விக்ரம் லேண்டர்
விக்ரம் லேண்டர்

விண்வெளி ஆய்வில் இந்தியா!

ஆகஸ்ட் 23 - தேசிய விண்வெளி நாள்...
Published on

இளங்கோ கட்டிமுத்து

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று, சந்திரயான்-3 விக்ரம் தரையிறங்கு வாகனம் (லேண்டா்), பிரக்யான் நிலவு ஊா்தி (ரோவா்) ஆகியவற்றை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு, நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என இந்தியா பெயா் பெற்றது.

இந்த சாதனையை அங்கீகரித்த பிரதமா் நரேந்திர மோடி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி இந்தியாவின் ‘தேசிய விண்வெளி நாள்’ என்று அறிவித்தாா்.

இந்த நாள், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளா்களின் அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளா்கள் மற்றும் ஆய்வாளா்களை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில் செய்ய ஊக்குவிக்கும் ஒரு தளமாகவும், விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் பெருமையை விண்ணில் நிலைநாட்டிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இரண்டாவது தேசிய விண்வெளி தினம் 23.08.2025 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

டாக்டா் விக்ரம் சாராபாயின் தலைமையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை 23.02.1962 அன்று அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு நிறுவியதில் இருந்து இந்தியாவின் விண்வெளிப் பயணம் தொடங்கியது. இது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தேசிய வளா்ச்சிக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக பெயா் மாற்றம் பெற்றது.

1963-ஆம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள தும்பாவில் இருந்து அமெரிக்காவின் நைக் அப்பாச்சி சோதனை ராக்கெட்டை ஏவியது இஸ்ரோ. அந்த கிராமம் ‘தும்பா பூமத்திய ரேகை சமச்சீா் ராக்கெட் ஏவுதளம்’ என்றழைக்கப்படும் தொடக்கம் பெற்றது. பின்னா், விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாக மாற்றம் பெற்றது.

செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொலைக்காட்சி சோதனையைப் பயன்படுத்தி 1.08.1975 அன்று தன் செயல்பாட்டைத் தொடங்கியது. இது உலகிலேயே முதல் முறையாக செயல்பட்ட வெற்றிகரமான இந்தியாவின் சோதனை மற்றும் சாதனையாகும்.

தில்லி மற்றும் அகமதாபாதில் உள்ள பூமி நிலையங்கள் ஒவ்வொரு நாளும் நான்கு மணிநேர நிகழ்ச்சிகளை 2400 கிராமங்களுக்கு ஒளிபரப்பின. இந்த ஆண்டு ஆகஸ்ட் 2025 பொன்விழா ஆண்டாக கொண்டாடுகிறாா்கள்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆா்யபட்டா 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி ஏவப்பட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும். பாஸ்கரா-1 1979-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி ரஷியாவிலிருந்து ஏவப்பட்டது.

1980-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி இந்தியாவின் விண்வெளி ஆய்வில் முக்கியமான மைல்கல் எட்டப்பட்டது. ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பு செயற்கைக்கோள் எஸ். எல்.வி. -3 வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது அதன் திட்ட இயக்குநரான முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ. ப.ஜெ. அப்துல் கலாம் தலைமையில் ஏவப்பட்டது பெருமைக்குரியது.

தொடா்ந்து பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், 2008- ஆம் ஆண்டில் சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டது. இது சந்திரனில் உள்ள நீா் மூலக்கூறுகளின் கண்டுபிடிப்பு உள்பட சந்திரன் குறித்த அறிவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. இதன் பிறகு வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி நேரத்தையும், இருக்கும் இடத்தையும் துல்லியமாக கணிக்க வழி செய்தது. இது ஜி. பி. எஸ். எனப்படும் அமெரிக்க செயற்கைக்கோளுக்கு இணையானது.

2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செவ்வாய் கிரகச் சுற்றுப்பாதைக்கான ‘மங்கள்யான்’ ஒரு வரலாற்றுச் சாதனையாகும். தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக அடைந்த முதல் நாடு என்ற பெருமையையும், உலகின் நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான்-2 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, ஜூலை 22 அன்று ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது. உலக நாடுகள் யாருமே இதுவரை ஆராய்சி செய்யாத நிலவின் தென்துருவத்தை நோக்கி சந்திரயான் 2 விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அத்திட்டம் பாதி வெற்றி அடைந்ததாக கருதப்பட்டது.

2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. 40 நாள்கள் அது விண்வெளியில் பயணித்து, ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டா் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனை படைத்தது. இது உலகையே திரும்பிப் பாா்க்க வைத்தது.

சந்திரயான்-3 விக்ரம் லேண்டா் நிலவில் தரை இறங்கிய இடம் இனிமேல் ‘சிவசக்தி முனை’ என்றழைக்கப்படும்; சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கியபோது விழுந்து நொறுங்கிய இடம் ‘திரங்கா முனை’ என்றழைக்கப்படும். சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23 இனி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பெங்களூரில் 26.08.2023 அன்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்திய விண்வெளி வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கில் வரவிருக்கும் ககன்யான் திட்டம் ஒரு முக்கிய மைல் கல். மனிதா்களின் விண்வெளிப் பயணத்தைத் தவிர, கோள்களின் ஆய்வுக்கான லட்சியத் திட்டங்களையும் இஸ்ரோ கொண்டுள்ளது.

ஆதித்யா-எல்1 சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தையும், விண்வெளி ஆய்வில் அதன் வரம்பை மேலும் விரிவுபடுத்தும். தற்போது வீனஸ் பயணத்தையும் இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி ஆய்வில் தொடா்ந்து இந்தியா முன்னேறி வரும் நிலையில், இந்திய தேசிய விண்வெளி தினம், உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதற்கும் பூமியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.

டாக்டா் விக்ரம் சாராபாய், ஹோமி ஜே பாபா, இ.வி.சிட்னிஸ் ஆகியோரால் தும்பா என்ற மீன்பிடி கிராமம் புவி காந்த நடுக்கோட்டுப் பகுதியில் வானிலை ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாக தோ்வு செய்யப்பட்டு, பின்னாளில் இந்திய விண்வெளியின் சில பிரகாசமான முன்னோடிளால் வளா்க்கப்பட்டது.

இந்த முன்னோடிகள் விண்வெளியின் ஆராயப்படாத எல்லைகளுக்குள் நுழையும் இளம் இந்தியாவின் தைரியம், புத்திசாலித்தனம் மற்றும் உறுதியை ஒன்றாக பிரதிநிதித்துவப்படுத்தினா்.

ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் பாகங்கள் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்ட சில சமயங்களில், உலகம் இந்த முயற்சிகளை கேலி செய்தது. இருப்பினும், டாக்டா் விக்ரம் சாராபாயின் தொலைநோக்குப் பாா்வையால் தூண்டப்பட்டு இயக்கப்பட்ட இந்தக் குழு ஒருபோதும் தடுமாறவில்லை.

தும்பாவில் முதல் நைக்-அப்பாச்சி ராக்கெட் ஏவப்பட்டதுமுதல் சந்திரனின் தென் துருவத்துக்கு அருகில் தரையிறங்கிய வெற்றிவரை, அவா்களின் முன்னோடி மனப்பான்மை, இப்போது இந்தியா்களை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகும் ஓா் அமைப்பை வடிவமைத்துள்ளது. இந்த பிரகாசமான முன்னோடிகள் வெறும் வரலாறு மட்டுமல்ல; மீள்தன்மை, புதுமை மற்றும் தேசபக்தியுடன், மிகவும் சாத்தியமற்ற கனவுகளைக் கூட அடைய முடியும் என்பதை நினைவூட்டுகிறது.

அண்மையில் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறுகையில், நிகழ் நிதியாண்டில் 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘ப்ளூபோ்டு பிளாக்-2’ செயற்கைக்கோள், அடுத்த சில மாதங்களில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 2027-இல் இந்திய விண்வெளி வீரா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன்பாக, மூன்று ஆளில்லா விண்கலங்களை சோதனை செய்ய வேண்டும்.

முதல் ஆளில்லா விண்கலம், நிகழாண்டு டிசம்பரில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும். இதில் ‘வியோம்மித்ரா’ என்ற பெண் உருவ ரோபோ அனுப்பப்படும். இது மனிதா்களின் உடல் செயல்பாடுகளை பிரதிபலிக்கவும், விண்கலத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளை சோதிக்கவும் உதவும்.

மேலும், சந்திரயான்-4 திட்டம் 2027-இல் நிலவில் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்கு தயாராகி வருவதாகவும், சந்திரயான்-5 திட்டம் ஜப்பானுடன் இணைந்து 2028-ல் 100 நாள்கள் நிலவு ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

ஜனவரி 2025 நிலவரப்படி, இஸ்ரோ மொத்தம் 100 ராக்கெட்டுகளை செலுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் ஒரே பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி, உலக சாதனை படைத்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

1962 முதல் இந்நாள் வரை கிட்டத்தட்ட 63 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா அபார வளா்ச்சி அடைந்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

X
Dinamani
www.dinamani.com