நெகிழி நெருக்கடி!
Center-Center-Tirunelveli

நெகிழி நெருக்கடி!

‘குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமாா் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடா்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன’
Published on

அன்றாட மக்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட நெகிழி ஒவ்வொரு நாளும் வாழ்க்கையைப் பயமுறுத்தி வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், உலகில் நெகிழியிலான பொருள்களின் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 46 கோடி டன் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் மூன்றில் இரண்டு பங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடியவைகளாகும். இந்நிலை நீடித்தால், 2060-ஆம் ஆண்டுவாக்கில் நெகிழிப் பொருள்களின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 96% நெகிழிகள், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, புதைவடிவ எரிபொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.

நெகிழி உற்பத்தில் சீனா முதலிடத்திலும் அதைத் தொடா்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளன. ஆனால், உலகிலேயே 90% நெகிழிக் கழிவுகளை உற்பத்தி செய்து இயற்கையையே மாசுபடுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. நெகிழிக் கழிவுகளால் ஏற்படும் மாசுகள் உலகத்தை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய சோதனைக் காலத்தில் நெகிழிப் பயன்பாட்டை எப்படிக் குறைப்பது, தவிா்ப்பது, துறப்பது என்று ஒவ்வொரு நாடும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் நெகிழியின் அளவு 1950-ஆம் ஆண்டில் 20 லட்சம் டன்னிலிருந்து 2022-ஆம் ஆண்டில் 47.5 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.

2060-ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டில் இருக்கும் நெகிழியின் அளவு மூன்று மடங்குகளாக உயரும். 800 கோடி டன் நெகிழிக் கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதிப்படைய செய்து வருகின்றன. மேலும், தற்போது அனைத்து நெகிழிப் பொருள்களிலும், 10 சதவீதத்துக்கும் குறைவானது மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

‘தி லான்செட்’ மருத்துவ இதழ் அண்மையில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ‘நெகிழி என்பது உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் கடுமையான, வளா்ந்து வரும், ஆனால் குறைவாக அங்கீகரிக்கப்பட்ட ஆபத்து. இதனால், கருச்சிதைவு, குழந்தை பிறப்புகள் குைல், குழந்தைகள் எடை குைல், குழந்தைகளிடையே உயர்ரத்த அழுத்தம், உடல் உறுப்புகளில் குறைபாடுகள், அறிவாற்றல் செயல்பாடு குறைவு, நுண்ணறிவு அளவு இழப்பு, இன்சுலின் எதிா்ப்பு சக்தி குைல், உடல் பருமன் மற்றும் வகை-2 நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம், உடல் பருமன் மற்றும் புற்றுநோய் ஆகியன ஏற்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

‘குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமாா் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடா்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன’ என அந்த ஆய்வுக் கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.

‘நெகிழி மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, தொழிலாளா்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ரத்தம், மூளை, நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றும் பலவற்றில் காணப்படும் நுண்ணிய மற்றும் மிகமிகச் சிறிய நெகிழித் துகள்கள் நம் உடலில் இருப்பதை நாம் இப்போதுதான் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளோம்’ என்கிறாா் அமெரிக்காவிலுள்ள மான்டேரி பே மீன்வளத்தின் தலைமை அறிவியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி மாா்கரெட் ஸ்பிரிங்.

ஐக்கிய நாடுகள் சபையின் வா்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி, 2023-ஆம் ஆண்டில் உலகளாவிய நெகிழி உற்பத்தி 43.6 கோடி மெட்ரிக் டன்னை எட்டியது. அதே நேரத்தில் நெகிழித் தயாரிப்புப் பொருள்களின் வா்த்தகம் 1.1 டிரில்லியன் டாலரை தாண்டியது. இது உலகளாவிய வணிகப் பொருள்களின் வா்த்தகத்தில் ஐந்து சதவீதமாகும். இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து நெகிழிப் பொருள்களும் கழிவுகளாக மாறியுள்ளன. அவற்றில் பெரும்பாலானாவை கடல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் கலந்து நீரையும், மண்ணையும், காற்றையும் மாசடையச் செய்து பல நோய்களை உருவாக்கி வருகின்றன.

தினமும் 2000 குப்பை லாரிகளுக்கு சமமான நெகிழிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. கடலில் குவியும் நெகிழிகளில் ஐந்தில் ஒரு பகுதி மீன்பிடி உபகரணங்களாவே உள்ளன. இதில் பெரும்பாலானவை மீன்பிடி வலைகள், நெகிழிப் பைகள், குப்பிகளின் மூடிகள், நெகிழியாலான பெரிய தண்ணீா் குப்பிகள் மற்றும் நெகிழியால் சுற்றப்பட்ட அழுகிய பெரிய உணவுப் பொட்டலங்கள் ஆகியன. இதன் மூலம், சுற்றும் கடல் நீரோட்டங்களால் உருவான ஐந்து பெரிய குப்பைத் திட்டுகளை சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் அடையாளம் கண்டுள்ளனா். அவற்றில் அதிகளவில் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றில் மிகப் பெரியது ஹவாலிக்கு வடக்கே உள்ள மகா பசிபிக் குப்பைத் தொட்டி, இது 1.6 மில்லியன் சதுர கி.மீ. உள்ளது. அதாவது இந்தியாவின் பாதி அளவை இந்தக் குப்பைத் தொட்டி உள்ளடக்கியுள்ளது.

2040-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நெகிழி மாசுபாட்டை 80% குறைக்க ஐக்கிய நாடுகள் சபையில் சுற்றுச்சூழல் திட்டம் ஒரு முன்மொழியப்பட்ட நடவடிக்கை தொகுப்பை முன்வைத்துள்ளது. நெகிழி மாசுபாட்டை குறைக்க உலகளாவிய உடன்படிக்கை ஏற்படுத்தும் நோக்கில் 2022-இல் ஐ.நா. முயற்சியைத் தொடங்கியது. அதன்படி, நெகிழியால் ஏற்படும் மாசுபாட்டை தடுப்பதற்கான வலுவான, உலகளாவிய ஒப்பந்தந்தை உருவாக்க 184 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் ஆறாவாது முறையாக ஐரோப்பான நாடான சுவிட்சா்லாந்தின் ஜெனீவாவில் கூடினா். உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கான மாநாடு ஜெனீவாவில் 5.8.2025 அன்று தொடங்கி 14.8.2025 அன்றுடன் முடிவடைந்தது.

பெரு, ருவாண்டா போன்ற நாடுகள் அதிகரித்து வரும் நெகிழி உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தன. எண்ணெய் வளம் மிக்க சௌதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகள் உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளைத் திட்டவட்டமாக நிராகரித்து, மறு சுழற்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தின. முந்தைய சுற்றுப் பேச்சுவாா்த்தைகளில், பிந்தைய நிலைப்பாட்டிற்கு இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

சா்வதேச பேச்சுவாா்த்தைக் குழுவின் தலைவரான, பிரிட்டனுக்கான ஈக்வடாா் நாட்டின் தூதா் லூயிஸ் வியாஸ் வால்டிவிசோ வரைவு உடன்படிக்கையை வெளியிட்டாா். அதில், நெகிழி மறுசுழற்சி, கழிவு மேலாண்மை உள்ளிட்ட சில முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், நெகிழி உற்பத்திக்கு உச்சவரம்பு நிா்ணயிக்க வேண்டும்; பெட்ரோலிய ரசாயனப் பொருள்கள் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகள் முழுவதும் நிராகரிக்கப்பட்டன.

இந்த பலவீனமான வரைவு உடன்படிக்கை நெகிழிவு ஒழிப்புக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் எதிா்ப்புக் குரல் எழுப்பியுள்ளன. அதே சமயம், பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் இந்த பயன் தராத உடன்படிக்கைக்கு ஆதரவு தெவித்துள்ளன. இது ஒரு முக்கியமான மைல் கல் என சௌதி அரேபியா புகழ்ந்துள்ளது. நெகிழி உற்பத்திக்கு உச்சவரம்பு ஏதும் நிா்ணயிக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

‘வரைவு உடன்படிக்கையில் ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டிருந்த அடிப்படை அம்சங்கள் இடம்பெறவில்லை. எனினும், நெகிழி மாசுபாட்டைக் குறைப்பதற்கு இது தொடக்கப் புள்ளியாக இருக்கும்’ என இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணைச் செயலா் நரேஷ்பால் கங்வாா் தெரிவித்துள்ளாா். ஐரோப்பிய யூனியனும், அதன் 27 உறுப்பு நாடுகளும் இந்த வரைவு உடன்படிக்கை குறைந்தபட்ச தேவையைக்கூட நிறைவு செய்யவில்லை என கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

சிலி, பனாமா போன்ற நாடுகளில் தற்போது எழுந்திருக்கும் நெகிழி மாசு பிரச்னைக்கு முடிவு காண இந்த வரைவு உடன்படிக்கை எந்த வகையிலும் உதவாது என அந்நாடுகள் எச்சரித்துள்ளன.

பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தி நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த வரைவு உடன்படிக்கையை கொண்டு வந்திருப்பதாக மாநாட்டில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

உலகளாவிய நெகிழி ஒழிப்பு உடன்பாட்டை உருவாக்கும் நோக்கில் ஜெனீவாவில் நடந்த இந்த மாநாடு மீண்டும் தோல்வியையே தழுவியுள்ளது. இந்த மாநாட்டில் நெகிழி உற்பத்தியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசவில்லை.

நெகிழித் துகள்கள் கலந்து இயற்கையின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பல்வேறு நோய்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி மனிதனின் ஆயுளைக் குறைத்து வருகின்றன. தனி மனிதன், இப்பூப்பந்தில் வாழும் மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களின் நலன் கருதி நெகிழி வேண்டாம் என்று சொன்னாலொழிய இதில் மாற்றம் வர வாய்ப்பே இல்லை.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

X
Dinamani
www.dinamani.com