
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் விலை மதிப்பற்றவை ஆகும். இறந்த பின்னரும் நம் உறுப்புகள் சிலவற்றைத் தானமாக அளிக்கமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உறுப்பு தானத்தால் சிலரின் வாழ்வை வளமாக்கி, அவர்களது ஆயுளை நீட்டிக்க முடியும். உலகில் ஒவ்வொரு 12 நிமிஷத்துக்கும் ஒருவர் மாற்று உறுப்பு கிடைக்காமல் அவதிப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
உறுப்பு தானம் என்பது ஒருவரின் உறுப்புகள் அல்லது திசுக்களை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்குத் தாமாக முன்வந்து கொடுப்பதாகும். இது ஒரு உயிர் காக்கும் செயல்முறையாகும். பொதுவாக நமக்கு ரத்த தானம், கண் தானம், உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு உண்டு. அதைச் செய்கிறோமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
குறிப்பாக, உடலின் பல்வேறு உறுப்புகளைத் தானம் செய்ய முடியும். சிறுகுடல், கணையம், தோல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை உள்பட கிட்டத்தட்ட 25 உறுப்புகளைத் தானமாக வழங்க முடியும். உறுப்பு தானம் என்பது உண்மையில் 20-ஆம் நூற்றாண்டின் மருத்துவத் தேவையின் அதிசயமாகும். உடல் உறுப்பு தானத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று, உயிருடன் உள்ள போதே உறுப்பு தானம் செய்வது.
அதாவது சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரல், கணையம் மற்றும் குடலின் ஒரு பகுதி உள்பட சில உறுப்புகளைத் தானம் செய்ய முடியும். இரு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கும்போது, நாளடைவில் ஒரு சிறுநீரகமே அதன் முழு வேலையையும் தொடங்கும். கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கும்போது, நாளடைவில் அது தானாகவே வளர்ந்து விடும்.
இறந்த பின்னர் உறுப்புகளைத் தானம் அளிப்பது இரண்டாவது வகை. அதாவது விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்தாலோ அல்லது வேறு ஏதாவது முறையில் ஒருவருக்கு மூளைச் சாவு நிகழ்ந்தாலோ, அவரது உறுப்புகளைத் தேவைப்படும் மற்றொருவருக்குத் தானமாக வழங்குவது ஆகும். ஒருவர் இறந்த பிறகு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம், கணையம், குடல் போன்ற முக்கிய உறுப்புகளை தானம் செய்வதால் 8 பேருக்கு புதிய வாழ்க்கையை வழங்க முடியும். மேலும் கார்னியா, தோல், எலும்பு, இதய வால்வு போன்ற திசுக்களைத் தானம் செய்வதால் பலரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
உலக அளவில் உடல் உறுப்புகளுக்கான தேவை அதிகமாக இருந்தாலும் எந்த நாடும் உறுப்பு தானத்தைக் கட்டாயமாக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் உறுப்பு தானம் விகிதம் 10 லட்சம் பேருக்கு 0.8 % என்ற அளவிலேயே உள்ளது, இது குரோஷியாவில் 36.5%, ஸ்பெயினில் 35.3%, அமெரிக்காவில் 26 சதவீதமாகவும் உள்ளது.
இந்தியாவில், உறுப்பு தானத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இங்கு 10 லட்சம் பேருக்கு 1.8 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், உறுப்பு மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாகும். ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர், உடல் உறுப்புகள் தேவையால் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஆண்டுதோறும் ஏறக்குறைய 2 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பால் இறப்பதாக மேலும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு தரவுகள்படி, ஆண்டுதோறும் 5 லட்சம் பேருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. அதாவது, மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 2 லட்சம் சிறுநீரகங்கள், 50 ஆயிரம் இதயங்கள் மற்றும் 50 ஆயிரம் கல்லீரல்கள் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஆனால், கிடைப்பதோ வெறும் 2,000 சிறுநீரகங்கள், 500 இதயங்கள் மற்றும் 1,200 கல்லீரல்கள் மட்டுமே. கண் தானத்துக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கார்னியாக்கள் (விழி வெண்படலம்) தேவைப்படும் நிலையில், 50 ஆயிரம் மட்டுமே தானமாகக் கிடைக்கின்றன.
உறுப்பு தானத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு வழி காட்டியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் 2008-இல் உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை 7-ஆக இருந்தது. இது 2024-இல் 268-ஆக உயர்ந்தது. இவர்களில் 218 பேர் ஆண்கள்; 50 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 1,500 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டன. ஆனாலும், தேவை அதிகமாகவே இருக்கிறது.
உதாரணமாக, தமிழ்நாட்டில் சிறுநீரகத்தை தானம் பெற 7,370 பேர் காத்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. இவர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் மரணத்தின் விளிம்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்குபவரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு 2023-இல் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு உடல் உறுப்பு தானம் செய்த 479 பேருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனால், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு சற்று அதிகரித்துள்ளது.
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, செயல்முறையை எளிதாக்குவது, சட்ட நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பது ஆகியவற்றின் மூலம் நாட்டில் உறுப்பு தானம் தேவையை நிறைவு செய்யமுடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உறுப்பு தானத்தால் உடல் சிதைந்துவிடும், மதக் கொள்கைக்கு எதிரானது போன்ற தவறான சித்தரிப்புகள் அவசியம் இல்லை. அடுத்தது, குடும்பத்தினரின் தயக்கமும் ஒரு காரணம். மேலும், பல மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், உறுப்பு தானம் தொடர்பான சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளில் உள்ள சிக்கல்களும் ஒரு தடையாக உள்ளன. இந்தத் தடைகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.