
இரு துருவங்களாக நிற்கும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷியாவும் ஓரிடத்தில் சங்கமித்தல் சாத்தியமா? என்ற வினாவுடனும் வியப்புடனும் உலகமே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரின் சந்திப்பை உற்று நோக்கியது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் முடிவுகள் உலகத்தை அமைதி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று உலகம் எதிர்பார்த்தது.
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஆக்கப்பூர்வமான பாதைக்கு இந்தப் பேச்சுவார்த்தை இட்டுச் செல்லும் என சந்திப்புக்கு முன்பு நம்பப்பட்டது. ஆனால், போர்நிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை; அமைதி ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.
அலாஸ்கா சந்திப்புக்குப் பிறகு டிரம்ப்பும் புதினும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
அலாஸ்காவில் புதினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்புக் கம்பள வரவேற்பு, ராணுவ சாகசம், நான்கு அமெரிக்கப் போர் விமானங்களின் பாதுகாப்பு, தனது வாகனத்திலேயே டிரம்ப் வரவேற்றது என சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்த இந்த சந்திப்பில் டிரம்ப் அடைந்தது யாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தான் பதவியேற்றதும் முதல் நாளிலேயே போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த டிரம்ப், தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டுவதில்கூட தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பதே உண்மை.
கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக ரஷிய அதிபர் அமெரிக்க மண்ணில் கால் பதித்துள்ளார். ஆனால், இந்த சந்திப்பில் ஏற்பட்டுள்ள ஒரே முடிவு "அடுத்த முறை மாஸ்கோவில்' என புதின் கூறியிருப்பது மட்டும்தான். அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது; எந்த ஒப்பந்தமும் பொதுவெளியில் வைக்கப்படவில்லை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் - புதின் சந்திப்பு, உக்ரைன் போரில் அமைதியைக் கொண்டுவர மிக முக்கியமான நகர்வாகவும், பல குழப்பங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் அமையும் எனக் கருதப்பட்டது. ஆனால், இரு தலைவர்கள் இடையேயான மூன்று மணிநேர சந்திப்பு பதில்களைவிடவும் புதிய பல கேள்விகளையே எழுப்பியுள்ளது.
இந்த சந்திப்பு சர்வதேச அளவில் ரஷியாவின் தனிமைப்படுத்தலை உடைத்துள்ளது என்றும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான களத்தை உருவாக்கியுள்ளது என்றும் பார்க்கப்படுகிறது. இதனால், புதினுக்கு லாபம் என்றும், டிரம்ப் தனது மதிப்பை சற்று இழந்திருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இரு தரப்பிலிருந்தும் ஐந்து கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படும் என பத்திரிகையாளர்களிடம் சந்திப்புக்கு முன்பாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், டிரம்பும் புதினும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமலேயே சென்றுவிட்டனர். இதனால், இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. இருபெரும் வல்லரசுகள் ஒருவரை ஒருவர் விஞ்சுவதில் கவனம் செலுத்தியிருக்கின்றனவே அன்றி உலக அமைதி பற்றி சிந்திக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
உக்ரைன் போருக்குப் பிறகு, மேலை நாடுகளால் தவிர்க்கப்பட்டு வந்த புதினுக்கு இந்த சந்திப்பு முக்கியமானது. போருக்குப் பிறகு, அவர் ரஷிய கூட்டமைப்பின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இதுவரை பயணம் செய்துள்ளார். அதனால், இந்த சந்திப்பே புதினுக்கு வெற்றிதான்.
ரஷிய அதிபராக இருந்து வரும் 25 ஆண்டுகளில், புதின் சந்திக்காத கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். அலாஸ்காவில் இறங்கிய சில நிமிஷங்களில் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் உரத்த குரலில் கேள்வி எழுப்பினார். "பொதுமக்களைக் கொல்வதை நீங்கள் நிறுத்துவீர்களா?' இந்தக் கேள்வியைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றார்.
பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தபோதும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, ரஷிய மொழியில் முத்தரப்பு சந்திப்புக்காக உக்ரைன் அதிபர் ùஸலென்ஸ்கியை சந்திக்கத் தயாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சிறு புன்னகையைத் தவிர புதினிடமிருந்து வேறு எந்தப் பதிலும் இல்லை.
சந்திப்புக்குப் பிறகு பேசிய புதின், பேச்சுவார்த்தையில் பரஸ்பர மரியாதைக்கான ஆக்கப்பூர்வமான சூழ்நிலை நிலவியதாகப் பாராட்டினார். அதன்பிறகு, ரஷியாவின் பகுதியாக அலாஸ்கா இருந்த வரலாற்றைப் பற்றியும் பேசினார். இந்தப் பேச்சு ஆழ்ந்த அரசியலை உள்ளடக்கியது.
புதின் பேசியபோது டிரம்ப் அமைதியாக நின்றிருந்தார். சந்திப்பின் நோக்கமே உக்ரைன் போர்தான். டிரம்ப் பேசியபோது உக்ரைன் குறித்தோ அல்லது போர்நிறுத்தத்துக்கான சாத்தியம் குறித்தோ ஒருமுறைகூட குறிப்பிடவில்லை. போர்நிறுத்தம் ஏற்படவில்லையென்றால் தீவிரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என டிரம்ப் எச்சரித்திருந்தது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.
இரு வல்லரசுகளும் உறவாடுவதுபோல் மோதிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தியாவின் நிலை குறித்து கேள்வி எழுகிறது. நிகழ் ஆகஸ்ட் மாதம்முதல் இந்தியாவுக்கு கூடுதல் வரிவிதிப்பைச் செய்ய இருப்பதாக கடந்த மாதம் பேசிய டிரம்ப் அதை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர், ஏழாம் தேதி கூடுதல் வரிவிதிப்பை அறிவித்துவிட்டு 27-ஆம் தேதிதான் அமலுக்கு வருகிறது என்று கூறியிருக்கிறார். இந்த இடைவெளியும் நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது.
வல்லரசுகளின் சந்திப்பு நடந்து முடிந்திருக்கும் சூழலில், இந்தியா ரஷிய எண்ணெயை வாங்குவது குறித்து மீண்டும் டிரம்ப் பேசியிருக்கிறார். அலாஸ்கா சந்திப்பிற்கு சில நாள்களுக்கு முன்பு, இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியா மீதான கூடுதல் வரிகள் அதிகரிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த நிலையில், இந்தியா மீது இன்னும் கூடுதல் வரிகள் விதிக்கப்படுமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.
அமெரிக்கா-ரஷியா பேச்சுவார்த்தையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது. "அலாஸ்காவில் டிரம்ப்-புதின் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நோக்கிய அவர்களின் தலைமைத்துவம் மிகவும் பாராட்டுதலுக்குரியது" எனவும், "பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்தியா பாராட்டுகிறது. அடுத்தகட்ட நகர்வுகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் மட்டுமே அடைய முடியும். உக்ரைனில் நடைபெற்று வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உலகம் விரும்புகிறது.' என்றும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போருக்கு முன்பாக இந்தியா தனது எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய கிழக்கு நாடுகளையே அதிகம் சார்ந்திருந்தது. 2017-18-ஆம் நிதியாண்டில் இந்திய எண்ணெய் கொள்முதலில் ரஷியாவின் பங்கு 1.3% மட்டுமே. ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு இந்த நிலைமை மாறிவிட்டது. ரஷியா கச்சா எண்ணெயின் விலை சரிந்ததால் அந்நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது அதிகரித்தது. 2024-25-ஆம் நிதியாண்டில் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 35% ஆக உள்ளது.
தான் விதித்த வரிகளால் இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவைத்துள்ளதாக டிரம்ப் கூறுகிறார். ரஷியா அதன் எண்ணெய்க்கான முக்கிய வாடிக்கையாளரை இழந்துள்ளது. ரஷியாவின் எண்ணெய் வர்த்தகத்தின் 40% இந்தியாவுடன் இருந்தது. நான் இப்போது விதித்துள்ள வரிகள் அவர்களுக்கு மோசமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்தக் கருத்துக்கு இந்தியா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆனால், டிரம்பின் கூடுதல் வரி அறிவிப்புக்குப் பிறகு ரஷிய எண்ணெயை இந்தியா வாங்குவது நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் வரையில் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெயில் 38% ரஷியாவிலிருந்து வந்து கொண்டிருந்தது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 16 லட்சம் பேரல்களாக இருந்த தினசரி இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 20 லட்சம் பேரல்களாக அதிகரித்துள்ளது.
ஆசிய நாடுகளிலேயே அதிகபட்சமாக இந்தியா மீது தான் 50% வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விகிதத்துக்கு இந்தியா வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிலிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை வாங்குகின்றன ஆனால், இந்தியா மீது மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, இந்தியா மீதான கூடுதல் 25% வரி உள்ளிட்டவை வழக்கம்போல் தள்ளி வைக்கப்படலாம்.
புதினுடனான சந்திப்பு விரும்பியபடி அமையாததால், அந்தக் கோபத்தை அமெரிக்கா இந்தியா மீது காட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற கருத்துக்கு முரணாக இந்தியா மீதான வரிகள் பற்றிய கேள்விக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்துதான் அதுகுறித்து யோசிக்க வேண்டும். தற்போது அதுகுறித்து யோசிக்க வேண்டியதில்லை என டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் கருத்து, எந்த சூழ்நிலையிலும் இந்தியா தனக்கான வழிகளைத் தேடிக் கண்டடையும், வல்லரசுகளே ஆனாலும் இந்தியாவை எளிதாக நினைத்துவிட முடியாது, இந்தியாவை டிரம்ப் குறைத்து மதிப்பிடவில்லை ஆகிய கருத்துகளை உறுதி செய்கிறது.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.