ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

கட்சிகளைக் கடந்து, ஒருங்கிணைத்து ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றி...
மக்களாட்சி!
மக்களாட்சி!(படம் | Express Illustrations)
Published on
Updated on
3 min read

இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார். ஆனால், இந்திய மக்களாட்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டினார்கள். இந்தியாவில் மக்களாட்சி என்பதே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுதான். அடுத்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்து விடுகிறது.

இதுவே இந்தியாவில் மிகப் பெரிய மக்களாட்சி செயலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் எழுதினார்கள். காரணம், இந்தியாவில் மக்களாட்சிக் கூறுகள் பரவி வளர்வதற்கான எந்தச் சமூகச் சூழலும் இல்லை என்பதை மேற்கத்திய அறிஞர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டிக் கொண்டே இருந்தார்கள். தேர்தல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் இந்திய மக்களாட்சி சுழல்கிறது. அதைவிட்டு மக்களாட்சியை நகர்த்தும் வல்லமை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தார்கள் இந்த ஆய்வாளர்கள்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளாட்சித் தேர்தலையும் உங்கள் ஆணையமே நடத்த வேண்டும்; உள்ளாட்சியையும் அரசாங்கமாக மாற்றப் போகிறோம் என்று கேட்டார். அதற்கு டி.என். சேஷன் அளித்த பதில், இந்தியாவில் சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மொத்தம் 5000-க்குள்தான் உள்ளன. அந்தப் பதவிகளுக்கான தேர்தலையே முறையாக நடத்த இந்த நாட்டின் அரசியல் கட்சிகளுடன் நான் போராட வேண்டியுள்ளது. அவ்வளவு முறையற்ற, மக்களாட்சிப் பண்பற்ற செயல்களை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

இவற்றை என்னால் சமாளிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் லட்சக்கணக்கில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளையும் இந்த ஆணையமே செய்ய வேண்டும் என்றால் தேர்தல் என்பதை நம் அரசியல் கட்சிகளும் மக்களும் நகைப்புக்குள்ளாக்கி விடுவார்கள். எனவே, இதை இந்திய தேர்தல் ஆணையம் செய்ய இயலாது என்று மறுத்துவிட்டார். இதன் விளைவாகத்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் என்ற ஓர் அமைப்பு மாநிலங்களில் உருவாக்கப்பட்டது.

மக்களாட்சியின் திறவுகோல் என்பது மக்களின் வாக்குகள் மூலம் நடத்தப்படும் தேர்தல்தான். அதைத் தந்தது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்தான். மக்களின் அரசியல் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டியதும் அந்தச் சட்டம்தான். அந்த சமத்துவம், நீதி என்பது ஓர் அடிப்படை உரிமை; அந்த உரிமையை வென்றெடுக்கவே மக்கள் இன்றுவரை கடினமாகப் போராட வேண்டி இருக்கிறது. ஒரு முறை உத்தர பிரதேசத்தில் பொதுத் தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தபோது, ஒரு கட்சியின் தலைவர் முதலில் நன்றி தெரிவித்தது தேர்தல் ஆணையத்துக்கும் அதன் ஆணையருக்கும்தான்.

அதற்கான காரணத்தையும் அவரே தெரிவித்தார். இதுவரை ஒரு சமூகத்தினர் வாக்குரிமையைச் செலுத்த இயலாமல் ஆதிக்கச் சமூகங்களால் தடுக்கப்பட்டனர். அதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்படவில்லை. ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான துணிவான செயல்பாடுகளால் அந்த ஒடுக்கப்பட்ட மக்களால் வாக்களிக்க முடிந்தது. ஆகையால், நாங்கள் வெற்றி பெற்றோம் என்று விளக்கினார்.

இந்தத் தவறுகளைச் செய்தது யார்?- அரசியல் கட்சிகள்தானே. வாக்குப் பெட்டிகளை, வாக்குச் சாவடிக்குள் புகுந்து தூக்கியதும் கள்ள வாக்கு போடுவதும், வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வராமல் வாக்குச் சாவடிகளில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட அனைத்தையும் செய்தவர்கள் கட்சிக்காரர்கள்தானே.

இதற்குத் தேவையான வன்முறைக் கும்பல்களை தன்னகத்தே கொண்டு செயல்படுத்த முனைந்து இன்றைக்கு 53% குற்றப் பின்னணி கொண்டவர்களை நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைகளுக்கும் கட்சிகள் மூலமாக அனுப்பியதும் நம் அரசியல் கட்சிகள்தானே.

இவற்றையெல்லாம் கடந்து இன்று வாக்குகளைச் சந்தைப்படுத்த சந்தையிலிருந்து கிடைத்த மூலதனத்தை வைத்து மக்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்தி வாக்கைப் பறிப்பது எந்த மக்களாட்சியைச் சேர்ந்தது? இன்று அரசியல் கட்சிகள் பெருமளவு சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கின்றன. எங்கிருந்து இவ்வளவு சொத்துகளைச் சேர்த்தன இந்தக் கட்சிகள்? இன்றைக்கு அந்தச் சொத்துகளைப் பாதுகாக்கவும், தனிப்பட்ட முறையில் தாங்கள் சேர்த்த சொத்துகளைப் பாதுகாக்கவும்தானே இன்று அரசியலை போராக நடத்துகின்றன நம் கட்சிகள்.

இன்று ஊழலையும் கட்சிகளையும் பிரிக்க முடியாது, அதேபோல் வன்முறையையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது நம் அரசியல். அரசியல் வணிகமாக மாறியபோது வணிகர்கள் அரசியலுக்குள் வந்துவிட்டனர். அரசியல் என்பது லாபம் ஈட்டும் தொழிலாக கட்டமைக்கப்பட்டு விட்டது. உலகமய பொருளாதாரம், தனியார்மயம், தாராளமயம் வந்த பிறகு, கொள்கை, கோட்பாடு, அறம் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டன நம் கட்சிகள்.

இந்திய வாக்காளர்களிடமிருந்து வாக்குகளைப் பறிக்க நிபுணத்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவை தாங்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட கட்சிகளை வெற்றிபெற வைக்க அனைத்து விதமான உத்திகளையும் உருவாக்கி, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் உளவியலில் மாற்றங்களைச் செய்தன. கட்சிகளும், கட்சித் தலைவர்களும் செய்ய இயலாத பணியை இந்த நிபுணத்துவ நிறுவனங்கள் செய்தன. இந்தப் புதிய ஏற்பாடு ஒட்டுமொத்த மக்களாட்சியின் கோட்பாட்டுக்கு எதிரானவை. இதை எந்த அரசியல் கட்சியும் தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. இதை எதிர்த்து எந்தப் பொது விவாதமும் நடைபெறவில்லை.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் மக்களாட்சிக்கு எதிரானவை என்று மேற்கத்திய நாடுகளில் விவாதிக்கின்றனர், கட்டுரை எழுதுகின்றனர் அறிஞர்கள். இந்தச் செயல்பாடுகளால் விளைவது பெரும் தீமைகள் என்பதுடன், மக்களாட்சியைச் சவக்குழியில் தள்ளும் செயலாகும் என்று விவாதிக்கின்றனர். ஆனால், இங்கு அதை வேடிக்கை பார்த்து குடிமக்களாகிய நாம் ரசிக்கிறோம். இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தி, நம் மக்கள் அரசியல் அறியாமையின் உச்சத்தில் உள்ளனர் என்பதுதான்.

இந்த வணிக அரசியல் எந்த அளவுக்கு குற்றப் பின்னணி கொண்டதாக மாறியது என்பதை மிகப் பெரிய ஆய்வுகளை நடத்தி, மிகப் பெரும் விவாதப் பொருளாக்கி புத்தகமாகக் கொண்டுவந்து தந்தார் ஹார்டுவர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பிரடெரிக் சார்லஸ் ஸ்கால்ஃபர். உலகம் முழுவதிலிருந்து ஆய்வாளர்களை அழைத்து இந்த வாக்குச் சந்தையை ஆய்வு செய்து ஒரு கருத்தரங்கு மூலம் விவாதித்து அந்தக் கருத்துத் தாள்களைப் புத்தகமாக்கி "தேர்தல்கள் விற்பனைக்கு; வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதால் ஏற்படும் காரணங்களும் விளைவுகளும்' என்று தலைப்பிட்டு வெளியிட்டார்.

வாக்குகளை வாங்குவதன் மூலம் விற்பதன் மூலம், மக்களாட்சிக்கு நேர்ந்த ஊனம் எவ்வளவு? அதேபோல் சாதாரண மக்கள் தங்கள் அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பயன்கள் எவ்வளவு இழந்திருக்கின்றார்கள்? என்பதை ஆய்வு செய்து விளக்கி இருப்பது நம் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

இந்தப் பின்னணியில் சிவம் சங்கர் சிங் எழுதிய "இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி: நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது' என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கத்தை சற்று உற்று நோக்கிப் படித்தால் இந்திய அரசியல் கட்சிகள் எவ்வளவு மோசடியை மக்கள் மீது செய்கின்றன என்ற உண்மையை வாக்காளர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள முடியும்.

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும்போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

அரசியல் கட்சிகள் நடத்துவது அரசியலும் அல்ல; அந்த அரசியலால் நடைபெறுவது மக்களாட்சியும் அல்ல; மக்களை ஏமாற்றி ஒரு சுகபோக வாழ்க்கையைக் கட்டமைத்து வாழ்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். நாட்டைக் காக்க ராணுவம் எப்படி தேவைப்படுகிறதோ, அதேபோல் கட்சிகளுக்கு ஒரு படை தேவைப்படுகிறது.

கட்சிகளை நடத்த, தேர்தலில் வாக்குகளை வாங்க, அதைத்தான் கட்சிகள் நடத்திக் கொண்டுள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கையில் பல பயன்கள் அரசிடமிருந்து கிடைத்து விடுகின்றன. பெரும்பான்மை மக்களுக்கு மக்களாட்சி அரசிலிருந்து கிடைக்க வேண்டிய பயன்கள் கிடைக்கவில்லை. இதற்கு நாம் ஒரு புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று எண்ணி, பல கட்சிகள் உருவாகின. அவை காலப்போக்கில் இந்த அதிகாரத்தைப் பிடிக்கும் சாக்கடையில் விழுந்து கிடக்கின்றன.

இதற்கு மாற்று என்ன? ஒரே வழி மக்களிடம் சென்று நம் அரசியல் கட்சிகள் செய்யும் மக்களாட்சிக்கு முரணான செயல்பாடுகளை விளக்கி, மிரட்டலுக்கும், ஆதிக்கத்துக்கும் பயப்படாமல் குடிமக்களாக-வாக்காளர்களாக சுதந்திரமாக வாக்களிப்பது. எந்தக் கட்சிக்கும் அடிமையாகாமல் சுதந்திர உளவியலில் எனது வாக்கு என் நாட்டைக் காக்கும் உயரிய ஆயுதம் என்று எண்ணிச் செயல்பட மக்களைத் தயார் செய்ய வேண்டும். இதற்கு நாம் கட்சிகளைக் கடந்து பொறுப்புமிக்க குடிமக்களாகவும் வாக்காளர்களாகவும் ஒருங்கிணைத்து ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். அதுதான் இன்றைய மக்களாட்சிக்கான புதிய போராட்டம்!

கட்டுரையாளர்: போராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com