
ஊர்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன்னார் ஒரு நண்பர்.
உண்மைதான். எல்லா ஊர்களிலும் சிற்றுண்டிச்சாலைகளும் உணவு விடுதிகளும் இருக்கத்தானே செய்கின்றன. அதுமாதிரி... சொல்லி முடிக்கவிடவில்லை. அதெப்படி? உணவுவிடுதியும் புத்தகக் கடையும் ஒன்றாக முடியுமா?
ஏன் முடியாது? இரண்டும் பசியாற்றுகிற இடம்தானே? முன்னது வயிற்றுப் பசிபோக்குவது. பின்னது அறிவுப்பசி ஆற்றுவது. இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடுகிற உணவு விடுதிகளைவிட, "பார்சல்' கொடுக்கிற விடுதிகளுக்குத்தானே மவுசு. பார்த்த புத்தகங்களையே பார்ப்பதும், படித்த புத்தகங்களைத் திரும்பப் பார்ப்பதும் ஆயாசமாயிருக்கிறது. ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிப்பதற்குள் புதிய புத்தகம் வாங்க வேண்டுமா? என்று தோன்றுகிறது.
உண்பதும் வாசிப்பதும் ஒன்றாகிவிடுமா? ஆக வேண்டும். பிறந்தது முதற்கொண்டு வாழ்நாள் முழுவதும் எப்படி உணவு தவிர்க்க முடியாதோ, அப்படித்தான் கல்வியும்.
அன்றாட இயக்கத்துக்கு உணவு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது அன்றாட வாசிப்புக்குப் புத்தகமும்; வாழ்க்கையின் இயக்கத்தை இலகுவாக்குவதற்கு எத்தனை வசதியான பொருள்கள் பயன்படுகின்றனவோ, அதுபோல், மனத்தை இலகுவாக்குவதற்கு எத்தனையோ புத்தகங்கள் பயன்படுகின்றன. வாசிப்பு, படிப்பாகி, படிப்பு, கற்றலாக வளர்ச்சி அடைய வேண்டும்.
கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லியதும் அமைதியானார் நண்பர்." யார் ஒருவராலும் தனக்காகவே வாழ முடியாது. அதுபோல், யாராலும் தனக்குத்தானே பேசிக்கொள்ள முடியாது; எழுதிக் கொள்ள முடியாது; பேச முடியாத நாள்களில் பேச நபர்கள் கிடைக்காத நேரங்களில் பேச்சுத் துணைக்குப் புத்தகங்கள் கூடவரும்; பேசும்; பேச வைக்கும்; பேசாமல் யோசிக்கவும் வைக்கும். போக முடியாத இடங்களுக்கு மனதளவில் பயணிக்கவும், நேருற அனுபவிக்க முடியாத பல உணர்வுகளைத் துய்த்துப் பெற்றுக்கொள்ளவும் புத்தகங்கள் துணை செய்யும்; நாம் வெளியுலகில் நடந்தும், வாகனங்களில் பயணித்தும் கடக்கிற தொலைவுகளுக்கு இணையாக மனதளவில் பயணிக்க உதவும் வாகனங்கள் புத்தகங்கள். அதில் ஊன்றுகோலாகும் புத்தகங்களும் உண்டு; விமானங்களாகும் புத்தகங்களும் உண்டு. மறதி நோய்க்கு மகத்தான மருந்து புத்தகம்தான்.
மறதியைப்போல் கொடிய நோய் பிறிது இல்லை. மறக்கக்கூடாததை மறந்துவிடுவதும், மறக்க வேண்டியதை மறக்காமல் வைத்திருப்பதும் மனத்தின் கெட்ட பழக்கம். அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு அகற்றிவிடக்கூடியது புத்தக வாசிப்பு என்று சொன்னால் புரியாது; பழகினால்தான் தெரியவரும்.
உணவு விடுதியின் மேஜையில் வைக்கப்படும் மெனுகார்டு போல, கடைவிரிக்கப்பெற்ற புத்தக நிலையங்களின் பட்டியல்கள். அழகாய் அடுக்கப்பெற்ற உணவுப் பண்டங்களின் காட்சிக்கு இணையாக புத்தங்கள்.
விரும்பிய உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்வதுபோல், வேண்டிய புத்தகங்களைத் தெரிவுசெய்து கொள்ளலாம்; விரும்பினால் வாங்கவும் செய்யலாம். எத்தனை வகையான உடைகள் வீட்டில் இருந்தாலும், பண்டிகைக் காலங்களில், விசேஷ நாள்களில் புத்தாடைகள் வாங்குவதில்லையா? அதுமாதிரி புத்தகம் வாங்குவதையும் ஒரு பழக்கமாக்கிக் கொள்ளலாம். வீட்டிற்கு வருகிற சுமங்கலிகளுக்கு ரவிக்கைத் துணி வைத்துக் கொடுப்பதுபோல், விருந்தினர்களுக்குத் திருக்குறளை, மகாகவி பாரதியார் கவிதைகளை வைத்துக்கொடுக்கிற நண்பர்களும் இருக்கிறார்கள்.
நமது ஊருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் கூடவே புத்தகங்களும் பயணிக்கப் பார்த்திருக்கிறேன். தங்கும் விடுதிகளில் அவர்கள் உண்ணும் உறங்கும் நேரம் தவிர்த்துப் படிப்பதை இன்றியமையாப் பணியாக அவர்கள் கொண்டிருப்பார்கள். தேவை நேரம் போக, அவர்கள் மீதி நேரங்களில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதில்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை.
நமக்கு அருகில் இருக்கும் வரலாற்றுத் தலங்களைப் பற்றி நாம் அறிந்திருப்பதைவிட, அவர்கள் அறிந்திருப்பவை அதிகம் என்பதை அவர்களுடனான உரையாடல்கள்வழி தெரிந்துகொண்டபோது வியப்பாக இருந்தது. குறிப்பாக மதுரை, சிதம்பரம், மாமல்லபுரம் பற்றியெல்லாம் நாம் அறிந்திராத பல தகவல்களை அவர்களுக்கு அறிவிக்கும் இடத்தில் புத்தகங்கள் இருக்கின்றன.
வாங்கிய புத்தகங்களையே படிக்க முடியவில்லை. மேலும் வாங்க வேண்டுமா? - இந்தக் கேள்வி இப்போது அடிக்கடி எழுகிறது. தூங்கிய நேரங்களை நினைவுபடுத்தித் தூங்கச் செய்கிறது உடல்; பசி நேரம் சொல்லி உணவிடச் சொல்கிறது வயிறு; பொருட்படுத்தாதவர்களை மருத்துவர்களின் முன் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது வாழ்க்கை. உடற்பயிற்சிக்குக் கொடுக்கத் தவறிய முக்கியத்துவத்தின் குறைபாட்டை நோய்கள் நினைவுபடுத்துவதுபோல், மனப்பயிற்சிக்குக் கொடுக்கத் தவறிய முக்கியத்துவத்தைச் சலிப்பும் களைப்பும் நினைவுபடுத்துகின்றன. உடல் எரிச்சல்போல் அல்லல்படுத்தக்கூடியது மன எரிச்சல்; நமைச்சலோ வேறு மாதிரியானது.
உடலைப் பராமரிக்கத் தெரிந்த நம்மில் பலருக்கு மனத்தைப் பராமரிக்கத் தெரியவில்லை. உடல் சோர்வுக்குப் பெரிதும் தூண்டுதலாய் இருப்பது மனச்சோர்வு என்பது உடன் புரிபடுவதில்லை.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
என்கிறார் திருவள்ளுவர். நெடுநீர்- தாமதம். மறவி- மறதி. மடி- சோம்பல். துயில்- தூக்கம். தனித்தனியே இருந்தாலும் இவை அடுத்தடுத்து வந்து அடுத்துக் கெடுப்பவை. இவை நான்கும் உழைப்பாளர்களுக்குக் களைப்பால் வரலாம். களைப்பினைப் போக்குவது களிப்பு. கள்ளும் காமமும் களிப்பினை நல்கும். ஆனால், பின்விளைவுகள் மோசமானவை. இவைகடந்த நிலைகளில் ஒருமுகப்படுத்தவும், உற்சாகம் கொள்ளவும் ஆயிரமாயிரம் வழிகள் இருக்கின்றன; அவற்றின் வாசல்களாகப் புத்தகங்கள் இருக்கின்றன.
அரிதாய்க்கிட்டியது மனிதப் பிறவி. அதன் பயன் துய்க்கக் கிடைத்தவை அற்புதப் பொழுதுகள். அவற்றை, அற்பமாய்க் கருதிப் போக்கி, வறிதே இழக்கிற அவலத்தை நினைவுபடுத்துகின்றன அறிஞர்தம் அனுபவங்கள்.
வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி
மதித்திடுமின் என்று பாடுகிறார் அப்பரடிகள்.
அவர் 81 ஆண்டுகள் வாழ்ந்தவர்; ஓய்வில்லாமல் தலங்களுக்கு யாத்திரை போனவர்; சோர்வில்லாமல் பலர் துயரங்களைப் போக்கியவர்; எண்ணிலாத் துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்தவர். ஆனாலும், "இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்று பாடுகிறார்.
அவர் பாடிய தேவாரப் பதிகங்கள், வெற்றுச்சொற்களின் தொகுப்பு அல்ல. அவருக்கு முன் எழுந்த இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்த அனுபவத்தின் திரட்டு. அவர் புத்தகங்களுக்கு இணையாகத் தன் காலத்து மக்களைப் படித்த அனுபவத்தையும், இறையருளைத் துய்த்ததன் புலப்பாட்டையும் அவற்றில் இருந்து பெறமுடியும்.
இப்படி ஒüவையாரைச் சொல்லலாம்; வள்ளலாரைக் கொள்ளலாம். ஆன்மிகவாதிகளைப் போன்றே அறிவியலாளர்களும், அரசியல் தலைவர்களும், இலக்கியவாதிகளும், தொழிலதிபர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சொல்லும் புத்தகங்களுக்கு இடையே ஏனைய உயிர்களின் இயக்கங்களை, அவற்றின் வெளிப்படும் அதிசய வாழ்வின் அனுபவங்களை, பிரபஞ்சத்தின் பேரியக்கத்தை, பரந்த நிலையில் திறந்துவைத்துக் கொடுக்கக் காத்திருக்கின்றன புத்தகங்கள்.
மூடிக்கிடக்கும் புத்தகங்களில் வாழ்ந்து மறைந்த, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களின் மூச்சுக்காற்று நிறைந்திருக்கிறது. தேடிக்கொள்பவர்களின் சுவாசங்களுக்கு அது சுகம் தரக்கூடியது.
தேடி அலைந்தும் கிடைக்காத பல முத்துக்களையும் இரத்தினங்களையும், கோடிக்கணக்கில் தனக்குள் புதைத்து வைத்துக் காத்திருக்கும் பூதங்கள் புத்தகங்கள்.
தானிய விதைகளைப் போல் பேணிய சிந்தனைகளைத் திரட்டிக் கெடாமல் பாதுகாத்து வைத்திருக்கும் குதிர்களை ஒத்த நூல்களும் உண்டு; தாவி விரையும் மனக்குதிரைக்கு முந்திப் பறக்கும் மந்திரக் கம்பள நூல்களும் உண்டு. குப்பைகள் என்று ஒதுக்கிவிடக்கூடிய புத்தகக் குவியல்களுக்கு மத்தியில், பல அற்புதக்களஞ்சியங்களும் இருக்கின்றன என்பதை அறிய அறியத்தான் தெரியவரும்.
வாசிக்க முடியாவிட்டாலும் வாங்கி வைத்திருப்பதும், வருகை தரும் விருந்தினர்களுக்குப் பரிசளிப்பதும் நாம் செய்யக்கூடியவை. அன்னதானம் நிகர்த்த அறிவுதானம் செய்வதற்குப் புத்தகங்கள் உரிய பாத்திரங்கள்.
அடிக்கடி சொல்வதை மறுபடியும் நினைவூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இருக்கும் வீட்டில் பூஜையறை இருக்கிறதோ, இல்லையோ, வாசிப்பறை இருப்பது நல்லது. ஒற்றை அறையே வீடானபோதிலும், உணவு சமைக்கும் அடுக்களையில் அஞ்சறைப் பெட்டி இருக்கும் அல்லவா, அதுபோல், தவறாது இருக்க வேண்டியது சிறிய புத்தக அலமாரி.
படிக்க முடியாதபோதும் பார்வைக்குப்படும் இடத்தில், புத்தகம் இருந்தால், அது உங்களை அறிவாளி என்று வருவோர்க்குச் சொல்லும்.
படிக்க முடியாவிட்டாலும், படிப்பது போல் நடிக்கவாவது செய்யலாம் அல்லவா? என்று சொல்லி, என்னிடம் இருந்த புத்தகம் ஒன்றை அந்த நண்பருக்குக் கொடுத்து அனுப்பியபோது, அஞ்சலில் வந்து சேர்கிறது புதிய புத்தகம். அலையில்லாது கடல் இல்லை; நூல் இல்லாது வாழ்வில்லை.
பிறவிப் பெருங்கடல் நீந்தத் துணைசெய்யும் புத்தகங்கள் அறிவுக் கலங்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.