கோப்புப்படம்.
கோப்புப்படம்.

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

உலகின் கவனம் தற்போது இந்தியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது.
Published on

உலகின் கவனம் தற்போது இந்தியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா தரும் புதிய வரிகளுக்கான அழுத்தம், மறுபுறம் ரஷியாவுடன் இருக்கும் எண்ணெய் வர்த்தகம், மற்றொருபுறம் சீனா உடனான போட்டி.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா விதித்த 50% கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வருமா, இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது? அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியுமா, ரஷியாவுடனான வர்த்தகத்தைத் தொடருமா போன்ற வினாக்களுடன் உலகம் நம்மை உற்று நோக்குகிறது.

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் ஆக. 27-ஆம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்? அதற்கு முன்னதாக அமெரிக்காவுடன் சுமுகமான முடிவு எட்டப்படுமா? வினாக்களோடு இந்தியர்களான நாமும் காத்திருக்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்தியா புதிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டு செயல்படுகிறது. ஜவாஹர்லால் நேரு காலத்தில் அணிசாரா கொள்கை பின்பற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பன்முகக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பல கூட்டமைப்புகளிலும் இந்தியா பங்கு பெறுவது என்ற நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். உண்மையில் இந்தியாவின் கொள்கை பன்முகக் கூட்டணிதானா?

ஐரோப்பா, அமெரிக்க ஆதிக்கத்துக்கு இடம் கொடுத்துவிட்டது. டிரம்ப்பின் முடிவுகளால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறது. ஆனால், இந்தியா தன்னை எந்த இடத்திலும் இறக்கிக் கொள்ளவில்லை. உலகின் வல்லரசுடன் சம நிலையில் நின்று பேச விரும்புகிறது.

எங்களுக்கான நட்பு நாடுகளை, வர்த்தகக் கூட்டாளிகளை வேறு எவரும் தீர்மானம் செய்ய முடியாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் இன்னும் சில நாள்களில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்தியா வந்து வெளியுறவுத் துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியப் பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் சீனா செல்ல இருக்கிறார்.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் வெளிப்படையாகப் பேசிய பின்னும் இந்தியா அதற்கு செவிசாய்க்கவில்லை. ரஷியப் பயணத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேசியுள்ளார். இந்த ஆண்டில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வர இருக்கிறார்.

இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி அதைச் சுத்திகரித்து மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இந்த வர்த்தகம் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுகிறது. டிரம்ப் அரசின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ இதை விமர்சித்துள்ளார்.

"இந்தியா ரஷிய எண்ணெயை வாங்கி லாபம் ஈட்டி வருகிறது. அமெரிக்காவிடம் செய்யும் வர்த்தகத்திலும் லாபம் ஈட்டி அதைக் கொண்டு ரஷியாவிடம் எண்ணெய் வாங்குகிறது.

இதன்முலம் ரஷியா உக்ரைன் போரில் ரஷியாவின் கையைப் பலப்படுத்துகிறது. உண்மையில், உக்ரைனில் அமைதிக்கு வழி புது தில்லி வழியாகச் செல்கிறது' என்று பீட்டர் நவரோ விமர்சித்துள்ளார்.

தனது சொற்களில் இத்தனை கடுமையைக் காட்டிய நவரோ, "நான் இந்தியாவை விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர். ஆனால், இந்தியா செய்வது உக்ரைனில் அமைதியைக் கொண்டுவரப் போவதில்லை. இந்தியா, உலகப் பொருளாதாரத்தில் தனது பங்கு என்னவென்று பார்க்க வேண்டும். இப்போது, இந்தியா அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக போரை நீட்டிக்கிறது' என்றும் குறிப்பிட்டார்.

இதற்குத் தக்க பதிலடியை ஜெய்சங்கர் தந்திருக்கிறார். "ரஷிய எண்ணெயை அதிகமாக வாங்குவது சீனாதானே தவிர இந்தியா அல்ல; ரஷியாவிடம் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிகம் வாங்குவதும் ஐரோப்பிய ஒன்றியம் என நினைக்கிறேன்; நிச்சயமாக இந்தியா அல்ல; 2022-க்குப் பிறகு, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரித்துள்ள நாடும் இந்தியா அல்ல.

உலக எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மையைக் கொண்டுவர ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது உள்பட அனைத்தையும் செய்கிறோம். அதேபோல், அமெரிக்காவிடம் இருந்தும் வாங்குகிறோம். ரஷியாவிடம் போலவே அமெரிக்காவிடமும் இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் உயர்ந்துள்ளது என்று விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்தியாவில் இருந்து எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை ஐரோப்பாவும் அமெரிக்காவும் வாங்குகின்றன. அப்படி வாங்குவதில் ஏதேனும் சிக்கல் அமெரிக்காவுக்கு இருந்தால் வாங்க வேண்டாம். யாரும் எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாகவே பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கிறது. இந்தியா தனது கொள்கையில் திடமாக நின்று மாற்று வழிகளைத் தேடுகிறது. அனைத்து முக்கிய நாடுகளுடனும் நட்புறவைப் பேண விரும்புகிறது. இதைத்தான் பன்முகக் கூட்டணி கொள்கை என்கிறார்கள் விமர்சகர்கள்.

இந்தியாவை அமெரிக்கா பகைத்துக்கொள்வது நல்லதல்ல என்ற குரல் அமெரிக்காவிலிருந்தே எழுந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஐ.நா. தூதரான நிக்கி ஹேலி, இந்தியாவுக்கு எதிரான வர்த்தகக் கொள்கைகள், அமெரிக்காவின் நீண்டகால நலன்களுக்கு எதிராக அமையும் என்றும் இந்தியாவுடன் உறவுகளை முறித்துக்கொள்வதும் எதிரியாக நடத்துவதும் தவறு என்றும் எச்சரித்துள்ளார்.

ஜனநாயக நாடான இந்தியாவின் வளர்ச்சி சுதந்திர உலகுக்கு அச்சுறுத்தல் அல்ல; மாறாக, சீர்திருத்தங்களுக்கான துணை என்றும் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்போதைய பிளவு தொடர்ந்து நீடித்தால், அது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய பேரழிவாக மாறும் என்று நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

இந்தியர்கள் சிலவற்றைப் புரிந்துகொள்வது அவசியம். பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டுக்காக சீனா செல்கிறார் என்றால், அவர் அமெரிக்காவுகத்கு எதிராகப் போகிறார் என்று கருத வேண்டியதில்லை. சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் நீண்டகாலமாகவே நடக்கின்றன.

அதேபோல், அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியில் பிரச்னைகள் குழப்பங்கள் மற்றும் சிக்கலுக்குக் காரணம் இந்தியா தனது தேசிய நலன்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கிறது என்பதே.

அதையே வெளியுறவுத் துறை அமைச்சர், அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் நமது விவசாயிகள், சிறுதொழில் செய்வோரைப் பாதிக்காத வகையில் முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

அமெரிக்கா போன்ற ஒரே நாட்டை நம்பியிருப்பதைவிட, இந்தியா தனது ஏற்றுமதியை புதிய நாடுகளுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடுகிறது. ஐரோப்பா, கனடா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகள் போன்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா அக்கறை காட்டுகிறது.

பாதுகாப்புத் தளவாடங்கள் முதல் செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

பிரிக்ஸ் போன்ற அமைப்பின் மூலம் உலகின் தெற்கு நாடுகளுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கிறது. "க்வாட்' குழுவில் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) உலகில் சமநிலையை மேம்படுத்தப் பங்கேற்றுள்ளது. உலகளாவிய பல அமைப்புகளில் இடம்பெற்று தன்னாட்சி என்ற தத்துவத்தை முன்வைக்கிறது.

தன்னாட்சி என்ற சுதந்திர செயல்பாட்டுக்கான தத்துவம்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி இருப்பதும் இந்தக் கொள்கைதான். நல்லவனுக்கு நல்லவன் என்பதே நமது வெளியுறவுக் கொள்கை. தேசத்தின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் வளத்துக்கும் பயனளிக்கக்கூடிய நாடுகளுடன் இந்தியா கைகோக்கிறது. மற்றவர்களின் மிரட்டலைப் புறந்தள்ளுகிறது.

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com