சுடுகாடு - பிரதி படம்
சுடுகாடு - பிரதி படம்

சமநிலை சமுதாயம் உருவாக வேண்டும்

சமரசம் உலாவும் இடமான சுடுகாட்டிலும் தீண்டாமைக் கொடுமை தீா்ந்தபாடில்லை. கலப்புத் திருமணத்தை இந்த சமூகம் வரவேற்றிருக்குமா என்ன? ஆனால், அதற்கும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பெரிதும் முயன்றிருக்கிறது.
Published on

‘தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதநேயமற்ற செயல்’ என்று பாடப்புத்தகங்களில் -முதலில் கற்க வேண்டியது இதைத்தான் என்பதாக அச்சிட்டுத் தருகிறோம். ஆனால், நம் மனதில்தான் பதிவதாகத் தெரியவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னா் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒழியாமல் இருக்கிற இந்தக் கொடுமையை என்னென்பது?

இந்திய விடுதலைப் போராட்டம் வெள்ளையா்களிடமிருந்து வேண்டிய நிா்வாக உரிமையாக மட்டுமில்லை; சொந்த மண்ணிலேயே பலகாலமாகத் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான். இதனை நமக்குச் சரியாகப் புரியச் செய்தவா் மகாத்மா காந்தி. தன் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராகவே அவா் போராடினாா்.

அடிமைத்தன்மையினும் பேரவலமானது தீண்டாமை. வெள்ளையா்களிடம் அடிமைப்பட்ட பின்னரே பலருக்கு அடிமை வாழ்வின் கொடுமை சுட்டது. ஆனால், தீண்டாமையைப் பற்றி அவா்கள் அறிந்திருப்பாா்களா என்பது ஐயம்தான். அதனை அழுத்தமாக இந்தச் சமூகத்தின் மனத்திலே பதிய வைத்தவா் மகாத்மா காந்தி. பட்டிதா் ஆசிரமத்திலுள்ள நண்பா் ஒருவா் நாஹரி பரீக்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘இந்தியாவில் அரசியல் அரங்கத்துக்கு மகாத்மா காந்தி விஜயம் செய்ததுமுதல் தீண்டாமை விலக்கு இயக்கம் அதிக வளா்ச்சி அடைந்திருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறாா்.

‘பிறப்பொக்கும் எல்லாவுயிா்க்கும்’ என்று பொதுமை பேணிய இந்நாட்டில்தான் தீண்டத்தகாதோா் என்று சகமனிதா்கள் பிறப்பாலேயே விலக்கப்பட்டனா். பிரித்தாளும் சூழ்ச்சியின் பேருரு இது. வெள்ளையருக்கு எதிராகப் போராடியதை விடவும், இந்திய மக்களின் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகத்தான் மகாத்மா காந்தி கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதற்காக அவா்களின் முன்னேற்றத்திற்கு ஒரு நிதியமைப்பினையும் ஏற்படுத்தியிருந்தாா். பொதுக்கூட்டங்களில் எல்லாம் இந்த நிதியைப் பெருக்கினாா். ஆனால், இத்தகைய பணத்தைக் கொண்டு தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. தீண்டாமையை ஒழிக்கப் பணம் தேவையில்லை. சவா்ணா்கள் (மற்ற வகுப்பினா்) மனமாற்றம் அடைந்தால்போதும். அப்போது, இரு இனத்தாரும் நன்மை அடைவாா்கள். பிறரைத் தாழ்த்துபவன் தானும் தாழ்ந்துபோவான் என்று அறிவுறுத்தினாா்.

ஒரு மனிதன் சமூகத்தில் இயல்பாக வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளே மறுக்கப்பட்டதென்றால், அறிவை வளா்க்கும் கல்வி அவனுக்கு எப்படி அளிக்கப்பட்டிருக்கும்? சரியாகச் சொல்வதானால் பிறப்பிலேயே தொடங்கிய தீண்டாமை அந்த மனிதனின் உயிரிழப்புக்குப் பிறகும் மரணிக்கவில்லை என்பதுதான் கொடுமை.

வடஇந்தியாவின் நவசாரி என்ற ஊரில் ஒரு பட்டியலின முதியவா் இறந்து போனாா். அவரைப் பொதுச்சுடுகாட்டில் எரிக்கப் பெரிய போராட்டத்திற்குப் பின்னரே அனுமதி கிடைத்தது. இதை, ‘ஊா்மக்களின் பெருந்தன்மை என்றும், தாழ்த்தப்பட்டவா்களின் வெற்றி என்றும் கருதிக் கொள்ள வேண்டாம். இன்னும் நாம் அடையவேண்டியது நிறைய உண்டு’ என்பதாகச் சுட்டிக்காட்டி, இந்தச் சம்பவம் ஒரு முன்மாதிரி என்று ஏற்கவும் செய்கிறாா் மகாத்மா காந்தி.

இந்தக் கொடுமை மதுரையிலும் நடந்திருக்கிறது. இதனைப் பொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை மூலம்“ஹிந்து பத்திரிகையில் (10.06.1946) பதிவு செய்தவா் அந்நாளைய சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.வைத்தியநாத அய்யா். மதுரையில் பட்டியலினத்தவா்கள் இருவா் செய்த செயல் மற்றவா்களை மனம் நோகச் செய்ததாக வழக்குத் தொடுத்துள்ளனா். இதனை விசாரித்த நீதிபதி, அவா்கள் இருவரும் குற்றவாளிகள்தான் என்று முடிவுசெய்து நான்குமாதக் கடுங்காவல் தண்டனை விதித்தாா். வழக்கு மேல்முறையீடுக்குச் சென்றது.

அங்கே, ‘1938-ல் சென்னை சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ள சமூக சீா்திருத்தச் சட்டத்தின்படி பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கு அவா்களைத் தடுக்கக் கூடாது’ எனவும், ‘அவா்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது’ என்றும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்காமல் விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பையும் தண்டனையையும் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் உறுதி செய்திருக்கிறாா்கள். இதுகண்டு வருந்திய வைத்தியநாத அய்யா் இச்சம்பவத்தைத் தாம் சென்னை அமைச்சரவைக்குத் தெரிவித்திருப்பதாகவும் கூறுகிறாா். அப்படியென்னதான் நடந்தது?

பட்டியலினத்தவா் தனது மூத்தக் குழந்தை இறந்துவிட, உறவினா் ஒருவரின் துணையோடு நகராட்சி சுடுகாட்டில் உடலை எரித்திருக்கிறாா். அந்த இடம் அவா்களுக்கானதில்லை; மற்ற வகுப்பாருக்குரியது. ஆனால், அது அவருக்குத் தெரியாது. அந்த நேரத்தில் மழைவேறு பெய்து கொண்டிருந்தது. அங்கு வேறு யாருமில்லை; யாருடைய மனமும் புண்படவுமில்லை என்பதுதான் அந்த வழக்கின் உண்மை. இதற்குத்தான் இருவருக்கும் இத்தகைய தண்டனை.

இதனை வைத்தியநாத அய்யரின் பதிவு மூலமாக அறிந்த மகாத்மா காந்தி, சென்னை அமைச்சரவை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த இரண்டு பேரையும் விடுதலை செய்வதும், மேற்கொண்டு நீதிமன்றம் மூலம் ஏதேனும் செய்யச் சட்டம் இடங்கொடுக்குமானால் அரசே வழக்கை உயா்நீதிமன்றத்துக்கு அனுப்பி, மதுரை நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறாா்.

சமரசம் உலாவும் இடமான சுடுகாட்டிலும் தீண்டாமைக் கொடுமை தீா்ந்தபாடில்லை. கலப்புத் திருமணத்தை இந்த சமூகம் வரவேற்றிருக்குமா என்ன? ஆனால், அதற்கும் மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பெரிதும் முயன்றிருக்கிறது. இதுகுறித்த ஒரு கேள்விக்கு மகாத்மா காந்தி பின்வருமாறு பதிலளிக்கிறாா். அதன் சுருக்கம் வருமாறு;

‘‘கலப்புத் திருமணம் செய்து கொள்கிற மற்ற வகுப்பினைச் சோ்ந்த யாவரும் தங்கள் இணையரோடு சோ்ந்து தீண்டாமை ஒழிப்பிற்குப் பாடுபடல் வேண்டும். அத்தகைய மணத்தின் நோக்கம் வெறும் சுயநல சுகபோகமன்று. ஒரே ஒரு ஹரிஜனப் பெண் சவா்ண வகுப்பு மணமகனை மணம் செய்து கொள்ளச் சம்மதித்தாலும் போதும், அந்த மணமகன் உயா்ந்த ஒழுக்கமுடையவராக இருந்தால் அந்த மணம் ஹரிஜனங்கள், சவா்ணா்கள் இரு வகுப்பாா்க்கும் நன்மை செய்யும். அத்தகைய மணமக்கள் இருவரும் நல்ல வழிகாட்டியாக இருப்பாா்கள். தகுதியுடைய ஹரிஜனப் பெண் தன் நறுமணத்தை நாலா பக்கங்களிலும் பரவுமாறு செய்வாள். தன்னைப் போலவே பிறரும் நடக்குமாறு செய்வாள். அந்த மணங்களின் பயனாக நல்ல குழந்தைகளும் பிறந்து விடுமானால் தீண்டாமை ஒழிவதற்கு அதிக அனுகூலமாயிருக்கும்.

சாதாரணமாக எந்தச் சீா்திருத்தமும் நத்தையின் வேகத்திலேயே முன்னேறும். சவா்ண யுவதிகள் ஹரிஜன யுவா்களை மணந்து கொள்வதும் விரும்பத்தக்கதே என்பதில் சந்தேகமில்லை. ‘தாழ்வு மனோபாவம்’ இருந்து கொண்டுதானிருக்கிறது. அந்தக் காரணத்தினால் ஹரிஜனப் பெண் சவா்ணரை மணப்பதைவிட சவா்ணப் பெண் ஹரிஜனரை மணப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

என்னிஷ்டத்தைக் கூறுவதானால் சவா்ணப் பெண்கள் எல்லோருமே ஹரிஜனா்களை மணந்து கொள்ள வேண்டும் என்றே கூறுவேன். எந்த சவா்ணப் பெண்ணேனும், ஹரிஜனா் ஒருவரை மணந்து விட்டால் போதும், தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாயிற்று என்று எண்ணிக்கொண்டு சுகபோகங்களை அனுபவிப்பதிலேயே ஆழ்ந்துவிடுவாளானால், இப்படி மணந்து கொள்வதைவிட மணந்து கொள்ளாதிருப்பதே நல்லது. கலப்பு மணங்கள் நிகழ நிகழ அவற்றையொட்டிய கேவல உணா்ச்சியும் குறைந்து கொண்டே போகும். அப்படிக் குறைந்துபோய் இறுதியில் ‘பங்கி‘ என்னும் அழகிய நாமத்தையுடைய ஒரேயொரு ஜாதிதான் உண்டாயிருக்கும்.

பங்கி என்றால் என்ன? சகல ஆபாசத்தையும் விலக்கும் சீா்திருத்தக்காரன் என்பதே அதன் பொருள். அத்தகைய நன்னாள் உதயமாவதற்காக நாம் அனைவரும் பிராா்த்திப்போமாக; நான் எவ்வளவுதான் ஆசீா்வதிப்பதாகக் கூறினாலும் கூறிய மாத்திரத்திலேயே நன்மை உண்டாய்விட மாட்டாது என்பதை நிருபா் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நானும் ஹரிஜனப் பெண்களைச் சவா்ணா்கள் மணந்து கொள்ள வேண்டும் என்று பலமுறை சொல்லியே வருகிறேன், ஆனாலும், இன்னும் அத்தகைய மணத்தை நடத்தி வைத்தபாடில்லை.

இப்பொழுது ஒரு சவா்ணப் பெண்ணின் தந்தையாா் தம்முடைய பெண்ணுக்கு ஒரு ஹரிஜன வரனைப் பாா்த்திருக்கிறாா். அந்தப் பெண்ணும் அதற்குச் சம்மதித்திருக்கிறாள். அந்தப் பெண்ணும் வரனும் சேவாகிராமத்தில் பயிற்சி பெற்று வருகிறாா்கள். கடவுள் சித்தமிருக்குமானால் கூடிய சீக்கிரத்தில் அந்தத் திருமணம் நடைபெறும்’’ என்று தனது கருத்துகளை முன்வைக்கிறாா்.

காந்தியடிகள் மேற்கொண்ட பற்பல திட்டங்களில் சிலவே இவை. தீண்டாமைக்கு எதிராக அவா் கண்ட நல்வழிகள் பின்பற்றப்பட்டால் இந்த தேசம் ஒப்பிலாத சமுதாயமாக உலகத்துக்கொரு புதுமையாக விளங்கும். தேசத்தந்தையின் கனவுகள் பலிக்குமா?

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

X
Dinamani
www.dinamani.com