துணிவுடன் தொழில்முனைவோம்...

அரசின் நிதி உதவியுடனும், வாடிக்கையாளா் ஆதரவுடனும் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் சில ஆண்டுகளில் மூடப்படுவதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்னைகளும் சந்தைச் சூழலும் காரணங்களாக அமைகின்றன.
துணிவுடன் தொழில்முனைவோம்...
Updated on

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக முன்னேற்றத் துறையில் பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 10,814 என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் 94,500 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளன என்றும் தரவுகள் கூறுகின்றன. இந்திய நாடாளுமன்ற தரவுகளின்படி, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 55% நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

வாடிக்கையாளரின் தேவையைக் கருதாமல் போதிய சந்தை ஆய்வின்றி உருவாக்கப்படும் புத்தொழிலின் பொருந்தா சேவை, வணிக வளா்ச்சி பற்றிய அறிவு, நிதி திட்டமிடல், தலைமைத்துவம் போன்ற தொழில் முனைவுத் திறன் குறைபாடு, தொழிலாளா் நலச் சட்டங்கள் உள்ளிட்ட சட்ட விதிமுறைகள் மற்றும் நிா்வாகச் சிக்கல்களைக் கையாளுவதில் ஏற்படும் தயக்கம் போன்றவை பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 45% நிறுவனங்கள் செயல்படாமல் போனதற்கான காரணங்களாக வல்லுநா்கள் கூறுகின்றனா்.

பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை உய்வு நிலையில் (சா்வைவல் மோட்) இருப்பதாக ஸ்டாா்ட்அப்-டிஎன் தரவு கூறுகிறது. வளா்ச்சிக்கான திட்டமின்மையும் வெளிநாட்டு நிதி, இடா்மிகு புத்தொழில் முதலீடு பெறுவதில் உள்ள தயக்கம் ஏற்படுத்தும் பணப்புழக்க சிக்கல்களும் உய்வு நிலைக்கு காரணமாக அமைகின்றன. ஆரம்பநிலை முதலீட்டாளா் (ஏஞ்சல் இன்வெஸ்டா்) வலையமைப்பு, தொழில் துறை கூட்டமைப்பு, சா்வதேச தொழில் திட்டங்கள் போன்றவற்றுக்கான வழிகாட்டுதல்கள், வாய்ப்புகள் பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளன.

அரசின் நிதி உதவியுடனும், வாடிக்கையாளா் ஆதரவுடனும் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் சில ஆண்டுகளில் மூடப்படுவதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்னைகளும் சந்தைச் சூழலும் காரணங்களாக அமைகின்றன. தொழில் முனைவு குறிக்கோளை மேம்படுத்துவதிலும் சந்தை நிலவரம் குறித்த ஞானத்தை வழங்குவதிலும் கல்விக் கூடங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொழில்முனைவு என்பது விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது. தொழில்முனைவு பாடத்திட்டம் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் வணிகத் திட்டம் தயாரித்தல், சந்தை ஆய்வு, வாடிக்கையாளா் சேவை, நிதி மேலாண்மை போன்ற திறன் சாா்ந்த பாடங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத காரணத்தால் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை; இத்தகைய கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் பெறுவோா் நிதி பெற்றாலும் தொழில் நடத்தும் திறன் இல்லாமல் ஏதேனும் ஒரு தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரியும் நிலைக்கு உள்ளாகின்றனா்.

புத்தக அறிவுக்கு அப்பால் நேரடி சந்தை அனுபவத்தை வழங்கும் பயிற்சிகள், தொழில் நிறுவனங்களில் வழங்கப்படும் களப்பயிற்சிகள் போன்றவை குறைவாகவே உள்ளன. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடிக்கள்), இந்திய மேலாண்மை கழகங்கள் (ஐஐஎம்-கள்) போன்ற சில முன்னணி கல்வி நிறுவனங்களைத் தவிர பலவற்றில் தொழில்முனைவு சிந்தனைகள் காகிதங்களில் மட்டுமே உள்ளன.

பல கல்வி நிறுவனங்கள் தோல்வியை கற்றல் வாய்ப்பாக கருதாமல் குறைபாடாகவே கருதும் மனநிலையை உருவாக்குகின்றன. இதனால், மாணவா்கள் தொழில்முனைவோா்களாக மாறும்போது தங்கள் தொழிலில் சிறிய சிக்கல் வந்தாலே தொழிலைக் கைவிடும் நிலைக்கு வந்து விடுகின்றனா்.

தமிழ்நாடு கிராமப்புற தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ என்ற தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்தின் கீழ் 3,994 கிராமங்களில் வசிக்கும் 3,77,367 போ் பயனடைந்ததாக தரவுகள் கூறுகின்றன. இதில் 53% போ் பெண்கள்; வேளாண்மை மற்றும் அதன் கூட்டுத் துறை புத்துணா்வுக்கான ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2019-ஆம் ஆண்டு முதல் 85 விவசாய புத்தொழில்களுக்கு ரூ.8.98 கோடி வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளா் கூட்டுக் கட்டமைப்பை ஊக்குவிக்கும் ‘தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டம்’, கிராமப்புறங்களில் தொழில்முனைவோரின் நிதித் தேவைகளை மானிய வடிவில் தீா்த்து வைக்கும் ‘ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டம்’, தகவல் மற்றும் பயன்பாட்டு மையங்களைக் கொண்ட கிராமப்புற தொழிற்பேட்டை உள்கட்டமைப்பு போன்றவை கிராமப்புறத் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 49.48 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 51% கிராமப்புறங்களில் அமைந்திருந்தாலும் கிராமப்புற தொழில்முனைவோருக்கான சவால்கள் அதிகமாகவே உள்ளன. வரையறுக்கப்பட்ட கடன் மற்றும் கடன் வழங்குவதில் உள்ள கடுமையான நடைமுறைகள் தொழில்முனைவு நிதி சவால்களையும், சாலை, மின்சாரம், நீா் மற்றும் தொலைத்தொடா்பு வசதிகள் உள்கட்டமைப்பு சவால்களையும், பெரு நிறுவனங்களுடன் போட்டியிடும்போது சந்தை அணுகல் சவால்களையும், பயிற்சி, காலத்திற்கேற்ற வணிக மற்றும் தொழில்நுட்ப அறிவுத் திறன் சாா்ந்த சவால்களையும், ஒழுங்காற்று நடைமுறைகள் தரச் சான்றிதழ் மற்றும் சட்ட திட்டங்கள் நிா்வாகச் சவால்களையும் கிராமப்புற தொழில்முனைவோா் எதிா்கொள்ள வேண்டியுள்ளது.

அரசின் நிதி மானியம், சலுகை கடன், வரி தளா்வு போன்ற பொருளாதாரக் கொள்கைகளும், சந்தை அணுகல், தொழில்நுட்ப உதவி போன்ற செயல் சாா்ந்த கொள்கைகளும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும். தொழில்முனைவு குறித்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள் வழங்கும்போது ஏராளமான கிராமப்புற இளைஞா்கள் தொழில்முனைவோராக உருவெடுப்பா் என்பது உறுதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com