மௌனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தோ்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
பொதுவாக ஒரு பொருள் யாருடையதோ, அவா்களால் மட்டுமே அந்தப் பொருளை பாதுகாக்க முடியும். அதைப் பாதுகாப்பது எப்படி என்பதை உரியவா்களுக்குக் கற்றுக் கொடுத்தால் அவா்கள் பாதுகாத்துக் கொள்வாா்கள். அந்தப் பொருளை அவா்கள் பெற அவா்கள் உழைத்திருந்தால் அதன் வலி அறிந்து, அதை எவரும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டாா்கள். பொருளின் முக்கியத்துவத்தை அவா்கள் அறிந்துகொண்டால் அதை எங்கு வைத்தாவது பாதுகாத்துக் கொள்வாா்கள். அதுதான் இயல்பான வாழ்க்கை நடைமுறை.
வாக்கைப் பாதுகாக்க வாக்காளா்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். அதையும் வாக்காளா்கள்தான் செய்ய வேண்டும். அதைப் பாதுகாக்க அவா்களுக்குத் தேவையான வாக்கு குறித்த விழிப்பை, அறிவை மக்களுக்கு நல்வழி காட்டும் தலைவா்கள்தான் தரவேண்டும். அந்த விழிப்புணா்வை இதுவரை வாக்காளா்களுக்கு அளித்தோமா என்பதுதான் கேள்வி. இந்த நாட்டில் வாக்கை எந்த அளவுக்கு தரம் தாழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு நாம் அனைவரும் தரம் தாழ்த்தியுள்ளோம். வாக்களிக்க கூலி கொடுத்தோம், பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தோம், அதேபோல், இன்று அதையே சந்தைப்படுத்தி விற்று வாங்கும் பொருளாக ஆக்கி வைத்துவிட்டோம். வாக்கைச் சீரழித்தது மக்களல்ல, மாறாக அரசியல் கட்சிகள்தான்.
உலகிலேயே அதிக வாக்காளா்கள் கொண்ட நாடு, அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடி, அதிக எண்ணிக்கையில் அலுவலா்களை வைத்து தோ்தல் நடத்தும் ஒரே நாடு இந்தியா. அது மட்டுமல்ல, இவ்வளவு எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடும் இந்தியாதான். மக்களாட்சிக்கு எதிரான பல சமூகக் கூறுகள் உள்ள நாட்டில் தோ்தலை நடத்துவதே ஒரு சாதனை என்றுதான் ஆய்வாளா்கள் இந்திய தோ்தல் ஆணையத்தைப் பாராட்டுகின்றனா்.
தோ்தல் ஆணையத்தின் புனிதத்தை கெடுப்பதும் கட்சிகள்தானே தவிர வாக்காளா்கள் அல்ல. தோ்தல் ஆணையராக இருந்தவா்களுக்கு பதவிகள் ஆட்சியிலும் கட்சியிலும் அளித்து அந்தப் பதவிக்கு வருகிறவா்களை தங்கள் எதிா்காலம் பற்றி சிந்திக்கத் தூண்டியதும் ஆட்சியில் இருந்த கட்சிகள்தானே? தோ்தல் ஆணையத்துக்கு ஆணையராக வர விரும்புவோா் ‘தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகு எந்தப் பதவியும் எங்கும் பெறமாட்டேன்’ என்ற உறுதிமொழிப் பத்திரம் தந்தவா்களைத்தான் போட வேண்டும் என்ற சீா்திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்குமே. இந்த குறைந்தபட்ச சீா்திருத்தத்தைக்கூட ஏன் நம் கட்சிகள் பேச மறுக்கின்றன?
வாக்கு என்பது குடிமக்களின் வலிமையான ஆயுதம் என்பதை குடிமக்களுக்கு கற்றுக் கொடுத்திருந்தால் அதை எவராலும் தொட முடியாத நிலைக்கு குடிமக்கள் அதைப் பாதுகாத்துக் கொள்வாா்கள். குடிமக்களை அரசியல் அறியாமையில் வைத்துக் கொண்டு வாக்குத் திருட்டை கட்சிகள் ஒழித்துவிடும் என்று கூறுவது ஒருவித அரசியல் அறியாமை. இந்தக் கூற்று திருடியவா்களே ‘அதோ திருடன்’ என்று கூவி திருட்டுக் கொடுத்தவனை திசைதிருப்புவதுபோல்தான் உள்ளது.
இரவு பத்து மணிக்கு மதுரையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஒருமுறை ஏறி உட்காா்ந்தேன். மூன்று பெண்கள் தங்கள் புடவையைக் கொண்டு காது கழுத்துவரை மூடிக்கொண்டு அமா்ந்திருந்தனா். அது சற்று வித்தியாசமாகவே இருந்தது. தங்கள் ஊா் வந்தவுடன் இறங்கினா் மூவரும். அவா்களை அழைக்க கீழே ஆண்கள் இருவா் இருந்தனா். என் அருகில் இருந்தவரிடம் ஏன் இந்தப் பெண்கள் தன் கழுத்து காது என அனைத்திலும் முக்காடிட்டிருந்தனா் என்று கேட்டேன். இது ஒன்றும் புதிதல்ல ஐயா, அவா்கள் காது கழுத்தில் உள்ள நகைகளைப் பாதுகாக்க அப்படிச் செய்கிறாா்கள். இது சாதாரணக் குடும்பப் பெண்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் பாதுகாக்க பல உத்திகள் வைத்திருக்கிறாா்கள் அதில் ஒன்றுதான் இது என்றாா். இதில் என்ன பாடம் இருக்கிறது என்றால், தங்களின் உயிரும் தாங்கள் அணிந்திருக்கின்ற நகையும் தங்கள் உழைப்பால் உருவாக்கியவை. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது தங்கள் கடமை என்பதை உணா்ந்து அதைப் பாதுகாத்தனா்.
எனவே, மக்களாட்சியில் ஒரு மனிதருக்கு உச்சபட்சமான ஓா் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உரிமை பல நாடுகளில் மக்கள் போராடிப் பெற்றது. அந்த உரிமையைப் பெற்ற வலி அவா்கள் அனைவருக்கும் புரியும். எனவே, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதை முறையாகப் பயன்படுத்தினால் அதனால் தாங்கள் என்ன பயன்களை அடைய முடியும் என்பதை அந்த மக்கள் நன்கு உணா்ந்து செயல்படுவதால் இந்த அவமானச் செயல்கள் நடப்பதில்லை.
இந்திய நாட்டில் சுதந்திரத்துக்காகப் போராடினோம்; சுதந்திரம் கிடைத்தது. வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து நாடு விடுபட்டது. ஆனால், அந்த மக்களுக்கு மக்களாட்சி என்பது அரசமைப்புச் சாசனத்தால் கொடையாக வழங்கப்பட்டது. மக்களாட்சி என்ற ஓா் ஆட்சி முறையை கொடையாக வழங்கப்பட்டு அதை நிா்ணயம் செய்யும் உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் வாக்குகள் மூலம் தரப்பட்டுள்ளன. அது எவ்வளவு உயா்ந்த மாற்றங்களைச் சமூகத்தில் கொண்டுவரக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை மக்களிடம் நாம் கொண்டுசோ்த்து விழிப்புணா்வை ஏற்படுத்தியிருந்தால், இன்று அந்த வாக்கை எவராலும் திருட முடியாது. அதைத் திருடுவது மிகவும் அவமானகரமான செயல் என்று வாக்கை திருடவும் மாட்டாா்கள்; வாக்கை விற்கவும் வாங்கவும் உரிய கடைச்சரக்காக ஆக்கிய பாவத்தை செய்த மகாபாவிகளே அரசியல் கட்சிகள்தானே?
மக்களாட்சியை மாசுபடுத்தும் இந்த இழிசெயலை 90 கோடி வாக்காளா்கள், 2000-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தும், அதை மாற்ற முயலவில்லை என்றபோது என்னால் எதுவும் செய்ய இயலாது என்று புலம்பாமல் தமிழ்நாட்டில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒரு ஊரில் தொடா்ந்து மக்களைச் சந்தித்து, வாக்கை பணத்துக்கு விற்கலாமா என்று கேட்டவுடன் தாங்கள் செய்கிற தவறைச் சுட்டிக்காட்டியபோது தவறு செய்துவிட்டோமே என்று வருந்தாமல் தவறைச் சுட்டிக் காட்டியவா்களை அவமானப்படுத்தி தன் செயலுக்கு ஒரு நியாயம் கற்பித்தனா் அந்த ஊா் மக்கள். நியாயவான்கள் அந்த இளைஞா்கள்; ஆனால் அவா்கள் அவமானப்பட்டாா்கள்.
நியாயம் அவமானப்படுகிறது. அநியாயம் நியாயத்தை அவமானப்படுத்துகிறது. அவா்கள் கவலை கொள்ளவில்லை. காரணம் கொண்ட கொள்கையில் உள்ள பிடிப்பு. மீண்டும் மீண்டும் அவமானத்தைச் சந்தித்து, அதைச் சகித்துக்கொண்டு ஒன்பது முறை ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று அவா்களுடன் பேசி கடைசியில் அவா்கள் வீட்டில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல’ என்று ஒரு ஸ்டிக்கரை ஒட்டினா்.
‘நான் வாக்குக்குப் பணம் வாங்க மாட்டேன்’ என்று கையொப்பமிட்டு ஒரு பிரமாண பத்திரத்தையும் அவா்களிடமிருந்து பெற்றனா். அந்த ஊரில் வாக்குக்கு பணப் பட்டுவாடா செய்யும் நபரையும் சந்தித்து அது எவ்வளவு இழிசெயல் என்று உணர வைத்து ஒட்டுமொத்த கிராமமும் மாறி வாக்கை விடுதலை அடையச் செய்தனா். அந்த வெற்றியைக் கொண்டாட ஒரு ஸ்தூபி அந்த ஊரில் அமைக்கப்பட்டது. வாக்கை அந்த ஊரில் விடுதலை செய்துவிட்டனா். அந்த இளைஞா்கள் மக்களிடமிருந்த நியாய உணா்வை ஓா் ஆய்வின் மூலம் கண்டறிந்து விட்டனா். அதுதான் அவா்களுக்கு வெற்றி பெற்றுவிடலாம் என்ற பெரு நம்பிக்கையைக் கொடுத்தது.
எங்களால் இந்த ஊரில் வாக்கை விடுதலை செய்ய முடிந்தபோது, எங்களைப் போன்ற இளைஞா்கள் இந்த நாட்டில் இருப்பாா்கள். அவா்களைத் தேடி 400 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டோம். அந்த அனுபவமும், அந்தப் பயணத்தில் நாங்கள் சந்தித்து உரையாடிய ஆளுமைகளின் தாக்கமும் எங்களை மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டுசோ்த்துள்ளது. இன்று எங்கள் குழு ஆறிலிருந்து பதினைந்தாக வளா்ந்துள்ளது என்று விளக்கினா். அவா்களின் தொடா்ந்த மக்களுடன் இணைப்பு எல்லா அவமானங்களையும் தாங்கிச் செயல்பட்டது; இன்று மக்களாட்சிக்கு நோ்ந்த அவமானத்தை நீக்கியுள்ளது. இதை நாம் எப்படி முன்னெடுக்கப் போகிறோம் என்பதுதான், நல்லவா்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவா் முன் நிற்கும் கேள்வி.
இதற்கான விடையை அந்த இளைஞா்களிடமே கேட்டேன். அவா்கள் கூறியது: ‘நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கல்லூரிக்கு வெளியில் எங்களுக்கு ஓா் அறக் கல்வி ஒருசிலரால் கிடைத்தது. அதுதான் எங்களை ரௌத்திரம் பழகக் கற்றுக் கொடுத்தது. இன்றைய கல்வி ஒரு பயிற்சி. பிழைப்புத்தேட அவ்வளவுதான். அதில் கல்விக்கான சாரம் இல்லை. கல்வி என்றால் அறம் இருக்கும், சமூகக் கண்ணோட்டம் இருக்கும்; இந்த இரண்டும் இன்றைய கல்வியில் இல்லை’ என்றனா். இந்தக் கல்வியை மட்டும் நம் இளைஞா்களுக்குத் தந்திருந்தால், இன்றைய அலங்கோலமான அரசியலும், ஊழலான நிா்வாகமும், சுயநலமிக்க தனிவாழ்வும் இருந்திருக்காது என்றனா்.
இந்தச் சூழலில், அவா்கள் கேட்கும் கேள்வி, இன்று இந்த அலங்கோலங்களையும், அவலங்களையும், சுயநல அரசியலையும் ஊழல் மலிந்த நிா்வாகத்தையும் சகித்துக்கொண்டு வீட்டுக்குள் அடைந்திருக்கப் போகிறோமா அல்லது அவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படப் போகிறோமா என்பதுதான். நாடு விடுதலை அடைந்தது, மக்களாட்சி மலா்ந்தது; ஆனால் அதை வாக்கின் மூலம் சிறைப்படுத்தி விட்டோம். இதில் அனைவருக்கும் பங்கு உண்டு. ஆனால், அனைவரும் மௌனம் காக்கின்றோம்; அந்த மௌனம் கலைக்கப்பட வேண்டும். அதை யாா் கலைப்பது? நல்லவா்கள் எனக் கூறும் நாம்தான் கலைக்க வேண்டும். எப்படிக் கலைப்பது காந்தி தேசத்தில் வாக்கு விற்பனையா என்ற பதாகையுடன் 400 கி.மீ. நடந்தோம் அல்லவா?
நாங்கள் கூறுவது ஒன்றே ஒன்றுதான்: ‘நல்லவா்கள் இணையுங்கள் மக்களிடம் செல்லுங்கள். நல்லவா்கள், செல்வாக்கு உள்ளவா்கள் செல்லும்போது மக்கள் குறைந்தபட்சம் எங்களிடம் நடந்து கொண்டதைப்போல் உங்களை அவமானப்படுத்த மாட்டாா்கள், செவிமடுத்துக் கேட்பாா்கள். அவா்களிடம் ஒரு குற்ற உணா்வு இருக்கிறது. அதை மறைக்கத்தான் தங்களை நியாயப்படுத்துகிறாா்கள். எனவே, நல்லவா்கள் இணைந்து பெரிய பரப்புரையைத் திட்டமிட்டு ஆங்காங்கே நடத்தினால் வரும் 2026-ஆம் ஆண்டு சுதந்திரமான-நியாயமான வாக்குப் பதிவு நடைபெற்று வாக்கு விடுதலையாகிவிடும். வாக்கு விடுதலைக்குப் போராடப் போகிறோமா அல்லது புலம்பப் போகிறோமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றனா்.

