
அனந்த பத்மநாபன்
சிலர் எப்பேர்ப்பட்ட சவால்களையும் அசராமல் எதிர்கொள்கிறார்கள். பெரும் துயரங்களைச் சந்தித்தபோதும் மனம் தளராமல் உறுதியாக இருக்கிறார்கள். இது நமக்கு ஒரு கேள்வியை எழுப்புகிறது: இந்த மன உறுதி இயற்கையாகவே கிடைத்ததா அல்லது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதா?
இது சிலருக்கு மட்டுமே உரிய வரமா அல்லது நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ளக் கூடியதா?
அண்மையில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக்கின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அவரது 19 வயதுக்கு மீறிய பக்குவம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் இரும்பு போன்ற மன உறுதியே. ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், அதன் தாக்கம் அடுத்த போட்டியைப் பாதிப்பதில்லை. நெருக்கடியான சூழலிலும் பயமின்றி, உறுதியான மனதுடன் முடிவெடுக்கிறார்.
அதிக அழுத்தம் நிறைந்த தருணங்களில் மற்றவர்கள் தடுமாறும்போது, அவரது அசைக்க முடியாத மன உறுதியே வெற்றிக்கு வழிவகுக்கிறது. தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல், இலக்குகளில் முழுக் கவனம் செலுத்த உதவுகிறது. இந்தக் குணங்கள் அவரை மனதளவில் வலிமையான ஒரு நபராக மாற்றியுள்ளன. திவ்யாவின் மன உறுதி, இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது.
வாழ்க்கை ஒரு மாரத்தான் ஓட்டம் போன்றது. அதில் வெற்றிபெற உடல் வலிமை மட்டும் போதாது; சவால்கள், தோல்விகள், எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மிக அவசியம். உளவியலாளர்கள் இதை "அறிவாற்றல் இருப்பு' மற்றும் "மன வலிமை' என்று குறிப்பிடுகிறார்கள்.
இது பிறப்பிலேயே கிடைக்கும் வரம் அல்ல; வாழ்நாள் முழுவதும் தொடர் பயிற்சியால் வளர்த்துக்கொள்ளப்படும் திறமை. நேர்மறையான அணுகுமுறை, தன்னம்பிக்கை, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் மற்றும் தோல்வியைப் பயனுள்ள பின்னூட்டமாகக் காணும் திறன் போன்ற பல காரணிகளால் இந்த வலிமை உருவாகிறது. இது சவால்களை எதிர்கொள்ளும்போது, நம்முடைய அறிவாற்றல் வளங்களை அணுக உதவுகிறது. இதன்மூலம், ஒரு தோல்வியின்போது என்ன தவறு நடந்தது என்பதை அமைதியாகப் பகுப்பாய்வு செய்து, புதிய வழிகளைக் கண்டறிய முடிகிறது.
உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களின் வெற்றிகளை நாம் உற்று நோக்கினால், அவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இந்த மன உறுதியே என்பதை உணரலாம்.
டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சின் வெற்றிகள், வெறும் உடல் வலிமையின் சான்றுகள் அல்ல. பெரிய போட்டிகளில் சாத்தியமற்ற தடைகளைத் தாண்டி அவர் வென்றது, மன உறுதியின் சிறந்த பாடம்.
இதற்கு நேர்மாறாக, 27 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையைப் பார்க்கலாம். அவர் கசப்புடன் அல்ல, மாறாக நல்லிணக்கத்துடன் வெளிப்பட்டார். துன்பத்தையும் ஒற்றுமைக்கான சக்தியாக மாற்றிய அவரது திறன், மன உறுதிக்கும் அறிவாற்றல் இருப்புக்கும் உள்ள ஆழமான தொடர்பை நிரூபிக்கிறது. அத்தகைய கடுமையான சூழ்நிலைகளிலும் தனது மனத்திறன்களைப் பராமரித்து, கூர்மைப்படுத்திய அவரது திறன், மனித மனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்த மகத்தான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், மன உறுதி என்பது ஒரு நிலையான பண்பு அல்ல; அது வளர்க்கக்கூடிய மற்றும் வலுப்படுத்தக்கூடிய ஓர் ஆற்றல். கடினமான அனுபவங்கள் நம்மை வலிமையாகவும், மன உறுதியுள்ளவர்களாகவும் மாற்றும். சவால்களை எதிர்கொள்ளும்போது, நமக்குள்ளேயே இருக்கும் உள் வலிமையை நாம் கண்டறிகிறோம்.
வலிமையான மனம் என்பது உணர்வுகளை அடக்கி வைப்பது அல்ல; மாறாக, அவற்றை நிர்வகிக்க அறிந்துகொள்வது. கோபம், துக்கம், வலி போன்ற கடினமான உணர்வுகள் இயல்பானவை என்பதை ஏற்றுக்கொள்ள நெகிழ்வுத் தன்மை உதவுகிறது. அதே சமயம், அவை நம்மை ஆட்கொள்ளாமல் இருக்க உதவும் திறன்களையும் இது வழங்குகிறது.
விழிப்புணர்வு மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற உத்திகள், நம் உணர்வுகளைத் தீர்ப்பின்றி அவதானிக்கவும், தூண்டுதலுக்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான பதிலைத் தேர்வு செய்யவும் அனுமதிக்கின்றன.
நெகிழ்வுத்தன்மை ஒரு உள்ளார்ந்த கட்டுப்பாட்டு உணர்வை வளர்க்கிறது. அதாவது, நம் செயல்களும் தேர்வுகளும் நிகழ்வுகளின் விளைவைப் பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது தருகிறது. இது வெளிப்புற சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துவதைப் பற்றியது அல்ல; மாறாக, நம்மால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதன் மீது கவனம் செலுத்துவதைப் பற்றியது; நம்முடைய மனப்பான்மை, முயற்சி மற்றும் அடுத்த நடவடிக்கைகள். இந்தச் செயல்திறன் உணர்வு, பாதிக்கப்பட்டவர்போல உணர்வதைத் தடுக்கும் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகச் செயல்படுகிறது.
நம் மன உறுதியை வளர்க்க சில எளிய, ஆனால் சக்திவாய்ந்த வழிகள் உள்ளன. அவை, இலக்குகளை எளிதாக்குங்கள்- பெரிய இலக்குகளைச் சிறிய, எளிதாகச் செய்யக்கூடிய பகுதிகளாகப் பிரிப்பது மனச் சோர்வைத் தடுக்கும். ஒவ்வொரு சிறிய வெற்றியும் தன்னம்பிக்கையை அதிகரித்து, மன உறுதியை வலுப்படுத்தும்.
அன்றாட மனப் பயிற்சிகள்- தினமும் சில நிமிஷங்கள் தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் செய்வது எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த உதவும். இது உணர்வுகளை நிர்வகிக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்தில் கவனம்- நல்ல உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான உடலே, ஆரோக்கியமான மனதுக்கு அடித்தளம்.
மன உறுதி நோக்கிய பயணம் ஒரு தொடர் முயற்சி. "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, "நம்மால் முடியுமா' என்று தளர்ச்சி அடையாமல், "முடியும்' என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். ஆம், நம் திறன் நம் கையில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.