உறவுகளைப் போற்றுவோம்!

உறவுகளைப் போற்றுவோம்!

Published on

-முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்

இன்றைய சமூகத்தில் மிகவும் முக்கியமான விவாதங்களில் ஒன்று, திருமணம் எனும் அமைப்பின் தற்காலப் பொருத்தப்பாடு குறித்ததாகும். பாரம்பரிய மதிப்பீடுகளுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடலின் மையத்தில், இல்லறம் என்பது தனிமனித வாழ்வின் ஓர் அங்கமாக மட்டுமின்றி, சமூகத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது என்ற பேருண்மை அடங்கியுள்ளது.

அண்மையில் ஒரு புதுமணத் தம்பதியருக்கான நிகழ்வில், இந்தச் சிந்தனைகளுக்கு ஒரு மிகச் சிறந்த தொடக்கத்தை வழங்கியது. அங்கே, கணவர் தன் மனைவிக்கு ஒரு மலரை வழங்கி, "இந்த மலரின் மென்மை குணம் கொண்டவளே, நீ என் வாழ்வில் இணைந்தது நான் பெற்ற பேறு. உன்னை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன்' என்றார். அவரது வார்த்தைகளில் அப்பட்டமான நேர்மையும், ஆழ்ந்த அன்பும் வெளிப்பட்டன.

அதற்குப் பதிலாக, அந்தப் பெண்மணி தன் கணவருக்கு ஒரு கனியை அளித்து, "கனியைப் போன்ற கனிவான மனம் கொண்டவரே, என்னை இந்தக் குடும்பத்தில் ஏற்று, என் தனித்துவத்தை மலரச் செய்து, சுவைமிக்க ஒரு வாழ்க்கையை வழங்கியிருக்கிறீர்கள். இந்தக் கனியின் வித்து, செடியாகி, பூத்து, காய்த்து, மீண்டும் கனிவதுபோல், நம் உறவும் தழைக்கட்டும்" என்று நன்றியுரைத்தார். வெறும் சடங்காக அல்லாமல், ஓர் ஆழமான மன இணைப்பின் தொடக்கமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இத்தகைய நிகழ்வுகள், தம்பதியரிடையே பிணைப்பை வலுப்படுத்துவதோடு, குடும்பம் எனும் அமைப்பின் சமூகப் பங்களிப்பையும் நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த அன்பும், உறுதியும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே தமிழர்களின் வாழ்வியலில் ஊறிப்போயிருக்கிறது.

இந்தியாவின் பன்முகப் பண்பாட்டில், திருமணங்கள் இரு குடும்பங்களையும் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பெருவிழாவாகவே கொண்டாடப்படுகின்றன. 2024-ஆம் ஆண்டின் "ஸ்டாடிஸ்டா' ஆய்வு முடிவுகளின்படி, 85 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் திருமணத்தை வாழ்வின் முக்கிய நிகழ்வாகக் கருதினாலும், அதன் அணுகுமுறைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இன்றைய தலைமுறை சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையே ஓர் உறவில் அதிகம் எதிர்பார்க்கிறது.

ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் தரவுகளின்படி, 2011-2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 13.5%-லிருந்து 19.9%-ஆக உயர்ந்திருப்பது, இந்தச் சிந்தனை மாற்றத்தின் தெளிவான பிரதிபலிப்பு. இந்த மாற்றம், துணை என்ற கருத்துக்கோ, அன்புக்கோ எதிரானது அல்ல; மாறாக சமத்துவமும், மன இணைவும் கொண்ட ஓர் உறவை நோக்கிய தேடலின் வெளிப்பாடே ஆகும்.

இந்த மாற்றத்தின் மையத்தில் இருப்பது "தன்முனைப்பு' (ஈகோ) அல்ல; "தன்னிலை உணர்தல்' (செல்ப் ரியலை சேஷன்) என்ற ஆழமான தேடல்தான். "கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும்', "மனைவி இப்படித்தான் நடக்க வேண்டும்' என்று சமூகம் நமக்குள் விதைத்திருக்கும் சுயபிம்பங்களை ("நான்' என்ற எண்ணத்தை) நாம் பரந்த பார்வையுடன் கேள்விக்குட்படுத்தும்போது, அங்கே "நான்' என்பது விலகி 'நாம்' என்பது விடையாகக் கிடைக்கிறது. ஆனால், தனது அடையாளத்தையே

இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், மனம் இந்த மாற்றத்தை ஏற்கத் தயங்குகிறது.

உலக சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விவாகரத்து விகிதம் குறைவாக இருப்பினும், அண்மைக்காலங்களில் நீதிமன்றங்களில் பதியப்படும் குடும்பநல வழக்குகள் அதிகரித்துள்ளன. இது, உறவுகளில் நிலவும் எதிர்பார்ப்புகளுக்கும் எதார்த்தத்துக்கும் இடையேயான இடைவெளியைச் சுட்டுகிறது. வரனின் சொத்து மதிப்புக்கும், வருமானத்துக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம், திருமணத்தை ஒரு வணிக ஒப்பந்தமாகச் சுருக்கும் அபாயமும் உள்ளது.

மேலும், பொருளாதார அழுத்தங்கள், விண்ணை முட்டும் வாடகை, விலைவாசி உயர்வு போன்றவை இளையோர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, சிலர் திருமணத்துக்கு மாற்றாக இணைந்து வாழும் உறவுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தகைய உறவுகளில் பரஸ்பர நேர்மையும், தெளிவான நோக்கங்களும் இருக்குமா என்று கேள்வி எழுகிறது. ஒருவரின் உணர்வும் மற்றவரின் தேவையும் வேறுபடும்போது, அது ஏமாற்றத்தில் முடிய வாய்ப்புள்ளது.

ஒரு செம்மையான இல்லறத்தைக் கட்டமைக்க, "நான்' என்ற சுயபிம்பத்தைக் கடந்து, "நாம்' என்ற புரிதலுக்கு இரு துணைகளும் வரவேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் இல்லறத்தைக் கட்டமைக்கும்போது, பல அம்சங்கள் இயல்பாகவே மலரும். எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வலுவான குடும்ப அமைப்பேசமூகத்தின் உயிர்நாடியாகத் திகழ்கிறது.

எனவே, பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் எதிரெதிர் துருவங்களாகப் பார்க்காமல், இரண்டின் சிறந்த கூறுகளையும் இணைக்கும் ஒரு புதிய பாலத்தையே நாம் உருவாக்க வேண்டும். இந்தப் புரிதலுக்குச் சிறந்த வழிகாட்டியாக, வேதாத்ரி மகரிஷியின் தத்துவம் அமைகிறது. அவர், இல்லறத்தை வெறும் உறவாகப் பார்க்காமல், "இரு உயிர்கள் இணைந்து செய்யும் தவ வாழ்வு' என்று குறிப்பிடுகிறார். இது, கணவன்-மனைவி இருவரும் தனித்தனியான விருப்பு-வெறுப்புகளைக் கடந்து, ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, தங்கள் வாழ்வில் மட்டுமல்லாமல், சமூகத்தின் உயர்வுக்கும் பாடுபட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

திருமண பந்தத்தின் உண்மையான வெற்றி, தனிநபர் சாதனைகளில் இல்லை; அது ஓர் உன்னதமான கூட்டுப் பயணத்தின் அழகியலில் இருக்கிறது என்பதை உணர்வதே இன்றைய காலத்தின் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com