டிஸ்மெனோரியா-தவணை தவறாத வேதனை!

மாதவிடாய் கால வேதனைகளைப் பற்றி எத்தனை பேர் துல்லியமாக அறிந்திருக்கிறோம் என்பது விடை தெரியாத கேள்வியே என்பதைப் பற்றி...
டிஸ்மெனோரியா-தவணை தவறாத வேதனை!
Published on
Updated on
2 min read

- பொருநை வளவன் -

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. போராடுவதிலோ, சாதனைகள் புரிவதிலோ போற்றிக் காக்க வேண்டியது பெண்மை என்கிற அந்தப் புனிதத்தைத்தான்.

மகளிருக்காக ஏராளமான திட்டங்களை இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தேசத்தில் செயல்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதே வேளையில் இன்னும் மகளிரின் சில பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு வராமலேயே இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பணிக்குச் செல்லும் கட்டாயச் சூழல் பரவலாக ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அப்படி பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளமாக இருப்பினும், குறிப்பட்ட ஒரு சில சவால்கள் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டியவையே. குறிப்பாக, மாதவிடாய் கால வேதனைகளைப் பற்றி எத்தனை பேர் துல்லியமாக அறிந்திருக்கிறோம் என்பது விடை தெரியாத கேள்வி.

ஆங்கிலத்தில் "டிஸ்மெனோரியா' எனப்படும் இந்தப் பிரச்னை தவணை தவறாத வேதனையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. உயர்நிலைப் பள்ளி மாணவிகள்; கல்லூரி மாணவிகள்; வேலைக்குச் செல்லும் பெண்கள் என அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் இந்தப் பிரச்னையை அரசு கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் உடலுக்கு போதிய ஓய்வும், மனதுக்கு ஆறுதலான வார்த்தைகளும் தேவை என்பதை மகளிர் நோய்க்கான சிறப்பு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவிகளுக்கு மாதத்துக்கு இரண்டு நாள்கள் ஓய்வும், பெரும்பாலான பெண்களுக்கு குறைந்தது ஒரு நாள் ஓய்வாவது இருக்க வேண்டும் என்பதும் குறைந்தபட்ச மருத்துவத் தேவை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்னை குறித்த போதிய புரிதல் இல்லை என்றால், இதற்குத் தீர்வு கிடைப்பது சாத்தியமற்றதாகிவிடும். இந்தியாவில் பிகார், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஒடிசா, கேரளம் போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதவிடாய் விடுப்பு இன்னும் நாடு முழுமைக்கும் நடைமுறைக்கு வரவில்லை.

ஒரு தனியார் அமைப்பின் கணக்கெடுப்பின்படி 20 முதல் 29 வயதுவரை உள்ள பெண்களில் 23%; 30 முதல் 44 வயது வரை உள்ள பெண்களில் 15.8%; பதின்பருவ பெண்களில் 17% மாதவிடாய் நாள்களில் உடல் ரீதியாக நேரடியாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். 30%-க்கும் மேற்பட்ட கல்வி பயிலும் பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் கடுமையான வலி, உடல் உளைச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன என்பதை இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.

பிரசவகால விடுப்பு மற்றும் குழந்தைப் பராமரிப்பு தொடர்பான விடுப்புகள் நடைமுறையில் இருப்பது உண்மைதான். ஆனாலும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண்களிடம் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு ஓரு தீர்வை எட்டவேண்டும்.

பிகாரில் 1992-ஆம் ஆண்டு முதல் அரசு மகப்பேறு மற்றும் மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிகார் அரசு மாதத்துக்கு இரண்டு நாள்களும், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சில தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும், போபால் மற்றும் ஔரங்காபாதில் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்கள் வருகைப் பதிவேடு 65%-க்கும் குறைவாக இருந்தாலும் மாணவிகள் விதி விலக்குப் பெறலாம் என அறிவித்துள்ளன.

கேரளத்தில், குறிப்பாக கொச்சி அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாதந்தோறும் இரு நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. இதில், 75% வருகைப் பதிவில் 2% சலுகை கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த விடுப்புக்காக மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களும் இந்த நடைமுறையை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மருத்துவச் சான்றிதழுடன் தனிப்பட்ட முறையில் விடுப்பு பெறலாம் என்ற சலுகை சில இடங்களில் வழங்கப்பட்டாலும் இது இன்னும் வரையறுக்கப்பட்ட நிலையே உள்ளது.

இப்படி ஆங்காங்கே வலுப்பெறும் கோரிக்கைக்கு செவிமடுக்கும் நிலைக்கு மாற்றாக ஒரு நிரந்தரத் தீர்வு நிச்சயம் தேவை. அரசு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் இந்த விடுப்பு சட்டத்தை நீடிக்க வழிகாண வேண்டும்.

இந்தப் பிரச்னைகள் நமது தேசத்தில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும் இருந்துவருகிறது. சீனாவின் சில மாகாணங்கள், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளில் அரசு விதிப்படி மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டுமுதல் ஸ்பெயினில் மாதவிடாய் விடுப்புகள் வழங்குவது சட்டமாக்கப்பட்டுள்ளன.

இது குறித்த பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு முதலில் மாதவிடாய் கால விடுப்பு குறித்த கொள்கை வகுத்த பிறகு இதுகுறித்து விசாரிக்கலாம் என அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

முன்னெப்போதும் இருந்ததைவிட இப்போது பெண்ணியம் குறித்த விழிப்புணர்வு தேசம் முழுமைக்கும் உறுதிப்படுத்தப்பட்டுவரும் இவ்வேளையில், எல்லோரிடமும் பகிர்ந்து ஆறுதல் தேட முடியாதது இந்த உணர்வுபூர்வமான வேதனை. தாய்க் கோழி தன் குஞ்சுகளை தனது இறக்கைக்குள் இதமாகப் பாதுகாப்பதைப்போல், தேசத்தை ஆளும் வேந்தன் இந்தத் தாய்க்கோழிகளைப் பாதுகாக்க வேண்டும். அப்படி கொடுக்கும் உளவியல் ரீதியான பாதுகாப்பு, அவன் எதிர்கொள்ளும் பிற பிரச்னைகளிலிருந்து அவனைப் பாதுகாத்து காக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com