இருபத்து மூன்று வயதில் 'தருமசீலர்'!

இருபத்து மூன்றாம் வயதில் பாரதியை ‘தருமசீலர்’ எனப் போற்றிய சர்வ ஜன மித்திரன் ஆசிரியரின் அரிய வரலாற்றைப் பற்றி...
மகாகவி பாரதியார்.
மகாகவி பாரதியார்.கோப்பிலிருந்து...
Updated on
5 min read

இருபத்து மூன்று வயது இளைஞர் ஒருவரைத் 'தருமசீலர்' எனப் போற்றிய நிகழ்வினைத் தமிழ்ச் சமூகச் சூழலில் நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்? தமிழ் மண்ணில் இருபத்து மூன்று வயதுகூட நிரம்பாத பாரதியை அன்றைய தமிழ்ச்சமூகத்தின் மிக முக்கியமான வாரமிருமுறை இதழின் ஆசிரியர் 'தருமசீலர்' எனப் போற்றி எழுதியிருக்கின்றார்.

1905 செப்டம்பர் 8-ஆம் தேதி, திருநெல்வேலி பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த 'சர்வ ஜன மித்திரன்' என்னும் இதழில்தான், அதன் ஆசிரியராகிய சர்வஜன முதலியார் என்று பாராட்டி வழங்கப்பட்ட வேதமூர்த்தி முதலியார், 'தருமசீலர்' எனப் பாரதியைப் போற்றி எழுதியிருந்தார்.

அரசியல் களத்தில் பங்கேற்று பாரதி 'வங்கமே வாழிய' எனக் கடற்கரைப் பெருங்கூட்டத்தில் முதன்முதலில் பாடல் இசைத்த காலத்துக்கும் முந்தைய காலம் இது. அது சரி. எந்த அடிப்படையில் பாரதியாரைத் 'தருமசீலர்' என அவர் போற்றியிருந்தார்? இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ் மண்ணின் பல பகுதிகளிலிருந்தும் பல இதழ்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன. அத்தகைய இதழ்களுள் ஒன்று என மட்டும் சுருக்கிவிட முடியாத பெருமை படைத்தது 'சர்வ ஜன மித்திரன்' இதழாகும். அக்கால ஆங்கிலேய அரசால் கூர்ந்து கண்காணிக்கப்பட்ட இதழாக அந்த இதழ் விளங்கியது.

'சர்வ ஜன மித்திரன்' இதழில் வெளிவந்த கட்டுரைகள் சமகாலத்தின் முக்கியமான சில இதழ்களால் மீள்பிரசுரம் செய்யும் அளவுக்கு அமைந்திருந்தன. குறிப்பாக, பெண்ணுரிமைக் களத்தில் முக்கியமான கருத்துகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள் 'சர்வஜனமித்திரன்' இதழில் பெண்களாலேயே எழுதப்பட்டு வெளிவந்திருக்கின்றன.

இதழ் வெளிவந்த ஊரான திருநெல்வேலியில் கல்விக் கூடங்களில் நிகழ்ந்த தவறுகளைக் கண்டிப்பதிலும் வெளிப்படுத்துவதிலும்கூட இந்த இதழ் முன்னணியில் நின்றிருக்கிறது. இந்த இதழின் ஆசிரியர் வ.உ.சி.யுடன் நெருக்கமான தொடர்புடையவராகவும் இருந்திருக்கிறார். வ.உ.சி. இவரைத்தான் சுதேசி கப்பல் நிறுவனத்துக்குக் கப்பல்கள் வாங்க ஐரோப்பாவுக்கு அனுப்பிவைத்தார் என்பதே இவரது இடத்தை உணர்த்தும். இத்தகைய சிறப்புகள் பொருந்திய இதழாசிரியர்தான் பாரதியாரை 'தருமசீலர்' எனப் போற்றி எழுதியிருந்தார்.

அவர் அவ்வாறு போற்றக் காரணம் என்ன என்பதற்கு மீண்டும் வருவோம். 'சுதேசமித்திரன்' நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த பாரதியார், 1905-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்ட 'சக்ரவர்த்தினி' மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று முதல் இதழ் வெளிவந்திருந்த காலம் அது.

இதழை வரவேற்று 'சர்வ ஜன மித்திர'னின் ஆசிரியர் எழுதிய குறிப்பில் பாரதியை அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ''இவ்விந்து நாட்டின் அபிவிர்த்தியையே தமது குறிக்கொண்டு இந்த நாட்டின் பொருட்டே தமது வாழ்நாளை உபயோகிக்க வெண்ணியிருக்கும் தருமசீலரும்'' எனவும் அவர் எழுதியிருந்தார். சர்வ ஜன மித்திரன்' ஆசிரியரின் குறிப்பை பாரதி அங்கீகரித்துச் 'சக்ரவர்த்தினி' இரண்டாம் இதழில் எடுத்து வெளியிட்டிருந்தார்.

1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்து 'சுதேசமித்திரன்' பணியில் சேர்ந்த பாரதியார் 'சக்ரவர்த்தினி' இதழின் ஆசிரியப் பொறுப்பேற்ற போது, அவர் சென்னைக்கு வந்து ஓராண்டுகூட முழுமை பெறவில்லை. பாரதி தீவிர அரசியலில் பங்களித்த 'இந்தியா' இதழே தொடங்கப்படாத காலம் அது.

பாரதியின் முழு வாழ்க்கையையும் அறிந்த பின்னர் இந்தத் தமிழ்ச் சமூகம் எந்த மதிப்பீட்டை முன்வைத்ததோ, எந்த முடிவுக்கு வந்ததோ அந்த மதிப்பீட்டைப் பாரதியின் இருபத்து மூன்றாம் வயதிலேயே 'சர்வ ஜன மித்திரன்' ஆசிரியர் இந்தக்

குறிப்பில் கல்வெட்டுப் போலப் பொறித்துவிட்டார். அந்த அளவுக்குப் பாரதியாரை அவர் உள்ளும் புறமுமாக, நெருக்கமாக அறிந்திருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாரதிக்கும் தனக்குமான உறவை அதே குறிப்பில் அவர், 'எமது நெஞ்சினின்று அகலா ஆருயிர் நண்பர்' எனக் குறிப்பிட்டிருப்பது நமக்குத் தெள்ளத் தெளிவாக இதை உணர்த்திவிடுகிறது.

பாரதி எட்டயபுரத்திலிருந்த போதே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். பாரதி நெல்லையில் படித்த காலத்திலேயே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்குமோ? இப்போது விடை கிடைக்காத வினா இது.

பிறிதொரு வகையில் சொல்லப் போனால் பாரதியின் எட்டயபுரஅரசவை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தவரே இவராகத்தான் இருக்கக்கூடும். ஒரு மகாகவியாகப் பரிணமித்த, இந்திய விடுதலை இயக்கத் தீவிர முன்னோடியாகப் பரிமாணம் கொண்ட பாரதி நமக்குக் கிடைக்க இவர்தான் முக்கியக் காரணம் என்றுகூட மொழியலாம்.

'தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது' என்னும் துயரச் சூழலில் காசிக்கு ஏகிய பாரதி சில்லாண்டுகளின்பின் எட்டயபுரம் திரும்பி அரசவைப் பதவி வகித்திருந்தார். எட்டயபுரம் அரசருக்கும் பாரதிக்கும் சிறிது காலத்துக்குப்பின் கசப்புகள் ஏற்படத் தொடங்கின.

நெல்லையிலிருந்து வெளிவரத் தொடங்கிய 'சர்வ ஜன மித்திரன்' பத்திரிகையில் செல்வர்கள் குறித்தும், அவர்களுடைய அட்டூழியங்களைக் கண்டித்தும் பாரதி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை எட்டயபுரம் ஜமீன்தாரைத் தாக்கி எழுதப்பட்டது எனச் சிலர் கோள் கூறியதன் காரணமாக ஜமீன்தாருடனான உறவு அறுபட்டது. பாரதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான இந்தத் திருப்புமுனை நிகழ்வைப் பாரதியின் தம்பி சி.விசுவநாத ஐயர் தினமணி கதிர்(1981) பேட்டியிலே பின்வருமாறு எடுத்துரைத்திருந்தார்.

ஒரு சமயம் பாரதி 'சர்வ ஜன மித்திரன்' பத்திரிகையில் பொதுவாகப் பணக்காரர்களையும், அவர்கள் செய்து வந்த அட்டூழியங்களையும் கண்டித்து ஒரு கட்டுரை வெளியிட்டார். பாரதியிடம் பொறாமை கொண்ட சில புலவர்கள் இக்கட்டுரை ஜமீன்தாரைத் தாக்கி எழுதப்பட்டதாகுமென்று கோள் சொன்னதன் காரணமாக, உடனே பாரதிக்கு ஜமீன்தாரின் ஆதரவு நிறுத்தப்பட்டது. அதனால், மனக்கலக்கம் அடையாத பாரதி சில நாட்கள் சேத்தூர் முதலிய இடங்களுக்கு வேலை தேடிச் சென்றார்.

திருநெல்வேலி நெல்லையப்பக் கவிராயரிடமிருந்தும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்தும் வேலைக்கான அழைப்புக்கள்வந்தும் அவற்றை ஏனோ பாரதி ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் மூன்று மாத காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

எட்டயபுரம் அரசவையில் அங்கம் வகித்த சோதிட வல்லுநராகிய குருகுகதாசப் பிள்ளை பிறிதொரு நிகழ்வைக் காரணமாக நினைவுகூர்ந்துள்ளார். எட்டயபுரம் ஜமீன்தார் வீதிவலம் வரும்போது அனைவரும் எழுந்து நிற்பராம். பாரதியோ குருகுகதாசப் பிள்ளை வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர் எழாததோடு, இகழ்ச்சித் தொனியில் கருத்துரைத்தாராம். இப்படி நடந்த சிறு சிறு நிகழ்வுகளும் அரசருடனான உறவு கெடக் காரணமாயிருந்திருக்கின்றன.

பாரதியின் பெயர் இலக்கிய உலகத்தில், தமிழுலகத்தில் முதன்முதலாக எப்போது, எதில் பதிவாகியிருக்கும்? பாரதியியல் முன்னோடிகள் ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன் உள்ளிட்டவர்கள் 1904-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 'விவேகபாநு' இதழில் வெளிவந்த 'தனிமையிரக்கம்' என்னும் கவிதை வெளியீட்டிலிருந்து இந்த வரலாற்றைத் தொடங்குகின்றனர்.

'அச்சு வாகனம் ஏறிய பாரதியின் முதல் பாட்டு இதுவாகும்' எனச் சீனி. விசுவநாதன் ('காலவரிசையில் பாரதி பாடல்கள்') குறிப்பிடுகிறார். சற்றே கவனமாக ரா.அ. பத்மநாபன் ''நாமறிந்தவரை முதன்முதலாகப் பிரசுரமான பாரதி பாடல் இதுவே'' எனச் 'சித்திர பாரதி' நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கவிதை வெளி வந்த போது பாரதியின் ஊரும் பெயரும் 'எட்டயபுரம் ஸி. சுப்பிரமணிய பாரதி' என அச்சாகியிருந்தது.

ஆனால், பாரதியின் அச்சான எழுத்துகளின் வரலாறு 'சர்வ ஜன மித்திரன்' இதழிலிருந்தே தொடங்குவதனைப் பாரதியின் தம்பி கூற்றிலிருந்து அறிய முடிகிறது. ஏனோ முன்னோடிகள் 'சர்வ ஜன மித்திரன்' இதழைத் தேடிக் கண்டறிவதில் கவனம் செலுத்தவில்லை. இந்த இதழ் குறித்து இப்போது கண்டறியப்பட்ட செய்திகள், பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன.

பாரதியின் படைப்பு முதலில் வெளிவந்ததாகக் குறிப்பிடப்பட்ட 'சர்வ ஜனமித்திரன்' இதழ் எங்கிருந்து, எந்தக் காலம் முதல் வெளிவரத் தொடங்கியது? தெளிவான விவரங்கள் இதற்கு முன்பு கிடைத்ததில்லை. இப்போது, ஆங்கிலேய அரசின் ரகசிய பத்திரிகைகள் அறிக்கை வாயிலாகவும், பாரதியின் நண்பர்களுள் ஒருவரான மு.ரா. கந்தசாமிக் கவிராயர் நடத்திய 'விவேகபாநு' இதழ் மூலமாகவும் திருநெல்வேலி பாளையங்கோட்டையிலிருந்து 1904-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் வெளிவந்தது என்பது உறுதியாகிவிட்டது. 'சர்வ ஜன மித்ரன்' இதழ் குறித்து 'விவேகபாநு'வின் உடனடி அறிமுகம் இது:

''இப்பெயர் கொண்ட தமிழ்ப் பத்திரிகையொன்று நிகழும் ஏப்பிரல் மாதம் 2-ஆம் தேதி முதல் பாளையங்கோட்டையிலிருந்து வாரம் இருமுறை வெளிப்பட்டு வருகின்றது. தென்னாட்டில் நல்ல சமாசாரப் பத்திரிகையொன்று இல்லாத குறையை இதுவந்து நீக்கிற்றென்னலாம். இதனை முன்னின்று நடாத்துவோர் தக்க கெüரவமுள்ள மகா-ள-ள-ஸ்ரீவேதமூர்த்தி முதலியாரவர்களே. இவர் விடாமுயற்சியும் பொது நலப் பிரியமும் உடையர். இன்னும் தமிழபிமான சீலர் பலர் இதற்குத் துணைபுரிய முற்பட்டுள்ளார்கள். (விவேகபாநு, 1904 ஏப்பிரல், ப.159)

இந்த இதழின் ஒரு பிரதிகூட இன்று கிடைக்கவில்லை. எனினும், 1904-ஆம் ஆண்டு ஜூலை மாத 'விவேகபாநு' இதழில் வெளிவந்த கவிதைக்கு முன்னதாகவே

பாரதியின் எழுத்து அச்சில் வெளிவந்திருக்கிறது என்னும் ஆதாரபூர்வமான பதிவு இப்போது என் தேடலில் கிடைத்திருக்கிறது. புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தப் பதிவு பாரதியின் தம்பி குறிப்பிடும் 'சர்வ ஜன மித்திரன்' படைப்பிலிருந்து வேறானது.

பாரதி காலத்தில் வாழ்ந்த ,ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த அறிஞர் மு.சி. பூர்ணலிங்கம் பிள்ளை. பரிதிமாற்கலைஞரோடு நெருங்கிப் பழகியவர். ஆங்கிலப் பேராசிரியராக கோவை செயிண்ட் மைக்கேல் கல்லூரியிலும் (1900-1904), நெல்லை இந்துக் கல்லூரியிலும் (1904-1911) பணிபுரிந்தவர். பிற்காலத்தில் நீதிக் கட்சியின் 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழின் துணையாசிரியர்.

இத்தகைய பெருமைக்குரிய அவர் 'ஞானபோதினி' என்னும் மாத இதழை 1897-ஆம் ஆண்டுமுதல் நடத்தி வந்தார். இவ்விதழின் 1904-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் பாரதியியல் ஆய்வு வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. 'பத்திராதிபர் குறிப்புகள்' என்னும் பகுதியில் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய பின்வரும் குறிப்பு பாரதியியலில் ஒரு புதிய திறப்பை ஏற்படுத்துகிறது. பாளையங்கோட்டையில் 'சர்வ ஜன மித்திரன்' என்று நாமங்கொண்ட வாரமிருமுறை வெளியாகும் பத்திரிகையின் முதலைந்து இலக்கங்களைப் பெற்றனம். இவற்றின் தமிழ்நடை சிறந்திருக்கின்றது. விஷயங்களும் பொதிந்துள. இவ்வாறே இப்பத்திரம் என்றும் நடக்குமாயின் சுப்பிரமணிய பாரதியார் போன்று இதற்குவாழி கூறப் பின்னடையேம். சர்வஜனங்களுக்கும் மித்திரனென வெளிவந்திருப்பதால் இது நாளுக்கு நாள் சீரேற்றம் பெறலாம். (ஞானபோதினி, 1904 ஏப்பிரல், ப. 160)

'சர்வ ஜன மித்திர'னின் முதல் ஐந்து இதழ்களைப் பார்வையிட்ட பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய குறிப்பும் மதிப்பீடுமாக இது அமைந்துள்ளது. தனக்குக் கிடைத்த ஐந்து இதழ்களில் இடம்பெற்ற படைப்புகளை எழுதியவர்களில் பாரதியார் பெயரை மட்டுமே அவர் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அவருடைய இந்தக் குறிப்பு பாரதியாரை அவர் நன்கறிந்தவர் என்னும் தொனியில் அமைந்திருக்கிறது.

பூர்ணலிங்கம் பிள்ளை எட்டயபுரம் அரசவையோடு தொடர்புடையவர். நெல்லைப் பகுதியைச் சார்ந்தவர். அந்த அடிப்படையில் பாரதியாரை அவர் நன்கு அறிந்திருக்கலாம். அல்லது 'சர்வ ஜனமித்திரன்' இதழில் வெளிவந்த பாரதியாரின் வாழ்த்தின், பிற படைப்புகளின் சிறப்பு பூர்ணலிங்கம் பிள்ளைக்குப் பாரதியை நெருக்கமாக்கியிருக்க வேண்டும்.

பாரதியாரின் இந்த வாழ்த்து, கவிதையில் அமைந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கவிதையாகவிருப்பின் இனி வரலாற்றில் 'தனிமையிரக்கம்' கவிதையை அச்சில் வெளிவந்த முதல் கவிதை எனக் குறிப்பிட இயலாது. 'சர்வ ஜன மித்திரன்' இதழில் பாரதி வேறுசில கட்டுரைகளையும் கவிதைகளையும்கூட எழுதியிருக்கக்கூடும்.

இவ்விதழ் மட்டும் கிடைத்துவிட்டால் நாமறிந்த பாரதியின் தொடக்க கால வரலாற்றில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். பாரதியைவிடப் பதினாறு வயது மூத்தவர் பூர்ணலிங்கம் பிள்ளை. தன்னினும் மிக இளையவரான பாரதிக்கு அவர் அளித்துள்ள இடம், இளம்பருவப் பாரதியின் மேதைமையை அவர் நேரடியாகவோ எழுத்து வழியாகவோ நன்கு உணர்ந்தவர் என்பதைக் காட்டுகிறது.

பாரதியாரை அறிந்த பூர்ணலிங்கம் பிள்ளையைப் பாரதி அறிந்திருந்தாரா? பாரதியும் நன்றாகவே அறிந்திருக்கிறார். தான் ஆசிரியராக இருந்து நடத்திய 'இந்தியா' 1906-ஆம் ஆண்டு டிசம்பர் 22 வார இதழில் பூர்ணலிங்கம் பிள்ளை குறித்த ஒரு நிகழ்வை எடுத்துரைத்துப் பாரதியார் எழுதியிருக்கிறார். அப்பகுதி: ''திருநெல்வேலி இந்து கலாசாலை உபாத்தியாயர் மிஸ்டர் பூர்ணலிங்கம் பிள்ளை விஷயமாகச் சில தினங்களுக்கு முன் எழுதியிருக்கிறது நேயர்கள் ஞாபகத்திலிருக்கக்கூடும்...

மிஸ்டர் பிள்ளை பாத்திரத்துவமில்லாத் தகாத மனிதர்க்கு அநாவசியமாய்க் கீழ்ப்படிந்து நடத்தல் கூடாதென்னும் ஸ்வாதீன உணர்ச்சியுடையராதலால் அவர் இனி மேலும் நல்லெண்ணமில்லாத சுதேசக் கமிட்டிகளின் கீழாவது, புறமத பாடசாலைகளிலாவது தமது அரிய நாட்களைச் செலவு செய்வதினும், தேசோபகாரமான பத்திரிகை முதலியது நடாத்திப் பொது நன்மைக்குழைத்தாற் பெரும் புகழும் ஆன்ம லாபமுமடைய ஏதுவாயிருக்குமென்று அபிப்பிராயப்படுகிறோம்''. பாரதியியலில் பரவலாகக் கவனம் பெறாத 'சர்வ ஜன மித்திரன்' ஆசிரியர் எழுதிய குறிப்பாலும், இப்போது கண்டறியப்பட்டுள்ள 'ஞானபோதினி' இதழின் ஆசிரியர் எழுதிய பதிவாலும் பாரதி வாழ்க்கையின் தொடக்க கால வரலாற்றில் பல செய்திகள் தெளிவாகியுள்ளன.

பாரதி தொடர்பான முதற் பதிவாக இதுவரை கருதப்பட்ட 'தனிமையிரக்கம்' கவிதை வெளிவந்த 1904 ஜூலை மாதத்துக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே, பாரதியின் படைப்பு குறித்த செய்தியோடு பாரதியின் பெயர் அச்சில் வெளிவந்து விட்டது என்பதை அறிய முடிகிறது. இதுவே இன்று வரை கிடைத்துள்ள வரலாற்றில் பாரதி குறித்த முதற் பதிவாகும்.

'சர்வ ஜன மித்திரன்' இதழில் பாரதி எழுதினார் என்பது பாரதியின் தம்பியால் நினைவுகூரப்பட்ட செய்தி என்ற அளவில் மட்டுமே இதுவரை இருந்தது. பாரதி அவ்விதழில் எழுதினார் என்பது இப்போது பாரதி வாழ்ந்த சமகாலத்திலேயே பத்திரிகையில் வெளிவந்த இப்பதிவால் உறுதி பெறுகிறது.

'சர்வ ஜன மித்திரன்' இதழ் முதன்முதலில் வெளிவந்த காலம் 1904 ஏப்ரல் 2 எனத் துல்லியமாக அறியப்பட்டிருப்பதால், எட்டயபுரம் அரசரைக் குறித்த பாரதியின்கட்டுரை ஏப்ரல், மே, சூன், சூலை மாதத்திற்குள்தான் வெளிவந்திருக்க வேண்டும். எனவே, எட்டயபுரம் அரசரைப் பாரதி பிரிந்த நிகழ்வு இக்காலத்திற்குள்தான் இருத்தல் வேண்டும். எட்டயபுரவாழ்க்கை, மதுரை சேதுபதி பள்ளி வாழ்க்கை (1-8-1904 முதல் 10-11-1904) ஆகியவற்றுக்குப்பின் சென்னை 'சுதேசமித்திரன்' வாழ்க்கை தொடங்குகிறது.

பாரதியின்அரசியல், சமூக சீர்திருத்த, பெண்ணுரிமைக் கருத்தியல் வாழ்க்கை சென்னை வாழ்க்கையிலிருந்து தொடங்குவதாக இதுவரை நாம் பெரிதும் எண்ணியிருக்கிறோம். ஆனால், இவையெல்லாம் நெல்லை, 'சர்வ ஜன மித்திரன்' இதழ் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது என்பதுதான் உண்மை.

பாரதியின் எழுத்து வரலாறு ஒரு மித்திரனிலிருந்து இன்னொரு மித்திரனுக்கு, 'சர்வ ஜன மித்திர'னிலிருந்து' சுதேசமித்திர'னுக்குப் பயணித்திருக்கின்றது என்பது இதுவரை பரவலாக அறியப்படாத, ஆனால் உண்மை வரலாறு. பாரதியின் வாழ்த்தைப் பெற்று அவரது படைப்புகளை முன்னோடியாக வெளியிட்ட முக்கியத்துவம் வாய்ந்த 'சர்வ ஜன மித்திரன்' ஆசிரியரால் 'தருமசீலர்' எனக் கொண்டாடப்படும் நிலையில், இருபத்து மூன்று வயது பாரதியின் மகத்தான ஆளுமையும் ஞானமும் சீலமும் திகழ்ந்திருக்கின்றன. இது பாரதியின் வியக்கத்தக்க இளம்பருவப் பெரும் பரிமாணம் ஆகும்.

கட்டுரையாளர்: தலைவர், தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

டிச.11 மகாகவி பாரதியார் பிறந்த தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com