

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின்12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருந்தாலும் அவர்களின் சொந்த மொழியில் பேசினால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பொதுத் துறை வங்கிகள் மட்டுமல்லாது, ரயில்வே, அஞ்சல் துறை போன்ற மத்திய அரசுத் துறை அலுவலகங்களில் உள்ளூர் மொழி தெரியாமல் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் மட்டுமே பணிபுரிவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு, தேவையற்ற சர்ச்சைகளும் ஏற்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனைக்கல் வட்டத்தில் சூர்யா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வாடிக்கையாளர் ஒருவரிடம், 'உள்ளூர் மொழியான கன்னடத்தில் பேச முடியாது; ஹிந்தியில்தான் பேசுவேன்' என ஆங்கிலத்தில் கூறி வாக்குவாதம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தங்கள் தாய் மொழி அல்லாத பிற மொழி மாநிலங்களில் பணியில் சேர்வோரில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பின்னர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு பணிமாறுதல் பெற்றுச் செல்லும் நோக்கில் இருப்பதால் உள்ளூர் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
நாடெங்கும் சென்று பணிபுரியக் கூடிய நிலையில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் நிலையில் உள்ள அதிகாரிகள் தாங்கள் பணியில் அமர்த்தப்படும் மாநில மொழியை குறிப்பிட்ட கால அளவில் கற்றுக்கொண்டு மக்கள் சந்திப்பு, ஊடகங்களின் செய்தியாளர்களைச் சந்திப்பது போன்ற நிகழ்வுகளில் உள்ளூர் மொழியில் உரையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மக்களுடன் நேரடியாகப் பேசி சேவையளிக்கும் நிலையில் உள்ள வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள், உள்ளூர் மொழியில் பேச இயலாத நிலையில் உள்ளனர். இது வாடிக்கையாளர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.
மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அனைத்துச் சேவைகளுக்கும் தற்போது செயற்கை நுண்ணறிவு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், அரசுப் பணியாளர் ஒருவர் தம்மை நாடிவரும் வாடிக்கையாளரோடு உரையாடி சிறப்பான சேவையை அளிக்க செயற்கை நுண்ணறிவு போதுமானதல்ல. மாறாக, வாடிக்கையாளரின் மொழி அறிவு மிக அவசியமானதாகும்.
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் செல்வோர், அந்த மாநில மற்றும் நாடுகளின் உள்ளூர் மொழி தெரியாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கேனும் உதவும் வகையில் சிறிதளவாவது உள்ளூர் மொழியை தெரிந்துவைத்திருப்பது மிக அவசியம்.
முழு அர்ப்பணிப்புடன் முயன்றால் ஓரிரு மாதங்களில்கூட ஒரு மொழியை ஓரளவு கற்றுக் கொள்வது சாத்தியமே.
அண்ணல் அம்பேத்கர், தமது தாய்மொழி மராத்தியோடு ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, உருது, ஜெர்மன், பிரெஞ்ச், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட 11 மொழிகளில் புலமைப் பெற்றிருந்தார். தாம் பெளத்தத்துக்கு மாறிய நிலையில், 2500 ஆண்டுகளுக்கு முன்னர், புத்தர் காலத்தில் பேசப்பட்ட பாலி மொழியையும் கற்றார் என்ற செய்தி நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
மகாத்மா காந்தியடிகள் தமது தாய்மொழியான குஜராத்தியோடு, ஆங்கிலம், ஹிந்தி ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தார். மேலும், ஓரளவு உருது மொழியைத் தெரிந்து வைத்திருந்த அவர், தமிழையும் கற்க முற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாகவி பாரதியார், தமிழ் தெலுங்கு, மலையாளம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார் என்ற தகவல் நம்மை வியக்க வைப்பதாகும்.
ஒவ்வொரு இந்தியரும் குறைந்தபட்சம் மூன்று மொழிகளையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. எனினும், தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றோடு மூன்றாவது மொழியாக ஹிந்தியை மட்டுமே தேர்வு செய்யக்கூடிய சூழலே அதிகம் உள்ளது. தற்போது, வெளிநாடுகளுக்கு நம் நாட்டவர் கல்வி, வேலைவாய்ப்புக்காக செல்லும் சூழலில் பிரெஞ்ச், ஜெர்மன், ரஷியன் போன்ற மொழிகளைக் கற்க விரும்பினாலும் அதற்கான வசதி வாய்ப்புகள் அரிதே! தேசியக் கல்விக் கொள்கைக்கு பரவலாக தமிழகத்தில் எதிர்ப்பு இருப்பதற்கு இதுவும் ஓர் காரணம் என எண்ணத் தோன்றுகிறது.
உள்ளூர் மொழியில் பேசுவதன் மூலமே மக்களைக் கவர முடியும் என்பதால்தான் நம் அரசியல் கட்சி தலைவர்கள், வேறு மாநிலம் சென்று தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது தமது உரையைத் தொடங்கும் முன்பாக ஓரிரு வார்த்தைகளாவது அந்த மாநில மக்கள் மொழியில் பேசுகின்றனர்.
இந்திய அஞ்சல் துறையினர் தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பது 'தம்மினும் வாடிக்கையாளர் சேவைக்கே முன்னுரிமை' என்பதாகும். இதை மத்திய அரசுத் துறைகளின் அனைத்துப் பணியாளர்களும் கவனத்தில் கொண்டால், உள்ளூர் மொழியைக் கற்று வாடிக்கையாளர்களுக்கு உயரிய சேவையை அளிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.