சம் இடங்களுக்கு 2.39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நிகழாண்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், பொறியியல் படிப்பை முடித்த பிறகு, படிப்புக்கேற்ற பணியில் சேர்வதில் அவர்களுக்கு தொடர்ந்து சிக்கல்கள் நீடிக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டியது ஒன்றாகும்.

2024-25-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. நாடு முழுவதும் 12.53 லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இது 2017-18-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 67% அதிகமாகும். மேலும், காலியிட விகிதங்களும் 16.36% ஆகக் குறைந்தன.

2024-25-இல் அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக கணினி அறிவியல் பாடப் பிரிவு (3,90,245) முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து இயந்திரவியல் (2,36,909), சிவில் (1,72,936), மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலும் (1,60,450), மின்னியல் பொறியியலும் (1,25,902) இருந்தன. இந்தத் தகவலை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

2018-19-ஆம் ஆண்டில் 7.22 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை, 2021-22 முதல் அதிகரிக்கத் தொடங்கியது. அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமே இந்த சேர்க்கை அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

கணினி அறிவியல் படிப்பு அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மாணவர்களிடையே நிலவி வருகிறது. இதனால், பல கல்வி நிறுவனங்கள் கணினி அறிவியல் படிப்புகளை புதிதாகவும் தொடங்கியுள்ளன. ஆனால், கணினி அறிவியல் படிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் எதிர்பார்க்கப்படும் அளவில் வேலைவாய்ப்புகள் எதிர்காலத்தில் அதிகரிக்காமலும் போகலாம்.

பொறியியல் படிப்பில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரோபாட்டிக்ஸ், இணையப் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்திகள் போன்ற அதிநவீன துறைகளில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

சிறந்த படிப்புடன் சிறந்த கல்லூரியை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிப்பது மிகவும் முக்கியமாகும். பொறியியல் தொழில் படிப்பை முடித்த உடனே ஏதேனும் ஒரு பணியில் உடனடியாக சேரும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்காலத்தில் எல்லா பணிகளுக்குமே முன் அனுபவம் தேவைப்படுகிறது.

ஏற்கெனவே பொறியியல் படிப்பில் சாதித்துள்ள மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் கலந்து ஆலோசித்து சரியான படிப்பில் சரியான கல்லூரியில் சேர முனையலாம். இப்போது, அதிகமாக கணினி அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேருகிறார்கள். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேலைச் சந்தையில் இவர்களுடைய அளிப்பு அதிகமாக இருக்கும். அளிப்பு அதிகமாக இருந்தால், அந்தப் பொருளுக்கும் சேவைக்கும் தேவை குறைவாக இருக்கும் என்கிறது பொருளாதாரக் கல்வி.

எனவே, அனைவரும் ஒரே துறையில் சேர்ந்து படிக்காமல் தனக்கு எதிர்கால வேலைவாய்ப்பு உள்ள பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிப்பதே மாணவர்களின் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும். இளைமைக் காலத்தில் நான்காண்டு காலம் என்பது ஒரு நீண்ட, மீண்டும் பெற முடியாத காலமாகும். இந்தத் தருணத்தை பயனுள்ள முறையில் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு மாணவரின் வாழ்க்கையில் தொழில் கல்வி நிலையான பணி ஒன்றில் சேரவோ, ஒரு தொழில் முனைவராக மாறவோ வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. தொழில் கல்வி படிப்பின்போது, ஒவ்வொரு மணித்துளியையும் மாணவர்கள் தம் வாழ்வுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் நூலகம், ஆய்வகம், தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல் போன்றவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீய நட்புகளையும், போதைப்பொருள்களின் பயன்பாட்டையும் ஒதுக்கிவிட வேண்டும். சாத்தியமாகும் அனைத்து இடங்களிலும் அரசின் நலத் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டு பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும், பொறியியல் கல்லூரி நிர்வாகங்களும் எதிர்கால வேலைச் சந்தையில் தேவைப்படும் திறன்களை தமது மாணவர்களுக்கு அளிப்பதில் சிறப்பு முனைப்பைக் காட்ட வேண்டும். பெருகிவரும் தொழில்நுட்ப அறிவையும், திறனையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் வேண்டும்.

வெளிநாடுகளில் பணிகளைப் பெறுவதற்கு ஏதுவாக பேச்சு மொழி ஆங்கிலத்திலும், ஏதாவது வெளிநாட்டு மொழியிலும் அவர்களுக்கு புலமையை ஏற்படுத்தும் பயிற்சிகளை அளிக்கலாம். நாட்டில் தொழில் கல்வி சிறப்பாக அமைந்தால் எதிர்கால இந்தியா சிறப்பாக அமையும்.

கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் பொறியியல் தொழில் கல்வி வேலைவாய்ப்பு வல்லமை பெற்றதாக மாறவேண்டும். எனவே, எந்தத் தொழில் படிப்பில் சேர்ந்து படித்தாலும், மாணவரும் அவர்களின் பெற்றோரும் கவனமுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. தொழில் படிப்பே மாணவர் வாழ்வின் விடிவெள்ளி என்றால் அது மிகையான கூற்றல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com