

"திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை; தனக்கென்று மட்டும் வைத்துக் கொண்டதுமில்லை. அண்மைக்காலமாக அதாவது இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றம் சொத்துக் குவித்தல் என்னும் வழக்கம்; இது தமிழர்களின் மரபன்று.
தேடித் தேடிப் பொருளைக் குவிப்பதும் அவ்வாறு குவிந்தவற்றைக் கொண்டு மேலும் மேலும் அதைப் பெருக்குவதற்கான வழிகளில் ஈடுபடுவதும் குறிப்பாக மண்ணிலும் பொன்னிலும் அதை முதலீடு செய்வதும் இதுபோன்ற பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதிக் கொண்டிருக்கிற காலமாக இருக்கிறது.
வாழ்வுக்கான அகப்பொருள் தேடிக் கண்டு தேர்ந்து உலகுக்கே உரக்கச் சொன்ன தமிழர்கள் தாங்களே அந்த மெய்ப்பொருளை மறந்துவிட்டுப் பொய்ப் பொருளை நாடி - புறவாழ்வுக்குப் பொருள் தேடி அலைகிறார்களோ என்ற ஐயமும் தோன்றுகிறது.
இதிலே வேடிக்கை என்னவென்றால், வேண்டுதல்-வேண்டாமை இலானாகிய கடவுளையும் இதற்குப் பங்கு சேர்த்துக் கொள்வதுதான். இந்தக் கோயிலில் இத்தனை முறை இப்படி வேண்டிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று வேண்டுகிறவர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு வேண்டிச் செல்வத்தைச் சேர்த்தவர்கள் தாங்கள் சேர்த்த செல்வத்துக்குக் காரணம் அந்தக் கடவுள்தான் என்றும், ஏதும் பழி-பாவம் வந்து விடக்கூடாது என்பதற்காக அதில் ஒரு பங்கை கடவுளுக்கே கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகிறார்கள்.
பொருட் செல்வத்துக்காகவே மட்டும் அலையும் இந்த வாழ்க்கையில் அன்பு, கருணை, நிம்மதி, உடல்-மனநலம், நீளாயுள், சமூக மதிப்பு, மானுட நேயம் உள்ளிட்ட பலவற்றை இழப்பதோடு மட்டுமின்றித் தாங்கள் சேர்த்த செல்வத்தைச் செலவழித்து மீண்டும் இவற்றையெல்லாம் பெற்று விடலாம் என்று நம்புவதுதான் அதைவிடவும் வேடிக்கையாக இருக்கிறது.
கனியைக் கனியாகச் சுவைக்காது கனியென்று எழுதி வைத்த காகிதத்தைச் சுவைப்பது போலத்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வாழ்க்கையும்.
"உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்று வாழ்க்கையின் எளிமையை அழகாகக் குறிப்பிடுகிற சங்க இலக்கியம் அதனை மேலும் விரிவாக்குகிறது.
"இந்த உலகம் முழுவதும் பொதுமை
யானதில்லை; தனி ஒருவனாகிய எனது
உரிமையே' எனக் கொக்கரித்து, ஒரு குடைக்கீழ் ஆளும் அரசனாகவே இருந்தாலும், பகலிரவு உறங்காது ஓடித்திரியும் விலங்குகளை வேட்டையாடினால்தான் வயிற்றுக்குக் கிடைக்கும் என்று காத்திருக்கும் கல்லாத வறுமையாளனுக்கும் உணவுக்குப் பயன்படும் அளவு நாழித் தானியம்தான்; மானத்தின் பொருட்டு உடலை மறைக்கும் ஆடைகள் அரையாடை என்றும் மேலாடை என்றும் இரண்டேதான்! இவைபோலும் பிற உடல் சார்ந்த உள்ளம் சார்ந்த தேவைகளும் பொதுவாகவே விளங்கும்.
நிலைமை இப்படியிருக்க, தேடிக் குவிக்கிற செல்வத்தின் பயன்தான் என்ன என்று கேட்டால், "நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம்' என்று கருதாது, அற்பக் கைப்பொருளும் இல்லாமல் வாடுகிற வறியவர்களுக்கு மனமுவந்து பகிர்ந்து கொடுத்தல்தான் என்கிறது புறநானூற்றுப் பாடல்.
இந்த உரத்த சிந்தனை நயத்தகு சொற்கள் அமைந்த பாடலோடு மட்டும் முடிந்துவிடவில்லை. வளத்தகு வாழ்வியலாகவும் திகழ்ந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
வறுமையில் வாடிய புலவர் பொருள்வேண்டி வள்ளலிடம் தன் துயரைப் பாடலாக்கிக் கூறுகிறார். வாழ்நாள் கடந்து நிறைமுதுமை அடைந்த என் தாய் இன்னும் உயிர் பிரியவில்லையே என நொந்து நரை மயிர் பரவத் தடியூன்றித் திரிய முடியாதவளாகத் துயரத்தில் இருக்கிறாள்.
இளம்கைக்குழந்தையை ஏந்திப் பசியோடு தவிக்கிறாள் மனைவி. குழந்தைக்கு அமுதூட்டும் அவள் மார்பு வற்றிக் கிடக்கிறது. முற்றாத குப்பைக் கீரையைப் பறித்தெடுத்து நீருலையில் இட்டு உப்போ மோரோ, சோறோ, ஏதுமின்றி, பிள்ளையின் பாலுக்காக வேண்டி வெறுமனே உண்கிறாள். அவளுக்கு மாற்றுடையும் இல்லை. இருப்பதுவும்கூடக் கிழிந்து அழுக்கேறியது. இவ்விரு மகளிர் வேண்ட நான் உன்னிடம் பொருள் வேண்டி வந்தேன்; அவர்கள் மகிழும்படி பரிசில் தரவேண்டும்' என்று வேண்டுகிறார்.
எத்தகைய கொடிய வறுமை அவரைப் பற்றியிருக்கிறது என்பதை அந்தப் பாடல் வரிகளே படம் பிடித்துக் காட்டி நம் நெஞ்சை உருக்குகின்றன. வள்ளல் மனம் உருகாதா என்ன? அவரும் பெருங்கொடையை வாரி வழங்கினார்.
இத்தனை வறுமையில் சிக்கித் தவித்த அந்தப் புலவருக்கு இப்போது குன்றனைய செல்வம் குவிந்து விட்டது. ஓடப்பராய் இருந்த ஏழைப்புலவர் வள்ளலின் கொடையால் ஓர் விநாடிக்குள் உயரப்பர் ஆகி விட்டார்.
புலவர் தனக்குப் பரிசாய்க் குவிந்த அந்தப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு ஏழு தலைமுறைக்கும் இறுமாந்து வாழ்ந்திருக்கலாம் அல்லவா? ஆனால், பரிசில் பெற்றுத் திரும்பிய அவர்தம் தமிழுள்ளம் தன்னுடைய மனைவியை அழைத்து, "மனையாளே, உன்னை விரும்பியவர்களுக்கும், உனக்கு விருப்பமானவர்களுக்கும் நம்மைப் போல வாழ்வோர்க்கும் உனது சுற்றத்தார்க்கும் இதுநாள்வரை நமது வறுமைதீர நமக்குப் பொருள் கொடுத்து உதவியவர்களுக்கும், இவர்கள் மட்டுமின்றி இன்னார் இனியார் என்று கருதாமல், என்னைக் கேட்டு என்னுடைய அனுமதியைப் பெற்றுத்தான் உதவ வேண்டும் என்று காத்திருக்காமல் எல்லாருக்கும் வாரி வழங்கு' என்று ஆணையிட்டார்.
வறுமை முன்பு வாழ்வில்தான் இருந்ததே தவிர எப்போதும் மனத்தில் இல்லை என்பதைப் போலவும், வள்ளல் செல்வத்தை மட்டும் தரவில்லை வள்ளன்மையும் தந்துவிட்டார் என்பதைப் போலவும், தமிழர்தம் உள்ளம் செல்வம் நிறைந்தபோது துள்ளிக் குதிப்பதும் வறண்டபோது துவண்டுபோவதும், இல்லையென்பதை உலகத்துக்கு உணர்த்துவது போலவும் இந்த அற்புத நிகழ்வு வரலாறாகப் பதிந்திருக்கிறது.
குவிகின்ற செல்வத்தை எப்படிப் பல்லுயிரோடும் பகிர்ந்து வாழ வேண்டும் என்னும் பொதுவுடைமையைப் பரக்கப் பேசுகிறது தமிழ் மரபு. வறுமைக்கு எதிரான வள்ளன்மையை முன்னிறுத்துகிறது தமிழர் வாழ்வியல். ஏழ்மையை விரட்டும் தோழமையைப் புகட்டுகிறது ஆன்மிக ஒழுங்கு. வழிவழியாக வந்த இந்த மாண்புகளைத் தமிழர்கள் எங்கே தவற விட்டார்கள்?
சங்கம் தொடங்கி, அற இலக்கியங்களும், காப்பியங்களும், பக்தி இலக்கியங்களும் போதித்த பல்லுயிர் ஓம்புகின்ற செல்வ நிலையாமை வாழ்வு எங்கே மறைந்தது?
கடவுளிடம்கூட, "யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும்' என்று பொன்னையும் பொருளையும் போகங்களையும் யாசிக்காது அருளையும் அன்பையும் அறத்தையும் வேண்டி நின்ற பெருவாழ்வு எங்கே தொலைந்தது?
"உடல் உழைப்பால் ஊதியமாகப் பெற்ற பொருட்செல்வத்தைப் பிறருக்கு வாரிவழங்கிப் புகழ் என்னும் அருட்செல்வத்தை உயிருக்கான ஊதியமாகப் பெருக்கிக் கொள்ளுங்கள்' என்கிறார் திருவள்ளுவர். புகழென்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்து, பழியென்றால் உலகமே கிடைப்பதென்றாலும் வேண்டாமென்று மறுத்த தமிழர்களின் வாழ்வியல் தலைகீழாகிப் பொருளுக்காக எதற்கும் துணிகின்ற காலமாக இருப்பது வருந்துதற்குரியது. பணமென்றால் வாய் திறப்பவை பிணங்கள்தானே? நம் மனங்கள் ஏன் அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டன?
"அறஞ்செய விரும்பு' என்றதோடு நம்முடைய தமிழ்ப்பாடம் முடிந்ததென்று யார் சொன்னது? ஒளவை மேலும் சொல்கிறாள்,
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து
வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் -
கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே
அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்.
இந்த "நல்வழி'யை எப்படி மறந்தோம்?
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளரின் சொத்துகள் 7,846.8 பில்லியன் டாலர் (ரூ.8.65 லட்சம் கோடி) இருந்தது என்று வங்கி வணிகர் கூட்டமைப்பு காட்டுகிறது. அதுபோலவே 2024-ஆம் ஆண்டில் இந்தியர்களின் சுவிஸ் வங்கிச் சொத்துகள் மட்டும் 3.54 பில்லியன் டாலர் (ரூ.37,600 கோடி) என்றும் கணக்கிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் அலைகின்ற மனிதர்கள் இந்த உலகத்தின் பல நாடுகளில் இன்னும் இருக்கும்போது இந்த வங்கிச் சேமிப்பின் பயன்தான் என்ன?
உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், "அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள்; அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?" என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நீதி புகட்டுகிறார் மகாகவி பாரதியார். அவர்வழி வந்த பாவேந்தர் பாரதிதாசனும்,
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; "உடைமை மக்களுக்குப் பொது'
புவியை நடத்துப் பொதுவில் நடத்து என்று தமிழ்மரபு தவறாது சுட்டுகிறார்.
இந்த மரபு வழாது, செல்வத்தின் பயன் ஈதல்! இது எவ்வளவு உயர்ந்த தத்துவம்! இந்தத் தத்துவம் சமுதாயத்தில் வாழ்க்கை நெறியாக மலர்ந்திருக்குமானால் சமுதாயத்தில் இவ்வளவு மேடு-பள்ளங்கள் இருக்காது; மனிதர்களுக்கிடையில் பகையும் வளர்ந்திருக்காது. பகையின்மையால் களவு - காவற் பணிகள் தலையெடுத்திருக்கா; இன்றோ, செல்வம் செல்வத்தைச் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இஃது ஒரு கொடுமை! செல்வம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தப் பெறுகிறது. ஏன்? நாடாளும் அரசிலிருந்து ஆண்டவன் சந்நிதானம் வரை இந்தப் பண்பிழந்த செல்வத்துக்கு அமோக மரியாதை!
இது வையகத்தின் இயல்பான நடைமுறையன்று. நெறிமுறை பிறழ்ந்த நடைமுறையே! என்று நம்காலத்தையும் கணித்தவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ்மரபு காட்டும் செல்வத்துப் பயனான ஈதலை மேற்கொள்ளும் உயரிய சமுதாயம் அமைந்து விட்டால் உலகம் உய்தி பெறுமே.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.